தாய்மாமன்
எலே முருகா.. அந்த வெத்தலச் சாக்குல இம்புட்டு தண்ணிய தெளி.. காய்ஞ்ச்சிட்டு கிடக்குல்ல. எதோ மூட்டையைக் இறுக்கிக் கட்டிக் கொண்டிருந்த முருகன் இந்தா வாரேந்த்தான் என்ற படியே மூட்டையை கட்டி நகர்த்திவிட்டு வாசல்புறம் இருந்த வாளித் தண்ணீரை வெத்திலை சாக்கின் மீது தெளித்துக் கொண்டிருந்தான்.
பின்னால் இருந்து அவன் தலையில் யாரோ தட்டவும், வேகமாய்த் திரும்பியவனுக்கு அக்கா மகள் தாமரை வீட்டிற்குள் வேகமாய் சென்று மறைவதைப் பார்த்தான். கொழுப்பெடுத்த கழுத இந்தா வாரேன்னு பொய்யாய் கோபம் கொண்டான்.
அவன் அக்கா காந்திமதி எங்கோ வெளியில் போய்விட்டு வந்து கொண்டிருந்தாள். என்னக்கா போன வேலை முடிஞ்சதான்னு முருகன் கேட்கவும், அதெல்லாம் ஆச்சு.. இந்த வெயிலு இறங்கி வீடு வந்து சேரத் தான் இம்புட்டு நேரம் ஆயிப்போச்சு. ஏன்யா மதியம் ஒழுங்கா சாப்ட்டியா.. இருய்யா செத்த நேரத்துல உனக்கு சாப்பாடு ரெடி பண்ணிர்றேன்.. இங்க ஒருத்தன் மரம் மாதிரி நிக்கேன் உன் தொம்பிய மட்டும் விசாரிச்சிட்டு கிடக்கன்னு கோபாலு உருமவும்... எக்கா நீ முதல்ல போயி ஒரு காப்பி கீப்பி போட்டு குடி. மணி 6 தானே ஆவுது பய்ய செய்யு போன்னு அக்காவை உள்ளே அனுப்பி வைத்தான் முருகன்.
முருகனுக்கு 15 வயதிலேயே இங்கே அவன் அக்கா, அத்தானோடு வந்து விட்டான். அவன் அக்காவிற்கு முருகன் என்றும் மூத்த பிள்ளைக்குச் சமம்.
கோபாலு கல்லாப்பெட்டியில் உள்ள பணத்தை சரிபார்த்த படியே எலே முருகா நாளைக்கு அம்பைல ஒரு சோலி இருக்கு வெள்ளனே கிளம்பி போவணும். இந்த பய துரைய காலைல வண்டி கொண்டாரச் சொல்லிரு என்றான். சரிங்கத்தான் என்ற படியே காலி சோடா பாட்டில்களை எல்லாம் எடுத்து அடுக்கிக் கொண்டிருந்தான் முருகன். அப்புறம் திருச்செந்தூர்ல இருந்து நாளைக்கு மாரப்பன் லோட் அனுப்புவான். சாமான சரியா இருக்கான்னு மட்டும் பாரு.. ரூவா விசயம் நான் பேசிக்கிறேன் என்றான். அதற்கும் சரிங்கத்தான் என்றபடி தன் வேலையிலேயே குறியாய் இருந்தான் முருகன்.
கொஞ்ச நேரத்தில் அக்கா காந்திமதி எய்யா முருகா வந்து இந்த தோசைய சாப்ட்டு போய்யான்னு குரல் கொடுக்கவும் கோபாலு முருகனிடம் எலே நீ போயி முதல்ல சாப்ட்டு வா.. நான் இந்த மிச்ச கணக்கையும் பாத்துட்டு ஒரேடியா வரேன்னு சொல்லவும், சரியென்று வீட்டிற்குள் போனான். இப்படித் தான் இவர்களின் அன்றாடம்.
மறு நாள் விடியக்காலைல துரை வண்டியோடு வந்து வாசலில் நிற்க கோபால், சாமி கும்பிட்டு விபூதியை வைத்தவாறே வெளியில் வந்தான். முருகன் வாசலில் நின்றிருந்தான். எலே நீ எதுக்கு இப்போ எந்திரிச்ச, செத்த நேரம் தூங்கினா என்னன்னு கேட்டுக்கொண்டே கடைய பாத்துக்கன்னு சொல்லிட்டு, காந்திமதியிடம் கையாட்டி விட்டு கிளம்பி விட்டான்.
முருகன் எப்போதும் போல் கடையில் மும்முரமாய் வேலை செய்து கொண்டிருந்தான். மதியம் 1 மணி வாக்கில் திருச்செந்தூரில் இருந்து லோட் வரவும் எல்லாத்தையும் சரி பார்த்து வாங்கி வைத்துவிட்டு சாப்பிட்டு விட்டு வந்து கடையில் மீண்டும் ஐக்கியமானான். மாலை 5;30 மணி அளவில் தாமரை தலையைக் குனிந்தவாறே வீட்டிற்குள் போனதைப் பார்த்தான். எலே தாமர என்னல நீ பாட்டுக்கு தலைய கவுந்துட்டு போறவ, பரீச்சைல எதுவும் பெயிலாய்ட்டியான்னு உரக்க சிரித்தான். அதையும் காதில் வாங்காதவள் போல் உள்ளே போய்விட்டாள்.
இரவு கடையை அடைத்து விட்டு இவன் வருவதற்குள் தாமரை உறங்கி இருந்தாள். என்னக்கா நம்ம தாமர சாயங்காலம் தலைய தொங்க போட்டுக்கிட்டே வந்தா என்னவாம்ன்னு கேட்டான்.. எனக்கு தெரியலய்யான்னு காந்திமதி சொல்லவும்.. சரி காலையில் பேசிக் கொள்ளலாம் என முருகனும் சாப்பிட்டு விட்டு படுத்து விட்டான்.
மறு நாள் சனிக்கிழமை. காலையில் 8 மணிக்கு எப்போதும் எழும் தாமரை அன்று 9 மணி ஆகியும் எந்திரிக்கவில்லை. காலை டிபன் சாப்பிட்டுக் கொண்டிருந்தவன் எக்கா தாமரைய எழுப்பு மணி ஆச்சு பிள்ள வெறும் வயித்துல தூங்கிட்டு கிடக்கான்னு சொன்னான். நீ முதல்ல சாப்பிடுய்யா இந்தா எழுப்பிட்டு வரேன்னு உள்ளே போய் எழுப்பினாள்.
மெதுவாய் எழுந்து சோம்பலாய் காலை வேலைகளை முடித்து விட்டு வேண்டா வெறுப்பாய் சாப்பிட்டவளை தள்ளி இருந்து பார்த்துக்கொண்டு இருந்த முருகன், அவள் சாப்பிட்டு விட்டு கொல்லைப் பக்கம் போவதைப் பார்த்துவிட்டு பின்னால் போனான். கொல்லையில் நின்றிருந்த வாழை மரத்தின் அருகே நின்றவாறே எதையோ யோசித்துக் கொண்டு இருந்தவளை எலே தாமர என்னல இப்படி இருக்க, பரீச்சைல எதுவும் பெயில் ஆய்ட்டியான்னு கேட்டான். அதெல்லாம் இல்ல மாமான்னு சொல்லிவிட்டு உள்ளே போக இருந்தவளை கையைப் பிடித்து நிறுத்தி எலே அம்மா இங்க பாரு மாமாட்ட சொல்ல என்னல யோசனை? எதோ சரியில்ல.. நீ என்னிய பாத்து சொல்லும்மான்னு கேட்கவும் மாமனை நிமிர்ந்து பார்த்தவள் கண்களில் கண்ணீர்.
முருகன் பதறிப் போய் எல என்னம்மா என்னாச்சிம்மான்னு பதட்டமா கேக்கவும், மாமா எங்க ஸ்கூல்ல போன மாசம் டூர் கூட்டுப் போனாங்கள்ல அங்க தண்ணில நாங்க நாலு பொண்ணுங்க குளிச்சத கூட படிக்கிற வேணு வீடியோ எடுத்து வச்சிட்டு அவன் சொல்றபடி கேக்கலேன்னா நெட்ல போட்டுருவேன்னு மிரட்டுறான் மாமா.. எனக்கு ரொம்ப பயமா இருக்கு மாமான்னு அழுதாள்.
கோபத்தில் முகம் கருத்த முருகன் சரி விடு நான் உங்கூட ஸ்கூலுக்கு வரேன். அவன் யாருன்னு காட்டு பேசிப் பாப்போம்ன்னு சொன்னான். இல்ல மாமா இந்த விசயத்த யார்ட்டயாச்சும் சொன்னா ஸ்கூல்ல இருக்க அத்தனை பேருக்கும் வீடியோ அனுப்பி நாறடிச்சிருவேன்னு சொன்னான் மாமான்னு அழுதாள். சரி விடு நீ தள்ளி இருந்து யாருன்னு மட்டும் காமி வெளியாளை வச்சு காதும் காதும் வச்ச மாதிரி பேசி பாப்போம்ன்னு சொன்னான். அரை மனதாய் தலையாட்டி உள்ளே சென்றாள்.
திங்களன்று தாமரையோடு ஸ்கூல் வரை போனவன் அவளிடம் அந்தப் பையன் க்ளாஸ் விபரம் கேட்டு விட்டு அவளை உள்ளே போகச் சொன்னான். பள்ளி மதிய உணவு இடைவேளை வரை காத்திருந்து அந்த வேணு வெளியே வருவதைப் பார்த்துவிட்டு பின்னால் போனான் முருகன். வேணு ரோட்டைக் கடந்து எதிரில் உள்ள பெட்டிக்கடையில் பீடி வாங்கிக் குடிப்பதை தள்ளி இருந்து பார்த்தான்.
சாயங்காலம் அவன் பள்ளி முடிந்து வெளியே வரும் வரை காத்திருந்து அவனைப் பின் தொடர்ந்தான். ஆள் நடமாட்டம் இல்லாத இடம் வந்ததும் அவனிடம் இந்தாப்பா தம்பி கொஞ்சம் நில்லு என்றான். அவன் திமிராய்த் திரும்பி என்ன? என்று கேட்டான். ஏன்ம்பா பள்ளிக்கூடத்துக்கு வந்தமா படிச்சமான்னு இல்லாம எதுக்கு இந்த வேலைன்னு கேட்கவும், சுதாரித்துக் கொண்டான் வேணு..எதோ ஒரு பொண்ணோட சொந்தக்காரனா இருப்பான்னு நினச்சிட்டு, எங்கப்பா யாருன்னு தெரியுமான்னு கேட்டான். நீயே சொல்லு தெரிஞ்சுக்கறேன்னு முருகன் சொல்லவும்.. பஞ்சாயத்து போர்ட் தலைவர் வேலய்யாவோட மகன் நானு. என்கிட்ட வச்சுக்காதன்னு ஒருமைல பேசினான்.
கோபம் உச்சிக்கு ஏறிய முருகன் வேணுவின் சட்டையை எட்டிப் பிடித்து எலே மரியாதையா அந்த பொண்ணுங்கள படம் புடிச்ச வீடியோவை என்கிட்ட தந்திரு இல்லேன்னா உன்ன உயிரோட விட மாட்டேன்னு சட்டைக் காலரை இறுக்கி அவனை அப்படியே தரையில் இருந்து தூக்கி விட்டான். காலர் கழுத்தில் அழுத்தவும் வேணு பயத்தில் கையைத் தட்டிவிட முயல முருகனின் பிடி இறுகவும் வேணு காலை உதற சொல்லுடா எங்க அந்த வீடியோ என்று கத்தவும் அவன் கண்ஜாடையில் எதோ சொல்ல வருவது புரிந்து கீழே இறக்கினான். வீட்ல இருக்கு அந்த செல்போனு நாளைக்கு எடுத்து வரேன்னு சொன்னவனை இந்த வெங்காயம் எல்லாம் என்கிட்ட வேணாம் நான் உன் கூடயே வரேன் எடுத்து தான்னு சொல்லி அவன் கூடவே சென்றான்.
வீடு வரை போனவன் பின் வாசல் வழியா என்னையும் உள்ள கூட்டிப்போ என்றான். வேறு வழி இல்லாமல் முருகனை உள்ளே கூட்டி வந்த வேணு ஒரு பீரோவில் செல் போன் இருப்பதாய்ச் சொல்லி அங்கே சென்று பீரோவை திறந்தான். செல்போன் ஒன்றை கையில் எடுத்து என்னையா மிரட்டுற இப்பவே நெட்ல போட்டு நாறடிக்கிறேன் அவளுகளன்னு சொல்லி போனை நோண்டியவனை ஒரே எட்டில் தாவிப் பிடித்து போனை பிடுங்கும் முயற்சியில் இருவரும் மல்லுக்கட்டி போனை வேணுவின் கையில் இருந்து வேகமாய் முருகன் பிடுங்கவும் அந்த வேகத்தில் பிடித்த அவன் கையை விடவும் பின்னால் சரிந்த வேணு சுவரில் பலமாய் மோத கீழே சரிந்தான்.
சத்தம் கேட்டு உள்ளே வந்த வேணுவின் அம்மா அலற, பதட்டத்தில் அந்த இடத்தை விட்டு ஓட முயன்ற முருகனை அந்த வீட்டின் வேலையாட்கள் துரத்த ஓடிக் கொண்டிருந்த முருகன் விபரீதம் புரிந்தவனாய் எப்படியும் இவர்கள் கையில் சிக்கி விடுவோம் என்று நினைத்து கையில் இருந்த செல்போனை மட்டும் எப்படியாவது அழித்துவிட வேண்டும் என்ற வெறியில் தலை தெறிக்க ஓடினான். வழியே வந்த கிணறு ஒன்றில் போனை வீசியவன் அதற்கு மேல் ஓடத் தெம்பின்றி அவர்கள் கையில் சிக்கினான்.
அவனைப் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். உண்மையைச் சொன்னால் அக்காவின் குடும்ப மானம் போய்விடும் என்பதால் தான் திருடப் போன இடத்தில் அந்தப் பையன் தடுக்க வரவே தள்ளி விட்டதாய் சொன்னவன் வேறு எதுவும் பேசாமல் அமர்ந்து விட்டான். விசயம் அறிந்து ஓடி வந்த காந்திமதியும் கோபாலும் இதை நம்ப மறுத்து அவனிடம் மீண்டும் மீண்டும் கேட்க அவன் ஊமையானான்.
மறு நாள் வேணு வீட்டில் நடந்ததையும் மாமன் ஜெயிலுக்குப் போனதையும் பொருத்திப் பார்த்த தாமரை யாரும் அறியாமல் கண்ணீர் வடித்தாள் தன் தாய் மாமனுக்காய்..!!!
~ஆனந்தி
ஆகஸ்ட் 11, 2020