அம்மா என்ற சொல்லே... அன்பை குறிப்பது. அம்மா என்று சொல்லும் போதே அதன் உள்ளார்ந்த அன்பையும் சேர்த்தே அனுபவித்துச் சொல்கிறோம். எல்லாருக்கும் தான் அம்மா இருக்காங்க... இதிலென்ன பெரிய வித்தியாசம் இருக்குன்னு தோணும்... ஒவ்வொரு பெண்ணும்.. தான் தாய்மை அடையும் பருவத்தை தான்... புது ஜென்மமாக உருவகித்து வாழ்ந்துட்டு இருக்காங்க. வயிற்றில் கரு உருவான நொடி தொட்டு.. தான் உண்ணும் உணவில் இருந்து.. படுக்கும் விதம் வரை பார்த்து பார்த்து எல்லாம் செய்து பத்திரமாய் பிள்ளை பெற்று எடுக்கிறாள். பெற்ற போது கண்டாளா அப்பிள்ளை கடைசி காலத்தில் கஞ்சி ஊற்றுமா.... இல்லை கசப்பாய் பேசி விடுமான்னு...!
எல்லாரும் நல்ல பிள்ளையைத் தான் பெற்று எடுக்கிறாங்க. நல்ல மாதிரி தான் வளர்க்கிறாங்க. நல்ல படிக்க வச்சு... வேலையிலும் இருத்தி வைக்கிறாங்க. ஆனா எத்தனை பிள்ளை.. கடைசி காலம் வரை தன் தாயை தாங்கி நிக்குதுங்க? பிறக்கும் போதே.... ஆண் என்றால் அவன் ஆளப் பிறந்தவன் என்றும்.. பெண் என்றால் இன்னொரு வீட்டில் வாழப் பிறந்தவள் என்ற எண்ணமே மேலோங்கி இருக்கு.. அது பாதி-ன்னா.. என் புள்ள... என் வாரிசு.... எனக்கு கொள்ளி போட வந்தவன்னு ஒரேயடியா பாராட்டு... சீராட்டு...!
இத்தன பாராட்டுக்கும் அந்த புள்ள தகுதியா இருந்தா சரி தான்.. மறு பேச்சுக்கு இடமே இல்லை...! பெரும்பாலும் தன் தாயை நல்ல மாதிரி தன்னோடு வைத்து கடைசி வரை காக்க வேண்டும் என்றே பிள்ளைகள் எண்ணுவதுண்டு... அப்போ... எங்க பிரச்சினை வருது? எதனால முதியோர் இல்லம் இருக்கு? ஒரு ஆண் பிள்ளை திருமணம் ஆனதும் தான் மாறி விடுகிறான்.. அவன் மனைவி வந்து.. தான் இவனை மாற்றி விடுகிறாள் என்றெல்லாம் சொல்வது.... முற்றிலும் உண்மை இல்லை.
ஒரு மனைவியோ... தாயோ தன்னிடம் குறை கூறும் பட்சத்தில்.. இருவரிடமும்.. அவர்கள் உணர்ச்சிகளுக்கு மதிப்பு கொடுத்து கேட்டு விட்டு.. அதை அப்படியே... விட்டு விடுவது... கேட்டவருக்கும் நல்லது.. குறை சொன்னவர்களுக்கும் நல்லது.... அதை விடுத்து... ஏண்டி இப்படி செஞ்ச?? என் பொண்டாட்டிய ஏம்மா இப்படி சொன்னிங்க.ன்னு.. வரிஞ்சு கட்டிட்டு போய் கேட்டால்... அங்க தான்... செவன் தர்ட்டி.... சம்மணம் போட்டு உக்கார ஆரம்பிக்கும்...!
இல்ல தெரியாமத் தான் கேக்குறேன்... ஒருத்தர் நம்ம கிட்ட வந்து புலம்பும் போது.. சரி விடும்மா... சரி ஆயிரும்... பாத்துக்கலாம்.. ன்னு சொல்லிட்டு.. இருவருக்கும் பொதுவாக நடந்தால் என்ன குறை வந்து விட போகிறது...? இதை விட்டு போட்டு.. அம்மா பேச்சை கேட்டு பொண்டாட்டிய இழுத்து போட்டு அடிக்கிறதும்.... பொண்டாட்டி பேச்சை கேட்டு அம்மா கிட்ட வந்து காட்டுக் கத்து கத்துறதும்.... ஹ்ம்ம் ஹும்.. எந்த நன்மையையும் செய்யப் போறதில்லை..!
அம்மாவோ, மனைவியோ பெரும்பாலும் என்ன எதிர்பார்க்கிறாங்க? தன்னிடம் பிரியமாய் இருக்கணும்... தனக்கு வேண்டியது புரிஞ்சு செய்யனும் ன்னு...! ஆண்களுக்கு 1008 அலுவல்... அன்றாடம் எதிர்கொள்ளும் பல பல பிரச்சினைகள்.. இவை எல்லாம் இருக்கு... வீட்டில் இருக்கும் பெண்கள்.. இதையும் மனதில் கொண்டு... அனுசரணையாக நடந்தால் எவ்ளோ நல்லா தான்...... இருக்கும்...!
அளவுக்கு அதிகமா பாசம் வைக்கிறதே தப்பு தான்னு சொல்வேன்.. ஓவர்-ஆ பாசத்தை கொட்டி வளர்த்துட்டு.. அப்புறம்... உன்ன அப்படி வளத்தேன்..... இப்படி வளத்தேனே...ன்னு புலம்பறதுக்கு... அளவோட அன்பை காட்டி... அதிக எதிர்பார்ப்பு எல்லாம் மனசில வச்சிக்காம இருந்தாலே.. பாதி பிரச்சினை சால்வ் ஆயிரும்...! கூட்டுக் குடும்பம் எல்லாம் இப்பெல்லாம் கணிசமா குறைஞ்சி போச்சு... இப்பெல்லாம்.. பிள்ளைக்கு கல்யாணம் ஆய்ட்டாலே... ஐய்யா நான் பெத்த ராசா.... நீ தனிக்குடித்தனம் பண்ணுப்பா... அது உனக்கும் நல்லது.. எனக்கும் நல்லதுன்னு... சில பெற்றோர்.. ஆரம்பத்துலேயே.. தெளிவா முடிவு பண்ணிடறாங்க.
எனக்கு ஒரு விஷயம் ஞாபகம் வருது.. சம்சாரம் அது மின்சாரம் படத்துல.. லக்ஷ்மி ஒரு வரி சொல்வாங்க.. "தள்ளி தள்ளி இருந்துக்கலாம்.. நீ நல்லா இருக்கியா...? நான் நல்லா இருக்கேன்..ன்னு கேட்டுக்கலாம்."ன்னு. என்னைக் கேட்டா இதுவே ஒரு வகையில நல்லது...! அனாவசியமான மனஸ்தாபங்களை தவிர்க்கலாம். அமிர்தமே ஆனாலும் அளவுக்கு மீறினா அது நஞ்சு தான்... அப்படி தான்... அன்பும்... அளவோட.. அவங்கவங்க வேலைய பாத்துட்டு போறது...... எல்லாருக்கும் சேமம்..!
என்னவோ எழுத ஆரம்பிச்சு... ஏதேதோ புலம்பிட்டு இருக்கேன்..! ஹ்ம்ம்... சொல்ல வந்தது ஒண்ணே ஒண்ணு தான்...
கை பிடித்து கதை சொல்லி
கருத்தாய் வளர்த்தவளை
கண்ணீரில் ஆழ்த்தி விடாமல்...
தூக்கி வளர்த்த உயிரை...
தூரம் நிறுத்தி
துயரில் ஆழ்த்தி விடாமல்...
பார்த்து பார்த்து வளர்த்த தாயை
பரிதவிக்கச் செய்து விடாமல்...
நாம் குடி இருக்க
மடி தந்த அன்னையை
அன்பாய் காத்து...
பாசத்தோடு பார்த்துக் கொண்டாலே..
பாதி ஜென்மம் பூர்த்தியாய் விடும்...!
நீங்கள்... இதையெல்லாம் ஏற்கனவே செய்து.. தாயை அன்பாய் பார்த்துக் கொள்பவரா.. உங்களுக்கு தலை வணங்குகிறேன்..!
...அன்புடன் ஆனந்தி
(படம்: கூகிள், நன்றி)