topbella

Sunday, June 19, 2011

அப்பாவைப் பற்றி...!


"ஈன்றெடுத்த அன்னை சொல்லி அறிந்த உறவே...
ஈரேழு பிறவிக்கும் எனை ஆளும் அன்பு உருவே...!"

          அப்பா என்று சொன்னதும்... எனக்கு ஆயிரம் ஆயிரம் எண்ணங்கள்..! பொதுவாக சொல்வதுண்டு.. பெண் குழந்தைக்கு அப்பாவையும் , ஆண் குழந்தைக்கு அம்மாவையும் தான் பிடிக்குமாம்...! எது எப்படியோ, என் விசயத்தில் அது முற்றிலும் உண்மை.. எனக்கு என் அம்மா என்றால் எவ்வளவு உயிரோ அதற்கு ஒரு படி மேல் என் அப்பா...!

          என் தந்தை இயல்பிலேயே மிகவும், சாந்தமானவர்.. யாரையும் அதட்டி பேசி நான் பார்த்ததில்லை... வேலை பார்த்த இடத்திலும் அப்படியே.. என் அப்பாவுடன் வேலை செய்தவர்கள் எல்லோருக்குமே என் அப்பாவிடம் அதீத அன்பு கலந்த மரியாதை...!

எதிலும் நிதானம் தவறாது
எச்சரிக்கையுடன் எடுத்துச் 
செய்ய எங்கே பயின்றீர்கள்... 
பொறுமைக்கு இலக்கணம்
பொறுப்புக்கு உதாரணம்....!

          எனக்கு என் அப்பா எப்பவுமே ஒரு ஹீரோ தான்..! எப்பவாச்சும் வீட்ல சின்ன சின்ன சண்டை வந்தாலும்... நா அப்பா சைடு தான்.. சரியோ தப்போ அப்பாவை தான் சப்போர்ட் பண்ணுவேன்.. என் அம்மா, "உங்க அப்பாவுக்கு ஆபீஸ் வேல தான் முக்கியம்..,. பேசாம அங்கயே குடியிருக்க சொல்லுன்னு".. சொல்லுவாங்க.. அவ்ளோ சின்சியர் வொர்க்கர்.. அப்பாவுக்கு முதல் மனைவி என்றால் வேலை தான்..! இதற்கு காரணம், "செய்வன திருந்தச் செய்" என்பது அப்பாவின் கொள்கை...!

ஏற்றுச் செய்த வேலையில்
எவரேனும் தடுத்தாலும் 
ஏதும் குறை வராமல்
எல்லோரும் மதிக்கும் வண்ணம்
எப்படியப்பா உழைத்தீர்கள்...!

          என் அப்பா வேலை செய்தது.. தமிழ் நாடு சிவில் சப்ளைஸ் கார்பரேஷன்.  அசிஸ்டன்ட் மேனேஜர் பதவி.. இதில் முக்கியமாக.. ரேஷன் கடைகளில் சூபர்வைஸ் பண்ற நேரங்களும் உண்டு.. அங்கே வேலை செய்பவர்கள் , தன்னோட கஷ்டத்துல எப்பவாச்சும், சீனி, பாமாயில்...... இந்த மாதிரி ஏதாச்சும் ஒரு பொருளை திருட்டுத்தனமா கொண்டு போயிருவாங்க.. அப்போ, அப்பா தான் அதற்கு மெமோ எழுதி அனுப்பணும்.. அப்போ சொல்வாங்க, பாவம் கஷ்ட படுற பசங்க... ஏதோ எடுக்குறாங்க.. எனக்கு புரியுதுன்னு சொல்வாங்க. அப்பா, இது வரை ஒருவரிடமும் கை ஏந்தியது கிடையாது... எனக்கு அந்த விசயத்தில் என் அப்பாவை நினைத்து ரொம்பவே பெருமை.. ஆபீஸ்-ல சொல்லக் கேட்டிருக்கிறேன்.. தங்கமான ஆபிசர், கை சுத்தமானவர்ன்னு..!

          எங்க அம்மா கூட சில சிமயம் கோவத்துல சொல்வாங்க.. ஊருக்குள்ள ரேஷன் கடை சூப்பர்வைஸ் பண்ணப் போறேங்கன்னு தெரிஞ்சாலே.. உங்களுக்கு என்னங்க... சார் சீனி, பாமாயில்... எது வேணா கொண்டு வந்திருவாங்கன்னு...! அவங்களுக்கு என்ன தெரியும்.. உங்கள பத்தின்னு..!
உண்மை, ஒழுக்கம் இதை
உயிராய் மதித்து அன்றோ..
உற்றார் போற்றும் வண்ணம்
உயரிய பதவி கண்டீர்...!
          வெளியில் ஒரு டீ / காபி கூட குடிக்க மாட்டாங்க.. வீட்டில் இருந்து சாப்பாடு கையில் எடுத்துப் போவாங்க. அதற்காக வருடம் ஒருமுறை.. என் கையால் அப்பாவிற்கு வயர் கூடை பின்னிக்கொடுப்பேன். அப்பாவுக்கு அதுல ஒரு சென்டிமன்ட்.. அப்படியே என் ஆச்சி (அப்பாவின் அம்மா) படத்திற்கும் ஒரு மாலை பின்னி போடுவேன். எனக்கு இப்போது நினைத்தாலும் நெஞ்சத்தை நனைக்கும் நிமிடங்கள் அவை..!
என் கை புனைந்த கூடையதில்
உங்கள் பசி போக்கும் உணவிருக்க
என் பாசமதை சேர்த்து வைத்து
பத்திரமாய் சுமந்ததென்ன...!
          அப்புறம் இன்னொரு விஷயம் என் அப்பாவிடம் நான் கற்றுக்கொண்டது.. என்ன செலவு செய்தாலும் அதை ஒரு நோட்டில் குறித்து வைப்பாங்க.. மாதம் பிறந்ததும்... சம்பள பணம் கொண்டு சுவாமியிடம் வைத்து, வணங்கி விட்டு, அதை அம்மா கையில் கொடுத்து பிறகு, வீட்டுச் செலவு அத்தனையும் மஞ்சளில் ஆரம்பித்து, எங்க ரெண்டு பேர் (என் தம்பியும், நானும்) டியூஷன் பீஸ், பால், பேப்பர், காய்கறி..... அத்தனையும் அழகா பிரிச்சி எழுதி வைப்பாங்க.

          இன்று வரை என் கண்ணுக்குள்ளயே இருக்கு, அந்த முத்தான எழுத்துக்கள்.  இன்னொரு நல்ல குணம், எதற்கும் ஆவேசப்படாம பொறுமையா இருப்பாங்க.  யார் மனசும் நோகும் படி பேச மாட்டாங்க. என் அம்மா, அப்பாவைப் போல் பெற்றவங்க கிடைக்க நாங்க உண்மையில் குடுத்து வைத்திருக்கனும்..! 

          மிடில் கிளாஸ் குடும்பம் தான் என்றாலும்.. எங்களின் நியாயமான ஆசைகளை ஒரு நாளும் நிறைவேற்றத் தவறியதில்லை.. என் பெற்றோர்...! படிப்பு, உடை, உணவு... எதுவாய் இருந்தாலும்.. அவர்களால் முடிந்த அளவு செய்து, எங்களை எந்த குறையும் இல்லாம வளர்த்தாங்க. 

          சின்ன வயசுல நான் இப்படி இருக்கணும்னு நினைத்தேன், அப்படி படிக்கணும்னு நினைத்தேன்.... ஆனா நடக்கல... அப்படி சில பேர் சொல்லி கேட்டிருக்கிறேன்.. அப்படி எல்லாம் எந்த குறையும் சொல்ல முடியாத படி, எங்களை நல்ல விதமாக வளர்த்து ஆளாக்கிய என் பெற்றோருக்கு இந்த பதிவு சமர்ப்பணம்...!

அப்பா உங்கள் அன்பின் நினைவில்
உங்கள் ஆசியின் அணைப்பில்......!

.....அன்பு மகள் ஆனந்தி

Monday, June 6, 2011

குருகுலத்தில் ராமாயணம்....!


நாங்கள் வசிக்கும் இடத்தில்.... குழந்தைகளுக்கான குருகுலம் ஒன்று இருக்கிறது.... அங்கே ஞாயிறு தோறும், ஸ்லோகம் மற்றும் தமிழ் பாடம் சொல்லித் தராங்க.  குழந்தைகள் நமது கலாச்சாரம் மற்றும் மொழி தொடர்புடன் வளர இந்த அமைப்பு உற்ற துணையா இருக்கிறது.

போன வருடம், வருட இறுதியில், குருகுலம் குழந்தைகள் பாலராமாயணம், பகுதி- 1 பண்ணாங்க.. சிறப்பா நடந்தது... இந்த வருடம் பகுதி -2 நேற்று நடந்தது.. சுமார் 55 குழந்தைகள் பங்கேற்ற இந்த டிராமா ஒரு பெரிய அளவில் வெற்றியா முடிஞ்சது.  

கடந்த ரெண்டு மாசமா, பெற்றோரும், குழந்தைகளும் அவங்களால முடிஞ்ச அளவு ஒத்துழைப்பு குடுத்து, ஒரே குடும்பமா சேர்ந்து வேலை செஞ்சோம். இந்த ரெண்டு மாசத்துல கஷ்டப் பட்டு உழைச்சது ஏதும் வீண் போகல... நேத்து, பிள்ளைங்க அசத்திட்டாங்க.. நேத்து, நடந்த ஒரு சில விஷயங்கள்... எங்க எல்லாரையும் சிரிக்க வச்சது..

ஹனுமான்-ஆக வேஷம் போட்டிருந்த ஒரு குழந்தை.. சஞ்சீவினி மலையை தூக்கி வரும் காட்சி.. அதுக்கு அவனை, இப்படி இப்படி செய்யணும்.. பயப்படாதேன்னு சீரியஸ்-ஆ விளக்கம் சொல்லிட்டு இருந்தா..... அவன், ரொம்ப கூல்-ஆ நா பாத்துக்குறேன்.. நா பாத்துக்குரேன்னு.. சொன்னான் பாருங்க.. ரொம்ப க்யூட்..!



இன்னொரு இடத்தில், ராவணனாக வந்த பையன் தன்னோட கம்பீர குரல்-ல அசத்தலா பேசிட்டே வந்தான்.. ஆடியன்ஸ் எல்லாம் ஆர்வமா கிளாப் பண்ணி பாத்துட்டு இருந்தாங்க... ஒரு இடத்தில், ஹா ஹா ஹா...ன்னு சிரிச்சிட்டு, கைய வீசி டயலாக் பேசும்போது.. அவன் மைக் தூர போய் விழுந்திரிச்சு.. ஆனா.. எந்த பதட்டமும் இல்லாம.. அவனோட டயலாக் பேசிக்கிட்டே.. ஸ்டைல்-ஆ நடந்து... அந்த மைக்கை ஸ்டைல்-ஆ தரையில் இருந்து கேட்ச் பண்ணி கையில் கொண்டு வந்து நடிச்சான்.. உண்மையில்.. குழந்தைகளின் சமயோசித புத்தி நினச்சு...ரொம்ப பெருமையா இருந்தது.

ஒரு சீன்-ல அசோகவனத்தில் ஹனுமான், சீதையை முதல் முதலா பார்க்கிற இடம் வரும். அங்கே, ஹனுமான், ராமாயணத்தின் கதையை குறிப்பிட்டு....அந்த சீதா தேவி இவராகத் தான் இருக்க வேண்டும்ன்னு... மரத்துக்கு பக்கத்தில இருக்கிற சீதையை பார்த்து சொல்ற மாதிரி காட்சி.. ஸ்க்ரீன் ஓபன் பண்ணி, ஹனுமான் வேடத்தில் இருந்த குழந்தை..ராமாயணம் சொல்ல தொடங்கிருச்சு.. இடையில்... "இவர் தான் ஸ்ரீ ராமரின் சீதையாக இருக்க வேண்டும்ன்னு சொல்லி..." அந்த பக்கம் திரும்பினா, அங்கே சீதையை காணோம்... (சீதைக்கு காதில் மாட்டிக்கொள்ளும், மைக் செட்-அப் பண்ணிட்டு இருந்திருக்காங்க... ) குழந்தை டென்ஷன் ஆகாம...மெதுவா எங்கள திரும்பி பார்த்துச்சு.. நாங்க ஸ்க்ரீன் க்ளோஸ் பண்ணிட்டு, சீதையை அங்க உக்கார வச்சோம்...  இந்த குட்டி, குட்டி டென்ஷன் கூட இப்போ நினச்சா சிரிப்பா தான் வருது..! 

அதே போல ராமரின் அடையாள மோதிரத்தை சீதையிடம், ஹனுமான் காட்டும் காட்சியில்... ஸ்க்ரீன் ஓபன் பண்ணிட்டோம்... ஹனுமான் பேச ஆரம்பிச்சிட்டார்.. ஹனுமான்... கையில் மோதிரம் குடுக்க மறந்து விட்டது.  மெதுவா... ஸ்டேஜ்-ல அந்த மோதிரத்தை ஹனுமான் பக்கத்தில் உருட்டி விட்டாங்க.  ஹனுமான், அசரலயே...! அந்த பையன் பொறுமையா டயலாக் பேசிட்டு இருந்தான்... நாங்க அச்சோ.. மோதிரம் போட்டது தெரியல போல இருக்கே..ன்னு பார்த்துட்டு இருக்கோம்... கரெக்ட்-ஆ மோதிரம் எடுத்து கொடுக்கும் இடம் வந்ததும்.. டக்-குனு குனிஞ்சு அந்த மோதிரம் எடுத்து சீதை கிட்ட குடுத்திட்டான்.. எங்களுக்கு ஒரே சந்தோசம்...!  இதுல என்ன காமெடி-னா சீதையா நடிச்ச பொண்ணுக்கும் ஒரே கவலை.. மோதிரம் உருண்டு வந்தத பார்த்திருச்சு... என்னது இது ஹனுமான்... இன்னும் பாக்காம இருக்கானேன்னு கவலை பட்டிருக்கும் போல... ஆனா இது எதுவும் முகத்தில் காட்டாம சமத்தா உக்காந்திருந்தது. 

இந்த மாதிரி...  மனதைத் தொடுற மாதிரி குழந்தைகள் நிறைய பண்ணாங்க.. ரொம்பவே பெருமையா இருந்தது.

ராவணனின் அரண்மனை செட்-அப், ஹனுமான் சஞ்சீவினி மலையை பெயர்த்து வரும் காட்சி..., ஹனுமான் தனது விஸ்வ ரூபம் காட்டும் காட்சி..., ஸ்ரீராமர் இலங்கைக்கு செல்ல...பாலம் அமைக்கும் இடம்..., கும்பகர்ணன் மற்ற வானரங்களிடம், உன் தலைவன் ராமனைத் தான் பார்க்க வேண்டும் என்று.. பேசும் இடம்..., ஸ்ரீராமர்.. கும்பகர்ணாவின்  யுத்த காட்சி... ( நடனத்துடன் சண்டைக்காட்சி அமைக்கப் பட்டிருந்தது ), சீதையின் தூய்மையை நிரூபிக்க அக்னி குண்டத்தில் இறங்கும் காட்சியில் அக்னி... உள்ளிருந்து எழும்பும் காட்சி...,  அனைத்துக்கும் முத்தாய்ப்பாய் ஸ்ரீராமரின் பட்டாபிஷேகம் காட்சி... இப்படி எல்லாமே...,பார்க்க பிரம்மாண்டமாக அமைந்தது.

அத்தனை பேரின் அயராத உழைப்பிற்கு, ஆண்டவனின் பரிசாய் இந்த வெற்றியை எடுத்துக்கொள்கிறோம்... உதவி செய்த அத்தனை நல்ல உள்ளங்களுக்கும் என் மனதார்ந்த நன்றிகள்...!

பகிர்வைப் படித்த உங்களுக்கும் நன்றிகள்...!

...அன்புடன் ஆனந்தி 

(படம்: நன்றி கூகிள்)

Wednesday, June 1, 2011

ஏமாற்றம்...!


HD wallpaper: girl, sad, crying, raining, rain drops, window, people, woman  | Wallpaper Flare

ஆயிரம் விஷயங்கள் 
அம்சமாய் நடக்கும்.....
அப்போதெல்லாம் 
திருப்தி இல்லை...!

ஏதோ ஒன்று 
எதேச்சையாய்
எட்டிப் போகும்...
எல்லாம் போனதாய்
எக்கச்சக்க வேதனை...! 

நினைத்தது  எல்லாம் 
நிழலில் மெய்த்து பின் 
நிஜத்தில் பொய்க்கும் போது 
வாழ்வின் நிதர்சனம்
வந்து நிற்கும் அங்கே...!


சுருக்கமாய் ஒரு விஷயம்
எதிர்ப்பார்ப்பைக் குறைத்து  
ஏக்கங்கள் களைந்தால்
ஏமாற்றங்கள் தவிர்க்கலாம்...!

~அன்புடன் ஆனந்தி 



About Me

My photo
I am a jovial.. sensitive.. happy person who likes to be around good friends ;)