topbella

Thursday, September 27, 2012

நான் நானாக...!


யாருமற்ற வெளியில்
ஏக இறையின் துணையில்
ஏகாந்த சிலிர்ப்பில் 
எதைப் பற்றியும் எண்ணாது
நான் நானாக இருக்க வேண்டும்...

என் ஈசன் பாதம் பற்றி 
என் ஆசை அவன் 
தாள் பணிதல் ஒன்றே 
என்றென் எண்ணம் 
உரைத்தல் வேண்டும்....

சலனமில்லாத பயணம்
சஞ்சலமில்லாத உள்ளம்
சறுக்கல் இல்லா பாதை 
காயமில்லாத நெஞ்சம்
காண்பேன் அவன் தஞ்சம்...

உறுத்தல் வேண்டாம் 
உளறல் வேண்டாம்
கருத்து வேறுபாடு 
கடுகளவும் வேண்டாம்

கைகட்டி யார்முன்பும்
நிற்கவும் வேண்டாம்
கண்டதை எண்ணிக் 
கலங்கவும் வேண்டாம்...

காண்பேன் அவன் எழில் 
பாடுவேன் அவன் நாமம்
தேடுவேன் மெய்ஞானம் 
உள்ளன்போடு சேர்ந்திடுவேன் 
அவன் பொற்பாதம்....!

~அன்புடன் ஆனந்தி


(படம்: கூகிள், நன்றி)

Sunday, September 23, 2012

இன்ஸ்டண்ட் கேரட் தோசை..!


தேவையான பொருட்கள்:

காரட் - 1 கப் (துருவியது)
கோதுமை மாவு - 1 கப்
அரிசி மாவு - 1 கரண்டி
உப்பு - தேவையான அளவு

தாளிக்க:
எண்ணெய் - 1 ஸ்பூன்
கடுகு - 1/4 ஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 1/2 ஸ்பூன்
கடலை பருப்பு - 1/2 ஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது

செய்முறை:

ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவு, அரிசி மாவு, உப்புடன் தேவையான தண்ணீர் சேர்த்து தோசை மாவு பதத்திற்கு கரைக்கவும். இதனுடன் கேரட் துருவலையும் சேர்க்கவும்.

ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, உளுத்தம் பருப்பு, கடலை பருப்பு, கறிவேப்பிலை சேர்த்து தாளித்து கரைத்த மாவுடன் சேர்க்கவும்.

தோசை கல்லில் ஒரு கரண்டி மாவை ஊற்றி, சுற்றிலும் சிறிது எண்ணெய் ஊற்றி இரு புறமும் நன்கு வெந்ததும் எடுக்கவும்.

தேங்காய் சட்னி அல்லது தக்காளி சட்னியுடன் சாப்பிட சுவையாக இருக்கும்.
செய்து சாப்பிட்டு பாருங்க.





~அன்புடன் ஆனந்தி 





Monday, September 10, 2012

காத்திருப்பு...!



கவிதையே என்னை
காதல் செய்ய
கண்மூடி நேசிக்கிறேன்...

உன் வரிகளை
புரட்டிப் பார்த்தே
உன் வார்த்தைகளில் 
வசந்தமாய் வசிக்கிறேன்...

அரைக் கணத்தில்
ஆயிரம் கவிதை செய்தே
அங்கங்கே எனை
ஆளுமை செய்தே
ஆட்கொண்டாயே அன்பே...

உன் நினைவுகளில்
என் நிமிடங்கள் கரைய
நெஞ்சுக்குள் நீ ஒரு
கவிதை வரைய
கண்ணா உன் வருகைக்காய்
என் காத்திருப்பு...!

~அன்புடன் ஆனந்தி

(படம்: கூகிள், நன்றி)

About Me

My photo
I am a jovial.. sensitive.. happy person who likes to be around good friends ;)