கண்ணாடி வேண்டாமே பாப்பா - பாவேந்தரின் இளையார் ஆத்திச்சூடி கதைகள் - நெல்லை அன்புடன் ஆனந்தி - ஒரு பார்வை - பொன். குமார்
ஆத்திச்சூடி என்பது ஒற்றை வரிக் கவிதை. ஆத்திச் சூடியை அவ்வையே தொடங்கி வைத்தாள். அவ்வைக்கு பிறகு ஒரு நீண்ட இடைவெளிக்குப் பிறகு மகாகவி பாரதி ஆத்திச் சூடியை அவர் பாணியில் பாடிவைத்தார். பாரதியைத் தொடர்ந்து அவர் சீடன் பாரதிதாசன், வாணிதாசன் என பலரும் ஆத்திச்சூடியைப்பாடினர். பாரதி தாசன் ஆத்திச்சூடியை வைத்து கல்லை மலரடியான் சிறார் நலம் தேடு என்னும் தலைப்பில் முப்பத்திரண்டு சிறுகதைகளை சிறுவர்களுக்காக எழுதியுள்ளார். தொடர்ந்து எழுத்தாளர் நெல்லை அன்புடன் ஆனந்தி கண்ணாடி வேண்டாமே பாப்பா என்னும் தலைப்பில் ஒரு தொகுப்பினை தந்துள்ளார். பாரதியாரின் புதிய ஆத்திச்சூடியை வைத்து சூரரைப் போற்று என்னும் தன்முனைக் கவிதைகள் அடங்கிய தொகுப்பைத் தந்துள்ளது குறிப்பிடத்தக்கது. சிறுவர்களுக்காக ஏற்கெனவே பல தொகுப்புகளை வெளியிட்டுள்ளார்.
அனைவரும் உறவினர் என்னும் முதல் கதையே அற்புதமான கதை. பள்ளியில் படிக்கும் மாணவர்கள் சமமாக பழகினாலும் சாதி பார்க்காவிட்டாலும் வீட்டிலிருக்கும் பாட்டிகள் இன்னும் சாதிகள் பார்க்கிறார்கள் என்கிறது. இளையோரிடம் சாதி இல்லை என்றாலும் பெரியவர்களிடமே இருக்கிறது, பெரியவர்களே திணிக்கிறார்கள் என்கிறது. அனைவரும் சமம் என்பதை அனைவரும் உறவினர் என்று ஆசிரியர் தெரிவித்துள்ளார். இளையோரிடையே சாதியை விதைக்க வேண்டாம் என்று வேண்டியுள்ளார்.
நன்றாக படிக்கும் மாணவர்கள் தைரியசாலிகளாக இருப்பதில்லை. தைரியசாலிகளாக இருக்கும் மாணவர்கள் நன்றாக படிப்பதில்லை. தைரியசாலிகளாக இல்லாத மாணவர்களை மற்றவர்கள் கேலி செய்வதுண்டு. அப்படி கேலி செய்யப்படுபவன் அழுகிறான். தைரியமானவன் அவனிடம் அழாதே அழுபவன் கோழை என முத்திரை குத்தி விடுவார்கள் என்று அறிவுறுத்தி தேற்றுகிறான். இக்கதையின் தலைப்பு அழுபவன் கோழை. மாணவர்கள் கோழைத்தனமாக அழக்கூடாது என்கிறது.
எதையும் ஊன்றிப்பார் என்பது மூன்றாம் சிறுகதை. குமாரும் ரவியும் நண்பர்கள். ஒரே பள்ளியில் ஒரே வகுப்பில் படிப்பவர்கள். ஒரு பேச்சுப்போட்டியில் திரைப்படங்கள் தீமையைச் செய்கின்றன என்று குமாரும் திரைப்படங்கள் நன்மையைச் செய்கின்றன என்று ரவியும் எதிரெதிர் நிலையில் பேசுகிறார்கள். நடுவர் இருவருமே சிறப்பாக பேசினார்கள் என்று இருவருக்குமே பரிசளித்து திரைப்படங்களில் நன்மையும் உண்டு தீமையும் உண்டு நாமே ஊன்றிப் பார்த்து ஆராய்ச்சி செய்து நல்லது கெட்டது அறிந்து செயல்பட வேண்டும் என்கிறார். திரைப்படத்தில் மட்டுமல்ல எந்த ஒன்றிலுமே இரண்டு பக்கங்கள் உண்டு என்பதை உணர்ந்து ஊன்றிப் பார்த்து தேவையானதை எடுத்துக் கொள்ள வேண்டும்.
ஆண் ஆசிரியர்கள் என்பவர்கள் மாணவ, மாணவிகளுக்கு இன்னொரு தந்தை மாதிரி. வகுப்பில் படிக்கும் மாணவிகளை மகளாக பார்க்க வேண்டும். பாவிக்க வேண்டும். மாணவிகளை தனியாக அழைத்து சந்தேகம் தீர்ப்பதாக தேகம் தீண்டுவது கூடாது. அவ்வாறு ஆசிரியர் அத்துமீறும் பட்சத்தில் மாணவிகள் துணிச்சலாக நடந்து பாடம் நடத்தும் ஆசிரியருக்கு பாடம் கற்பிக்க வேண்டும். போர்த் தொழில் பழகு என்னும் சிறுகதை மூலம் ஆசிரியர் தவறு செய்தால் தட்டிக் கேட்க வேண்டும் என்கிறார். மாணவர்களுக்கு மட்டுமான கதையாக அல்லாமல் ஆசிரியர்களுக்கானதாகவும் உள்ளது.
அனு என்னும் சிறுமி வீட்டில் பீங்கான் கப்பை போட்டு உடைத்து விடுகிறாள். அம்மா திட்டுவாள் என பயந்து பழியை வேலைக்காரி மீது போட்டு விடுகிறாள். அவளும் குழந்தைக்காக பழியை ஏற்று அம்மாவிடம் திட்டு வாங்கிக் கொள்கிறாள். மறுநாள் பள்ளியில் பாரதிதாசனின் ஆத்திச்சூடியை வாசிக்கும் போது உள்ளதைப் பேசு என்றதை வாசிக்கும் போது தன் தவறை உணர்ந்து அம்மாவிடம் உள்ளதைச் சொல்லிவிடுகிறாள். அம்மாவும் தன் அவசரபுத்தியை எண்ணி வேலைக்காரியிடம் மன்னிப்புக் கேட்க முடிவெடுக்கிறாள். இக்கதையின் தலைப்பு உள்ளதை பேசு. எப்போதும் உள்ளதையே பேச வேண்டும் என்கிறது கதை. உள்ளதை பேசினால் நல்லதே நடக்கும் என்கிறார்.
தொலைக் காட்சிப் பெட்டிகள் பெரும் தொல்லையாகிவிட்டது இன்று. பெரியவர்களை மட்டுமின்றி சிறுவர்களையும் சீரழிக்கிறது. சிறுவர்கள் தொலைக்காட்சியை பார்க்க நேர்ந்தால் நேரம் போவதே தெரியாமல் பார்த்துக் கொண்டேயிருப்பார்கள். இரவு நேரங்களில் நீண்ட நேரம் கண்விழித்துப் பார்ப்பதும் உண்டு. இதனால் கண் பார்வையும் மங்கலாக தெரியவும் வாய்ப்புண்டு. இரவினில் தூங்கு என்னும் சிறுகதை மூலம் இரவினில் நீண்ட நேரம் உறங்காமல் தொலைக்காட்சி பார்ப்பதே கண் பார்வைக் குறைவிற்குக் காரணம் என மருத்துவர் கூறுவதாக கூறியுள்ளார். பொதுவாகவே தொலைக்காட்சி அதிக நேரம் பார்ப்பது கூடாது.
ஒற்றுமை வெல்லும் என்பது பொதுவான கருத்து. உண்மையும் ஆகும். நண்பர்களாக இருக்கும் மாணவர்களிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால், மனக்கசப்பால் விளையாட்டில் கிடைக்கக் கூடிய வெற்றி எதிரணிக்கு போய்விடுகிறது. விளையாடும் போது வெற்றியே குறியாக இருக்க வேண்டும், எதிரணியை வீழ்த்துவதில் ஒற்றுமை இருக்க வேண்டும். தங்களுக்குள் இருக்கும் சண்டையை மைதானத்திற்கு வெளியிலேயே விட்டுவிட வேண்டும். விளையாட்டில் வெற்றிப்பெற ஒற்றுமை தேவை என்கிறது ஒற்றுமை வெல்லும் கதை.
பாவேந்தர் பாரதிதாசன் ஒரு வரியில் ஆத்திச்சூடியில் சொன்ன கருத்தைக் கொண்டு மாணவர்களுக்கு ஏற்ப சிறுகதைகளாக எழுதி தந்துள்ளார் எழுத்தாளர் நெல்லை அன்புடன் ஆனந்தி. பாவேந்தரின் ஆத்திச்சூடியையும் வாசிக்கத் தூண்டியுள்ளார். அதன்படி நடக்க அறிவுரைத்துள்ளார். கண்ணாடி வேண்டாமே பாப்பா என்னும் இத்தொகுப்பில் உள்ள ஏழு சிறுகதைகளையும் பள்ளிச் சூழலை மையப்படுத்தியே எழுதியுள்ளார். கதைகளை வாசித்தவுடன் சிறுவர்கள் மனத்தில் ஒரு சிந்தனையை உருவாக்கும் வண்ணம் உள்ளன. கதைக்களமும் கதையமைப்பும் கதை மொழியும் கதைநடையும் சிறுவர்களுக்கு பொருத்தமா சிறப்பாக உள்ளன. சிறுவர்களுக்கு எதைச் சொல்ல வேண்டுமோ எப்படி சொல்ல வேண்டுமோ அப்படியே சொல்லியுள்ளார். நூல் வடிவமைப்பிலும் கவிஞர் கன்னிக் கோவில் இராஜா கவனம் செலுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது. சிறுவர்கள் சார்பாக எழுத்தாளர் நெல்லை அன்புடன் ஆனந்திக்கு நன்றி. மற்றும் என் வாழ்த்துகள்.
வெளியீடு
லாலிபாப் பதிப்பகம் சென்னை
9841236965
எழுத்தாளர் நெல்லை அன்புடன் ஆனந்தி
பொன். குமார் 9003344742
***


0 comments:
Post a Comment