topbella

Thursday, July 19, 2018

கடைசி வரை...!!!


இதழ்களில் இடம் தேடு
இதயத்தின் தடம் நாடு
விழி வழி மொழி பேசு
மௌனத்தால் காதல் பேசு..
முத்தத்தால் யாகம் செய்
சத்தமின்றி யுத்தம் செய்..

குழந்தையின் மென்மையுடன்
கொஞ்சிப் பேசு..
விழித்தென்றல் மேல் உரச
மெல்ல வீசு..
உருகும் உளம் தாங்கி
உயிரால் உறையச் செய்..

கருவில் ஏந்தும் உயிராய்
கருத்தாய் காபந்து செய்..
மருகி நிற்கும் பொழுதில்
மன்றாடும் வேளையில்
மறுகணம் தயங்காது
மடியோடு சேர்த்துக் கொள்..

கண்களில் கவலை கண்டால்
கையணைத்தே தைரியம் பேசு
காரிருள் வேளையிலும்
கதிரவனின் தன்மை கொண்டு
காதலின் கரம் பிடித்தே
கடைசி வரை முன்னேறு..!!!

~அன்புடன் ஆனந்தி


படம்: நன்றி, கூகுள்


Sunday, June 24, 2018

என் சொத்தே..!!!


அழைத்திடும் அருளே
அடர்ந்த கரும் இருளே
உரைந்திடும் பனியே
உள்ளமர்ந்திடும் இசையே..

வெண்மேகம் சூழ் வானமே
வெகுண்டு எழுந்திடும் வீரமே
கண் கொள்ளா காட்சியே
கண்ணீர் வரவைக்கும் கவியே..

சொல்லில் அடங்கா பேரின்பமே
பெருகி வரும் அருவியே
அள்ளித் தரும் அன்பே
நெருப்பாய் தீண்டும் வம்பே..

கற்பனைக்கு எட்டா கட்டுரையே
கதிகலங்க செய்யும் காதலே
காதல் செய்தே காலம் வெல்லும்
கண் மலரே விண் ஒளியே..

விதைத்த நல் வித்தே
விளைந்த நல் முத்தே
முக்காலமும் எனை ஆளும்
சொந்தமே என் சொத்தே..!

~அன்புடன் ஆனந்தி
(படம்: கூகுள், நன்றி)


Monday, June 18, 2018

எல்லாம் நீயென்று..!!!


இமை தூங்கும் நேரம்
என் இதயத்துள் ஈரம்
மொழி பேசா பாவை
வெண் முகிலாகும் போர்வை..

கரம் தாங்கும் கோலம்
என் கண்ணோரம் ஏங்கும்
திசை அறியா தூரம்
உன் கரம் கோர்த்து நீளும்..

ஏக்கத்தின் எதிரொலி
மெலிதாய் தாக்கும்
மௌனத்தின் எதிரொலி
கண்ணீராய் பூக்கும்..

வாய்மொழி கேட்டிடவே
வாதம் பல செய்யும்
வந்து விட்டாலோ
வாய் மூடிக்கெஞ்சும்..

விதம் விதமாய் யோசித்தே
வீண்வாதம் செய்யும்
விசித்திரமாய் சிந்தித்து
வீணாய் மனம் நோகும்..

இன்பம் இதுவென்றே
இகம் பல கூறினும்
இயம்பும் விழி சொல்லும்
எல்லாம் நீயென்று..!

~அன்புடன் ஆனந்தி ❤️

(படம்: கூகுள், நன்றி)

Sunday, May 20, 2018

தயை செய்..!!!

நிலவில் உறங்கிடும் நேசம் நெஞ்சில் உறைந்திடும் பாசம் கனவில் தோன்றிடும் உருவம் கண்முன்னே மறைந்திட மருகும்.. கரைந்திட்ட கனவுகளில் நிறைந்திட்ட நினைவுகளில் உயிர்த்திட்ட உணர்வுகள் உயிர் தொட்ட வருடல்கள்.. மலரின் மௌனம் காத்து வண்டின் ஆர்வம் பூத்து துடிக்கும் உள்ளம் கிள்ளும் தூரல் பெய்தே வெல்லும்.. மருண்ட விழிப் பார்வையில் இருண்ட மேகப் போர்வையில் அகண்ட பிரபஞ்சம் கொஞ்சம் அன்பு செய் என்றே கெஞ்சும்.. விடியாத இரவின் நீட்சியும் முடியாத பகலின் ஆட்சியும் தயங்காது உன்னிடம் தஞ்சம் தயை செய் என்றே கெஞ்சும்..!!! ~அன்புடன் ஆனந்தி

(படம்: கூகிள், நன்றி)


Thursday, May 17, 2018

புதுக்கவிதை நீ..!!!


வாசல் தொட்டு போகும் வான்மழையும் நீ.. வண்ணமயில் கண்டாடும் வானவில்லும் நீ.. மென்விரல்கள் தீண்டி எழும் மெல்லிசை நீ.. மீட்டெடுத்து நான் கண்ட முத்துச்சரம் நீ.. நேசத்தில் எனை மூழ்கடிக்கும் ஈசனும் நீ.. கோபத்தில் கொந்தளிக்கும் நீசனும் நீ.. வானமழை தொட்ட மண் வாசம் நீ.. கானமழை தீண்டிய பூந்தென்றல் நீ.. கட்டுக்குள் அடங்காத காட்டாற்று வெள்ளம் நீ.. கண் மூடி நான் வரைந்த காவியம் நீ.. பூங்காற்று புனைந்த புதுக்கவிதை நீ.. பொறுத்திருந்து நான் கண்ட பொக்கிசமும் நீ..!!! ~அன்புடன் ஆனந்தி

(படம்: கூகிள், நன்றி)

கவிதையாய் வாழ..!!!



வெண் மேகம் மீதேறி
விண்மீன்கள் தேட வேண்டும்
நல்முத்து கைசேர
முக்குளித்து மீள வேண்டும்
கற்பனைகள் கை கூட
கவிதையாய் வாழ வேண்டும்
ஒப்பனைகள் இல்லாத
உண்மையை காண வேண்டும்
தப்பேதும் செய்தாலும்
சரிசெய்ய திராணி வேண்டும்
தடையில்லா இன்பம் காண
முடிவில்லா உழைப்பு வேண்டும்
இதமாய் மனம் இருக்க
இன்னிசை நாட வேண்டும்
இயல்பாய் நாம் இருக்க
இறைபக்தி தேடல் வேண்டும்..!

~அன்புடன் ஆனந்தி

(படம்: கூகிள், நன்றி)

Thursday, February 1, 2018

கண்ணிமையாய்...!!


மரமாய் நானிருக்க
மழையாய் நீயிருப்பாய் வேராய் நான் இருக்க விழுதாய் நீயிருப்பாய் வான்முகிலாய் நானிருக்க வெண்ணிலவாய் நீயிருப்பாய் கரையாய் நானிருக்க அலையாய் நீயிருப்பாய் தொடு வானமாய் நானிருக்க அதில் படும் மேகமாய் நீயிருப்பாய் வானவில்லாய் நானிருக்க வண்ண மயிலாய் நீயிருப்பாய் அன்பாய் நானிருக்க அனலாய் நீ தகிப்பாய் விதையாய் நானிருக்க விருட்சமாய் நீயிருப்பாய் மலராய் நானிருக்க வண்டாய் நீயிருப்பாய் வாழ்வாய் நானிருக்க அதில் வசந்தமாய் நீயிருப்பாய் தவமாய் நானிருக்க வரமாய் நீயிருப்பாய் கண்மூடி நானிருக்க கரம் கோர்த்து நீயிருப்பாய் வெளிச்சமாய் நானிருக்க வெயிலாய் நீயிருப்பாய் கரு விழியாய் நானிருக்க கண்ணிமையாய் நீயிருப்பாய்..! ~அன்புடன் ஆனந்தி 



(படம்: கூகிள், நன்றி)

Monday, January 22, 2018

விடையின்றி..!!


முகத்தில் இனி விழிக்காதே என்று முத்தாய்ப்பாய் சொல்லிச் சென்றாள் மெய் மறந்து நின்றிருந்தேன் மெய்தானா என்றிருந்தேன்... பேசாமல் தினம் எப்படி கழிப்பது பேசியவற்றை எவ்வாறு அழிப்பது?! சுந்தரமாய் தெரிந்த உலகம் இன்று ஒன்றுமில்லா சூனியமாய்... கால் போன போக்கில் நடந்து சென்றேன்.. காலம் கடந்த உணர்வில் கலங்கி நின்றேன்.. வானம் இருள் சூழக் கண்டேன் எனக்காய் மருண்டதாய் கொண்டேன்.. எண்ணற்ற விசயங்கள் எனக்குள் எதிர் நீச்சல் போடக் கண்டேன்.. ஒற்றை சொல்லால் மயங்கச் செய்வாள் கற்றை குழலில் கிறங்கச் செய்வாள் வெறும் பார்வையில் வேதங்கள் சொல்வாள் சிறு மனக்கசப்பில் பேதங்கள் கொள்வாள்.. சிறு பிள்ளையாய் பேசிச் சிரிப்பாள் பெரும் ஞானி போல் கருத்து சொல்வாள் ஒன்றுமில்லா விசயத்திற்கு ஒரு மணி நேரம் வாதம் செய்வாள்.. கள்ளப் பார்வையில் காதல் சொல்வாள் கைகளில் பாவையாய் கண்மூடிக் கிடப்பாள்.. பொய்க் கோபம் கொண்டு பொருந்தா குணமாய் வாய் மூடி இருப்பாள்.. இப்போது என்ன செய்து கொண்டிருப்பாள் எண்ணியவாறே வீடு வந்து சேர்ந்தேன்.. அவள் இல்லாத வீடு எனக்குள் அச்சத்தை அளித்தது.. நினைவுகள் நிழலாய் எனை நீங்காமல் தொடர்ந்து வர உறக்கம் எனக்கு எதிரியாய் உயிர்ப்பாய் சத்யாகிரகம் செய்ய.. அசதியில் படுத்துக் கொண்டேன் ஆழ்ந்து உறங்கி விட்டால் எல்லாம் வீண் கனவாய் போய்விடாதா விளக்கணைத்தேன் விடையின்றி..!! ~அன்புடன் ஆனந்தி
(படம்: நன்றி கூகிள்)

Monday, January 15, 2018

சலனமில்லா சகாப்தம்...!!!

மூடிய இமைகளில் சத்தமின்றி முத்தமிடும்... முழு நிலவாய் முன் தோன்றி முகமன் இன்றி கைப்பற்றும்.. எத்தனையோ பேர் இருப்பினும் தன்னுயிர் தடம் பார்த்து தடையின்றி நடை போடும்.. நிஜங்களை நினைத்து வாழும் நிகழ்தலில் நெஞ்சம் ஏங்கும் கொஞ்சும் சிரிப்பில் குழந்தையை மிஞ்சும் வெகுண்டு எழும் நேரத்தில் எரிமலையாய் சிதறும்.. அன்பினை அமுதாய் ஊட்டும் அவ்வப்போது நம்மை வீழ்த்தும் எளிதில் எதையும் ஒத்துக்கொள்ளாது எதிரில் நின்று பித்துக்கொள்ள செய்யும் ஆத்திரம் கண் மறைப்பின் அன்பினால் கண் திறக்கும் தொடுவானமாய் நீண்டு செல்லும் நீங்காமல் நெஞ்சில் வீசும்.. வானவில்லின் வண்ணம் காட்டும் வகை வகையாய் எண்ணம் மீட்டும் நினைவுகளால் நெகிழச் செய்யும் நேரில் கண்டால் மௌனமாகும் கண்டதை எண்ணி கலங்கி நிற்கும் கைகளுக்குள் குழந்தையாய் கண் மூடிக் கிடக்கும்.. பிடிவாதமாக சண்டையிடும் பிடித்து வைத்து பிரியம் பேசும் சலனமில்லா சகாப்தம் காணும் சப்தமும் அடக்கி ஆளும்..!!! ...அன்புடன் ஆனந்தி

About Me

My photo
I am a jovial.. sensitive.. happy person who likes to be around good friends ;)