topbella

Monday, September 26, 2011

நவ நவமாய்....!

(போன வருடம் எங்கள் வீட்டு கொலுவில் எடுத்தது)

நிறைந்த அமாவாசையில்
நினை நினைத்து வேண்டியபடி
முதற் கடவுள் கணேசனை
முதலிலே எடுத்து வைத்து...

அருகருகே அம்மனவள்
துணிவை தாங்கி துர்க்கையாய்
விஜயம் செய்யும் லக்ஷ்மியாய்
சாந்தமாய் சரஸ்வதியாய்!

அடுத்தடுத்த படிகளிலே
அருகிருந்தே பார்க்கத்தோன்றும்
அஷ்ட லட்சுமிகள் அம்சமாய் 
அமர்ந்து ஆட்சி செய்ய...

அறுபடை வீடுகளில் 
ஆண்டி முதல் அரச கோலத்தில்
அழகு முருகன் ஆசி தர....

பத்து அவதாரங்களில் 
பரம்பொருள் அங்கே...
பவித்திரமாய் காட்சி தர...

வெண்ணை திருடும் கண்ணன்
விஷமமாய் வீற்றிருக்க 
கோபியர் மயங்கும் கிருஷ்ணன் 
குழலூதி எமை இழுக்க...

சின்ன குழந்தைகள் 
சிரித்தே மகிழ்ந்திட
உற்றார் உறவினர் 
உடன் வந்து கலந்திட...

ஐயிரண்டு நாட்களிலும் 
அமிர்தமாய் பிரசாதம் செய்து
அம்பாள் அவளை எண்ணி
ஆரோகணம் செய்திடுவார்!

(போன வருடம் எங்கள் வீட்டு கொலுவில் எடுத்தது)

...அன்புடன் ஆனந்தி

Monday, September 19, 2011

என்னுயிர் வரமே..!



நரை முடி கலந்த 
நின் சிகை அழகும்
குறை காண முடியா 
குழந்தை மென்சிரிப்பும்
இதயம் ஊடுருவும் 
ஈட்டி போல் பார்வையும்

எண்ணி எண்ணி பேசும்
ஏகாந்த வார்த்தைகளும்
சின்ன சின்ன கோபங்களும்
குளிர் நிலவாய் தாபங்களும்
நின் பாதம் சேர்ந்திடவே..
நிதம் நடக்கும் வேள்வியும்...

சிலந்தி வலை போலே
உன் எண்ணச் சிக்கலில் நான்
சிதறியே போகா வண்ணம்
சில்லென்ற உன் நினைவுகள்...
மாட்டி மீள முடியா உறவே
எனைப்  பிரியா என்னுயிர் வரமே..!

...அன்புடன் ஆனந்தி 

(படம்: நன்றி கூகுள்)

Tuesday, September 13, 2011

நேற்று பேசியவை...!

Thoughtful young woman with pink flower - Nohat

அர்த்த ராத்திரியில்
அவன் நினைவில்...
அருகில் வந்த தூக்கமும்
அப்படியே ஓடி விட...

நேற்று பேசியவை
நிரந்தரமாய் நெஞ்சினில்..
நிமிஷம் கூட விடாமல்
நிறுத்தாமல் பேசினாயே...

நிச்சயம் தெரியும் உனக்கு
நீயின்றி நானில்லை என்றே..
பேசும் வார்த்தைகள்
பேதம் இன்றி வந்து விழ....

காற்றின் அசைவில் என்
கருங்கூந்தல் கண் மறைக்க
பேச்சு மூச்சு இன்றி
பேதை நான் விழிக்க...

என்ன?? புரிந்ததா என்றே
எனை நோக்கி நீ கேட்க...
எல்லாம் புரிந்தது என்றே
என்னிதழ் பதில் சொல்ல..

ஏற இறங்க எனைப் பார்த்து
ஏனிப்படி படுத்துகிறாய் என்றாய்
எப்படி உன்னிடம் சொல்வேன்
என்னுயிர் பறித்தது நீயே என்று..!

...அன்புடன் ஆனந்தி 



(படம்: நன்றி கூகிள்)



Friday, September 9, 2011

எண்ணெய் கத்திரிக்காய் குழம்பு...!


தேவையான பொருட்கள்:

சிறிய கத்தரிக்காய் - 10 (காம்பை மட்டும் நீக்கி விட்டு, நான்காய் கீறி வைக்கவும்)
வெங்காயம் - பெரிது 1
தக்காளி - பெரிது 1
தேங்காய் துருவல் - 3 மே.கரண்டி
புளி சாறு - சிறிது
குழம்பு மசாலா பொடி - 3 ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு

தாளிக்க:

கடுகு - 1/2 ஸ்பூன்
உளுத்தம்பருப்பு - 1/2 ஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது

செய்முறை:

1. முதலில், வெங்காயத்தை பெரிய துண்டுகளாய் நறுக்கி, வாணலியில் சிறிது எண்ணெய் காய வைத்து, அதில் வெங்காயத்தை போட்டு வதக்க வேண்டும். வதக்கிய வெங்காயத்துடன், தக்காளி, தேங்காய் துருவல் சேர்த்து மைய அரைக்க வேண்டும்.

2. ஒரு பாத்திரத்தில், புளி சாறு + அரைத்த விழுது + குழம்பு பொடி + உப்பு  சேர்த்து, தேவையான தண்ணீர் சேர்த்து வைக்கவும்.

3. வாணலியில்.. இரண்டு ஸ்பூன் எண்ணெய் விட்டு, கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை சேர்த்து, அதில்.. நான்காய் கீறிய கத்தரிக்காய்களை சேர்த்து, மிதமான தீயில், மூடி வைத்து வேக வைக்கவும்.

4. காய், ஓரளவு வெந்ததும்.. கரைத்து வைத்துள்ள மசாலாவை ஊற்றி, மிதமான தீயில், 5 -10 நிமிடங்கள்.. கொதிக்க விட்டு, எண்ணெய் தெளிய இறக்கவும்.

சூடான சாதத்தில், இந்த குழம்பை விட்டு சாப்பிடுங்க.. செம டேஸ்டா இருக்கும்! வந்ததே வந்தீங்க...  சாப்பிட்டு போங்க! :)


About Me

My photo
I am a jovial.. sensitive.. happy person who likes to be around good friends ;)