சமீபத்தில் நான் படித்த Warrior (தேவா) அவர்களின் வேட்டை...என்னும் பதிவு.. என்னை விசித்திரமாய் தாக்கியது....! அவரின் அனுமதியோடு அவர் படைப்பை என் வரிகளில்..... எழுதி பார்க்கிறேன்...!
அவரின் பதிவு...
எனது வரிகளில்....
உச்சியின் உக்கிரத்தில்
உயிர் மேல் பயமின்றி
புரவிகளின் குளம்படிச்சத்தம்
எந்தன் குருதியைச் சூடேற்ற..
எதிர்வரும் முரட்டு வீரனின்
நெஞ்சில் என் வாள் ஏற்றி..
எதிர்புறம் அதை கிழித்தெடுக்க
இடப்புறம் வந்த கள்ள எதிரியின்
கரம் கொய்து என் சிரம் நிமிர்த்தி...
எம் படையின் தலைமை வீரனுக்கு
தலைகளை கொய்ய ஆணையிட்டு
அடங்கா வெறியுடன் ஆடிய
அம்மிருகங்களை அடக்கும் ஈட்டியுடன்..!
மன்னிப்பிற்கு இடமில்லை
மரணம் ஒன்றே எமது பதில்
சத்தியத்தை சாகடித்த
சாக்கடை மனிதர்களுக்கு
சவுக்கடி கொடுக்க களமிறங்கினோம்..
காமுகன் உன்னை
காலனிடம் வழியனுப்ப..
உந்தன் கருவறுத்து
அவ்வேற்றை நெருப்புக்கிறைத்து
அச்சாம்பலை நீரில் கரைத்து
அதனாலே எம் தேசம் கழுவி..
உன் கால் பட்ட கறை நீக்குவோம்..!
எங்கிருந்தோ வந்த
எதிராளியின் அம்பு
எம் புஜத்தில் ஏறி இறங்கி
பதம் பார்த்தே பாதி வழியில்
நின்றே போனதடா....
வெட்கம்...வெட்கம்....
எம் புஜம் கிழிக்க
இயலா போர்வாள்
ஏந்தி.. போர்க்களம்
வந்தாயடா மூடா..!
புஜத்தில் வழிந்த எம் ரத்தம்
ஏற்படுத்திய பதற்றம்
எம் நாட்டு வீரனின் விழிகளில்..
கலங்காதே வீரா....
இத்துரோகிகளை அளிக்காது
எம் உயிர் எமை நீங்கா...!!
அப்படியே நான் அழிந்தாலும்..
உனது லட்சியம் எதிரியை
அழித்து எம் குலம் காப்பதே..!
மேகத்தின் மறைவில் நின்றே
சூரியன் எட்டிப்பார்க்க
விண்ணதிரும் எமது
சிங்கங்களின் கர்ஜனையும்
யானைகளின் பிளிறல்களும்...
எதிரி நாட்டு எத்தனவனை
எக்காளமாய் நோக்க...
எம் புஜம் பாய்ந்த வாள்
பிய்த்தெறிந்து பீரிட்ட
குருதியினை குதிரையின்
சேனையின் கீழ் இழுத்து வந்த
துணி வைத்துக் கட்டியும்...
ஊறி வெளிவந்த ரத்தம்
எனக்கு உயிர் பயம்
அற்றே போகச் செய்ய....
கடிவாளம் சொடுக்கி
களத்தில் உருண்டு கிடந்த
எதிரியின் சடலங்களை
மிதித்தேறி மீந்து நின்ற
பிசாசுகளின் தலைவனை
அடையாளம் கண்டே...
அவனின் இறுதியினை உறுதி செய்ய..
சரேலென்று பாய்ந்தே
அவன் அமர்ந்து வந்த
குதிரையின் கால்களை வெட்ட...
மூடனை ஏற்றி வந்த பாவத்திற்கு
மூச்சின்றி சரிந்தது...
சத்தியத்தை வாளாய்
ஏந்திப் பிடித்திருந்தேன்...
எம் குலத்திற்கு நீ இழைத்த
கொடுமைக்கு.. இதோ இதோ...
அவன் குரல் வளை தாண்டி
கொக்கரித்து வெளியேறியது என் வாள்..!
துடித்த ஜட உடம்பின்
துரோக ரத்தம் எம் தேகம் தொட..
எம் சுவாசம் ஆசுவாசப் பட்டது..!
என் கால்களை அவன்
நெஞ்சில் இருந்து அகற்றி
நிலத்தில் பதித்தேன்....
தலை கவசம் ஒரு கையிலேந்தி..
மறுகையில் எதிரியின்
தலை கொய்த வாள் ஏந்தி...
எம் வீரர்களை நோக்கி
வெற்றி வெற்றி வெற்றி.. என்றே
வீரமுழக்கம் இட்டேன்!!!!!
...அன்புடன் ஆனந்தி