வெறித்த வானத்தில் வெள்ளை மேகங்கள் அங்கங்கே விளையாடிய வண்ணம் கண்டேன்.... ஹலோ.. அதெல்லாம் இருக்கட்டும்மா.. முதல்ல வசந்தகாலம் வருமா.. வராதா... அத முதல்ல சொல்லு.. ஆஹா.. ஒரு கவிதை சொல்ல விட மாட்டீங்களே... என்ன தான் பிரச்சினை உங்களுக்குன்னு கேட்டா... ஒரு குயர் நோட் புக் முழுக்க எழுதுற அளவு புகார்.. என்ன கொடுமைங்க இது.. பனிக்காலம் வந்துச்சு.. இருந்துச்சு... இருக்குது.. இன்னும் இருக்கும் போல இருக்கே... எப்போ தான் தரைய பாக்குறது நாமன்னு கேக்குற அளவுல ஆகிபோச்சு நிலைமை..!
பனி விழும் மலர் வனம்..ன்னு பாட வேணும்னா நல்லா இருக்குங்க.. பனியிலேயே வசிக்கிறவங்களுக்கு தான் அதன் கஷ்டம் புரியும்.. போன வருஷம்.. எங்கே பனி.. எங்கே பனின்னு கேட்டது போக.. எப்படா பனிக்காலம் முடியும்ன்னு கேக்குற அளவு ஆகி போச்சு இந்த வருஷம்.. போன வருஷம் வாங்கி போட்ட உப்பெல்லாம் அப்படியே கிடக்கு.. பனி சுத்தம் செய்ற பணியாளர் ஒருத்தருக்கும் வேலைக்கு வழி இல்லை.. அரசாங்கத்துக்கு இதனால பல நஷ்டம்னு ஒரே புலம்பல்.. இந்த வருஷம்.. அப்படியா விஷயம்.. வா மகனேன்னு... அடிச்சு தள்ளிருச்சு பனி..!
மார்ச் 20ஆம் தேதியோட பனிக்காலம் முடிஞ்சு.. வசந்த காலம் தொடங்கும் நேரம்.. ஆனா பனி போன பாடில்லை... இந்த வாரம் தான் ஏதோ கொஞ்சமாச்சும் வெயில் கண்ணில படுற மாதிரி சூரிய பகவான் கருணை காட்டுறார்... அடிச்ச பனில... குவிஞ்ச பனியை எல்லாம் அங்கங்கே குமிச்சி போட்டு வச்சி இருக்குறத பார்த்தா.. தரையை கண்ணுல பார்ப்போமான்னு கவலையே வந்திருச்சு..
ஆனாலும் சும்மா சொல்லக் கூடாது... எவ்ளோ அடிச்சாலும் தாங்குறாங்கடான்னு பனியே பாவம் பார்த்து போயிருச்சு போல.. ஒரு வழியா இந்த ரெண்டு நாளா தான் வெளிய தரையே கண்ணுக்கு தெரிய ஆரம்பிச்சிருக்கு.. அதுக்குள்ள இங்குட்டும் அங்குட்டும் ஆளுங்க ஒரே வாக்கிங், ஜாகிங், பைக்கிங்..ன்னு பின்றாங்க போங்க.. பின்ன எவ்ளோ நாள் தான் நாமும் வலிக்காத மாதிரியே நடிக்கிறது சொல்லுங்க..
பனிக்காலம் முழுக்க ரெண்டு அடுக்கு டிரஸ் போட்டு அதுக்கு மேல ஒரு கவசம் மாதிரி விண்டர் கோட் போட்டு.. கைக்கு, காலுக்கு, காதுக்குன்னு எல்லாம் கவர் பண்ணி ஏதோ நின்ஜாஸ் மாதிரி தான் வெளில போகணும்.. அப்படியும் குளிர் அட்டாக் பண்ணி அப்பப்போ உடம்புக்கு எதாச்சும் வந்திரும்.. அதிலும் ஸ்கூல் போயிட்டு வரும் குழந்தைகள்ல ஒரு பிள்ளைக்கு எதாச்சும் உடம்புக்கு வந்தா... இன்னொன்னு ஃப்ரீ... தன்னால வந்திரும்.. அந்த கொடுமையெல்லாம் அனுபவிச்சவங்களுக்கு நல்லா புரியும்.. அதிலும் வேலைக்கு செல்லும் பெற்றோர்கள் நிலை ரொம்பவே கஷ்டம்..!
ஒரு இடத்துக்கு கிளம்ப கார் எடுத்துட்டு போயிட்டு திரும்ப முழுசா வீடு வந்து சேரும் வரை மனசுல ஒரு பயம் இருந்துட்டே இருக்கும்.. பனில வண்டி ஓட்டிட்டு போறதும்.. சர்கஸ் கம்பில நடக்குற மாதிரி தான்.. ஆனாலும், இங்கே எல்லாம் அடிப்படை வசதிகளுக்கு கூட காரில் போகாமல் வேலை ஆகாது.. அதுவும் பனி காலங்களில் நடந்து போறது பத்தியெல்லாம் யோசிக்கவே முடியாது.. பார்க்க தரை போல இருக்கும்.. ஆனா அதில் பனி கண்ணுக்கு தெரியாமல் உறைந்து கிடக்கும்.. கால் வைத்தால் வழுக்கி விழ வேண்டியது தான்..!
இது எல்லாத்தையும் விட ஒரு ஆச்சர்யப்பட வைக்கும் விஷயம் என்னன்னு கேட்டா.. இவ்ளோ பனி மூடி இருந்தும்.. பனி உருகின சில நாளுக்குள்ள சின்ன சின்ன அரும்பு மாதிரி பூச்செடிகள் எல்லாம் தரைக்குள்ள இருந்து மெல்ல எட்டிப்பாக்குது... பார்க்கவே அழகா இருக்கு.. இயற்கையின் அழகே அழகு.. யாரையும் எதிர்பார்த்து தன் வேலையை செய்றதில்லை.. கால மாற்றத்திற்கு தக்க தன் வேலையை தானே சரியாய் செய்து கொண்டிருக்கிறது..
(படம்: கூகிள், நன்றி)
வருமா... வராதான்னு... ஏங்க வச்ச வசந்த காலம் ஒரு வழியா வந்திருச்சு.. இனி பூக்கப் போகும் ஒவ்வொரு வண்ண வண்ண மலர்களையும்.. பச்சைப்புல் தரையையும் பார்த்து ரசிக்கலாம்..!
...அன்புடன் ஆனந்தி