topbella

Saturday, December 31, 2011

அகிலம் காப்போம்..!


அன்னை தந்தை பாசம் பெற்று
அறுசுவை உணவும் பெற்று
அடைக்கலமாய் இடமும் கிடைத்து
அணிவதற்கு நல்லாடை அமைந்து
அவனியில் எத்தனை பேர் உள்ளனர்?

இவையனைத்தும் இயல்பாய்
இலகுவாய் பெற்ற பலர்
இறுமாப்புடன் அருமை தெரியாது
அலட்சியமாய் அனுபவித்தே
அவர் வாழ்வு வாழ்கின்றார்...

அனைத்தும் படைத்த ஆண்டவா
படைக்கும்போதே பாகுபாடு எதற்கு?
அளவற்ற செல்வம் ஓரிடத்தே
அன்றாட வாழ்வை அசைக்கவே
படாத பாடு பட்டுக்கொண்டிருக்கும்
பல பேர்கள் பேரிடத்தே...!

புத்தாண்டு பொலிவுடன் சிறக்க
புறவேற்றுமை ஒழிய வேண்டும்
அரசியலை மட்டும் அண்டாது
ஆண்டவனை மட்டுமே நம்பாது
அவரவர் அறிவினை நம்பி
அயராது உழைத்து
அரியாசனம் ஏறவேண்டும்

எரிமலைகள் எம் தேசத்தில்
எங்கும் எரியும் ஏழ்மைத் தீயும்..
எதையும் செய்யத் தூண்டும்
பதவிப் பேயும் எட்டி ஓடவே

இளைஞர் சமுதாயமே
இந்நேர நிலையுணர்ந்து
எடுக்கும் முயற்சியை
ஏற்றமுறச் செய்தே
எதிர்கால இந்தியாவை
இமயம் அடையச் செய்வீர்....!

எவரேனும் வந்து
ஏதேனும் புரட்சி செய்து..
எம் வாழ்வு செழிக்கச்
செய்ய வல்லாரோ
என்றெண்ணியே....

ஏமாற்றம் அடையாது
அவரவர் சக்திக்கு
ஆக்க முடிந்ததை
அக்கறையாய் செய்தே
அகிலம் காப்போம்!

அனைத்து நண்பர்களுக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்..!


~அன்புடன் ஆனந்தி


(படம்: கூகிள், நன்றி)

Tuesday, December 27, 2011

ராகி முறுக்கு...!

யாரும் கலரை பார்த்து பயப்பட வேண்டாம்... டேஸ்ட் சூப்பர்-ஆவே இருக்கு. கண்டிப்பா செஞ்சு பாருங்க.


தேவையான பொருட்கள்:

ராகி மாவு - 3 கிண்ணம்
அரிசி மாவு - 2 கிண்ணம்
உளுந்து மாவு - 1 கிண்ணம்
பெருங்காயம் பொடி - சிட்டிகை
எள் - 1 டீஸ்பூன்
வெண்ணெய் - 1 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
தண்ணீர்
எண்ணெய்

செய்முறை:

  1. ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி சூடாக்கவும்.
  2. உளுந்து மாவை லேசாக வறுத்துக் கொள்ளவும்.
  3. அதனுடன் அரிசி மாவு, ராகி மாவு, உப்பு, எள், காயம், வெண்ணெய் கலந்து தேவையான தண்ணீர் விட்டு பிசைந்து கொள்ளவும்.
  4. தேன்குழல் (முறுக்கு) அச்சில் மாவை போட்டு, மிதமான சூட்டில் உள்ள எண்ணையில் பிழிந்து, பொறித்து எடுக்கவும்.
  5. (சத்தம் அடங்கியதும் எடுத்து விட வேண்டும்... ராகி நிறத்தில் பொன்னிறம் எல்லாம் கண்டு பிடிக்க முடியாது)

எளிமையான செய்முறை... குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். செஞ்சு பார்த்து சொல்லுங்க.


~அன்புடன் ஆனந்தி 





Wednesday, December 21, 2011

புத்தாண்டில் புது குறிக்கோள்....!


ஒரு வழியா இந்த வருஷம் கடந்தேறி... புது வருசத்துக்கு ரெடி ஆயிட்டீங்களா?  புது வருஷம் பிறந்ததும்... நம்ம பிரண்ட்ஸ் சில பேர் போன் பண்ணி விஷ் பண்ணிட்டு... ஹ்ம்ம் அப்புறம்... இந்த வருசத்துக்கு என்ன Resolution ..ன்னு கேப்பாங்க (அப்டின்னா........??? ). நம்மளும்... பெருமையா... அதாவதுங்கன்னு... தொடங்கி... வருஷம் வருஷம் சொல்ற அதே குறிக்கோள் தான் சொல்வோம். (வாக்கு மாறக் கூடாதில்லையா..? எப்படி எல்லாம் சமாளிக்க வேண்டியதா இருக்கு...)

எத்தனை பேர்... நினைச்சதை நினச்ச மாதிரி நிறைவேத்தி இருப்போம்.... ஒரு முடிவு எடுக்கறது எவ்ளோ சுலபமா இருக்கு.... ஆனா அதை நிறைவேத்துறதுல இல்ல இருக்கு மேட்டர்...! ஒரு உதாரணம் சொல்றேன்... கடந்த மூணு வருசமா நானும்.... எப்படியாச்சும்... ஒரு பத்து கிலோ எடை குறைத்தே ஆகணும்ன்னு பிளான் பண்றேன்... நாம ஒண்ணு நினச்சா... நம்ம கிரகம் ஒண்ணு நினைக்குது...!

சரி.....ஒரு வழியா... பிளான் ஸ்டார்ட் பண்ணிரலாம்னு... எங்க இருந்து ஆரம்பிக்கிறதுன்னு யோசிச்சா....... எல்லாரும் ஒட்டுமொத்த அட்வைஸ்.. டயட்...! ஹ்ம்ம் ஹும்ம்ம்.. ஐ ஆம் சாரி....அப்படி பட்டினி கிடந்து... உடம்பு குறையனும்னு எனக்கு அவசியம் இல்ல... நெக்ஸ்ட் ஐடியா... ப்ளீஸ்...!

எக்சர்சைஸ் பண்ணினா அப்படியே கொஞ்சம் கொஞ்சமா சுலபமா குறைக்கலாம்.. அப்டியா....? சொல்லவே இல்ல....இப்ப பாரு நானா....... எப்படி குறையறேன்னு கிளம்பி பக்கத்துல உள்ள ஜிம்-ல போயி கெஸ்ட் பாஸ் (Guest pass ) வாங்கி... சேர்ந்தேன்..! ஏக போக வரவேற்பு தான்... கரெக்டான இடத்துக்கு வந்திருக்கீங்க... எடை குறைக்குறது அழகுக்கு மட்டும் இல்ல... நல்ல ஆரோக்கியமான உடலுக்கும் தாங்கன்னு அருமையா.. சொன்னாங்க.. (பயபுள்ளைங்க பேச்செல்லாம் நல்லாத்தேன் இருக்கு....) சரி ரைட்டு... நா இப்போ என்ன செய்யனும்ன்னு சொல்லுங்கன்னு கேட்டேன்.

உடனே அழகா.. ஒரு அட்டையில் என் பேர் எழுதி, வரிசையா நம்பர் போட்டு.. இந்த ஆர்டர்ல எக்சர்சைஸ் ஸ்டார்ட் பண்ணனும்னு ஒரு தரம் காமிச்சி கொடுத்தாங்க.  சரி இதெல்லாம் ஜுஜிபின்னு அவங்க மாதிரியே... செஞ்சிட்டே வந்தேன்.. 20 நிமிசத்துல முடிஞ்சு போச்சு... அட இம்புட்டு தானா... அடடா... இவ்ளோ நாள் இது தெரியாம எவ்ளோ டைம் வேஸ்ட் பண்ணிட்டோம்ன்னு பீலிங்க்ஸ் வேற....!

அப்புறம் என்னன்னு பவ்யமா போயி கேட்டேன்.... கார்டியோ எக்சர்சைஸ் கொஞ்சம் செஞ்சு முடிச்சிரலாம்ன்னு சொல்லவே... நேர போயி ட்ரெட்மில்ல ஏறி.. ஒரு 10 நிமிஷம் நடந்துட்டு.... ஜாலி-ஆ கிளம்பி வீட்டுக்கு வந்துட்டேன்.  அப்படியே தொடர்ந்து ஒரு மூணு நாள் போனேன்... நாலாவது நாள்... வீட்டுக்கு வந்து தூங்கி எழுந்ததும்... தோள்பட்டை செமையா..வலி. என்ன மேட்டர்-னா... நல்ல வேகமா எக்சர்சைஸ் செஞ்சு சீக்கிரம் குறையறதா நினச்சு... ஓவர்-ஆ பண்ணி.... வலி வந்திருச்சு..!

அப்படியும் விடாம... முன் வச்ச கால பின் வைக்க கூடாதுன்னு போனேன்.. அந்த ஜிம்-ல நாமளா எக்சர்சைஸ் பண்றது தவிர... தனிப்பட்ட ட்ரைநர்ஸ் வந்து.. யோகா, பிலாடே....இது மாதிரி வேற கிளாஸ் எடுப்பாங்க... எந்த கிளாஸ்-ல வேணா நம்ம ஜாயின் பண்ணிக்கலாம்.. அப்படி ஒரு கிளாஸ்-ல சேர்ந்து சுறுசுறுப்பா நானும் எக்சர்சைஸ் பண்ணேன்..! ஹ்ம்ம் ஹும்ம்.. பின்விளைவுகள் செம.....! (ஒரு வேளை தொடர்ந்து போயிருந்தா.. பழகி இருக்குமோ என்னவோ?)

அப்புறம் என்னவா??? இதெல்லாம் எதுக்குடா வம்புன்னு வெற்றிகரமா திரும்பி வந்தாச்சு... இப்போ அடிக்கடி அந்த ஜிம்-ல இருந்து.. பாசமா போன் பண்ணி... நாங்க இப்போ வேற ஒரு திட்டம் கொண்டு வந்திருக்கோம்... கண்டிப்பா வந்து ட்ரை பண்ணுங்கன்னு சொல்வாங்க..! இப்படி எல்லாம் கூப்டா.. போயிருவமாக்கும்..! அவள் ஒரு தொடர்கதை மாதிரி... இதுவும் ஒரு தொடர் கதை...!

சரி பேசிட்டே இருந்து.. உங்கள கேட்க மறந்துட்டேன்... உங்களுக்கு இந்த வருஷம் என்ன குறிக்கோள் (Resolution )? (சுதாரிப்பா... என் ப்ளாக் பக்கமே வரக் கூடாதுன்னு இருக்கேன்ன்னு மட்டும் சொல்லிராதீங்க.. மீ பாவம்..!)

ஜோக்ஸ் அபார்ட்... உடல் ஆரோக்கியத்திற்கு.. சரியான நேரத்தில்.. சரியான விகிதத்தில் உணவு, தினமும் ஒரு 30 நிமிடமாவது உடற்பயிற்சி,  அமைதியான உறக்கம்.... இதெல்லாம் இருந்தாலே போதுங்க...!  (சரி.. சரி.. கோவப் படக் கூடாது)  உடல் ஆரோக்கியத்தோட.. மனமகிழ்ச்சியோட புது வருஷம் பிறக்க வாழ்த்துக்கள்...!

வாசித்த (வருந்திய...) அன்பு உள்ளங்களுக்கு நன்றி..!!!

~அன்புடன் ஆனந்தி

(படம்: கூகிள், நன்றி)

Thursday, December 8, 2011

தமிழ் இனி மெல்ல வாழும்...!


ஒளிரும் ஜோதியாம்...
ஓயாத தமிழை...
கலை என்ற பெயரில்..
கடித்துக் குதறி...

காது கொடுத்துக்
கேட்க முடியாமல்
கைகட்டி நின்றே
வேடிக்கை பார்க்கிறோம்..

முத்தமிழை வளர்க்க
முத்தாய் பல வார்த்தைகள்
முன்னும் பின்னும் இருக்க
எப்படித் தோன்றியது
எதுவும் புரியாமல் எழுத..

தமிழ் இனி மெல்லச்சாகும்
எனும் கூற்றை உயிர்ப்பித்து
தரணியில் தமிழை
தப்பி ஓடச் செய்து விடாதே
தமிழா.. தவப் புதல்வா...

எம் மக்கள் மறந்த
தமிழை நினைக்கச் செய்ய
எமக்கு யார் துணையும்
தேவை இல்லை..

எழுத்துக்கள் கூட்டி
எரிமலை வெடிக்கச் செய்வோம்
எதுகை மோனையில்
ஏகாந்தம் படைத்திடுவோம்..

~அன்புடன் ஆனந்தி

Tuesday, December 6, 2011

தொலை தூரத்தில் நான்...!


தொடும் தூரம் நீ இருந்தும்
தொலை தூரத்தில் நான்..
தொடர்ந்தேனே உன்னை..
உன்னில் தொலைத்தாயே என்னை..

சுடும் காதல் என்னுள் தீ மூட்ட
சுக வீணை உன்னிமை தான் மீட்ட..
நான் படுந்துயர் நீ கண்டாய்
உனக்குள் பொய் வேலி கொண்டாய்..

கடுங்கோபம் கொண்டாலும்
கள்வா உன் கண் காதல் பேசும்
விடும் எண்ணம் எனக்கில்லை
விடை சொல்ல உனக்கு மனமில்லை..

சொல்லிசெல்ல அருகே வந்தேன்
சோதிப்பவர் போல் உன் பார்வை..
சொல்ல வந்ததும் மறந்து..
நெஞ்சம் கிள்ளியதை போல்
உணர்ந்து மெல்ல நகர்ந்தேன்..!


~அன்புடன் ஆனந்தி 




(படம்: கூகிள், நன்றி)

Tuesday, November 29, 2011

உன் கண்ணசைவில்...!


உன் கண்ணசைவில்
கண நேரத்தில் எந்தன்
உயிர் மூச்சாகி உந்தன்
காதலில் வீழச் செய்தாய்..

விதி எனக்கு எழுதிய
வேதம் இதுவா என்றே
விந்தை கொண்டேன் என்
சிந்தை வென்றேன்..

ஆதாரம் நீ என்றே
அன்பே உன்னை ஆழமாய்
அகத்தில் பூஜை செய்தே
ஆனந்தம் நான் கொண்டேன்..

யாதாயினும் இக்கணமில்லை
யாம் யாசித்தாலும் நேசித்தாலும்
யாதும் செய்ய இயலாதென்றாய்!

யோசித்தே பார்க்கிறேன்
உன்னை நிதம் நேசித்து
என்னுள் சிவமாய் பூஜித்து
புனர் ஜென்மத்திற்காய்
புதிதாய் பூத்தே காத்திருக்கிறேன்..!


~அன்புடன் ஆனந்தி




(படம்: நன்றி கூகிள்)

Friday, November 11, 2011

நெருங்கி நீ வர....!!!

அரும்பி வந்த அன்பினால்
அன்பே உன்னை
விரும்பி அழைக்கிறேன்..!


நெருங்கி நீ வர வேண்டும்
எனத் துடிக்கும் நெஞ்சம்
நிகழ்வில் என் செய்யுமென
நிச்சயமாய் நானறியேன்..!


வாய்ப்பேச்சில் என்னை
வசமிழக்கச் செய்து விட்டு
வக்கனையாய் வாதாடி
வம்பிழுத்துச் செல்வதே
உனது வாடிக்கை..!


நாட்கள் செல்ல செல்ல
நாயகன் உன் நினைவு
நாட்டியமாடும் என்னுள்ளே
நடக்கும் என்றே 
நான் நம்பிக்கையின் வாசலில்...!

...அன்புடன் ஆனந்தி 

Thursday, October 27, 2011

காலமே உன் காவலில்...!


கிட்டேயே இருக்கும்
கிறுக்கு பிடிக்க வைக்கும்
எதிரிலேயே இருக்கும்
எவர் தடுத்தும் நிற்காது
எதற்கும் மயங்காது...
ஏமாற்றியே சிரிக்கும்..

நெருங்கியே வரும்
நெருப்பாய் தாக்கும்..
அருகிலேயே அமர்ந்து
அணுவணுவாய் வதைக்கும்...

நெஞ்சம் நிறைத்து...
நினைவை கலைத்து...
கண்பார்வையில் கூட...
கஞ்சத் தனம் காத்து...
கழிவிரக்கம் சிறிதுமின்றி
கைது செய்தே 
காவலில் வைக்கும்...

உணர்வுகளை உருக்கி..
உள்மனதில் உறுத்தி..
உலக இயக்கம் கூட..
உருத் தெரியாமல்.. 
நிறுத்தி வைக்கும்... நீ 

எப்போது எனை நெருங்கி
தப்பாது மனம் விரும்பி
கை சேர்ப்பாய் கனவலையை..
காலமே உன் காவலில்
என் காதலே வேள்வியில்..!

...அன்புடன் ஆனந்தி 


(படம்: நன்றி கூகிள்)

Monday, October 17, 2011

வேட்டையாடும் வேங்கை...!


சமீபத்தில் நான் படித்த Warrior (தேவா) அவர்களின் வேட்டை...என்னும் பதிவு.. என்னை விசித்திரமாய் தாக்கியது....! அவரின் அனுமதியோடு அவர் படைப்பை என் வரிகளில்..... எழுதி பார்க்கிறேன்...!

அவரின் பதிவு...
எனது வரிகளில்....

உச்சியின் உக்கிரத்தில்
உயிர் மேல் பயமின்றி
புரவிகளின் குளம்படிச்சத்தம்
எந்தன் குருதியைச் சூடேற்ற..
எதிர்வரும் முரட்டு வீரனின்
நெஞ்சில் என் வாள் ஏற்றி..

எதிர்புறம் அதை கிழித்தெடுக்க
இடப்புறம் வந்த கள்ள எதிரியின்
கரம் கொய்து என் சிரம் நிமிர்த்தி...
எம் படையின் தலைமை வீரனுக்கு
தலைகளை கொய்ய ஆணையிட்டு
அடங்கா வெறியுடன் ஆடிய
அம்மிருகங்களை அடக்கும் ஈட்டியுடன்..!

மன்னிப்பிற்கு இடமில்லை
மரணம் ஒன்றே எமது பதில்
சத்தியத்தை சாகடித்த
சாக்கடை மனிதர்களுக்கு
சவுக்கடி கொடுக்க களமிறங்கினோம்..

காமுகன் உன்னை
காலனிடம் வழியனுப்ப..
உந்தன் கருவறுத்து
அவ்வேற்றை நெருப்புக்கிறைத்து
அச்சாம்பலை நீரில் கரைத்து
அதனாலே எம் தேசம் கழுவி..
உன் கால் பட்ட கறை நீக்குவோம்..!

எங்கிருந்தோ வந்த
எதிராளியின் அம்பு
எம் புஜத்தில் ஏறி இறங்கி
பதம் பார்த்தே பாதி வழியில்
நின்றே போனதடா....
வெட்கம்...வெட்கம்....
எம் புஜம் கிழிக்க
இயலா போர்வாள்
ஏந்தி.. போர்க்களம் 
வந்தாயடா மூடா..!

புஜத்தில் வழிந்த எம் ரத்தம்
ஏற்படுத்திய பதற்றம்
எம் நாட்டு வீரனின் விழிகளில்..
கலங்காதே வீரா....
இத்துரோகிகளை அளிக்காது
எம் உயிர் எமை நீங்கா...!!
அப்படியே நான் அழிந்தாலும்..
உனது லட்சியம் எதிரியை
அழித்து எம் குலம் காப்பதே..!

மேகத்தின் மறைவில் நின்றே
சூரியன் எட்டிப்பார்க்க
விண்ணதிரும் எமது 
சிங்கங்களின் கர்ஜனையும்
யானைகளின் பிளிறல்களும்...
எதிரி நாட்டு எத்தனவனை
எக்காளமாய் நோக்க...

எம் புஜம் பாய்ந்த வாள்
பிய்த்தெறிந்து பீரிட்ட
குருதியினை குதிரையின்
சேனையின் கீழ் இழுத்து வந்த
துணி வைத்துக் கட்டியும்...
ஊறி வெளிவந்த ரத்தம்
எனக்கு உயிர் பயம்
அற்றே போகச் செய்ய....

கடிவாளம் சொடுக்கி
களத்தில் உருண்டு கிடந்த
எதிரியின் சடலங்களை
மிதித்தேறி மீந்து நின்ற
பிசாசுகளின் தலைவனை
அடையாளம் கண்டே...
அவனின் இறுதியினை உறுதி செய்ய..

சரேலென்று பாய்ந்தே
அவன் அமர்ந்து வந்த
குதிரையின் கால்களை வெட்ட...
மூடனை ஏற்றி வந்த பாவத்திற்கு
மூச்சின்றி சரிந்தது...
சத்தியத்தை வாளாய்
ஏந்திப் பிடித்திருந்தேன்...

எம் குலத்திற்கு நீ இழைத்த
கொடுமைக்கு.. இதோ இதோ...
அவன் குரல் வளை தாண்டி
கொக்கரித்து வெளியேறியது என் வாள்..!

துடித்த ஜட உடம்பின்
துரோக ரத்தம் எம் தேகம் தொட..
எம் சுவாசம் ஆசுவாசப் பட்டது..!

என் கால்களை அவன்
நெஞ்சில் இருந்து அகற்றி
நிலத்தில் பதித்தேன்....
தலை கவசம் ஒரு கையிலேந்தி..
மறுகையில் எதிரியின் 
தலை கொய்த வாள் ஏந்தி...
எம் வீரர்களை நோக்கி
வெற்றி வெற்றி வெற்றி.. என்றே
வீரமுழக்கம் இட்டேன்!!!!!


...அன்புடன் ஆனந்தி 

Saturday, October 15, 2011

சுத்தம் காத்து சுகாதாரம் பேணுக...!


சுத்தம் பேணுவதில்... இப்போதெல்லாம் எவ்வளவோ முன்னேற்றம் தெரிந்தாலும் இன்னமும் பொது இடங்களில் அதை பலர் பின்பற்றுவதில்லை.  பஸ் ஸ்டாண்டில்.... மற்றும் பலர் வந்து போய்கொண்டிருக்கும் இடங்களில்.... வெற்றிலை போட்டு துப்புவதும், மூக்கை சிந்தி போடுவதும்.... நீங்களே மனச தொட்டு சொல்லுங்க... யாராச்சும்... பஸ்ஸ்டாண்ட்ல... பயம் இல்லாம உக்கார முடியுமா?? நடுரோட்டில் நடந்து போகும் போது தான் சிலர்.. காறி துப்புவாங்க.. அதையும்... எதிரில் வரும் சக மனிதனின் மேலே விழுந்து விடுமோன்னு ஒரு அபிப்பிராயம் கூட இல்லாம துப்பிட்டு போய்ட்டே இருப்பாங்க...!

இன்னும் சில பேர்... பஸ்-ல், ரயிலில் போகும் போது ஜன்னல் ஓரமா உக்காந்து கிட்டு... அவுக சாப்பிட்டு முடிச்சதும்... ரெம்ப பொறுமையா... ஜன்னல் வழியா கைய வெளிய விட்டு... எச்சில் கைய கழுவுவாங்க..! அது அடிக்கிற காத்துல.. அடுத்தடுத்த கம்பார்ட்மன்ட்-ல இருக்குற அத்தனை பேருக்கும்.. அபிசேகம் பண்ணி விடும்!

சின்ன விசயங்களில் நாம் கவனம் செலுத்தி வந்தால் பல உபாதைகளில் இருந்து தப்பிக்க முடியும்.. உதாரணமா, என் அப்பா அடிக்கடி சொல்ற விஷயம், குடிக்கும் நீர் தவிர, எது சாப்பிட்டாலும் உடனே வாய் கொப்பளித்து விடுவது.. பற்களில் வரும் பல வித பிரச்சினைகளை சரி செய்து விடும்.  இன்று வரை, பின்பற்றுகிறேன்.. எந்த விதமான பல் பிரச்சினைகள் இன்றி!

இன்னொரு விஷயம்... நான் சுத்தமாக வெறுப்பது.. திறந்த வெளிகளில்....பஸ் நிறுத்தங்களில் விற்கப்படும் உணவுப் பொருட்களை வாங்கி உண்பது! நீங்க நல்லா கவனிச்சு பாருங்க... வந்து போகிற.. அத்தனை பேருந்தில் இருந்தும் வெளிப்படும்.. புகை எல்லாம் அடிச்சு.. காற்றில் பறக்கும் தூசிகளும் மேலே பட்டு... இதுக்கு மேல வந்து உக்காரும் பூச்சிகள்.. வேறு!  தயவு செய்து.. இப்படி திறந்த வெளிகளில் விற்கும் பதார்த்தங்களை வாங்காதீங்க! (இப்போது எவ்வளவோ முன்னேற்றம் இருந்தாலும் இன்னும் சில பேர் இப்படி வெளியே கவனமில்லாது வாங்கி உண்ணத் தான் செய்கிறார்கள்)

எங்கே வெளியூர் சென்றாலும் எளிமையான உணவு பொருட்களை உடன் எடுத்துச் செல்வது நல்லது!  ரயில்களில் இடையில் வந்து விற்கப்படும் உணவு பதார்த்தங்களில் சுத்தம் எதிர்பார்க்க முடியாது தான்...!  குறிப்பாக எண்ணெய் பலகாரங்கள்... கூடவே கூடாது! அப்படி ஒருவேளை, உங்களுக்கு உணவு எடுத்து வர வசதி படவில்லை என்றால்.. குறைந்த பட்சம்.. பழங்கள்.. பிஸ்கட் இந்த மாதிரி எதாச்சும் சாப்பிடுவது மேல்!

அடுத்து நான் பார்த்து ரொம்ப வருத்தப்படும் விஷயம்... குப்பைத் தொட்டி தவிர எல்லா இடத்திலும் குப்பை எறிதல்! எந்த இடம்ன்னு பாக்கறது இல்லை.. கையில் உள்ள குப்பையை அங்கயே எரிந்து விடும் சிறந்த குணம்...நம்மில் பலருக்கு உண்டு..! வெளி நாடுகளில்.. போயி. அப்படி ரோடுகளில் குப்பை போட முடியுமாங்க? இல்ல.. நீங்க போட்டா தான் சும்மா விட்டுருவாங்களா?  பப்ளிக் லிட்டெரிங்..ன்னு சொல்லி.. பைசா வசூல் பண்ணிருவாங்க. (அதாங்க ஃபைன் போட்டிருவாங்க). 

அது ஏன்.. நமக்குன்னு வரும் போது மட்டும் எதையும் ஃபாலோ பண்றதில்லை..! வேதனையான விஷயம் தான்!

நம்ம ஊர்ல பெரியவங்க அப்பவே சொல்லி வச்சிருக்காங்க.. "கந்தை ஆனாலும்... கசக்கிக் கட்டு", "கூழ் ஆனாலும் குளித்துக் குடி..."ன்னு!  இதுக்கு விளக்கம்.. ஊருக்கே தெரியும்.. இருந்தாலும் சொல்றேன்..  உடுத்துற துணி கிழிஞ்சு இருந்தா கூட பரவாயில்லை.. ஆனா அழுக்கா இருக்கக் கூடாது.. அதனால சுத்தமா துவைத்து கட்டுன்னு சொல்றாங்க..! அதே போல தான்.. குடிப்பது கஞ்சியோ, கூழோ பரவாயில்லை.. ஆனா அதையும் சுத்தமா குளிச்சிட்டு சாப்பிடுன்னு.. சொல்றாங்க!

சில கடைகளில், டீ கிளாஸ் கழுவுவதைப் பார்க்க நேர்ந்தால்.. ஜென்மத்துக்கும் வெளியில் டீ, காபி குடிக்க மாட்டோம்...! அம்புட்டு சுத்தமா கழுவுவாங்க! ஒரு பக்கெட் தண்ணீர் வைத்து ஓராயிரம் கிளாஸ்.. கழுவி சாதனை புரிவாங்க. சின்ன குழந்தைகளுக்கு இளம் வயதில் இருந்தே... சில விசயங்களை சொல்லிக் கொடுத்தோமானால், காலத்துக்கும் அவங்களுக்கு நன்மையா இருக்கும்.. எப்போ, எங்க வெளில போயிட்டு வந்தாலும் கைய சோப்பு போட்டு கழுவ சொல்றது.... அப்புறம் எந்த பொருள் சாப்பிடறதா இருந்தாலும், கைய சுத்தமா கழுவிட்டு சாப்பிடறது.... காலை எழுந்ததும்..., இரவு படுக்கும் முன்பும்... இரு வேளையும் பல் துலக்குவது... இந்த மாதிரி இப்பவே சொல்லித் தரலாம்!

"இந்திய நாடு... என் வீடு.. இந்தியன் என்பது என் பேரு...ன்னு" சொல்றோம்.. சொல்றதோட சரி... அதை எத்தனை பேர் செய்றாங்க..?? சொல்றதொட நில்லாமல்.....நம்ம வீட்டை எப்படி பேணி சுத்தமா பாதுகாப்போமோ.. அதே போல நம் நாட்டையும் நினைத்தாலே... சுபீட்சம் அடைய முடியும்!

(பி.கு: திறந்த வெளிகளில், பஸ் நிறுத்தங்களில்.. வியாபாரம் செய்து பிழைக்கும் ஏழை வியாபாரியின் பிழைப்பை கெடுப்பதல்ல என் நோக்கம். அவர்களும், சுத்தமாக வைத்திருந்தால்... அவர்கள் உட்பட... அனைவருக்கும் நலம்)

காசு பணம் ஆயிரம் சம்பாதிச்சு.... என்னங்க புண்ணியம்??? நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்...!!! சுத்தம் பேணி... நம்மைக் காத்து....நம் சுற்றமும் காக்க!!!


...அன்புடன் ஆனந்தி 

Monday, October 10, 2011

இயற்கையின்... இலையுதிர்க்காலம்...!!!

          காலையில் சிலு சிலுன்னு காற்றில் அசைந்து கொண்டிருக்கிற மரங்களை பார்க்கும் போது... எனக்கு தோணியது..! 

இங்கே இப்போ "இலையுதிர்க்காலம்"...! ஒரு ஒரு இலையாக... உதிர்ந்து.. சாலை எங்கும்... காற்றில் பறந்து கிட்டு இருக்கு. இந்த செடி, கொடி, மரங்களுக்கு தான் எவ்ளோ பெரிய மனசு.....!!

           (உதிர்ந்து கொண்டிருக்கும் இலைகள்...)

 
(உள்ளம் தொடும் வண்ண மாற்றம்....)

வசந்த காலம் வந்ததும்.. வகையாக துளிர்த்து.. பச்சை பசேலென்று பல வண்ண நிறங்களில் மலர்களை கொடுத்து நம் கண்ணுக்கு விருந்தாய் கடை விரித்துக் காட்சி தருகிறது...! வீட்டுக்கு உள்ளே இருந்து...தே வெளியே பார்த்தாலும், வெளியில் எங்கும் வண்டியில் செல்லும் போதும்.. சாலையின் இருபுறமும்.... காணும் பசுமையின் அழகை என்னவென்று சொல்வது...!

வசந்த காலம் ஆரம்பிக்கும் போதே... தோட்டத்தில் கவனித்து வந்தால்... தரையினை முட்டி.. மெதுவாக.. முளைத்து வெளி வரும்.. சிறு சிறு குருத்துக்களை காண்கையில்.. எல்லை இல்லா ஆனந்தம்..! இயற்கை.. தன் கடமையில் இருந்து ஒரு போதும் தவறுவது இல்லை.

சிறு தளிரில் இருந்து தொடங்கி..... அவை வளர்ந்து.... பெரிதாகி... மொட்டு விட்டு பூக்கும் போது.. நமக்கு ஏதோ.. சாதித்து விட்ட திருப்தி.. பாவம்.. முழு வேலையும் செய்ததென்னவோ அவைகள் தான்.

இத்தனை வளர்ச்சியும்.. மலர்ச்சியும்...... ஐந்தே மாதங்கள் தான்.. அதற்குள் குளிரத் தொடங்கி... இலையுதிர்க் காலம் வந்தே விட்டது.... அப்படி தன்னை முழுதாக உதிர்க்கும் போதும்..... தன் அழகால் நம்மை ஆனந்தப் படுத்தித் தான் செல்கிறது.. இந்த படங்களை பாருங்க... எங்கள் வீட்டின் பின்னால் உள்ள மரங்கள்....!



உதிரத் தொடங்கும் வேளையிலும்
உனதழகால் எனது உள்ளம்...
தீண்டிச் சென்றாய்!



ஐந்து மாதம் தானே... அதற்கு எதற்கு... அனாவசியமா அலட்டிக்கொள்ள வேண்டும்..ன்னு நினைத்திருந்தா இந்த அழகு நமக்கு கிடைக்குமா...!  அத்தனை இலைகளும்.. உதிர்ந்து... பனிக்காலத்தில் சிலையென உறைந்து... அப்பவும்.. பனி படர்ந்து... பார்க்க அம்சமாய் இருக்கும்.

இயற்கை தனது... வேலையைச் செய்ய.. யாரும் தூண்டி விட தேவை இருக்க வில்லை... தனது வாழ்க்கை சுழற்சியை எவ்வித தங்கு தடையுமின்றி... எதையும் எதிர்பார்க்காது... தவறாமல் செய்து வரும் இயற்கையை வணங்குகிறேன்!

என்னவோ போங்க.... என்ன தான்...... இயற்கையின் அமைப்பில் எல்லாமே அழகு என்று சொன்னாலும்... இலைகள் உதிர்ந்து போவதை பார்க்கும் போது... லேசான..... வருத்தம் இருக்கத்தான் செய்கிறது!

சரி பரவாயில்ல விடுங்க... இன்னும் ஒரு ஆறேழு மாதத்தில் திரும்ப வந்து விடுமே...! விடுமுறைக்கு சென்று இருப்பதாக நினைத்துக் கொள்கிறேன்.

(என்னோட பிரண்ட் எடுத்த படம்... நன்றி: வர்ஷா & ரங்கேஷ் )


...அன்புடன் ஆனந்தி 

Saturday, October 8, 2011

என் செய்தாய்...!

woman, holding, flower bouquet, women, nature, outdoors, females, summer,  people, one Person | Pxfuel

பூட்டி வைத்த புதையலாய்
நாட்டியமாடும் உன் விழிகளும்..
உனைக் காட்டியே கொடுத்திடும்
காந்தப் பார்வைகளும்..

மீட்டும் வீணையாய்
மின்னலின் வேகமாய் 
மாட்டிக் கொண்டே நான்
மயங்கி நிற்கின்றேனே..!

உணர்ச்சி கொதிப்பில்...நீ
உதிர்க்கும் வார்த்தைகளில்...
உடைந்து போகும் என் மனது...

உன் ஒரு நிமிட அணைப்பில்...
உலகமே.. வெளிச்சமாய் 
உய்வதென்ன இப்போது!

...அன்புடன் ஆனந்தி 




(படம்: நன்றி கூகுள்)

Monday, September 26, 2011

நவ நவமாய்....!

(போன வருடம் எங்கள் வீட்டு கொலுவில் எடுத்தது)

நிறைந்த அமாவாசையில்
நினை நினைத்து வேண்டியபடி
முதற் கடவுள் கணேசனை
முதலிலே எடுத்து வைத்து...

அருகருகே அம்மனவள்
துணிவை தாங்கி துர்க்கையாய்
விஜயம் செய்யும் லக்ஷ்மியாய்
சாந்தமாய் சரஸ்வதியாய்!

அடுத்தடுத்த படிகளிலே
அருகிருந்தே பார்க்கத்தோன்றும்
அஷ்ட லட்சுமிகள் அம்சமாய் 
அமர்ந்து ஆட்சி செய்ய...

அறுபடை வீடுகளில் 
ஆண்டி முதல் அரச கோலத்தில்
அழகு முருகன் ஆசி தர....

பத்து அவதாரங்களில் 
பரம்பொருள் அங்கே...
பவித்திரமாய் காட்சி தர...

வெண்ணை திருடும் கண்ணன்
விஷமமாய் வீற்றிருக்க 
கோபியர் மயங்கும் கிருஷ்ணன் 
குழலூதி எமை இழுக்க...

சின்ன குழந்தைகள் 
சிரித்தே மகிழ்ந்திட
உற்றார் உறவினர் 
உடன் வந்து கலந்திட...

ஐயிரண்டு நாட்களிலும் 
அமிர்தமாய் பிரசாதம் செய்து
அம்பாள் அவளை எண்ணி
ஆரோகணம் செய்திடுவார்!

(போன வருடம் எங்கள் வீட்டு கொலுவில் எடுத்தது)

...அன்புடன் ஆனந்தி

Monday, September 19, 2011

என்னுயிர் வரமே..!



நரை முடி கலந்த 
நின் சிகை அழகும்
குறை காண முடியா 
குழந்தை மென்சிரிப்பும்
இதயம் ஊடுருவும் 
ஈட்டி போல் பார்வையும்

எண்ணி எண்ணி பேசும்
ஏகாந்த வார்த்தைகளும்
சின்ன சின்ன கோபங்களும்
குளிர் நிலவாய் தாபங்களும்
நின் பாதம் சேர்ந்திடவே..
நிதம் நடக்கும் வேள்வியும்...

சிலந்தி வலை போலே
உன் எண்ணச் சிக்கலில் நான்
சிதறியே போகா வண்ணம்
சில்லென்ற உன் நினைவுகள்...
மாட்டி மீள முடியா உறவே
எனைப்  பிரியா என்னுயிர் வரமே..!

...அன்புடன் ஆனந்தி 

(படம்: நன்றி கூகுள்)

Tuesday, September 13, 2011

நேற்று பேசியவை...!

Thoughtful young woman with pink flower - Nohat

அர்த்த ராத்திரியில்
அவன் நினைவில்...
அருகில் வந்த தூக்கமும்
அப்படியே ஓடி விட...

நேற்று பேசியவை
நிரந்தரமாய் நெஞ்சினில்..
நிமிஷம் கூட விடாமல்
நிறுத்தாமல் பேசினாயே...

நிச்சயம் தெரியும் உனக்கு
நீயின்றி நானில்லை என்றே..
பேசும் வார்த்தைகள்
பேதம் இன்றி வந்து விழ....

காற்றின் அசைவில் என்
கருங்கூந்தல் கண் மறைக்க
பேச்சு மூச்சு இன்றி
பேதை நான் விழிக்க...

என்ன?? புரிந்ததா என்றே
எனை நோக்கி நீ கேட்க...
எல்லாம் புரிந்தது என்றே
என்னிதழ் பதில் சொல்ல..

ஏற இறங்க எனைப் பார்த்து
ஏனிப்படி படுத்துகிறாய் என்றாய்
எப்படி உன்னிடம் சொல்வேன்
என்னுயிர் பறித்தது நீயே என்று..!

...அன்புடன் ஆனந்தி 



(படம்: நன்றி கூகிள்)



Friday, September 9, 2011

எண்ணெய் கத்திரிக்காய் குழம்பு...!


தேவையான பொருட்கள்:

சிறிய கத்தரிக்காய் - 10 (காம்பை மட்டும் நீக்கி விட்டு, நான்காய் கீறி வைக்கவும்)
வெங்காயம் - பெரிது 1
தக்காளி - பெரிது 1
தேங்காய் துருவல் - 3 மே.கரண்டி
புளி சாறு - சிறிது
குழம்பு மசாலா பொடி - 3 ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு

தாளிக்க:

கடுகு - 1/2 ஸ்பூன்
உளுத்தம்பருப்பு - 1/2 ஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது

செய்முறை:

1. முதலில், வெங்காயத்தை பெரிய துண்டுகளாய் நறுக்கி, வாணலியில் சிறிது எண்ணெய் காய வைத்து, அதில் வெங்காயத்தை போட்டு வதக்க வேண்டும். வதக்கிய வெங்காயத்துடன், தக்காளி, தேங்காய் துருவல் சேர்த்து மைய அரைக்க வேண்டும்.

2. ஒரு பாத்திரத்தில், புளி சாறு + அரைத்த விழுது + குழம்பு பொடி + உப்பு  சேர்த்து, தேவையான தண்ணீர் சேர்த்து வைக்கவும்.

3. வாணலியில்.. இரண்டு ஸ்பூன் எண்ணெய் விட்டு, கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை சேர்த்து, அதில்.. நான்காய் கீறிய கத்தரிக்காய்களை சேர்த்து, மிதமான தீயில், மூடி வைத்து வேக வைக்கவும்.

4. காய், ஓரளவு வெந்ததும்.. கரைத்து வைத்துள்ள மசாலாவை ஊற்றி, மிதமான தீயில், 5 -10 நிமிடங்கள்.. கொதிக்க விட்டு, எண்ணெய் தெளிய இறக்கவும்.

சூடான சாதத்தில், இந்த குழம்பை விட்டு சாப்பிடுங்க.. செம டேஸ்டா இருக்கும்! வந்ததே வந்தீங்க...  சாப்பிட்டு போங்க! :)


Thursday, August 25, 2011

ஏனிந்த நாடகம்...!


சொல்லில் அடங்கா
சோகம் என்னுள்...
சோதித்துச் செல்வதுன்
சுந்தர வதனம்....!

கண்டும் காணாது
நின்றும் தோணாது
சென்றும் பார்க்காது
ஏனென்றும் கேட்காது
ஏனிந்த நாடகம்...!

எட்டு வைத்தால்
எதிரில் உன்னுருவம்..
கண்ணை மூடினால்
கருத்தில் உன் முகம்..

எடுத்துக் கோர்த்தேன்
எழுதிச் சேர்த்தேன்
படித்துப் பார்த்தேன்
பத்திரமாய் காத்தேன்..!

~அன்புடன் ஆனந்தி

Tuesday, August 16, 2011

அமெரிக்காவில் வரலக்ஷ்மி விரதம்...!

இந்த மாத ஸ்பெஷல் வரலக்ஷ்மி தேவியின் விரத பூஜை..! எங்கள் வீட்டில் அந்த பழக்கம் இல்லை என்றாலும்.. எனது நண்பர்கள் வீட்டில் பூஜையில் கலந்து கொண்டேன்.  ஒவ்வொரு வீட்டிலும்... கலசத்தின் மேல், அம்மனின் முகத்தை வைத்து, அதில் அழகழகாய் அலங்காரம் செய்து... பின்னர் அந்த அம்மனை ஒரு பீடத்தில் வைத்து... தத்தம் வசதிக்குத் தகுந்தாற்போல் 3, 5 அல்லது 9 பிரசாதம் செய்து பூஜை செய்தனர்.

இந்நாளில் லலிதா சஹஸ்ரநாமம் பாராயணம் செய்வதும் வழக்கம்.  மாலை ஒரு 6:30 மணி அளவில், வீட்டில் இருந்து கிளம்பி.. ஏழு நண்பர்கள் வீட்டில் சென்று மஞ்சள், குங்குமம் வாங்கி வந்தேன்.  எல்லா இடத்திலும் அம்மனின், அழகிய தோற்றம் மனதிற்கு... நிறைவைத் தந்தது.  எனக்கு தெரிந்த அம்மா ஒருவர், என்னிடம் 'வரலக்ஷ்மி நோம்பு' அன்னிக்கு ஒரு மூன்று அம்மனை தரிசித்தல் பாக்கியம்-ன்னு சொன்னாங்க.  உண்மையில், அன்று ஏழு முறை அம்மனின் தரிசனம் கிடைத்ததை பெறும் பாக்கியமாய் நினைக்கிறேன்.

ஒருவரை ஒருவர் மிஞ்சும் அளவுக்கு.. அம்மனை அலங்கரித்து வச்சிருந்தாங்க. இதில் குறிப்பாக, எனது வீட்டின் அருகில் உள்ள தோழி நிருபமா... அலங்கரித்திருந்த விதம்.. இன்னமும் என் கண்ணிலேயே நிற்கிறது.  ஒவ்வொரு வருசமும்.. ஒரு தீம் வச்சிருப்பாங்க.. அதாவது.. அம்மனின் வாகனம்...! இந்த வருடம்... 'வண்ண மயில்' அம்மனின் வாகனம்!

ஒரு கூடை வாங்கி.. அதனை மயிலின் உடலாய் வைத்து.. அழகான நீல வண்ணத்தில் துணியினை வைத்து.. சுற்றிலும் தைத்து.. மயிலின் நீண்ட கழுத்திற்கும்.. இளநீல வண்ணத்தில் துணியினை தைத்து... பின்னால் நீண்ட தோகைக்கு மயில் இறகுகளை வைத்து அலங்கரித்து... மயிலின் அலகிற்கு தங்க நிறத்தில் காகிதம் வடிவமைத்து... மயிலின் உடலெங்கும்... வண்ண வண்ண கற்கள் பதித்து.. அதன் மேல்... அம்சமாய் அலங்கரிக்கப்பட்ட தேவியை ஏற்றி வைத்திருந்தார்கள்.

(மயில் வாகனத்தில் வரலக்ஷ்மி தேவி...! )

அம்சமாய் என்று நான் சொன்னதில்.. ஆயிரம் விசயங்கள் உண்டு.. எதில் இருந்து ஆரம்பிப்பது? தலையில் அழகிய கிரீடம்.. நெற்றியில் வெள்ளையும், சிவப்புமாய் கற்கள் பதித்த நெற்றி சுட்டி.. மின்னும் மூக்குத்தி... ஒளிவிடும் காதணி... கழுத்தில் கற்கள் பதித்த அட்டிகை.. அதன் கீழே அடுக்கடுக்காய்... பொருந்தி நிற்கும்... முத்தும், கற்களும் பதித்த மாலைகள்... அம்மனின் ஜடையில் தங்க நிற மலர்களுடன் பொருத்தமாய் அலங்காரம்.  சிவப்பும், மயில் நீல வண்ணமும் கலந்த... பட்டு புடவையுடன்... கம்பீரமாய் வீற்று இருந்த அழகை சொல்ல ஓர் நாள் போதாது...!
அழகு மயிலின் மேல்
அம்மா உன் ஆசனம்
அருகில் உன்னை பார்த்ததில்
அடைந்தேன் நான் பாக்கியம்..!
தோழியின் பெற்றோர் இந்தியாவில் இருந்து இங்கே வந்திருக்கிறார்கள். சின்ன சின்ன விஷயம் கூட... அவர்கள் பார்த்து பார்த்து.. உதவி செய்த விதம்.. அவர்களுக்கு என் தோழி மீது உள்ள அளவில்லா அன்பினை காட்டுகிறது. அவங்க கணவர் மற்றும் தங்கை குடும்பத்தாரும், நெருங்கிய நண்பர்களும் இணைந்து உதவி செய்தாங்க. என்னால் முடிந்த சிறு உதவிகளையும் செய்ததில் எனக்கு திருப்தி!! மாலையில் விஷ்ணு சஹஸ்ரநாமம், லலிதா சஹஸ்ரநாமம், ஹனுமான் சாலிசா, சௌந்தர்ய லஹரி அனைத்தும் பாராயணம் செய்து.... என் தோழியின் அப்பா.. அம்பாளுக்கு நாம அர்ச்சனை செய்து.. பூஜை செய்தாங்க..  அதில் கலந்து கொண்டதில், ரொம்ப சந்தோசமா இருந்தது.

பூஜை முடிந்த பிறகு... உணவு இடைவேளையில் பிரசாதமாய் பல உணவு வகைகள்... அதன் பிறகு.... சாந்த பிரகாஷ் மற்றும் சித்ரா இருவரும் தங்களின் அருமையான குரல் வளத்தால் அனைவரையும் ஆக்கிரமித்தார்கள்.  அவர்கள் இருவரின் தேன் குரல், கடவுளின் பரிசு...!  சுமார் ஒரு மணி நேரம் இன்னிசை மழையில் நனைந்தோம்!  பூஜை முடிந்து செல்பவர்களுக்கு... தாம்பூலம் கொடுக்க.. மூன்று சிறுமிகளை... நீல வண்ணத்தில் அழகாய் உடை உடுத்தி.. ஜடை போட்டு... மலர் சூடி... நகைகள் அணிந்து.... அமர்த்தி இருந்தாங்க...!

ஒரு குழந்தை குங்குமம் கொடுக்க, அடுத்த குழந்தை மலர் கொடுக்க, அடுத்த குழந்தை தாம்பூலம் கொடுத்தாள்..! பார்ப்பதற்கே மனதிற்கு சந்தோசமாக இருந்தது! ஆலயம் சென்று வந்த ஆத்ம திருப்தி அத்தனை அம்மனின் தரிசனத்தில் உணர்ந்தேன்...!

எனது தோழி கலா தனது வீட்டில் அம்மனை வசீகரமாய்.. அலங்கரித்து வச்சிருந்தாங்க. பூக்களால் பீடத்தை அலங்கரித்து... அம்மனுக்கு பச்சை நிறத்தில் பட்டுடுத்தி.... பல்வேறு நகைகள் சூட்டி..... அழகிய மலர் மாலைகளால் அலங்கரித்து இருந்தாங்க.

(எளிமையான அலங்காரத்தில் எழிலாய் வரலக்ஷ்மி...! )

வெளி நாட்டில் இருந்தாலும் நம் நாட்டின் கலாச்சாரம் மாறாது.. அதை முழு மூச்சுடன் தொடர்ந்து வரும் அனைவருக்கும் மனதார்ந்த வாழ்த்துக்கள்...! வாழ்க இந்தியா... வளர்க நம் பண்பாடு..!!


...அன்புடன் ஆனந்தி

Wednesday, August 10, 2011

மண்வாசம்... தொடர் பதிவு.....!

பிறந்த ஊர் பற்றி... எழுதியிருந்த சே.குமார் அவர்கள்.. என்னையும் அந்த தலைப்பில் தொடர சொல்லியிருந்தார்கள்.  இவ்வளவு நாள் தாமதத்திற்கு மன்னிக்கவும். எனக்கு ஊர் பற்றி விலாவாரியாக சொல்லத்தெரியல.... ஆனா, எங்க ஊரில் நான் வளரும் போது உள்ள அனுபவங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.


பிறந்த ஊர்.. திருநெல்வேலி...! (உடனே அல்வான்னு மட்டும் தின்க் பண்ண பிடாது...). எங்க ஊர்ல பிரசித்தி பெற்ற... நெல்லையப்பர், காந்திமதி அம்மன் கோவில் இருக்கு... விசேஷ நாட்களில் அங்கே அம்மா கூட்டிட்டு போவாங்க.. கோவில் முன்னாடி போனதும்.. வாசலில்... கமகமன்னு வாசனையோட.. அருகம்புல் மாலை கட்டிட்டு இருப்பாங்க.. அதில் ஒன்றை வாங்கி... உள்ளே  போயி முதலில் இருக்கும் விநாயகருக்கு போட்டுட்டு... பிறகு சந்நிதானத்துக்கு உள்ளே போவோம். தரிசனம் முடிந்து வரும்போது மனதுக்கு நிறைவாய் இருக்கும்!

பொதுவா தியேட்டருக்கு கூட்டிட்டு போக மாட்டாங்க.. ஆனா, பொங்கல், தீபாவளி நேரங்களில்... புது துணி எடுக்கறதுக்காக எல்லாரும் போவோம்.  அங்கே நல்லி, ஆர்.எம். கே.வி. போன்ற கடைகளில் துணிகளை எடுத்துட்டு.. மதியம் லஞ்ச்.. அங்கயே ஒரு ஹோட்டலில் சாப்பிட்டுட்டு.... மேட்னி ஷோ படம் எதாச்சும் பார்த்துட்டு.. சாயங்காலம் வீட்டுக்கு வருவோம்.

திருநெல்வேலி ஜங்ஷன் பஸ் ஸ்டாண்ட் அருகில் இருக்கும் சாந்தி ஸ்வீட்ஸ்.. ஹ்ம்ம்.. எப்போ அங்கே போனாலும்.. அல்வா... வாங்காமல் வருவதில்லை. அங்க தான் அரசு பொருட்காட்சி நடக்கும்... எல்லா முறையும் போவதில்லை என்றாலும்.. பெரும்பாலும் கூட்டிட்டு போவாங்க.. அங்க ராட்டினத்தில் ஏறி...  பெரிய அப்பளம் மாதிரி ஒரு ஸ்நாக் சாப்பிட்டு....  ஒன்னையும் விடுறதில்ல.



வார இறுதி நாட்களில்... பாளையம்கோட்டையில் இருக்கும் மார்க்கெட் சென்று வருவது உண்டு.  என் அம்மாவின் அம்மா இருந்த இடத்தின்... அருகில் தாமிரபரணி ஆற்றுத் தண்ணியில் குளிக்கும் வசதி உண்டு.. ரொம்ப ஆசையா இருக்கும்... (ஆனா எனக்குத் தான் தண்ணி என்றாலே பயம் என்று.. ஊருக்கே தெரியுமே...) வெளில இருந்து... வேடிக்கை பார்த்துட்டு இருப்பேன்.  என் தம்பி, தங்கை உள்ள இறங்கி குளிச்சிட்டு.. அச்சோ மீன் கடிக்குது கடிக்குதுன்னு சொல்லிட்டு இருப்பாங்க.. (இதெல்லாம் யோசிச்சு தான் நாங்க தெளிவா.. கரையில் இருக்கோமாக்கும்..)

அப்புறம்.. கோவில் தசரா வரும்... அந்நேரம் தான் ரொம்ப பிடிச்ச டைம். ஆச்சி வீட்டில் போயி டேரா போடா வேண்டியது.. நைட் ரொம்ப நேரம்.. வில்லுப்பாட்டு, கச்சேரி..ன்னு வேடிக்கை பார்க்க வேண்டியது... இன்னும் கூட எனக்கு அந்த ஜவ்வு மிட்டாய் காரர்... ஒரு கம்பு மேல பொம்மைய கட்டி வச்சிட்டு... அது கைல இருக்குற... சின்க்..சா / சிங்கிய.... (அவ்வவ்... அதுக்கு பேரு சரியா தெரியலயே...) தட்டிட்டே... வாட்ச், மோதிரம், நெக்லஸ்... எல்லாம் செஞ்சு தரது ஞாபகம் இருக்கு..! அதே போல.. நைட் வேலைல.. தெருவுல.. குல்ஃபி ஐஸ், தேங்காய் மாங்காய் பட்டாணி சுண்டல்... சோன்பப்டி... இதெல்லாம் கூட கொண்டு வருவாங்க..!

பொங்கல் நேரத்தில்... தெருவோட.. எல்லாம் ஒருத்தரோட ஒருத்தர் போட்டி போட்டு.. பெரிய கோலமா போட்டு.. காலைல... சீக்கிரமா எழும்பி... அம்மா பொங்கப் பானை வச்சி... பொங்கல் விடுறதை.. ஒரு தூக்கக் கலக்கத்தில வந்து எட்டி பார்த்து... அம்மா.. போயி முதல்ல குளிச்சிட்டு வான்னு... திட்டறது வாங்கி... அப்புறம் குளிச்சிட்டு வந்து... பொங்கல் விட்டதை.. சூரியனுக்கு படைத்து... அதில் கொஞ்சம் எடுத்து.... அதனுடன் தேங்காய், வாழைப்பழம், சக்கரை பொங்கல் எல்லாமும் வச்சு.... காக்கைக்கு வைப்பாங்க.. எல்லாத்தையும் விட்ருவோம்.. அந்த மாதிரி வச்சு கேட்டு சண்டை போட்டு சாப்பிடுவோம்.


வீடெல்லாம்.... கரும்பு தின்னு சக்கையா போட்டு... அதுக்கு திட்டு வாங்கி... அப்புறம் அம்மா... வைக்கிற சாம்பார், அவியலோட.... மதியம் செமையா ஒரு வெட்டு வெட்டிட்டு.... டீவி-ல வர பொங்கல் சிறப்பு நிகழ்ச்சி எல்லாம் பாத்துக்கிட்டு... ஒரு குட்டி தூக்கம் மதியம் போட்டு எழுந்திருச்சு.. திரும்பவும் முதல்ல இருந்து சாப்பிட வேண்டியது! (நெஜமா அதெல்லாம் ரொம்பவே மிஸ் பண்றேன்...)

இதே போலத்தான் திருக்கார்த்திகை பண்டிகையும்... எல்லார் வீட்லயும்... ஜகஜோதியா விளக்குகள் எரியும்.... அம்மா.. கொழுக்கட்டையில் விளக்கு செய்வாங்க... அதை ஒரு தாம்பாளத்தில் வைத்து... நெய் ஊற்றி விளக்கேற்றி வீட்டின் முன் வாசலில் வைப்பாங்க.... சூப்பர்-ஆ இருக்கும்.... மறுநாள்.... சொக்கப்பனை என்று சொல்வாங்க.. சூந்துகுச்சி (வெள்ளை கலரில் இருக்கும்.... உங்க ஊர்ல என்ன சொல்வீங்கன்னு தெரியல...) அப்புறம், சைக்கிள் டயர் எல்லாம் போட்டு ஒரு இடத்துல கொளுத்துவாங்க.. பார்க்கறதுக்கு ரொம்ப நல்லா இருக்கும்!


என் அப்பாவோட கனவு தான் நாங்க குடியிருந்த வீடு... அளவோட ஆறு அறைகளுடன்... வீட்டைச் சுற்றி.. செடி கொடிகளுடனும்... தென்னை மரத்துடனும்... பூக்களுடனும்.... வீட்டிற்கு வந்தாலே.. அவ்ளோ நிம்மதியா இருக்கும்.  சில நேரம் பள்ளி முடிஞ்சு வீட்டுக்கு வரும் போது... அம்மா எங்கயாச்சும் வெளில போயிருப்பாங்க.. அந்நேரம் காம்பவுண்ட் சுவர் மேல ஏறி.. நெல்லிக்காய் மரத்தில ஏறி... என் தம்பி நெல்லிக்காயை பறிச்சு போடுவான். நா கீழ நின்னு, அது மண்ணுல விழுந்துராம பிடிச்சு.. மோட்டார் ஆன் பண்ணி அதை கழுவி சாப்பிடுவோம். கொய்யா மரம் கூட உண்டு.. சீனி கொய்யான்னு சொல்வாங்க.. செமையா இருக்கும். அதையும் விடுறதில்ல. 

இப்படி ஓராயிரம் விசயங்கள் இருக்கு... சொல்லிட்டே போகலாம்..! இருந்தாலும் உங்க நன்மை கருதி.. இத்துடன் என் பதிவை முடித்துக் கொள்கிறேன். படித்த நல்ல உள்ளங்களுக்கு நன்றிகள்! :)


எங்க ஊர்ல எதை மிஸ் பண்றேனோ இல்லியோ.... இந்த அல்வாவை ரொம்ப..... மிஸ் பண்றேன்!! :)


...அன்புடன் ஆனந்தி 


(படங்கள்: நன்றி கூகிள் )

Friday, August 5, 2011

உற்ற நண்பன் யாரோ...?


எதிர்ப்படும் ஏராளமான மக்களில்
எவர் நம்மின் உற்ற நண்பன்?
அன்றாட வாழ்க்கையில்
அவரவர்க்கு ஆட்டிப்படைக்கும்
ஆயிரமாயிரம் வேலைகள்...!

ஓடியாடி வேலை செய்து
ஓய்ந்து உட்காரும் நேரத்தில்
உள்ளன்போடு செவி சாய்க்க
ஓர் ஜீவன் இருந்தாலும்
அதுவே நம் உற்ற நண்பன்...!

அறியா வயதில் ஆறேழு நண்பர்கள்
அறிந்த வயதில் ஓரிருவர் இருப்பினும்
ஒளிவு மறைவின்றி நடிப்பு நாடகமின்றி
நல்ல துணையாய் நண்பன் அமைய
நாம் செய்திருக்க வேண்டியது தவம்...!

இன்பத்தில் இணைந்து இருந்தும்..
இடர் வரும் வேளையில்
இரு கைநீட்டி அரவணைத்தும்
இதயத்தில் அமர்ந்து இருப்பவனே
உண்மையான உற்ற நண்பன்...!

காசு பணம் எதிர்பார்த்தோ..
காரியம் நடக்க வேண்டும் என்று
கை கோர்த்தோ நட்பு படர்ந்தால்
காலத்துக்கும் உடன் வராது
கரை சேரவும் தோதுபடாது....!

எதையும் எதிர்பார்க்காமல்
ஏமாற்றி ஏய்க்காமல்
எள்ளளவும் கலப்படமின்றி
நமக்கொரு நண்பன் அமைந்தால்
நானிலத்திலும் நாமே பாக்கியசாலி!

கோடி நண்பர்கள் கூடி வந்தாலும்.. கடைசி வரை கூடவே இருப்பவனே உயிர்த் தோழன்.  உங்களுக்கும் உற்ற துணையாய்... உயிர்த் தோழன் அமைய வாழ்த்துக்கள்..!!



...அன்புடன் ஆனந்தி



(படம்: நன்றி கூகிள்)
August 07: Friendship day

Friday, July 22, 2011

வெயிலுங்க....வெயிலு....!!!


பனி விழும் போது.... எப்படாப்பா இந்த சம்மர் வரும்-னு நினச்சதென்னவோ உண்மை தாங்க.. ஆனா அதுக்குன்னு இப்படியா?? ஸூஊஊஊ.. ஒரு வாரமா, வெயிலு போட்டு தாக்கிட்டு இருக்குது.. 100 டிகிரிக்கு மேல போயிட்டு இருக்குங்க.. புழுக்கம் தாங்க முடியல.  

வெளியில எங்கயும் போக முடியல.. ஹவுஸ் அர்ரெஸ்ட் பண்ண மாதிரி இருக்குது. இந்த வாரம் தொடக்கத்துல மூணு நாள், சமத்தா வீட்டுக்குள்ளயே இருந்தேன்... அதுக்கு மேல முடியல.. சரி என்ன பெரிய வெயிலுன்னு... கிளம்பி வெளிய போய்ட்டேன்.. சொல்லக் கூடாது... நொந்துட்டேன்.. இருந்தாலும் நாம தான் முன், வச்ச காலை பின் வைக்கிற பரம்பரை இல்லியே.. (அப்படின்னு  பில்ட் அப் குடுத்துக்க வேண்டியது தான்....).  

இந்த வெயில்லயும் துணிஞ்சு வெளியூர் வேற போனோம்.. உச்சி வெயில்ல.. ஊர் சுத்துறது ரெம்ப முக்கியம் பாருங்க.. நடக்கவே முடியல... ஏதோ... தோதோ-வுக்கு பிஸ்கட் காமிக்கற மாதிரி.. ஐஸ் கிரீம் வாங்கி குடுத்து நடக்க வச்சாங்க..!


ஆனா உண்மைல... வெளில அலைஞ்சு திரிஞ்சு வேலை செய்றவங்களை நினச்சாலே பாவமா இருக்கு... தண்ணி எவ்ளோ குடிச்சாலும் தாகம் தணிய மாட்டேங்குது... அப்படியே... ஏர் கண்டிஷனிங் ஓட விட்டாலும்... ஒரு பிரயோஜனமும் இல்ல...!  24 மணி நேரமும்.... ஜில்ல்லுனு எதாச்சும் குடிக்கணும் போல இருக்கு.  ச...போற போக்கப் பாத்தா பனி காலத்த மிஸ் பண்றேன்னு சொல்ல வச்சிரும் போல இருக்கு...அடிக்கற வெயிலு!

ஹ்ம்ம்.. நீ என்ன வேணா அடி... என் வேலை-ல நான் கரெக்ட்-ஆ இருப்பேனாக்கும்-ன்னு ரொட்டின் வேலைய பார்த்துட்டு இருக்கேன். அதாங்க, இந்த கடைக்கு போய் சுத்துறது, பிரண்ட்ஸ் வீட்ல போயி கும்மி அடிக்கிறது... இந்த மாதிரி முக்கியமான வேலைங்க தான்..! (இதெல்லாம் ஒரு வேலை....ன்னு திட்டுறது கேக்குது... கேக்குது...).

ராத்திரி ஒன்பது மணி வரைக்கும் இருட்டாம பளிச்-னு வெயில் அடிச்சிட்டு இருக்கு.. லஞ்ச் டைம்-ஆ, டின்னெர் டைம்-ஆன்னே தெரிய மாட்டேங்குது. சரி ஏதோ ஒரு டைம்-ன்னு குத்து மதிப்பாத்தேன் திரிய வேண்டியதா இருக்கு....! இங்க தான் ராத்திரி நேரம், நிலவையும் சூரியனையும் ஒண்ணா பாக்கலாம்.. பின்னே... அவுக கிளம்பி போறதுக்குள்ள..... இவுக வந்திர்ராக. என்னத்த சொல்ல...!!!

குளிர் காலத்துல போட்ட வெயிட் எல்லாம் வெயில் காலத்துல நடந்து சரி பண்ணிரலாமுன்னு பாத்தா............அடிக்கிற வெயிலுக்கு ஒரு நாளைக்கு ஒரு பக்கெட் ஐஸ் கிரீம் சாப்பிடணும் போல இருக்கு நிலைமை.... இந்த அழகுல எங்க வெயிட் குறையறது....! ஜூஸ் எல்லாம் ஜூஜூபி.... போங்க..  ஐஸ் கட்டிய அரைச்சு அப்படியே உள்ள தள்ள வேண்டியது தான் போல...!

எப்படி இந்த வெயில் சமாளிக்கன்னே தெரியல...! அம்புட்டு கடுப்பா இருக்கு...! இப்படி புலம்ப வச்சிருச்சே... நா என்ன செய்வேன்...! சரி, என் பிரச்சினை எனக்கு..., வந்தது வந்தீங்க.. இந்த ஜூஸ் ஆச்சும் குடிச்சிட்டு போங்க..!!



...அன்புடன் ஆனந்தி 




படம்: நன்றி கூகிள்

Thursday, July 14, 2011

காத்திருக்கிறேன்...!!!




உனக்காகக் காத்திருக்கும்
ஒவ்வொரு நொடியும்
அவஸ்தையாய் எனைத் தாக்க
இதோ வந்து விடுவாய் என்றே
நான் எதிர்பார்த்தே வழி நோக்க...!

காத்திருக்கும் காலம் மட்டும்
கண்களில் ஏக்கம் பூக்க...
உனைக் கண்டதும் தான்
ஓடி வந்து காதலால்
உனைப் பார்க்க....!

வந்த வேகத்தில் என்னிடம்....
வண்ணமயில் உன் எண்ணமெல்லாம்
எனக்குத் திண்ணமாய்த் தெரிந்தும்
கண்ணளவில் தான் நம்
காதல் சாத்தியம் என்றாய்....!

கதிரவனைக் கண்ட
தாமரையாய் மலர்ந்த
என் வதனம் ஓர் நொடியில்
வாடி வதங்கிய வண்ணமலராய்..!

என் கருத்தினில் பதிந்து விட்ட
என் கண்களில் கரைந்து விட்ட
உன் உருவம் நான் கண்
மூடும் வரை எனை நீங்கிடாதே!


...அன்புடன் ஆனந்தி 

Sunday, June 19, 2011

அப்பாவைப் பற்றி...!


"ஈன்றெடுத்த அன்னை சொல்லி அறிந்த உறவே...
ஈரேழு பிறவிக்கும் எனை ஆளும் அன்பு உருவே...!"

          அப்பா என்று சொன்னதும்... எனக்கு ஆயிரம் ஆயிரம் எண்ணங்கள்..! பொதுவாக சொல்வதுண்டு.. பெண் குழந்தைக்கு அப்பாவையும் , ஆண் குழந்தைக்கு அம்மாவையும் தான் பிடிக்குமாம்...! எது எப்படியோ, என் விசயத்தில் அது முற்றிலும் உண்மை.. எனக்கு என் அம்மா என்றால் எவ்வளவு உயிரோ அதற்கு ஒரு படி மேல் என் அப்பா...!

          என் தந்தை இயல்பிலேயே மிகவும், சாந்தமானவர்.. யாரையும் அதட்டி பேசி நான் பார்த்ததில்லை... வேலை பார்த்த இடத்திலும் அப்படியே.. என் அப்பாவுடன் வேலை செய்தவர்கள் எல்லோருக்குமே என் அப்பாவிடம் அதீத அன்பு கலந்த மரியாதை...!

எதிலும் நிதானம் தவறாது
எச்சரிக்கையுடன் எடுத்துச் 
செய்ய எங்கே பயின்றீர்கள்... 
பொறுமைக்கு இலக்கணம்
பொறுப்புக்கு உதாரணம்....!

          எனக்கு என் அப்பா எப்பவுமே ஒரு ஹீரோ தான்..! எப்பவாச்சும் வீட்ல சின்ன சின்ன சண்டை வந்தாலும்... நா அப்பா சைடு தான்.. சரியோ தப்போ அப்பாவை தான் சப்போர்ட் பண்ணுவேன்.. என் அம்மா, "உங்க அப்பாவுக்கு ஆபீஸ் வேல தான் முக்கியம்..,. பேசாம அங்கயே குடியிருக்க சொல்லுன்னு".. சொல்லுவாங்க.. அவ்ளோ சின்சியர் வொர்க்கர்.. அப்பாவுக்கு முதல் மனைவி என்றால் வேலை தான்..! இதற்கு காரணம், "செய்வன திருந்தச் செய்" என்பது அப்பாவின் கொள்கை...!

ஏற்றுச் செய்த வேலையில்
எவரேனும் தடுத்தாலும் 
ஏதும் குறை வராமல்
எல்லோரும் மதிக்கும் வண்ணம்
எப்படியப்பா உழைத்தீர்கள்...!

          என் அப்பா வேலை செய்தது.. தமிழ் நாடு சிவில் சப்ளைஸ் கார்பரேஷன்.  அசிஸ்டன்ட் மேனேஜர் பதவி.. இதில் முக்கியமாக.. ரேஷன் கடைகளில் சூபர்வைஸ் பண்ற நேரங்களும் உண்டு.. அங்கே வேலை செய்பவர்கள் , தன்னோட கஷ்டத்துல எப்பவாச்சும், சீனி, பாமாயில்...... இந்த மாதிரி ஏதாச்சும் ஒரு பொருளை திருட்டுத்தனமா கொண்டு போயிருவாங்க.. அப்போ, அப்பா தான் அதற்கு மெமோ எழுதி அனுப்பணும்.. அப்போ சொல்வாங்க, பாவம் கஷ்ட படுற பசங்க... ஏதோ எடுக்குறாங்க.. எனக்கு புரியுதுன்னு சொல்வாங்க. அப்பா, இது வரை ஒருவரிடமும் கை ஏந்தியது கிடையாது... எனக்கு அந்த விசயத்தில் என் அப்பாவை நினைத்து ரொம்பவே பெருமை.. ஆபீஸ்-ல சொல்லக் கேட்டிருக்கிறேன்.. தங்கமான ஆபிசர், கை சுத்தமானவர்ன்னு..!

          எங்க அம்மா கூட சில சிமயம் கோவத்துல சொல்வாங்க.. ஊருக்குள்ள ரேஷன் கடை சூப்பர்வைஸ் பண்ணப் போறேங்கன்னு தெரிஞ்சாலே.. உங்களுக்கு என்னங்க... சார் சீனி, பாமாயில்... எது வேணா கொண்டு வந்திருவாங்கன்னு...! அவங்களுக்கு என்ன தெரியும்.. உங்கள பத்தின்னு..!
உண்மை, ஒழுக்கம் இதை
உயிராய் மதித்து அன்றோ..
உற்றார் போற்றும் வண்ணம்
உயரிய பதவி கண்டீர்...!
          வெளியில் ஒரு டீ / காபி கூட குடிக்க மாட்டாங்க.. வீட்டில் இருந்து சாப்பாடு கையில் எடுத்துப் போவாங்க. அதற்காக வருடம் ஒருமுறை.. என் கையால் அப்பாவிற்கு வயர் கூடை பின்னிக்கொடுப்பேன். அப்பாவுக்கு அதுல ஒரு சென்டிமன்ட்.. அப்படியே என் ஆச்சி (அப்பாவின் அம்மா) படத்திற்கும் ஒரு மாலை பின்னி போடுவேன். எனக்கு இப்போது நினைத்தாலும் நெஞ்சத்தை நனைக்கும் நிமிடங்கள் அவை..!
என் கை புனைந்த கூடையதில்
உங்கள் பசி போக்கும் உணவிருக்க
என் பாசமதை சேர்த்து வைத்து
பத்திரமாய் சுமந்ததென்ன...!
          அப்புறம் இன்னொரு விஷயம் என் அப்பாவிடம் நான் கற்றுக்கொண்டது.. என்ன செலவு செய்தாலும் அதை ஒரு நோட்டில் குறித்து வைப்பாங்க.. மாதம் பிறந்ததும்... சம்பள பணம் கொண்டு சுவாமியிடம் வைத்து, வணங்கி விட்டு, அதை அம்மா கையில் கொடுத்து பிறகு, வீட்டுச் செலவு அத்தனையும் மஞ்சளில் ஆரம்பித்து, எங்க ரெண்டு பேர் (என் தம்பியும், நானும்) டியூஷன் பீஸ், பால், பேப்பர், காய்கறி..... அத்தனையும் அழகா பிரிச்சி எழுதி வைப்பாங்க.

          இன்று வரை என் கண்ணுக்குள்ளயே இருக்கு, அந்த முத்தான எழுத்துக்கள்.  இன்னொரு நல்ல குணம், எதற்கும் ஆவேசப்படாம பொறுமையா இருப்பாங்க.  யார் மனசும் நோகும் படி பேச மாட்டாங்க. என் அம்மா, அப்பாவைப் போல் பெற்றவங்க கிடைக்க நாங்க உண்மையில் குடுத்து வைத்திருக்கனும்..! 

          மிடில் கிளாஸ் குடும்பம் தான் என்றாலும்.. எங்களின் நியாயமான ஆசைகளை ஒரு நாளும் நிறைவேற்றத் தவறியதில்லை.. என் பெற்றோர்...! படிப்பு, உடை, உணவு... எதுவாய் இருந்தாலும்.. அவர்களால் முடிந்த அளவு செய்து, எங்களை எந்த குறையும் இல்லாம வளர்த்தாங்க. 

          சின்ன வயசுல நான் இப்படி இருக்கணும்னு நினைத்தேன், அப்படி படிக்கணும்னு நினைத்தேன்.... ஆனா நடக்கல... அப்படி சில பேர் சொல்லி கேட்டிருக்கிறேன்.. அப்படி எல்லாம் எந்த குறையும் சொல்ல முடியாத படி, எங்களை நல்ல விதமாக வளர்த்து ஆளாக்கிய என் பெற்றோருக்கு இந்த பதிவு சமர்ப்பணம்...!

அப்பா உங்கள் அன்பின் நினைவில்
உங்கள் ஆசியின் அணைப்பில்......!

.....அன்பு மகள் ஆனந்தி

About Me

My photo
I am a jovial.. sensitive.. happy person who likes to be around good friends ;)