அதிகாலை 5 மணிக்கெல்லாம்
அம்மாவின் அழைப்பு
காதில் விழுந்தும் விழாதது போல்
கம்பளிக்குள் ஒளிந்து கொள்வோம்..
எழுந்து குளித்து ஏதாவது உதவி செய் என்பாள் அம்மா..
எப்போதும் போல் ஆதரவாய் வந்தே
இன்னும் சற்று உறங்கட்டுமே என்பார் அப்பா..
ஒரு வழியாய் எழுந்து குளித்து வாசல் வந்தால்
அழகாய் தெளித்து கோலமிட்டு
முற்றத்தில் விளக்கேற்றி வைத்து
வாழை இலை முழுக்க
வகை வகையாய் காய்கறிகளும்
சீப்பு சீப்பாய் வாழை பழங்களும்
அம்சமாய் அடுக்கி வைத்து
அருகிலேயே கரும்பும் வைத்து
மஞ்சள் கிழங்கு கட்டி
விபூதி பட்டையிட்டு
நடுவில் குங்குமம் வைத்து
தண்ணீர் தளும்ப ஊற்றி
இரு பானைகள் அடுப்பில் ஏற்றி வைத்து
கண்களில் புகை அடிக்க
அம்மா கவனமாய் பொங்கல் செய்து கொண்டிருக்க
தம்பியையும் துணைக்கழைத்து
காய்ந்த தென்னை ஓலைகளை
பதமாய் பிய்த்துக் கொடுத்து
பொங்கல் பொங்குவதற்காய்
பொறுமையாய் காத்திருப்போம்
பொங்கல் நுரையாய் பொங்கி வர
அப்பா தேங்காய் ஒன்றை உடைத்தே
பானைக்குள் ஊற்றியபடி
பொங்கலோ பொங்கல் என்பார்
அம்மா குலை விட்டபடியே
அதனை கிளறி விடுவாள்
பூரிப்பில் பார்த்திருப்போம்
புன்னைகையால் பூத்திருப்போம்
பொங்கலை இறக்கி பூஜை முடித்து விட்டு
இலையில் வெண்பொங்கலும் சர்க்கரை பொங்கலும்
உடைத்த தேங்காயில் இருந்து ஒரு துண்டும்
உரித்த வாழை பழம் ஒன்றும் வைத்தே
காக்கைக்கு முதலில் வைத்தே
பின்பு நம் கைகளில் அம்மா தருவாள்
இதெல்லாம் முடியும் முன்பே
இனிதே இமை திறந்தே
எட்டி பார்ப்பான் ஆதவனும்...!!!
#அது அந்தக் காலம்#
~அன்புடன் ஆனந்தி
(படம்: கூகிள், நன்றி)