topbella

Thursday, October 8, 2026

நவராத்திரி வாழ்த்துகள்

கொக்கரக்கோ - செப்டம்பர் 2026 இதழ் - நெல்லை அன்புடன் ஆனந்தி

கவிச்சிறகுகள் - செப்டம்பர் 2026 இதழ் - நெல்லை அன்புடன் ஆனந்தி



அனைவருக்கும் இனிய வணக்கம்!

செப்டம்பர் 2026 கவிச்சிறகுகள் இதழ்

அமெரிக்காவில் இருந்து வெளிவரும்
கவிச்சிறகுகள் செப்டம்பர் 2026 இதழை
மகிழ்வோடு பகிர்கிறோம்.

ஆசிரியர்:
*கவிஞர் நெல்லை அன்புடன் ஆனந்தி* அமெரிக்கா

துணை ஆசிரியர் & இதழ் வடிவமைப்பு
*கவிஞர் கன்னிக்கோவில் இராஜா* சென்னை

இதழில் பங்கு பெற்ற அனைத்து படைப்பாளர்களுக்கும் வாழ்த்துகள்.

அடுத்த இதழில் பங்கு பெற:

*நவம்பர் 2026* மாத இதழுக்கான படைப்புகள் அனுப்ப 

*இறுதி நாள் அக்டோபர் 31, 2026*

*அனுப்ப வேண்டிய முகவரி:*
kavichirakukal@gmail.com

(சிறந்த படைப்புகள்  தேர்ந்தெடுக்கப்படும். விதிகளுக்குள் அல்லாத கவிதைகள் பிரசுரிக்கப்படாது)

*அடிப்படை விதிகள்:*
- ஒருவர் *ஒரு படைப்பு மட்டுமே* அனுப்புக
- படைப்புடன், *பெயர், ஊர், புகைப்படம்* சேர்த்து ஒரே ஈமெயிலில் அனுப்புக
- *24 வரிகளுக்குள்* மட்டுமே கவிதை இருக்கப் வேண்டும் *(வரிகள் கூடினால் ஏற்கப்பட மாட்டாது)*
- Unicode / word doc ல் அனுப்பவும்
- கவிதையில் *, /, ! சேர்ப்பதைத் தவிர்க்கவும்.

🙏🩷🙏

தனிமை (குறுங்கதை) - நெல்லை அன்புடன் ஆனந்தி

தனிமை
(குறுங்கதை)
எழுதியவர்: 
நெல்லை அன்புடன் ஆனந்தி

பெண்களுக்கான விடுதி அது.
அங்குள்ள சிறிய பூங்காவில் மாலை நேரங்களில் தனக்குப் பிடித்த புத்தகத்தை வாசிப்பது மாலதியின் வழக்கம்.
அன்றும் பெஞ்சில் அமர்ந்து
புத்தகத்தை வாசித்துக் கொண்டிருந்தாள்.

சிறுவயதிலேயே பெற்றோரை இழந்து ஆசிரமத்தில் வளர்ந்து தனது உழைப்பினால் இன்று ஒரு செவிலியராக வேலை பார்க்கிறாள்.

அன்று மாலதியின் பிறந்தநாள்.
நமக்கென யாரும் இல்லையோ
என்று யோசிக்கும் போதே.. அவள் பக்கத்தில் ஒரு சிவப்புப்பறவை வந்து அமர்ந்தது.

அவளையே பார்த்தது. அவள் இதழ்களில் புன்னகை.

அமர்ந்திருந்த மரத்திலிருந்து மலர்கள் உதிர்ந்தன.
அண்ணாந்து பார்த்தாள். தனக்கெனத் துணையாய் இந்த இயற்கையும், பிரபஞ்சமும் எப்போதும் இருக்கும் என்ற நம்பிக்கையில் பெரு மூச்செறிந்தாள்.


Sunday, October 4, 2026

ஈகை விழாவில்.... சாக்லேட் கிருஷ்ணா..!!

நாடகக் கலை நலிந்து போய்விடாமல் இருக்க இன்றும் தங்கள் திறமையால்  பார்வையாளர்களை வயிறு குலுங்கச் சிரிக்க வைக்கும் திரு. கிரேசி மோகன் மற்றும் அவர் குழுவினரின் சிறப்பு நாடகம் "சாக்லேட் கிருஷ்ணா", நமது தமிழ் சங்கத்தினரால் ஈகை விழாவிற்காய் ஏற்பாடு செய்யப் பட்டிருந்தது.  நாடகம் தானேன்னு அசால்ட்டா விட்டுடாம அத்தனை பேரும் அரங்கம் நிறைய வந்திருந்தது கூடுதல் சிறப்பு.  நாடகம் ஆரம்பிக்கும் முன்பே கிரேசி மோகன், தனது வேலையை செவ்வனே ஆரம்பித்து விட்டார்.

அவரது நண்பரின் பையன் ஊருக்கு வந்திருந்த இடத்தில், நண்பர் அவனை கோவிலுக்கு கூட்டிப் போயிருக்கிறார். இவர்கள் சென்ற நேரம் சுவாமிக்கு அபிஷேகம் நடந்து கொண்டிருக்கிறது. பையன் கேட்டிருக்கிறான், என்ன செய்றாங்கன்னு? இவரும் சுவாமி இஸ் டேகிங் பாத்..! ன்னு சொல்லிருக்கார்.  இன்னும் கொஞ்ச நேரத்துல அபிஷேகம் முடிஞ்சு, திரை சீலையை போட்டிருக்காங்க.. பையன் கேட்டிருக்கான், இப்போ என்ன செய்றாங்கன்னு... நம்ம ஆளும் அசராம "நவ் ஹி இஸ் சேஞ்சிங் டிரஸ்"ன்னு எடுத்து விட்டிருக்கார். அதுக்கு நம்ம பையன் விவரமா கேட்டிருக்கான்.. "ஏன் தாத்தா, குளிக்கும் போதே பார்க்க விட்டாங்க.. துணி மாத்தும் போது ஏன் மறைக்கணும்..ன்னு".. தாத்தா நிலமைய யோசிச்சு பாருங்க..ன்னு சொல்லி அரங்கம் அதிர வைத்தார்.

அது மட்டுமன்றி இந்த நாடகத்திற்கு பெயர் தேர்வு செய்ததும் குழந்தைகள் தானாம். அவரின் வெற்றிக்கு பின்னால் மூல காரணமாய் இருப்பது, தனது கூட்டுக் குடும்பமே என்றும், தம்பி உடையான் படைக்கு அஞ்சான் என்பது போல மாது அவர்களை குறிப்பிட்டும், மேலும் தன்னுடன் உழைக்கும் அத்தனை குழுமத்தினரையும் மனமார பாராட்டினார்.  தலைவன் என்ற முறையில்.. எந்த ஒரு பந்தாவும் இல்லாமல் எளிமையாய் பணிவோடும், பாசத்தோடும் அவர் உரை இருந்தது மனதிற்கு நெகிழ்வாய் இருந்தது.  ஒரு வழியா அவர் பேசி முடிச்சு... டிராமாவும் தொடங்கிருச்சு.  ஆரம்பம் முதல் இறுதி வரை.. சிறிது கூட தொய்வு இல்லாமல் நமை எல்லாம் சிரிக்க வைத்த சாக்லேட் கிருஷ்ணா குடும்பத்தினருக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்.

மாதுவின் பாட்டியாய் வந்தவர் செய்யும் சிறு சிறு திருட்டுகள், இசை வித்வானாய் ஆக அவர் தந்தை செய்யும் கூத்து, கிருஷ்ணனே நேரில் வந்து மாதுவுக்கு உதவி செய்வதற்கு அவர் வீட்டிலேயே தங்கி விட... கதை சுவாரஸ்யமாய் கலகலப்பாய் சென்றது. பிரமோஷன் கிடைக்க கஷ்டப்படும் மாதுவிற்கு கிருஷ்ணன் உதவுவதும் பயங்கர கலாட்டா. நாடகத்தின் தொடக்கத்தில் கிருஷ்ணன் மாதுவின் வீட்டில் இருக்கும் போது, மீரா, யசோதா, ராதா என்று ஃபோன் செய்து, எங்க ஆத்துக்காரர் இருக்காரா? என் புள்ள இருக்கானான்னு? கேக்குற இடமெல்லாம் சிரிப்பலை தான்.

இப்பொழுதெல்லாம் நாடகம் என்ற பெயரில் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப் படும் பல இம்சைகளுக்கு மத்தியில் இரண்டு மணி நேரம் போனதே தெரியாமல் நம்மை அவர்களுடனேயே இணைத்து ரசிக்கச் செய்தனர்.  இன்னும் சொல்லப் போனால் நாடகம் முடிவில் "என்ன அதற்குள்ளாக முடிந்து விட்டதான்னு" கேட்கத் தோன்றியது. இன்னொரு இடம் என்னை மிகவும் கவர்ந்தது, ஸ்ரீமத் பகவத் கீதையில் ஒருவர் ஃபோன் பண்ணி சந்தேகம் கேட்பார்.. கிருஷ்ணர் அதற்கு, "ஏண்டா நானே எழுதி யுகமாச்சு.. நீ இன்னமும் விளங்காமையே விளக்கம் கேட்டுட்டு இருக்கன்னு" சொல்வார். மாது, கிருஷ்ணரிடம் "எங்கே.. பகவத் கீதைல இருந்து ஒரு ஸ்லோகம் சொல்லுங்க பாப்போம்"ன்னு சொல்ல.. ஸ்ரீ கிருஷ்ணன் எதுவோ ஒன்று சொல்ல, மாதுவும் வெரி குட், வெரி குட் ன்னு சொல்ல, அதற்கு கிருஷ்ணர் "அடப்பாவி, இது பகவத்கீதையே இல்ல.. நா ஏதோ சைனீஸ் பாஷைல சொன்னேன்னு சொல்வார்".

இந்த மாதிரி இன்னதென்று பிரித்தரிய முடியா வண்ணம் ஒவ்வொரு காட்சியிலும் சிறிதும் போர் அடிக்காமல் விறுவிறுப்பாய் நடத்திச் சென்ற திரு. கிரேசி மோகன் அவர்களுக்கு எனது வாழ்த்துக்களும், வணக்கங்களும்.  பொதுவாக எதுவும் நிகழ்ச்சி பார்க்கும் பொழுது மக்கள் இங்கும் அங்கும் இடையில் எழுந்து போவதுண்டு.. காரணம் நிகழ்ச்சியின் தொய்வு, ஆனால் இங்கே அரங்கம் முழுமையும்  நாடகம் தொடங்கியது முதல், இறுதி வரையில் அனைவரும் அமர்ந்து ரசித்து, ஆரவாரமாய் ஆதரவு கொடுத்து பார்த்தது குறிப்பிட வேண்டிய ஒன்று. ஆக மக்கள் மேல பிரச்சினை இல்லை, நடக்குற நிகழ்ச்சியில இருக்கு, ஆடியன்ஸ ஒரு இடத்துல உக்கார வச்சு பார்க்க வைக்கிற திறமை. அது கண்டிப்பா "சாக்லேட் கிருஷ்ணா" குழுவிற்கு இருப்பதில் ஐயமே இல்லை. மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்புன்னு சொல்லக் கேட்டிருக்கிறோம், நாடகம் முடிந்ததும் அரங்கமே எழுந்து நின்று கரகோஷம் எழுப்பி, அந்த குழுவிற்கு மரியாதை செய்தது மனதிற்கு மகிழ்ச்சியாய் இருந்ததோடு மட்டுமன்றி அக்குழுவின் வெற்றியை பறை சாற்றியது.

இந்த ஈகை விழாவில் திரட்டப்பட்ட நிதி, மாற்றுத்திறனாளிகள் மற்றும் ஆதரவற்றோரின் வாழ்வாதாரத்திற்கும், ஏழை குழந்தைகளுக்கு இலவச இருதய அறுவை சிகிச்சை செய்வதற்கும் பெரும் தொண்டாற்றி வரும் லாரன்ஸ் சாரிட்டபிள் டிரஸ்ட் "வாழ்வோம் வாழ வைப்போம்" (ராகவா லாரன்ஸ் அவர்கள் சென்னையில் நடத்தி வரும் அறக்கட்டளை) மற்றும் FOMAPI மிச்சிகனில் வாழும் இந்திய வம்சாவளி வழி வந்த மருத்துவர்கள் நடத்தும் அறக்கட்டளைக்கும் அளிக்கப்பட்டது. சிறு துளி பெருவெள்ளம் என்பது போல நாம் செய்யும் சிறு உதவி கூட ஒருவரின் வாழ்விற்கு ஆதாரமாய் அமைய கூடும். இப்படி ஒரு நல்ல காரணத்திற்காய் நடத்தப் பட்ட நிகழ்ச்சியில் நானும் கலந்து கொள்ள முடிந்ததும், அதை உங்களுடன் பகிர்ந்து கொள்ள முடிந்ததும் என் பாக்கியம். 

மனம் ஒரு மாயக்காரன்..!

ஓம் நமசிவாய என்னும் உச்சரிப்பில்... உயிர் நாடி.. உயிர்த்தெழுந்து.. உள்ளுக்குள் சிலிர்க்கத் தொடங்கி.. சற்று நேரத்தில் உலகம் விட்டு... எங்கேயோ சென்றது போல் எண்ணம்... அவ்வெண்ணத்தில் திண்ணமாய் நனைந்து... தில்லை நாதனை மனதில் இருத்தி... தெளிவான நீரோடை போல் சலனம் அற்று.. சபலம் அற்று.. சஞ்சலம் அற்று... அபயம் அபயம் என அவன் தாள் பணிந்து விடவேண்டும்..

உள்ளிருக்கும் அழுக்கெல்லாம் உடன் விரைந்து அழிந்தது போல்... எவ்விதத் தடங்கலும் இன்றி.. எண்ணத்தில் ஏகாந்தம் மலர... எங்கும் நிறைந்திருக்கும் பரம்பொருளை.. ஏகாம்பரேஷ்வரரை... எந்தக் குழப்பமும் இன்றி  எண்ணித் திளைத்திருத்தல்.. பரமானந்தம்...!

அறியவொண்ணா விஷயங்கள் ஆயிரம் இங்கிருக்க... அர்த்தமற்ற செய்கைகளில் யாம் அன்றாடம் லயித்திருக்க... இஷ்டப்படி நாம் இருந்தால்... வரும் கஷ்டங்களையும் சேர்ந்தே படு என்பது போல்.. சூட்சுமம் இங்கு விளையாட... கணநேரத்தில் கண் முன் தோன்றும் அபத்தங்கள்.. கச்சிதமாய் நம்மைக் கைது செய்ய.. மனமெனும் மாயை நம்மை மந்திரக்காரன் போல்... சூது செய்ய... கண் திறந்திருந்தும் குருடன் போல்.. கட்டுக்குள் சிக்கிக் கொள்கிறோம்...!

மனம் ஒரு மாயக்காரன்... தந்திரங்கள் பல செய்து.. நம் இயல்பை மாற்றச் செய்யும் சாகசக்காரன்... அவன் மகுடிக்கு ஆடும் நாகம் போல்... மயங்கி விடாது இருக்க... மனத்தை நம் கட்டுக்குள்.. கண்டித்து வைக்க வேண்டும்.. சமயத்தில் சஞ்சலத்தில் சிந்தை மயங்கி.. சலனத்தில் நமை மறந்து... சபலத்தில் சறுக்கி விட வாய்ப்புண்டு.....! விழும் இடத்தில்.. அழுந்தி விடாமல் இருக்க... ஆண்டவன் துணை நாடி.. அவன் கரம் பற்றி உடன் மேல் எழும்ப வேண்டும்...!

உள்ளம் தெளிந்து இருந்தால் இவ்வுலக வாழ்வை கடத்தல் எளிது.. கடத்தும் காரணி... கருணா மூர்த்தியாய் கடவுள் இருக்க... அவன் நடத்தும் நாடகம் புரியாது... நாமாய் நம் வாழ்வை பல நேரங்களில் சிக்கலாக்கிக் கொள்கிறோம்... வழியைக் காட்டும் வழிகாட்டியாய்த் தான் அவன் இருப்பான்... நமக்காக அவனையே வாழ்ந்தும் முடித்து விடு என்று சொல்ல முடியாது அல்லவே... இயன்ற மட்டும் ஏற்றுக்கொண்ட இவ்வில்லற வாழ்க்கை இசையாய் இதமாய் செல்ல வேண்டுமெனில்... இறைச் சிந்தனையோடு இயல்பாய் இருக்க முயற்சி தேவை..!


யாரும் யாரையும் நம்பி இங்கு இல்லை... அவரவர் வேலை செய்தால் அவரவர் குடும்பம் வாழ அது உதவும். நம்மால் இயலாது என்ற எதிர்மறை எண்ணம் நமக்குள் வருவது நம்மைப் பள்ளத்தில் தள்ளி விடும்..


...நெல்லை அன்புடன் ஆனந்தி




5 நிமிட ஈஸி ரசம்...!

சும்மா வெறுமே ரெசிப்பி கொடுத்து போர் அடிச்சிருச்சு... உங்களுக்கும் ஒரு டெஸ்ட்.. இதில் நிறைய பொருட்கள் சுருக்கமான எழுத்துக்களாய் கொடுத்திருக்கேன்..! எத்தனை பேர்.. சரியா கண்டுபிடிச்சு ரசம் வைக்க போறீங்க? (யாரும் திட்ட பிடாது... நீங்க எல்லாரும் படிச்ச பிறகு.. விளக்கமா ரெசிப்பி போட்டு விடுகிறேன்.. இந்த டீல் ஓகே-யா? )


தே. பொ:  (ஹி ஹி.. இங்கயே ஸ்டார்ட் பண்ணுவோம்ல...)

தக்காளி - 2  
ரசப்பொடி - 2 டீஸ்பூன்
(உங்க நன்மை கருதி.. முக்கியமான பொருளாச்சேன்னு முழுசா சொல்லிட்டேன்.. அப்புறம் நீங்க எதாச்சும் ஒரு பொடிய போட்டு.. ஏதும் ஏடாகூடம் ஆயிருச்சுன்னா... எல்லாம் ஒரு முன் எச்சரிக்கை தான்... :) )
ம. பொடி- சிட்டிகை
மிளகு பொடி -  1 / 4 ஸ்பூன்
பெ.கா.பொடி - சிட்டிகை 
பூண்டு - 2   
உப்பு - தேவைக்கேற்ப  
எ.ப. சாறு - 2 டேபிள் ஸ்பூன்
கொ.ம.இலை - சிறிது 
க.வே. இலை - சிறிது

தாளிக்க:

எண்ணெய் - 2 ஸ்பூன் 
மி.வ - 2 
கடுகு - 1 / 4 ஸ்பூன்
உ.ப - 1 / 4 ஸ்பூன்
க. வே - சிறிது

செ.முறை:

ஒரு பாத்திரத்தில் சிறிது எண்ணெய் விட்டு, காய்ந்ததும் அதில் கடுகு, உ. ப., க.வே., மி. வ., போட்டு.. கடுகு வெடித்ததும், அதில் நறுக்கிய தக்காளி பழத்தை போட்டு சிறிது வதக்கவும். இதில், பூண்டை இடித்து போடவும். 

தக்காளி சிறிது வதங்கியதும், அதில் ர.பொடி, மி. பொடி, ம. பொடி, பெ.கா. பொடி, உப்பு கலந்து... வேண்டிய அளவு தண்ணீர் சேர்த்து... மிதமான தீயில், கொதிக்க விடவும்.

நுரை சேர்த்து வரும் போது... க.வே.இலை, கொ.ம.இலை போட்டு , எ.ப.சாறு விட்டு இறக்கவும்.

என்னங்க.. ரசம் சரியா வச்சிருவீங்க தானே...? குட் லக்..! 


...நெல்லை அன்புடன் ஆனந்தி 


   

தூள் பறக்கும் தீபாவளி...!

மிச்சிகன் தமிழ் சங்கத்தில்... தீபாவளி கோலாகலமாக கொண்டாடப்பட்டது.  இளம் குழந்தைகள் இனிதாய் தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்க.. இளைஞர் பட்டாளம் இன்னிசையாய் அமெரிக்கன் தேசிய கீதம் பாட... கங்கா ராஜ்குமார் அவர்கள்.. குத்துவிளக்கு ஏற்றி.. விழா துவங்கியது.  "தூள் பறக்கும் தீபாவளி..." பேரை கேட்டாலே சும்மா அதிருதுதில்ல....!  உள்ளே நுழையும் போதே.. நம்ம ஊர் தியேட்டர் வாசலில் நின்ற உணர்வு தான் வந்தது.... ஏனென்றால் வாசலின் முகப்பிலேயே அங்கங்கே... "ஹவுஸ் ஃபுல்" மற்றும் "டிக்கெட்ஸ் சோல்ட்" அறிவிப்புகள் கண்ணில் பட்டன.  அரங்கம் நிறைந்து வழிந்த காட்சி கண்டு ஏதோ, திருவிழா வந்த பூரிப்பு மனதினுள்...!!!

குழந்தைகளின் குதூகலமான கலை நிகழ்சிகள்... ஒவ்வொன்றாய் அணி வகுக்க பார்ப்பவர்களுக்கு பட்டாசு வெடிப்பதைப் பார்ப்பது போன்ற பரவசம்...! "ந்ருத்ய வந்தனத்தில் ஆரம்பித்து... "iDanz School of Modern Dance" வரை.. அத்தனை நிகழ்ச்சியும் முத்துக்கள்..!

யூத் கமிட்டி நடனமாடிய "தீபாவளி டைனமைட்ஸ்" நிகழ்ச்சி பங்கு பெற்ற இளைஞர்களின் ஆர்வத்தையும், நளினத்தையும் காட்டியது.  "மிச்சிகன் மைனாக்கள்" தங்களின் ஜிங் சிக்கா... பாடலில் அனைவரையும் கவர்ந்து உடன் கைதட்ட வைத்தனர்.

அருபதின் அரும்புகள்.. பெயருக்கு ஏற்றார்போல அரும்புகளே தான்.. அவர்களின் ஆடலும் அசைவும் அருமை...!  "Canton தீப்பொறிகள்" தங்களின் குத்தாட்டத்தில் அரங்கமே கைதட்டி உற்சாகமாய் "ஒன்ஸ் மோர்" கேட்க வைத்தனர்.

இதற்கு இடையில், முருகப்பன் அவர்களின்.. சிறிய நகைச்சுவை விருந்து.. கலாட்டாவான நிகழ்ச்சியாக இருந்தது. எதை எடுத்துச் சொல்ல.. எதை விட என்றே தெரிய வில்லை... அத்தனை நிகழ்ச்சியும் அரங்கம் அமர்ந்தோர் மனதை கொள்ளை கொண்டு சென்றது.

கலை நிகழ்ச்சிகள் முடியவும் தீபாவளி விருந்து ஏற்பாடு செய்திருந்தனர்.   குறை கூற முடியாத படி சுவையான உணவு பரிமாறப்பட்டது சிறப்பு..!  உணவு இடைவேளைக்கு பின், விஜய் டிவியின் "நீயா? நானா?" புகழ் கோபிநாத் அவர்களின் விவாத மேடை அரங்கேறியது.

கோட் போடாவிட்டாலும் நான் தான் கோபிநாத்... யாரும் சந்தேகபட வேண்டாம்னு என்ட்ரிலயே கலகலக்கச் செய்தார் கோபிநாத்.  கொடுக்கப்பட்ட தலைப்பு "அன்றாட வாழ்க்கையில் அதிகம் அனுசரித்துப் போவது கணவனா? மனைவியா?"..! இரு புறத்திலும்.. சுமார் இருபது பேர் பங்கேற்று விவாதிக்க ஆரம்பித்தனர்.

சுத்தி வளச்சு எல்லாம் எனக்கு சொல்ல வேண்டாம்.. டக் டக்..ன்னு பாயிண்ட்ஸ் மட்டும் சொல்லுங்கன்னு கோபி உற்சாகப் படுத்த... அவரவர் பார்வையில்.. மனதில் பட்டதை ஆர்வமாய் சொல்லி வந்தனர்.  இடையில்.. கணவனே.. என்ற அணியில் பேசிய ஒருவர், "அந்த காலத்துலேயே அந்த ஆண்டவனே அர்த்தநாரீச்வரறாய்.. உடலில் பாதி தந்து அனுசரித்து போய் விட்டார்.. " என்று சொல்லவும்.. கோபிநாத்.. "சார்.. நீங்க அர்த்தநாரீஸ்வரரை விடுங்க.. இப்போ அமெரிக்காவுக்கு வாங்க..ன்னு" சொல்ல அரங்கம் அதிர சிரிப்பொலி கிளம்பியது.

அதே போல மனைவியே! என்ற அணியில் ஒருவர் பெண்கள் மட்டும் புகுந்த வீட்டு உறவுகளை கலையாமல், அடிக்கடி பேசி கச்சிதமாக உறவு வைத்திருக்கிறோம். இந்த கணவர்கள், அப்படி எல்லாம் செய்வது இல்லை.. எங்கள் வீட்டில் கூட சேர்ந்தாற்போல் ஒரு வாரம் தங்குவது இல்லை.. என்று வருத்தப்பட்டார். அதற்கு எதிர் அணியினர் ஏதோ கூறி விவாதிக்க... இடை புகுந்த கோபிநாத்.. "ஏங்க... நீங்களே சொல்லுங்க.. உங்க வீட்டுக்காரர் உங்க வீட்டு ஹால்-ல உள்பனியன் மட்டும் போட்டுக்கிட்டு, ஒரு கைல ரிமோட் வச்சிக்கிட்டு.. விஜய் டிவி-ல நீயா? நானா? பாத்துக்கிட்டு.. நல்ல பேசுரான்யா.. ன்னு இருந்தா.. எப்படி இருக்கும்? மாமனார்.. உடனே கூப்பிட்டு ஏம்ப்பா.. அந்த மாட்டை பிடிச்சு.. பின்னாடி கட்டுப்பா...ன்னு சொல்லிற மாட்டாரா..? மாப்பிள்ளைக்குன்னு ஒரு கெத்து வேணுங்கன்னு சொல்லி கலாட்டாவாக கருத்தை பகிர்ந்தார்.

இரு அணியிலும்.. தங்கள் சொந்தக்கதை, சோகக்கதை, பந்தக்கதை, பார்த்த கதை...ன்னு எல்லாவற்றையும் அருமையாக சொல்லி விவாதித்தார்கள்.  இறுதியில், அதிகம் அனுசரித்து போவது மனைவியே...!! (பெண்களே) என்று சொல்லிய கோபிநாத்... அப்படி ஆண்கள் அனுசரித்துப் போகாமைக்கு காரணமும் பெண்களே..! என்று முடித்தார்.

அதற்கு அவர் சொன்ன விளக்கம்.. அருமை. அதாவது சிறு வயது முதலே ஆண் பிள்ளைகளை.. வீட்டில் எந்த வேலையும் செய்ய விடாது... நீ சாப்பிட்ட தட்டை நீ ஏண்டா எடுக்கற... ? நீ ஆம்பிளை... அதெல்லாம் செய்யக் கூடாது...ன்னு சொல்றது, மனம் வெம்பி அவன் அழுதாலோ... நீ ஆம்பிளைடா.. அழக்கூடாதுன்னு சொல்றது... இப்படி அவர்களை வளர்த்து விடுவது யார்?? தாயாகிய பெண்கள் தானே?

அத்தனை வருஷம் சுக போகமாய் வாழ்ந்த அவனை... திருமணம் முடிந்து வந்ததும்... இவர் என்ன கூட மாட ஒரு வேலை செய்யறது இல்ல..ன்னு மனைவிமார்கள் கோபித்துக் கொள்வதில் எந்த நியாயமும்.. இல்லை. ஏனென்றால் அவனுக்கு அது புதிது... அனுசரித்து போக காலம் பிடிக்கும்...ன்னு சொல்லி கலகலப்பாக, போர் அடிக்காமல் மிக நன்றாக பேசினார்.

இது தவிர.. எப்போது ஒரு மனைவி குடும்பத்திற்காய் பணம் சம்பாதிக்கும் பொருட்டு வாசல் இறங்கி வேலை செய்ய தொடங்கி விட்டாளோ, அப்போதே அவர்கள் இருவரும் ஒன்றே... வீட்டு வேலை தொடங்கி அத்தனையும் நீ பாதி.. நான் பாதி.. என்று எடுத்துச் செய்வது தான் முறை..! அன்பான இல்லறம் தொடர வேண்டுமென்றால்... அந்த இடத்தில் அனுசரணை தானாக வந்தே ஆக வேண்டும்ன்னு சொன்னார். இப்படி பல விஷயங்கள் ரசிக்கும் படியாய் அமைந்தது.

விவாத மேடை முடிந்து... வெளியில் வந்ததும்... "Cafeteria"வில் DJ & Dance ஏற்பாடு செய்திருந்தார்கள்... குழந்தைகளும், பெரியவர்களும்... குழுமி குத்தாட்டம் போட்டு தீபாவளியை.... வெகு வெகு சிறப்பாக கொண்டாடி முடித்து இல்லம் சென்றனர்.  மொத்தத்தில் பெயருக்கு ஏற்றாற்போல் "தூள் பறக்க........" தமிழ் சங்கத்தினர் தீபாவளி விழாவை சிறப்பாய் நடத்தி முடித்து விட்டனர்.

தண்ணியில் பட்ட பாடு...!!

தண்ணியில் பட்ட பாடு.. (உடனே வேற எங்கயும் சிந்தனை போக வேணாம்.. வெறும் தண்ணீர் தான்....)

குழந்தைகளுக்கு பிடிக்குமேனு, வாட்டர் பார்க் கூட்டிட்டு போனோம்.. (நமக்கு தான் நீச்சல் எல்லாம் தெரியாதேன்னு சும்மா இருந்திருக்கலாம்.. ஆசை யார விட்டது....) நானும் தண்ணிக்குள்ள இறங்கி.. விளையாடிட்டு இருந்தேன்..

ஏதோ, நம்ம ரேஞ்சுக்கு ஒரு 5 அடி, உசரம் வரைக்கும் போயி போயி விளையாடிட்டு இருந்தேன்.. தண்ணீரில் மிதப்பதற்கு வசதியாக, அங்கே ரிங்க்ஸ் இருக்கும்.. அதுல தொங்கிட்டு ஜாலி-யா இருந்தது..




அங்கே "wave pool " னு ஒரு இடம்.. அதில், ஒரு ஒரு 10 நிமிசத்துக்கும், தண்ணியோட வேகத்தை கூட்டி, அலை அலையாக வர செய்வாங்க.. அந்த சமயத்துல, நம்ம இருக்கற ரிங் அப்படியே மிதந்து, மிதந்து போறது சூப்பரா இருக்கும்.. ஆஹா.. என்ன ஒரு சந்தோசம் தெரியுமா..? நா பாட்டுக்கு ஜாலியா விளையாடிட்டு இருந்தேன்.. அலை அலையா வந்ததுல.. மெதுவா நமக்கு தெரியாமலயே உள்ளே இழுத்துட்டு போகும் போல இருக்கு.. தண்ணியில விளையாடுற குஷில உள்ள ஆழத்துக்கு வந்தது தெரியல..


திடீர்னு, என்னடா காலுக்கு கீழ தரையக் காணோமேன்னு பாத்தா.. (அவ்வ்வ்வவ்வ்வ்) 6 அடி பக்கம் இழுத்துட்டு வந்திருச்சு.. ஒரே பீதியா போச்சு... கைய வச்சு தள்ளி முன்னாடி போகலாம்னு பாத்தா, பயத்துல ஒன்னும் வொர்க் அவுட் ஆகல... சரி, என்ன பண்றதுன்னு... வெளியில என் பதி, நிக்கராரேன்னு,, கைய காமிச்சு கூப்பிட்டா... மனுஷன் நா கூப்பிடறது தெரியாம "ஹாய்ய்ய்....."னு கை ஆட்டிட்டு நிக்கிறார்... (இதுக்கு பேரு தான் சொந்த செலவுல சூனியம் வச்சிக்கறதா..?? )


அட பாவி மனுஷா... திட்டமிட்ட சதி தானான்னு.. தான் நினைக்க தோனுச்சு.. நா சத்தம் போட்டு கூப்ட்டாலும் அவங்க காதில விழ வாய்ப்பு இல்ல.. ஏன்னா, அலை வரும் போது, எல்லாரும் பயங்கரமா சத்தம் போட்டு, என்ஜாய் பண்றதுல நீங்க என்ன கத்தி கூப்பிட்டாலும்  வெளியில் கேட்காது.. (எதாவது... எமெர்ஜென்சி... தண்ணியில் மூழ்கும் அளவு போனால் உடனே ( life guard ) லைப் கார்ட் குதிச்சு தூக்கிருவாங்க.. அதனால அந்த அளவுக்கு போகாதுன்னு ஒரு நம்பிக்கை தான்..)


அப்புறம்.. என்ன?? இந்த மனுஷன நம்பி பிரயோஜனம் இல்லன்னு, பக்கத்துல இருந்த ஒருத்தங்க கிட்ட.. "எக்ஸ்க்யூஸ் மீ..... கொஞ்சம் என்னை வெளியில் ஆழமில்லாத இடத்துக்கு தள்ளி விடுங்க.. ப்ளீஸ்... னு கேட்டு.. " வெளியில வந்தேன்.. கால் தரையில பட்ட பிறகு தான் உயிரே வந்தது...



சரி நமக்கு வேவ் பூல் எல்லாம் சரிப்பட்டு வராதுன்னு... அடுத்த முயற்சியா "வாட்டர் ச்ல்ய்டு" ல போகலாம்னு முடிவு பண்ணி.. அதுல மலை ஏறுற மாதிரி ஏகப்பட்ட படி ஏறி போயி, ச்ல்ய்டுல வந்தா.... (என்னத்த சொல்றது..... விதி அங்கயும் விளையாடிருச்சே....) கீழ வந்த ஸ்பீட்-ல தண்ணிக்குள்ள போயி சக்கப்பழம் மாதிரி உக்காந்துட்டேன்.. உடனே வெளியில் வர தெரியாமா மூச்சு திணறி போய்ட்டேன்.... அப்புறம் அங்க இருந்த  லைப் கார்ட் (lifeguard )  ஹெல்ப் பண்ணி மேல வந்தேன்.. கீழ வந்த விழுந்ததும் ஒரு துள்ளு துள்ளி மேல வரணும்னு சொன்னாங்க... ஹிஹிஹி...... இத மொதல்லயே சொல்லியிருந்தா. இப்படி சேதாரம் ஆகி இருக்காதே..!!


சரி நமக்கு ஸ்லைடும் ஒத்து வரலன்னு, நினச்சு.... ஒன்லி 3 அடி ஆழம் மட்டுமே உள்ள, லேசி ரிவர்-ல  (lazy river ) போகலாம்னு திரும்பவும், (நமக்கு முடியலன்னு.. அவ்வளோ ஈசியா விட்ருவமா... என்ன?? )அந்த ரிங்க எடுத்து, அதுக்குள்ள உக்காந்து.... போனேன்.. மெது மெதுவா... அந்த ரிங் நகர்ந்து போயிட்டு இருந்தது, செம ஜாலி-யா இருந்தது... ச ச ச... இந்த ரைடுல தான் முதல்லயே வந்திருக்கணும்.. அனாவசியமா... மத்ததுல போயி அவ்ளோ கஷ்டப்பட்டமேன்னு ஒரே பீலிங்க்ஸ் வேற... பாதி தூரம் வரைக்கும்... நல்லாத் தான் போச்சு.. திடீர்னு, அந்த ரிங்-ல டிரஸ் ஸ்லிப் ஆகி... வழுக்கி...குப்புற தண்ணிக்குள்ள விழுந்து... மூக்குல, வாயில தண்ணி போயி.. ஒரு வழியா எந்திரிசிட்டேன்... (மூணே மூணு அடி தண்ணில உள்ள விழுந்து, மூச்சு திணறின பெருமை.. உனக்கு தான்னு நக்கல் வேற... அப்போ நீங்க ரெண்டு அடி தானான்னு ஏடாகூடமா கேள்வி கேக்கபிடாது....சொல்லிட்டேன்....)

பி.கு: (இப்ப ஏன் திடீர்னு இந்த பதிவு எழுத தோணிச்சுன்னா.. இந்த வாரம் ப்ரெண்ட்ஸ் கூட அதே வாட்டர் பார்க் போயிருந்தோம்.. இந்த முறை அவ்வளவா பயம் இல்லாம... என்ஜாய் பண்ணேன்.. அதுல வந்த மலரும் நினைவு தான்..)

சரி வந்தது தான் வந்தீங்கோ... எதாவது சொல்லிட்டு போங்க..!! வருகைக்கு நன்றி...!!


கல்யாண வைபோகமே.....!!!



அது ஒரு துள்ளி திரிஞ்ச காலங்க.. எந்த கவலையும் இல்லாம.. எழுந்தமா குளிச்சமா அம்மா தர டிபன் சாப்டமா... ஸ்கூட்டி-ய எடுத்தமா.. வேலைக்கு போனமான்னு ஜாலியா இருந்தது... எப்பவும் போல (நான்  வேலை பாத்துட்டு இருந்த கம்ப்யூட்டர் சென்டர்-கு) காலைல கிளம்பி போய்ட்டேன்..  அப்பவெல்லாம் எங்க அம்மா, என்கிட்டே எதுவும் சொல்லல.. மதியம் லஞ்ச் டைம்-ல எனக்கு போன் பண்ணி.. கிளாஸ் இருந்தா  சீக்கிரம் முடிச்சிட்டு ஒரு 3 மணிக்கா கிளம்பி வீட்டுக்கு வான்னு சொன்னாங்க...!


நானும் ஏம்மா, என்ன ஆச்சுன்னு கேட்டதுக்கு.. ஒன்னும் இல்ல, நீ கிளம்பி வாயேன் சொல்றேன்னு சொன்னாங்க.. ஹ்ம்ம். சரின்னு சொன்னேன்.. அப்புறம், அப்படியே வரும் போது கொஞ்சம் மல்லிகை பூவும், ஸ்வீட்சும் வாங்கிட்டு வரியான்னு கேட்டாங்க.. இது எதுக்கம்மான்னு கேட்டேன்.. அப்பவும் நீ வா நா சொல்றேன்னு சொல்லி போன்-ஐ வச்சிட்டாங்க.. நானும் பெர்மிஷன் சொல்லிட்டு பூவும், ஸ்வீட்டும் வாங்கிட்டு வீட்டுக்கு போனேன்...!


நுழையும் போதே, எப்பவும் போல "அம்மா......என்னம்மா இப்படி வர சொன்னிங்கன்னு..." கேட்டுகிட்டே வீட்டுக்குள்ள போனா, ரெண்டு பெரியவங்க உக்காந்திருந்தாங்க.. அம்மா, என்ன அவங்களுக்கு அறிமுகப்படுத்தினாங்க.. இதான் என் பொண்ணுன்னு.. நானும் வாங்கன்னு சொல்லிட்டு அம்மா கூட கிட்சன் வந்து... சொல்லுங்க எதுக்கு வந்திருக்கங்கன்னு கேட்டேன்.. அப்போ தான் எங்க அம்மா, மெதுவா உன்ன பாக்கத் தான்னு சொன்னாங்க.. ரொம்ப அறிவுபூர்வமா ஏன்னு கேட்டேன், அட லூசு உன்ன பொண்ணு பாக்கத்தான்னு...சொன்னாங்க..!


இப்ப என்னம்மா அவசரம்னு கேட்டேன், இல்ல.. அவங்களுக்கு உன் ஜாதகம் எப்படியோ கிடைச்சுதாம்..சும்மா பொண்ணையும் பாத்துட்டு போலாம்னு வந்துருக்காங்க.. நானும், அவ்ளோ தானேனு ரொம்ப குஷியா அவங்களுக்கு போட்ட காஃபியும் குடிச்சிட்டு, ஸ்வீட் எல்லாம் சாப்டிட்டு விட்டுட்டேன்..  ஒரு வாரம் கழிச்சு அன்னிக்கு வந்தவங்களுக்கு பொண்ணு பிடிச்சிருக்காம், பையன் ஊர்ல இருந்து வந்திருக்காங்க... பாக்க வராங்கன்னு சொன்னங்க..


அப்போ தான் லேசா டென்ஷன் ஸ்டார்ட் ஆச்சு... அவருடன் நிறைய பேர் வந்தாங்க.. எங்க பக்கத்து வீட்டு ஆன்ட்டி எல்லாரும் வந்து.. இந்த சேலை கட்டிக்கோ, இந்த நகை போட்டுக்கோன்னு ஒரே ஒரே சலசலப்பு.. அவங்களும் வந்து சேர்ந்தாங்க.. என்ன காஃபி கொண்டு போய் குடுக்க சொன்னங்க.. எனக்கோ ஒரே பயம்...எங்கடாப்பா சேலை தட்டி கிட்டி விழுந்திருவேனோன்னு.... கொண்டு போயி குடுத்தேன்.. நா சொல்றத நீங்க நம்பித் தான் ஆகணும்... நா அவரை நிமிர்ந்து கூட பாக்கல.. உள்ள போக போனேன்.. அங்கயே உக்கார சொன்னங்க... அவங்க எல்லாருக்கும் என்னைப்  பிடித்து விட்டதாம்..!



குனிஞ்சு உக்காந்து, அன்னிக்கு தான் எங்க வீட்டு தரைய அவ்ளோ கவனமா பாத்திருக்கேன்... :D :D எல்லாரும் என்னென்னவோ பேசிட்டு இருந்தாங்க..எனக்கு தான் ஒன்னும் மண்டைல ஏறல.. இடை இடையில சில விஷயம் காதுல விழுந்தது... அது தான் செம காமெடி.. அவங்க வீட்ல பொண்ணுக்கு சமைக்க தெரயுமான்னு கேக்க, எனக்கு பக்குன்னு ஆச்சு.. ஹிஹி.. எங்க அம்மா என் அருமை பெருமை எல்லாம் எடுத்து விட்டுட்டு இருந்தாங்க..!


ஓ... காஃபி ரொம்ப நல்லா போடுவா, மாவு அரைச்சு கொடுத்த நல்லா தோசை சுடுவானு சொல்ல... எல்லாரும் சிரிச்சிட்டாங்க.. அதுலயும் உருளை கிழங்கு போட்டு நார்மல் ஆக புளிகுழம்பு செய்வதில்லை.. நா ஒரு தரம் ரெசிப்பி புக் பாத்து குழம்பு வச்ச கதை எல்லாம் சொல்லி.. மானமே போச்சு...!


(இப்பவும் சில நாள் உருளை கிழங்கு போட்டு புளி குழம்பு செஞ்ச கதையை என் நாத்தனார் சொல்லி சிரிப்பதுண்டு..)


அப்புறம் எங்க அப்பா வேற, " தம்பி  வருஷா வருஷம்  இந்தியா வருவீங்களா?? கல்யாணம் முடிஞ்சு பொண்ண கூட்டிட்டு போயிருவீங்களா இல்ல காதல் கோட்டை படத்துல வரா மாதிரி லெட்டர் போட்டுட்டு இருப்பீங்களானு.." ஜோக் வேற..!! ஹ்ம்ம்ம்.. இப்படியாக சில பல காமெடி கலாட்டாவிற்கு பிறகு, உறுதி செய்ய நாள் குறிச்சிட்டு அவங்க எல்லாரும் போய்ட்டாங்க..!! எனக்கு தான் ஒரே டென்ஷன்..! ஆஹா.... நமக்கு தான் சமைக்க ஒன்னும் தெரியாதே என்ன பண்ண போரேன்னு...!!  (என்னை முதல் முதலில்...வந்து பெண் பார்த்தது, இவங்க தான்.. திருமணமும் அவருடனே.....! )


அப்புறம் என்ன, கல்யாணம் முடிஞ்சி ரெண்டே வாரத்துக்குள்ள  விசா எல்லாம் அப்ளை செஞ்சு,   என்னை பார்சல் பண்ணி அமெரிக்கா கூட்டிட்டு வந்துட்டாங்க...!! அதுல பாருங்க ஒரு ஜோக்.. நான் பாட்டுக்கு நம்ம ஊரு ஸ்டைல்-ல சுடிதாரும், சாதா சப்பலும் (செருப்பும்) போட்டுட்டு வந்து இறங்கினா... நா வந்த மாசம், டிசம்பர்.... இங்கே சரியான பனிக்காலம்... ஏர்போர்டில் இருந்து வெளியில் வந்து பார்த்தா.. குறைஞ்சது 6 - 7 இன்ச் பனி.... :O :O


குளிர் தாங்கலை.. ஒரு ஸ்வட்டர் கூட போட்டுட்டு வரல... சொன்னாத் தானே தெரியும்.... அப்பவே பீலிங்க்ஸ் ஸ்டார்ட் ஆச்சுது...  அப்புறம் இருக்கு 1008 கதை...!! முடிந்தால் தொடர முயற்ச்சிக்கிறேன்.....!


இது வரை பொறுமையா படிச்ச உங்களுக்கு என் நன்றிகள்...!! :-))))

மகளிருக்கான பிரச்சினைகள்

நவீன மகளிருக்கான பிரச்சினைகள் என்னென்ன...?

மகளிர் என்றாலே எண்ணற்ற பிரச்சினைகளை சந்திக்க வேண்டிய சூழல்.. இதில் நவீன மகளிருக்கென்ன புதிதாய் பிரச்சினை வந்து விடப் போகிறது?? இருக்கிறது.. முன்பெல்லாம் ஒரு திருமணம் பேசினாலே.. பையன் என்ன வேலை செய்கிறான், எவ்வளவு சம்பாதிக்கிறான்.. என்று விசாரிப்பாங்க.. இப்போதெல்லாம் பெண் எங்கே வேலை செய்கிறாள்... மாச சம்பளம் எவ்வளவு வருமென்று  தான் முதல் கேள்வியே...! அதிலும் சில மாப்பிள்ளை வீட்டார் ரொம்ப சமத்து...! முதலிலேயே  கட் அண்ட் ரைட்-ஆக பேசி விடுவார்கள்.. பெண்ணிடம்.. " நீ வேலைக்கு போறதெல்லாம் சரி தான்... அங்கே லோன், கீன் எதாச்சும் பாக்கி வச்சிருந்தா.. அதெல்லாம் கழுத்துல தாலி ஏறும் முன்ன.... அடச்சு முடிச்சிரு... ஏன் சொல்றேன்னா... கல்யாணத்துக்கு அப்புறம் மொத்த சம்பளமும்.. என் கையில குடுத்தாகணும்...ன்னு!!" என்ன ஒரு தெளிவு.... என்ன ஒரு அறிவு. சும்மா சொல்லக் கூடாது.


இக்காலத்து பெண்கள், முதலில் சொந்தக் காலில் நின்றாக வேண்டும்.. இன்றைய சூழலில் கணவன், மனைவி இருவருமே வேலைக்கு போனால் ஒழிய தங்கள் குழந்தைகளுக்கு நினைத்த கல்வி தகுதி வழங்குவது பெரும்பாலும்....சாத்தியம் இல்லை. அங்கே இங்கே நீங்கள் ஒரு சில விதி விலக்குகளை வேண்டுமானால் சுட்டி காட்டலாம். நிறைய பள்ளிகளில் பெற்றோர் இருவரும் வேலைக்கு செல்பவராக இருக்க வேண்டும், இல்லை என்றால் குறைந்த பட்சம் இருவரும் பட்டதாரிகளாக (கல்வித் தகுதி உடையவராக) இருக்க வேண்டும் என்கிறார்கள்.

சரி ஒருவழியாக படித்து வேலைக்கும் சென்றாகி விட்டது என்றே கொள்வோம்.  அங்கேயாவது நிம்மதி உண்டா?? சுயமாக வண்டி வைத்திருந்து விட்டால் அது வேறு விஷயம்.... இல்லை என்றால்..... ஷேர் ஆட்டோவிலோ, பஸ்ஸிலோ பயணம் செய்து ஆபீஸ் சென்று அடையும் முன்பு பாதி உயிர் போய் விடும். சரி.. ஒரு வழியாய் ஆபீஸ் போய் சென்று விட்டால் அங்கேயாவது நிம்மதியாய் வேலை செய்ய முடிகிறதா...?? அங்கேயும் 1008 ப்ராப்ளம்ஸ்.... மேலதிகாரியிடம் திட்டு வாங்காமல் கவனமாக இருத்தல்.... வழிசல் கேஸ்-களிடம் இருந்து தப்பித்தல்...  இத்யாதி விசயங்கள்.

திருமணமான பெண்களுக்கு.... இன்னுமொரு பிரச்சினை. குழந்தைகளை எங்கே...யாரிடம் விடுவது.... முன்பெல்லாம் கூட்டுக் குடும்பங்கள் இருந்தது. பாட்டி, தாத்தாவிடம் விட்டு விட்டு போக முடிந்தது.. இப்போதெல்லாம் எங்கே இருக்கிறது கூட்டுக்குடும்பம்..... அதையெல்லாம்.. இனி பள்ளி பாடத்தில் படித்து தான் தெரிந்து கொள்ள வேண்டி வரும் போல் உள்ளது நிலைமை..!  வரும் காலத்தில்... மாணவர்கள் பாடப் புத்தகத்தில்.. தமிழர் பண்பாடு என்ற தலைப்பில் பாடம் படிக்கும் போது.... "முன்பொரு காலத்தில்...கூட்டுக் குடும்பம் என்ற ஒரு அமைப்பு இருந்ததாம்........!!!!" என்று படிப்பார்கள் போலும்.

காலை முதல் மாலை வரை....அலுவல் முடிந்து... வீட்டிற்கு வந்தால் அக்கடா என்று உட்காரத் தோன்றும்... அப்போது தான், கணவனுக்கு காஃபி... குழந்தைக்கு சிற்றுண்டி.... வீட்டுப் பாடம் செய்ய வைத்தல்.... ராத்திரி டிஃபன்... இப்படி வரிசையாய் வேலைகள் வக்கிரமாய் புன்னகை செய்யும்.  ஒரு சமயம் போல் ஒரு சமயம் மனமும், உடலும் ஒத்துழைப்பதில்லை.. அந்த மாதிரி சந்தர்ப்பங்களில் தான் ஏதேனும் வாக்குவாதம் வந்து விடுகிறது.

வேலைக்கு போகாத பெண்களுக்கோ...வேறு மாதிரி பிரச்சினைகள்.. விடிந்தது முதல் அடையும் வரை.... வீட்டு வேலைகள்..  விக்ரமாதித்தன் கதை போன்று... விஸ்வரூபம் எடுத்து ஆடுகிறது.  

இன்னொரு பிரச்சினை பற்றி பார்ப்போம்... கூட்டுக் கிளிகளாய் இருந்த பெண்கள், வெளி உலகத்தில் விமரிசையாய் வலம் வருவதால்... எதிர் படும் பல்வேறு மனிதர்களில்... உயரிய குணம் உள்ளவராய் சிலரை எண்ணுவதால்.. தனெக்கென்று வாய்த்த துணை.. தன்னிடம் அப்படி இல்லையே.... இப்படி இல்லையே......என்று ஒப்பிட்டுப் பார்க்கத் தோன்றுகிறது... இதனால் குடும்ப வாழ்வில் மகிழ்ச்சி குறைவதோடு... ஏக்கங்களும்..... வெறுப்புகளும் உருவாகிற வாய்ப்பு உள்ளது. இதனால் தான் என்னவோ... விவாகரத்தும் இன்றைய நாட்களில் பெருகிக் கொண்டே வருகிறது.

இன்னொரு புறம் விளம்பர மாடல் பெண்களின் பேச்சு, நடை, உடை, பாவனைகளை.. சில பெண்கள்.. அப்படியே கண்ணை மூடிக் கொண்டு தாங்களும் அப்படி இருந்தால் தான் மதிப்பென்று நினைத்து அதனை பின்பற்றுகிறார்கள்...! இதனால் நிறைய பிரச்சினைகளை சந்திக்கிறார்கள்.  

இப்படி நம் கண்ணுக்குத் தெரிந்தே நடக்கும் பிரச்சினைகள் கடுகளவு... கண்ணுக்குத் தப்பியவை காடளவு!!


...நெல்லை அன்புடன் ஆனந்தி







பூண்டு குழம்பு...!



காலை மணி 11 இருக்கும். காலிங் பெல் அடித்தது. மாதவி கையில் இருந்த பாத்திரத்தை அப்படியே வைத்து விட்டு சோப்பை கழுவி விட்டு, இந்த நேரத்துல யாருன்னு யோசித்தபடியே வந்து பார்த்தாள். திரை சீலையை லேசாக விலக்கி வெளியில் பார்த்தாள். வாசலில் பக்கத்துக்கு தெரு பங்கஜம் மாமி நின்றிருந்தாள், ஸ்ட்ரோலரில் அவரது ரெட்டை பேத்திகள்.

என்னவாய் இருக்கும் என்றவாறே கதவை திறந்தாள். வாங்க மாமி, என்ன இவ்ளோ தூரம்? அது ஒண்ணுமில்லடிம்மா. இந்த பக்கமா குழந்தைகள கூட்டிண்டு வாக்கிங் வந்தேன். உன் நினப்பு வந்தது. ஒரு எட்டு உன்னையும் பார்த்தாப்ல ஆச்சேன்னு வந்துட்டேன் என்றாள்.ஓ சரி சரி ரொம்ப சந்தோசம். உள்ள வாங்க. பேத்திகளையும் கீழே இறக்கி விட்டு வீட்டிற்குள் வந்தனர்.

என்ன சாப்பிடுறீங்க மாமி? கூல் ட்ரிங்க் இல்ல காபி டீ என்ன வேணும்னு சொல்லுங்க என்றாள் மாதவி. நான் வேண்டாம்னு சொன்னாலும் நீ கேக்கவா போற? சரிடிம்மா நன்னா ஸ்டராங்கா ஒரு டிகாஷன் காபி போடேன். அப்படியே இதுங்களுக்கும் ஒரு கிளாஸ் பால் ஆத்திடு என்றாள்.

டிக்காஷனுக்கு ஒரு பாத்திரத்தில் வெந்நீரை வைத்து விட்டு, இன்னொரு பாத்திரத்தில் பாலை சுட வைத்தாள். அப்புறம் நீ என்ன பண்ணிண்டு இருந்த சமையல் எல்லாம் ஆச்சா? இல்ல இனிமே தானா? என்றவாறே பேச்சை தொடங்கினாள் மாமி. இல்ல மாமி பாத்திரம் கழுவிட்டு இருந்தேன், இனிதான் சமைக்கணும் என்றாள்.

ஏன்டிம்மா உங்க ஆத்துல பூண்டு இருக்கா? ஓ இருக்கே மாமி உங்களுக்கு வேணுமா எடுத்துட்டு போங்களேன் என்றாள் மாதவி. ரெண்டு எடுத்து தரியா எங்காத்துல மாப்பிள்ளைக்கு பூண்டு வாசனையே பிடிக்கறது இல்லன்னு என் பொண்ணு வாங்கறதே இல்ல. பூண்டு குழம்பு சாப்டே ரொம்ப நாளாயிடுத்து என்றாள். இதோ தரனே மாமி, என்றவாறே ரெண்டுக்கு மூன்றாய் வெள்ளை பூண்டுகளை கையில் எடுத்து அதை ஒரு பிளாஸ்டிக் பையில் போட்டாள். அதை பார்த்த மாமி, ஏன்டிம்மா ஒன்னு செய்யேன். அதை அப்படியே உரிச்சு தரியா இங்கயே நிமிசத்துல பண்ணி காமிக்கிறேனே என்றாள்.

சரி மாமி இருங்க உங்களுக்கு காபி போட்டு தந்துட்டு செய்றேன்னு சொல்லிட்டு, டிகாஷன் சேர்த்து ஜீனி எவ்வளவு சேர்க்கலாம் என்ற விபரம் கேட்டு சேர்த்து நுரை பொங்க ஆற்றி கையில் கொடுத்தாள். அப்படியே பிள்ளைகளுக்கும் பாலும், ஒரு கிண்ணத்தில் பிஸ்கட்டுகளையும் வைத்து கொடுத்தாள். இரண்டும் பாலை குடித்தவாறே விளையாடிக் கொண்டு இருந்தன. மாமியும் காபி ரொம்ப நன்னா இருக்குடி, நீ குடிக்கலையா என்றாள். இப்போ வேண்டாம் என்றபடியே பூண்டை உரிக்க ஆரம்பித்தாள் மாதவி.

ஒரு எலுமிச்சம்பழம் அளவு புளியை கொஞ்சம் வெந்நீர்ல ஊற போட்டுடு. அப்படியே கொஞ்சம் இதை செய், அதை செய் என்று தடபுடலாய் வேலை வாங்கியவாறே எப்படி செய்யணும்னு நன்னா பார்த்து கத்துக்கோ. பூண்டை நன்னா நெய்யில வதக்கணும் என்றவாறே செய்ய ஆரம்பித்தாள். ஒரு வழியாய் அரை மணி நேரத்தில் பூண்டு குழம்பு நெய் மேலே தளும்பி வந்து கொதித்து முடிந்தது. ஒரு ஸ்பூனில் குழம்பை எடுத்து மாதவியிடம் கொடுத்து எப்படி இருக்குன்னு சொல்லு என்றாள் மாமி. மாதவியும் வாயில் ஊற்றியபடி ரொம்ப நல்லா இருக்கு மாமி என்றாள்.

சரிடிம்மா ஒரு பாத்திரம் தாயேன். இதை எடுத்துண்டு போக என்று கேட்டாள். மாதவி எடுத்து தந்த பாத்திரத்தில் துளியும் குழம்பு மிச்சமில்லாமல் ஊற்றி கொண்டாள். மாதிவியும் அப்பாவியாய், பாவம் மாமி ஒரு வேளை அவங்க வீட்டு நினைப்புல எல்லாத்தையும் பாத்திரத்துல வழிச்சு வச்சிட்டாங்க போலன்னு யோசிக்கும் முன்பே, நன்னா பாத்துட்டியோன்னோ இதே மாதிரி நீ செஞ்சிக்கலாம் என்றவாறே பாத்திரத்தை மூடி கையில் எடுத்து கொண்டாள்.

சரிடிம்மா வந்து நாழி ஆயிடுத்து அப்படியே கிளம்பறேன். இதுங்கள போயி குளிக்க வைக்கணும் ஆத்துல நிறைய வேலை இருக்கு என்றவாறே வாசலை நோக்கி விரைந்தாள் பங்கஜம் மாமி.  பேச்சின்றி அமைதியாய் அவளை பின் தொடர்ந்தாள் மாதவி.


...அன்புடன் ஆனந்தி





பொங்கட்டுமே புதுமைப் பொங்கல்...!

தை மாதத்தில் நாம் அனைவரும் மகிழ்ந்து கொண்டாடும் பெருநாள்.... பொங்கல் திருநாள்...!  நம் வீட்டில் குடும்பத்தாருடன் இனிதே கொண்டாடியாச்சு...! அப்புறம் மிச்ச சொச்சம்... வேற எங்க கொண்டாடுவோம்?? நம்ம தமிழ் சங்கத்துல தான்..!  புதிதாய் பொறுப்பேற்றிருக்கும் சங்க உறுப்பினர்கள்... விமரிசையாய் ஏற்பாடுகள் செய்து... வெற்றி கரமாய் விழா நடந்தது..!

நுழை வாயிலிலேயே அசத்த ஆரம்பித்து விட்டார்கள்... மண்பானை, முறம், மாக்கோலம்... கரும்பென்று... வகை வகையாய் வைத்து.. வெல்ல பாயாசம் மண்பானையில் வைத்து வழங்கினார்கள்.  புதிதாய் ரிலீஸ் ஆன ரஜினி படத்துக்கு டிக்கெட் வாங்க க்யூவில நின்ன மாதிரி இருந்துச்சு.. அவ்ளோ கூட்டம். வரிசையில் நிற்கும் போது... அவ்வப்போது வந்து... கொஞ்சம் இப்படி பாருங்க... சிரிங்கன்னு... சொல்லி.. புகைப் படங்கள் எடுத்துட்டு இருந்தாங்க. டிக்கெட் வாங்குமிடத்தில்.. நிகழ்ச்சி நிரலுடன்.. அழகான மலர் சரம் ஒன்று கொடுத்தாங்க.

அதை வாங்கி கிட்டு.... அப்படியே அந்த பக்கம்... வந்தா... குடும்பம் குடும்பமாக... நிற்க வைத்து.. "ஸ்மைல் ப்ளீஸ்...."ன்னு பிக்சர் எடுத்துட்டு இருந்தாங்க.. ஒரு வகையில்.. இந்த விசயத்திற்கு பாராட்டு சொல்லியே ஆக வேண்டும்.. பெரும்பாலும் இப்போதெல்லாம்... ஃபேமிலி பிக்சர் எத்தனை பேர் அடிக்கடி எடுக்கிறோம்.. சொல்லுங்க?  இந்த மாதிரி ஒரு விழா நேரத்தில்.. இப்படி படம் எடுப்பது.. அருமையான நினைவுச்சின்னம்.  அதையும்.. விழா முடிவிலேயே ப்ராசஸ் பண்ணி கொடுத்துட்டாங்க.

புதுமைப் பொங்கல்
வைக்க வந்த பதுமைகளும்...
அவர்தம் பட்டுக் குழந்தைகளும்
அலங்கார ஜோதி விளக்காய்
அங்கங்கே நின்று கொண்டு...
ஆலயம் நுழைந்தாற்போல்
அனுபவம் தந்து சென்றனர்..!

ட்ராய் தமிழ் பள்ளியின் மாணவர்கள்.. அழகாய் தமிழ் தாய் வாழ்த்து பாடி நிகழ்ச்சி துவங்கியது.  சங்க தலைவர் அவர்கள்.. வரவேற்புரை வழங்கி.. விழாவை ஆரம்பித்து வைத்தார்.   தமிழ் நாட்டுல நடனத்துக்கா பஞ்சம்...?? கும்மி பாட்டுடன்.. குட்டி குழந்தைகள்... கலக்கிட்டு போனாங்க..! அடுத்தடுத்து... சரமாரியா நடனங்கள்..... மூச்சு விட கூட இடம் விடாம... பின்னி பெடல் எடுத்துட்டாங்க...!

சில்வண்டு போன்ற
ஸ்ருங்கார நடனமும்
வில்லினின்று புறப்பட்ட
அம்பு போன்ற...
வேகமான நடனங்களும்
வேடிக்கை பார்க்க
வந்தோரை வீழ்த்தியே
கைவசம் கொண்டனர்...!

இப்படி பெற்றோர்களின் கை வரிசையில் பயிற்சி பெற்ற குழந்தைகளின் நடனம் கண்டு ஒரு புறம் வியந்து நின்றால்.. அடுத்து... "தாள மேளா..." என்ற தலைப்பில்... ஒன்பது வகை இந்திய நடனங்களை நம் கண்ணுக்கு விருந்தாக்கினர்... ராதிகா ஆச்சார்யா அவர்களின்.....நடன பள்ளி, நுபூர் அகாடெமியின் குழந்தைகள்..! எதையென்று சொல்ல..? கரகம், மோகினி ஆட்டம், ராஜஸ்தானி, பீகூ, மணிபுரி, நாகா பேம்பூ நடனம், பரத நாட்டியம், லாவணி, பொய்க்கால் குதிரை...ன்னு குழந்தைகளின் உற்சாகமான பங்கேற்பு பார்ப்போரையும் தொற்றிக் கொண்டது...!


வித விதமான உடைகளில்..
வெவ்வேறு பகுதிகளின் 
வித்தியாச  நடனங்களை
விரல் சொடுக்கும் நேரத்தில்
விவரித்தே ஆடிய 
விண்மீன்களின் விந்தை 
விவரிக்க வார்த்தை இல்லை..!

அதைத் தொடர்ந்து வந்த தை நீராடல், எற்றுங்கம்மா தீபம்.... நடனங்களும் பார்ப்பதற்கு தொய்வில்லாமல் வெகு சிறப்பாய் அமைந்தது.  அடுத்து வந்த..... லலிதா ரவி அவர்களின் ......"தமிழ் திரையுலகம் அன்றும் இன்றும்..." நிகழ்ச்சி பெரும் வரவேற்பை பெற்றது. சின்ன குழந்தைகள் முதல், பெற்றோர்களும் பங்கேற்று.... பார்வையாளர்களையும் உடன் கரகோஷம் எழுப்பச் செய்து.. அரங்கம் அதிர வைத்துச் சென்றனர்.


அந்தக் கால அழகிகளும்
இந்தக் கால யுவதிகளும்
இணைந்தே ஆடினாற்போல்
இன்றைய தலைமுறையின்
எழிலாட்டம் எல்லோரையும்
எழுந்தே ஆட வைத்தது..!


அந்த கால சரோஜா தேவி போல் உடையணிந்து... "அன்று வந்ததும் இதே நிலா...."  பாடலுக்கு... ஆடிய மகளிர் அணியினர்... எழிலோடு ஆடிச்சென்றனர்.   ஒரு வழியாய் நடனமெல்லாம் முடிந்து... இரவு உணவு வேளையும் வந்தது.  இனிப்பாய் சர்க்கரைப் பொங்கலுடன்... உணவு பரிமாறப் பட்டது.  அனைவரும், தத்தம் நண்பர்கள், குடும்பத்தார் புடை சூழ அமர்ந்து உண்டு.... அடுத்ததாய் நடக்கவிருந்த சின்னி ஜெயந்த் அவர்களின்....."சிரி சிரி... சிரி.. சிரிக்கலாம் வாங்க.." நிகழ்ச்சியை கண்டு கழிக்க சென்றோம்..!


விழா நடந்த இடமான க்ரோவ்ஸ் உயர் நிலை பள்ளியைப் பற்றி சொல்லியே ஆக வேண்டும்.. ஆயிரம் பேருக்கு மேலே குழுமி இருந்த அனைவரும் அம்சமாய் அமர்ந்து பார்க்கும் வகையில் இருக்கை வசதிகளுடன் அரங்கம் அமைந்து இருந்தது ஒரு பிளஸ் பாயிண்ட்..!

மணி மகுடம் வைத்தார் போல்.. இந்த பனி காலத்தில் பக்காவான வானிலை...! அதிக குளிரோ.. பனியோ இல்லாமல்... அனைவரும் வந்து போக வசதியாய் இயற்கையும் நம்மோடு கை கோர்த்து விழாவை சிறப்பித்தது போல தோன்றியது...!


சின்னி ஜெயந்த்துடன், நமது சங்க உறுப்பினர் பலரும் இணைந்து நடத்திய நகைச் சுவை நிகழ்ச்சியும்... இனிதே கண்டு களித்து மன நிறைவுடன் இல்லம் திரும்பினோம்....! தொடரட்டும் இது போல்... பல வெற்றிகரமான நிகழ்வுகள்...!!
தமிழ் வாழ... தமிழ் வழி வாழ்வோம்....!

~அன்புடன் ஆனந்தி


சர்ப்ரைஸ் பார்ட்டி...!!


        
          எல்லாரும் அவங்கவங்க  பிறந்த நாளை குடும்பம் அல்லது நண்பர்களுடன் கொண்டாடுறது வழக்கம்..  கொண்டாடியும் இருக்கோம்.. (பின்ன நாங்க மட்டும் என்னவாம்னு எதிர் கேள்வி எல்லாம் கேக்கப் பிடாது) அதுவே ஒரு சந்தோசம்னா... சில நேரம் நமக்கு தெரியாம அவங்களே பிளான் பண்ணி, சர்ப்ரைஸ் பார்ட்டி-களும் வைப்பதுண்டு. (ஹ்ம்மம்ம்ம்ம்... அப்படி என் பிறந்த நாளைக்கு எனக்கு எந்த பயபுள்ளையும் வைக்கலங்க... )
       
          இப்படி தான் என் கணவரோட பிறந்த நாளுக்கு, சரி எல்லாரும் தான் சர்ப்ரைஸ் பண்றாங்க... நம்மளும் பண்ணலாம்னு.. ஒரு நல்ல எண்ணத்துல... நெருங்கிய சில நண்பர்கள் கிட்ட.. பேசி... ஏற்பாடு பண்ண ஆரம்பிச்சேன்.. முதல் முயற்சியா.. (ஓப்பனிங் எல்லாம் நல்லாத்தேன் இருந்துச்சு......) வீட்டில் நான் விருந்து சமையல் மாதிரி பண்ணினா சந்தேகம் வந்திரும்னு சொல்லி... ஒரு பிரண்ட் கிட்ட... இவருக்கு போன் பண்ணி... அவங்க வீட்டுக்கு கூப்பிடச் சொல்லி (சந்தேகம் வராத படிக்கு தான்...) பேசிட்டு இருக்குறதா பிளான் பண்ணேன்.

          சரின்னு இவரும் கிளம்பி போய்ட்டார்.. அவசரம் அவசரமா சமையல் பண்ணி முடிச்சு, மத்த பிரண்ட்ஸ் எல்லாம் வர வச்சு... (என் பிரண்ட்ஸ் வேற.. பாவம்.. வீட்டு முன்னாடி கார் பார்க் பண்ணினா.. இவுக கண்டு பிடிச்சிரப் போறாகன்னு... கார்-ஐ தள்ளி பார்க் பண்ணிட்டு... நடந்து வந்தாங்க...) அந்த அவசரத்துலயும் பலூன் எல்லாம் ஊதி... எல்லாம் ரெடி பண்ணி வச்சிட்டு... இவர் வீட்டுக்கு வர நேரம் ஆயிருச்சேன்னு... லைட் எல்லாம் ஆப் பண்ணிட்டு... எல்லாரும் ஒரு ரூம்-இல் ஒளிஞ்சு இருந்தாங்க...!

          எல்லாரும் அவர் கதவை திறக்கப் போற அந்த, சத்தத்துக்காக கவனமா வெயிட் பண்ணிட்டு இருந்தாங்க... இவர் கதவை திறந்ததும்... சர்ப்ரைஸ்ன்னு சத்தம் போடுறதா பிளான்... மனுஷன் கார் பார்க் பண்ணிட்டு..... நடந்து வந்து.... டோர் நாப் திறக்கற வரைக்கும்... ஏதோ த்ரில்லர் படம் பார்க்கற எஃபக்ட்ல வெயிட் பண்ணிட்டு இருக்கோம்... இந்த மனுஷன் கதவ திறந்ததும்.... "சர்ப்ரைஸ்"ன்னு அவரே கத்தினார் பாருங்க... நாங்க எல்லாரும் ஒரு நிமிஷம் ஒன்னும் புரியாம... (என்னாது இது??? கிர்ர்ரர்ர்ர்ர் ) ஒரு செகண்ட் அமைதி ஆய்ட்டோம்.

          அப்புறம் என்ன?? எல்லாரும் சுதாரிச்சு.... அவருக்கு விஷ் பண்ணிட்டு... கலகலப்பா பேசிட்டு, இருந்து போனாங்க.. (பின்ன வேற என்னத்த பண்றது...?) எனக்கு செம கடுப்பு... ஏங்க அப்படி பண்ணீங்க.. நாங்க எல்லாரும் எவ்ளோ ஆசையா வெயிட் பண்ணிட்டு இருந்தோம்ன்னு கேட்டா..... அதுக்கு அவரு எனக்கு முதல்லயே டவுட் வந்திருச்சும்மான்னு பெருமையா சொன்னார்..... ஹலோ.... டவுட்-ஏ வந்தாலும் அதுக்கு இப்படியா போட்டு உடைக்கறதுன்னு........ கேட்டு புலம்பிட்டு இருந்தேன்.. (ஒரு மனுஷி எவ்ளோ ப்ளான்ன்னன்.... பண்ணி.... பார்ட்டி வச்சேன்... இப்படி தான் ஆப்பு வைக்கணும்.. ரெம்ப நல்லவரு போங்க ..... இப்புடி எத்தன பேர் கிளம்பி இருக்காங்கன்னு தெரியலயே...இனிமே சர்ப்ரைஸ் பார்ட்டி வைப்ப வைப்பன்னு.....................சரி விடுங்க.. அத வேற விளக்கமா சொல்லிக்கிட்டு... )

            அதென்ன நம்ம எது செய்யப்போனாலும்..... இப்புடி ஏடாகூடமாவே நடக்குது......! இத்தன கூத்துல நாங்க எல்லாரும் தீவிரமா.... டிஸ்கஸ் பண்ணி எப்படி கண்டுபிடிச்சிருப்பாருன்னு... அதுல உள்ள குறைகள் எல்லாம் பார்த்து... ச.... நம்ம இப்படி பண்ணி இருக்கணும்... அப்படி பண்ணி இருக்கணும்னு ஒரே டிஸ்கசன்....என் பிரண்டு ஒருத்தங்க... அடுத்த தரம் பக்காவா பண்ணிரலாம் பா... ன்னு சொன்னாங்க... (திரும்பவுமா???????? ஹ்ம்ம் ஹும்ம்ம்ம்)

              எத்தன தரம் அடி வாங்குறது??? நா வரல இந்த விளையாட்டுக்கு...!!!

பகிர்வைப் படித்த அனைவருக்கும் நன்றிங்க.


...அன்புடன் ஆனந்தி


(படம்: நன்றி கூகிள்)

தமிழர்களின் தமிழார்வம்



//அமெரிக்காவில் இருக்கும் தமிழர்களின் தமிழார்வம் எப்படி இருக்கிறது இது பற்றி நீங்கள் ஒரு கட்டுரை எழுதலாமே....///


      (தமிழ் மாலையில், குழந்தைகளின் பங்களிப்பு)



நல்ல கருத்துக்களை அனைவரிடத்தும் அன்புடனும், தெளிவுடனும் எடுத்து செல்லும், கழுகிற்கு இந்த பதிவை எழுத முடிந்ததில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன்.. தேவா அவங்க , அமெரிக்காவில் இருக்கும் தமிழர்களின் தமிழார்வம் எப்படி இருக்கிறதுன்னு ஒரு கட்டுரை கேட்டிருந்தாங்க.. முதலில், ஒரு விஷயம் சொல்ல ஆசைபடுகிறேன்.. நாடு விட்டு நாடு வந்தாலும், அல்லது எந்த நாட்டிற்கு சென்றாலும் தமிழ் ஆர்வம் சிறிதும் குறையாமல், பார்த்துக்கொள்வதில் நம் தமிழர்கள், வல்லவர்கள்.. 

நாங்கள் வசிக்கும் இடத்தில், தமிழ் சங்கம் இருக்கிறது.. அங்கே வருடத்தில், குறைந்தது ஐந்து அல்லது ஆறு முறையாவது, நிகழ்ச்சிகள் நடைபெறும்.. தித்திக்கும் தைப்பொங்கல், தீபாவளி, கிறிஸ்தமஸ், தமிழ்ப் புத்தாண்டு........  இவைகள் தவிர தமிழ் மாலை என்று ஒரு நிகழ்ச்சி நடைபெறும்.. தைப்பொங்கல் நிகழ்ச்சியில்... ஒரு குறிப்பிட்ட தலைப்பை எடுத்துக்கொண்டு, அனைவரும் அந்த தலைப்பினை ஒட்டினார் போல், பாடல், ஆடல் தேர்வு எல்லாம் இருக்க வேண்டும் என்பது விதிமுறை..... இந்த முறை.. நாட்டுப்புறப் பாடல் என்றதொரு தலைப்பு கொடுக்கப்பட்டது.. சின்னவங்க முதல் பெரியவங்க வரை, வண்ண வண்ண இந்திய உடைகளில் தோன்றி... அருமையான நடனங்கள் ஆடினாங்க... இன்னொரு விஷயம் பிடித்தது, பெரும்பாலும் முழுக்க, முழுக்க தமிழில் தான் பேசுவாங்க... 

தமிழ் மாலை நிகழ்ச்சியில், குழந்தைகளுக்கு திருக்குறள் போட்டி, பேச்சுப் போட்டி, தமிழில் கேள்வி-பதில், பழமொழிக்கு அர்த்தம் சொல்லல்... இந்த மாதிரி நிறைய விஷயங்கள் நடக்கும்... சின்ன சின்ன, குழந்தைகளில் இருந்து, பெரிய குழந்தைகள் வரை ஆர்வமாய் திருக்குறள் சொல்லும் அழகே தனி தான்... அதிலும் பெரிய குழந்தைகள் அர்த்தத்துடன் திருக்குறள் சொல்வதை கேட்கவே ஆனந்தமாக இருக்கும்... இதில் வெற்றி பெற்ற குழந்தை மட்டுமல்லாது, பங்கேற்ற அனைவருக்குமே பரிசு வழங்கி உற்சாகப்படுத்துவார்கள்..

இங்கே தமிழ் சங்கத்தில் முதல் முறையாக, தமிழ் வகுப்புகள் நடைபெறுகிறது... வாரம் ஒரு முறை தமிழ் வகுப்புகள் நடத்தப்படுகிறது. நிறைய பேர்,முன்வந்து தமிழ் பாடம் எடுக்கிறாங்க.. நம் தாய்மொழி விட்டுப் போய் விடாமல் இருக்கவும், நம் வாழ்க்கைப் பாடத்துடன் இணைந்து தாய் மொழியை கற்றுக் கொள்ளவும் இத்தகைய முயற்சிகள் பெரிதும் கை கொடுக்கின்றது..

தாயின் அன்புள்ளம் தரணியெங்கும்...
தனித்துவமாய் விளங்கும் சிறப்பு...!
நம் தாய்மொழியின் சிறப்போ நாம் 
தரணியில் எங்கே சென்றாலும்
தயங்காமல் நம்முடன் வரும் பிறப்பு..!

வார இறுதியில் இங்கே ஸ்லோகம் வகுப்புகள், தேவாலயத்தில் தமிழில் பிரார்த்தனை... இவைகளும் உண்டு.. அங்கே.. தமிழ் வகுப்புகளும் நடத்தப் படுகிறது. அப்படி வகுப்புகளில் ஒரு பாடத்திட்டம் வரையறுக்கப் பட்டு, அதன் படி பாடங்கள் நடக்கும்.  அவ்வப்போது தேர்வுகளும் நடைபெறும். குறைந்த நாட்களிலேயே குழந்தைகள் சிறிய சிறிய தமிழ் வார்த்தைகளை  எழுத்துக் கூட்டி சேர்த்து முயற்சி செய்வதைப் பார்க்கும் போது, மனதிற்கு ரொம்ப பெருமையாகவும், சந்தோசமாகவும் இருக்கும்.. 

என்ன தான் வெளிநாட்டில் தற்சமயம் வாழ்ந்து வந்தாலும், நம் தாய் நாட்டிற்கு திரும்பி செல்லும் போது, அங்கே நம் குழந்தைகள் தாய்மொழி தெரியாமல் தயங்கி நிற்த்தல் கூடாது என்றே இவ்வளவு முயற்சிகளும்...!! வீட்டில் குழந்தைகளிடம் தமிழில் தான் பேசுகிறோம்.. அவர்களும் புரிந்து கொள்கிறார்கள்......இருப்பினும் அவர்களுக்கு பதில்  சொல்வதற்கு அவ்வளவு சரளமாக தமிழில் பேச வரவில்லை.. ஆனாலும்.. தங்கள் பக்கம் செய்ய வேண்டிய பங்கையும் குழந்தைகள் ஆர்வமாக செய்து கொண்டு தான் இருக்காங்க.. இப்போதெல்லாம்... தொலைக்காட்சியில் வரும் தமிழ் வார்த்தைகளை எழுத்துக் கூட்டி வாசித்து விடுகிறார்கள். அவர்களுக்கென்று வகுக்கப்பட்ட பாதையில், அவர்கள் சென்று நல்ல முன்னேற்றம் காண்பித்து வருவதாய் தான் எனக்குத் தோன்றுகிறது..!

இங்கே தமிழ் பத்திரிகைகள் வெளி வருகிறது, அதில் பலரும் ஆர்வமாய் கவிதை, கதை, கட்டுரை, நகைச்சுவை, சமையல் குறிப்பு, தொழில், அரசியல், உடல் நல குறிப்புகள், சினிமா இப்படி வெவ்வேறு தலைப்பில் ஆர்வத்துடன் பங்கு கொண்டு, தங்களுடைய படைப்புகளை தொடர்ந்து தமிழில் அனுப்பிக்கொண்டும், மற்றவர் எழுத்துக்களை தொடர்ந்து ஆதரித்துக் கொண்டும் இருக்காங்க..! 

திக்கெட்டும் தமிழ் ஒலிக்கட்டும்... வாழ்க தமிழ்.... வாழ்க தமிழார்வ மக்கள்..!!
எனக்கு தெரிந்த சில கருத்துக்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள உதவிய கழுகிற்கு மனமார்ந்த நன்றிகள்..!!

Saturday, October 3, 2026

ஆனந்தசந்திரிகை செப்டம்பர் 20, 2026 - நெல்லை அன்புடன் ஆனந்தி

Please use this link for reading Anandachandrikai 2026-09-20: 
https://drive.google.com/file/d/1lx5szcpnmQAJb5dF9MGKwYHGzLAi85DR/view?usp=drive_link

Please use this link for your review and comments:
https://www.facebook.com/share/p/1871196UMf/

Please Use this link to watch video of Tackle Team: (Eg: Ramayanam, Mahabharatham)
https://tackleteamusa.com/

WhatsApp Channel Link: https://whatsapp.com/channel/0029Vb6ZuHxKwqSNSH4V892i

ஆனந்தசந்திரிகை செப்டம்பர் 06, 2026 - நெல்லை அன்புடன் ஆனந்தி

Please use this link for reading Anandachandrikai 2026-09-06: 
https://drive.google.com/file/d/1Ct-KC0U2Sv2lNaulK0LPediBp7JC3FLR/view?usp=drive_link

Please use this link for your review and comments:
https://www.facebook.com/share/p/1Jugjpg4cR/

Please Use this link to watch video of Tackle Team: (Eg: Ramayanam, Mahabharatham)
https://tackleteamusa.com/

WhatsApp Channel Link: https://whatsapp.com/channel/0029Vb6ZuHxKwqSNSH4V892i

ஆனந்தசந்திரிகை ஆகஸ்ட் 16, 2026 - நெல்லை அன்புடன் ஆனந்தி

Please use this link for reading Anandachandrikai 2026-08-16: 
https://drive.google.com/file/d/1FRLEHvexufZm4FTIURSEmmUpkYhbsI58/view?usp=drive_link

Please use this link for your review and comments:
https://www.facebook.com/share/p/1LdYUBVDox/

Please Use this link to watch video of Tackle Team: (Eg: Ramayanam, Mahabharatham)
https://tackleteamusa.com/

WhatsApp Channel Link: https://whatsapp.com/channel/0029Vb6ZuHxKwqSNSH4V892i

ஆனந்தசந்திரிகை ஆக்ஸ்ட் 02, 2026 - நெல்லை அன்புடன் ஆனந்தி

Please use this link for reading Anandachandrikai 2026-08-02: 
https://drive.google.com/file/d/15083ko7rRMNdIaN5wVc7u_0ArVpRreK0/view?usp=drive_link

Please use this link for your review and comments:
https://www.facebook.com/share/p/1EoA61MJJU/

Please Use this link to watch video of Tackle Team: (Eg: Ramayanam, Mahabharatham)
https://tackleteamusa.com/

WhatsApp Channel Link: https://whatsapp.com/channel/0029Vb6ZuHxKwqSNSH4V892i

Monday, September 14, 2026

கொக்கரக்கோ - செப்டம்பர் 2026 மின்னிதழில்.. நெல்லை அன்புடன் ஆனந்தியின் கவிதைகள்

Thursday, September 3, 2026

அன்புப்பாலம் - செப்டம்பர் 2026 இதழில்.. நெல்லை அன்புடன் ஆனந்தியின் சிறுகதை - கல்விக்கண்

Thursday, August 13, 2026

அன்புப்பாலம் ஆகஸ்ட் 2026 இதழில்.. நெல்லை அன்புடன் ஆனந்தியின் ஊஞ்சலாடும் சுதந்திர தின நிகழ்வுகள்

கவிச்சிறகுகள் ஜூலை 2026 இதழ்

அனைவருக்கும் இனிய வணக்கம்!

*ஜூலை 2026 கவிச்சிறகுகள் இதழ்*

அமெரிக்காவில் இருந்து வெளிவரும்
கவிச்சிறகுகள் ஜூலை 2026 இதழை
மகிழ்வோடு பகிர்கிறோம்.

ஆசிரியர்:
*கவிஞர் நெல்லை அன்புடன் ஆனந்தி* அமெரிக்கா

துணை ஆசிரியர் & இதழ் வடிவமைப்பு
*கவிஞர் கன்னிக்கோவில் இராஜா* சென்னை

*ஜூலை 2026 இதழ்* வாசிக்க...

Scribd link


(இதிலிருந்து download செய்து கொள்ளலாம்)

இதழில் பங்கு பெற்ற அனைத்து படைப்பாளர்களுக்கும் வாழ்த்துகள்.

அடுத்த இதழில் பங்கு பெற:
kavichirakukal@gmail.com

• ஆசிரியர் குழு

Friday, July 31, 2026

சூரரைப் போற்று - நெல்லை அன்புடன் ஆனந்தி - கொக்கரக்கோ இலக்கிய வட்டம்


PASC America is inviting you to a scheduled Zoom meeting.

கொக்கரக்கோ இலக்கிய வட்டம்

நிகழ்ச்சி #7

நெல்லை அன்புடன் ஆனந்தியின் *சூரரைப் போற்று*

உரை: கவிஞர் பரிமளாதேவி

ஆக்ஸ்ட் 1, 2026
சனிக்கிழமை
காலை 10:00 மணி EST

Join Zoom Meeting
https://us02web.zoom.us/j/2013397800?omn=83667603741

Meeting ID: 201 339 7800

ஓசூர் புத்தகக்காட்சி 2026 - அம்மாவும் நானும் - நெல்லை அன்புடன் ஆனந்தி

#அம்மாவும்_நானும் 

#hosurbookfair 
#ஓசூர்புத்தக்காட்சி2026 

#நூலேணி_பதிப்பகம் 
Nooleni publications 
அரங்கு எண் #53 ல்..

எனது நூல்களும்,
எனது அம்மாவின் #அம்மாச்சி_சமையல் நூலும் அருகருகே கண்டு மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன்.

படைப்பாளர்களைக் கொண்டாடிடும் #நூலேணி_பதிப்பகத்திற்கு நெஞ்சார்ந்த நல்வாழ்த்துகளைத் தெரிவித்து மகிழ்கிறேன்.

Kannikovil Raja 
நூலேணி பதிப்பகம் Nooleni publications 

நெல்லை அன்புடன் ஆனந்தி

About Me

My photo
I am a jovial.. sensitive.. happy person who likes to be around good friends ;)