வான் மழையே வா நூலுக்கு எழுத்தாளர் அன்பிற்கினிய ஆளுமை #கவிஞர்_இராஜாமணி ஐயா அவர்களின் விமர்சனம்..
மகிழ்ச்சியின் நெகிழ்வில் நான்...
நன்றி ஐயா
#நெல்லை_அன்புடன்_ஆனந்தி
******
வ.வெ. இராஜாமணி (இலக்கியக் கவி மாமணி)
35D, 26th Main, 4th T Block பெங்களூர்- 560 041
கை பேசி 9940010831
நாள் 27-06-2023
அன்புக்குரிய ஆனந்தி,
“வான் மழையே வா” கவிதை நூல் கிடைக்கப் பெற்றேன். அதில் படைத்துள்ள அத்துனை கவிதைகளையும் படித்து இன்புற்றேன்.
எல்லாக் கவிதைகளும் அருமையாகப் படைக்கப்பட்டிருக்கின்றன. திருக்குறலின் மையக் கருத்துக்களை உள்ளடக்கி எழுதப்பட்டு இருப்பதாலோ என்னவோ திருக்குறளையே படிப்பது போன்ற உணர்வு ஏற்படுவதைத் தவிர்க்க இயலவில்லை. ஒன்றே முக்கால் அடிக் குறலின் கருத்துக்களை அப்படியே உள்ளடக்கி கவிதையாக்கி வழங்கி இருப்பது மிகச் சிறப்பு.
முழுக் கவிதைகளையும் இக்கடிதத்தில் சுட்டிக்காட்டி கருத்துத் தெரிவிப்பது என்பது இயலாது என்பதால் சில கவிதைகளை மட்டும் குறிப்பிட விரும்புகிறேன்.
1. கொட்டும் மழை என்ற தலைப்பில்
“மழையாலே உலகமெல்லாம்
இங்கே வாழுது
அதனாலே மழை இங்கே
அமிழ்தம் ஆகுது
மிகச் சிறப்பான வரிகள். உலகம் வாழ்வதாலேயே மழை அமிழ்தம் ஆகிறது.
ஒரு பொருளின் உபயோகத்தாலேயே அது சிறப்புப் பெறுகிறது என்பதை சுட்டிக்காட்டிய வரிகள்.
2. தானமோ தவமோ என்ற தலைப்பில்
யாராக இருந்தாலும்
மழை இல்லாமல்
நேரான வாழ்க்கையும்
இங்கு இல்லையே
மழை என்பது மனிதருக்கு மிக அவசியம். அது இல்லாமல் புல் பூண்டு கூட உலகில் வாழ முடியாது என்ற கருத்தை வலியுறுத்தும் பாடல் வரிகள் சிறப்பானவை.
3. கண நேரம் தங்காது என்ற தலைப்பில்
எல்லா உயிரிடத்தும்
அன்பாக இருப்பவர்
அவரே அறவோர்
அவரே அந்தணர்
அன்பே கடவுள் என்ற கருத்தினை வலியுறுத்தும் வரிகள் இவை. அன்பு இல்லாதோர் அறவோராகவோ அல்லது அந்தணராகவோ கருத முடியாது என்பதை இந்த வரிகள் விளக்குகின்றன.
4. ஏற்ற துணை என்ற தலைப்பில்
துணையாக வந்தவள்
இணக்கமாக இல்லையெனில்
வேறென்ன சிறப்பிருந்தும்
அவ்வாழ்க்கை வீணேயாம்
மனைவியாக இருப்பவள் இல் வாழ்க்கையில் அனுசரிப்புடன் இருத்தலின் அவசியத்தைப் புரிய வைக்கும் வரிகள்.இரட்டை மாட்டு வண்டியில் ஒரு மாடு சண்டித்தனம் செய்தால் வண்டி எப்படி ஓடும். வாழ்க்கையின் இலக்கணத்தைச் சிறிய வரிகளில் விளக்கி இருப்பது சிறப்பு.
5. அறம் கூறும் நன்மை என்ற தலைப்பில்
பின்னாலே புறம்கூறிப்
பேசுவதைக் காட்டிலும்
கண்ணெதிரில் கடுமையாய்ப்
பேசினாலும் தப்பில்லை
முன்னால் இன்முகம் காட்டிப் பின்னால் வன் முகம் காட்டும் பழக்கத்திற்கு இது ஒரு சாட்டை அடி. மிகச் சிறப்பு.
பொதுவாக இந்த நூல் யாவராலும் படிக்கப்பட வேண்டிய நூல். பாகம் ஒன்றே சிறப்பாக இருக்கிறது. மற்ற பாகங்கள் இதே சிறப்போடு இருக்கும் என்றும் எதிர் பார்க்கலாம்
இலக்கியப்பணிஎன்றும் தொடரட்டும். வாழ்த்துக்கள்
அன்புடன்
வ.வெ. இராஜாமணி


0 comments:
Post a Comment