topbella

Sunday, June 24, 2018

என் சொத்தே..!!!


அழைத்திடும் அருளே
அடர்ந்த கரும் இருளே
உரைந்திடும் பனியே
உள்ளமர்ந்திடும் இசையே..

வெண்மேகம் சூழ் வானமே
வெகுண்டு எழுந்திடும் வீரமே
கண் கொள்ளா காட்சியே
கண்ணீர் வரவைக்கும் கவியே..

சொல்லில் அடங்கா பேரின்பமே
பெருகி வரும் அருவியே
அள்ளித் தரும் அன்பே
நெருப்பாய் தீண்டும் வம்பே..

கற்பனைக்கு எட்டா கட்டுரையே
கதிகலங்க செய்யும் காதலே
காதல் செய்தே காலம் வெல்லும்
கண் மலரே விண் ஒளியே..

விதைத்த நல் வித்தே
விளைந்த நல் முத்தே
முக்காலமும் எனை ஆளும்
சொந்தமே என் சொத்தே..!

~அன்புடன் ஆனந்தி
(படம்: கூகுள், நன்றி)


Monday, June 18, 2018

எல்லாம் நீயென்று..!!!


இமை தூங்கும் நேரம்
என் இதயத்துள் ஈரம்
மொழி பேசா பாவை
வெண் முகிலாகும் போர்வை..

கரம் தாங்கும் கோலம்
என் கண்ணோரம் ஏங்கும்
திசை அறியா தூரம்
உன் கரம் கோர்த்து நீளும்..

ஏக்கத்தின் எதிரொலி
மெலிதாய் தாக்கும்
மௌனத்தின் எதிரொலி
கண்ணீராய் பூக்கும்..

வாய்மொழி கேட்டிடவே
வாதம் பல செய்யும்
வந்து விட்டாலோ
வாய் மூடிக்கெஞ்சும்..

விதம் விதமாய் யோசித்தே
வீண்வாதம் செய்யும்
விசித்திரமாய் சிந்தித்து
வீணாய் மனம் நோகும்..

இன்பம் இதுவென்றே
இகம் பல கூறினும்
இயம்பும் விழி சொல்லும்
எல்லாம் நீயென்று..!

~அன்புடன் ஆனந்தி ❤️

(படம்: கூகுள், நன்றி)

About Me

My photo
I am a jovial.. sensitive.. happy person who likes to be around good friends ;)