topbella

Saturday, December 31, 2011

அகிலம் காப்போம்..!


அன்னை தந்தை பாசம் பெற்று
அறுசுவை உணவும் பெற்று
அடைக்கலமாய் இடமும் கிடைத்து
அணிவதற்கு நல்லாடை அமைந்து
அவனியில் எத்தனை பேர் உள்ளனர்?

இவையனைத்தும் இயல்பாய்
இலகுவாய் பெற்ற பலர்
இறுமாப்புடன் அருமை தெரியாது
அலட்சியமாய் அனுபவித்தே
அவர் வாழ்வு வாழ்கின்றார்...

அனைத்தும் படைத்த ஆண்டவா
படைக்கும்போதே பாகுபாடு எதற்கு?
அளவற்ற செல்வம் ஓரிடத்தே
அன்றாட வாழ்வை அசைக்கவே
படாத பாடு பட்டுக்கொண்டிருக்கும்
பல பேர்கள் பேரிடத்தே...!

புத்தாண்டு பொலிவுடன் சிறக்க
புறவேற்றுமை ஒழிய வேண்டும்
அரசியலை மட்டும் அண்டாது
ஆண்டவனை மட்டுமே நம்பாது
அவரவர் அறிவினை நம்பி
அயராது உழைத்து
அரியாசனம் ஏறவேண்டும்

எரிமலைகள் எம் தேசத்தில்
எங்கும் எரியும் ஏழ்மைத் தீயும்..
எதையும் செய்யத் தூண்டும்
பதவிப் பேயும் எட்டி ஓடவே

இளைஞர் சமுதாயமே
இந்நேர நிலையுணர்ந்து
எடுக்கும் முயற்சியை
ஏற்றமுறச் செய்தே
எதிர்கால இந்தியாவை
இமயம் அடையச் செய்வீர்....!

எவரேனும் வந்து
ஏதேனும் புரட்சி செய்து..
எம் வாழ்வு செழிக்கச்
செய்ய வல்லாரோ
என்றெண்ணியே....

ஏமாற்றம் அடையாது
அவரவர் சக்திக்கு
ஆக்க முடிந்ததை
அக்கறையாய் செய்தே
அகிலம் காப்போம்!

அனைத்து நண்பர்களுக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்..!


~அன்புடன் ஆனந்தி


(படம்: கூகிள், நன்றி)

Tuesday, December 27, 2011

ராகி முறுக்கு...!

யாரும் கலரை பார்த்து பயப்பட வேண்டாம்... டேஸ்ட் சூப்பர்-ஆவே இருக்கு. கண்டிப்பா செஞ்சு பாருங்க.


தேவையான பொருட்கள்:

ராகி மாவு - 3 கிண்ணம்
அரிசி மாவு - 2 கிண்ணம்
உளுந்து மாவு - 1 கிண்ணம்
பெருங்காயம் பொடி - சிட்டிகை
எள் - 1 டீஸ்பூன்
வெண்ணெய் - 1 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
தண்ணீர்
எண்ணெய்

செய்முறை:

  1. ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி சூடாக்கவும்.
  2. உளுந்து மாவை லேசாக வறுத்துக் கொள்ளவும்.
  3. அதனுடன் அரிசி மாவு, ராகி மாவு, உப்பு, எள், காயம், வெண்ணெய் கலந்து தேவையான தண்ணீர் விட்டு பிசைந்து கொள்ளவும்.
  4. தேன்குழல் (முறுக்கு) அச்சில் மாவை போட்டு, மிதமான சூட்டில் உள்ள எண்ணையில் பிழிந்து, பொறித்து எடுக்கவும்.
  5. (சத்தம் அடங்கியதும் எடுத்து விட வேண்டும்... ராகி நிறத்தில் பொன்னிறம் எல்லாம் கண்டு பிடிக்க முடியாது)

எளிமையான செய்முறை... குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். செஞ்சு பார்த்து சொல்லுங்க.


~அன்புடன் ஆனந்தி 





Wednesday, December 21, 2011

புத்தாண்டில் புது குறிக்கோள்....!


ஒரு வழியா இந்த வருஷம் கடந்தேறி... புது வருசத்துக்கு ரெடி ஆயிட்டீங்களா?  புது வருஷம் பிறந்ததும்... நம்ம பிரண்ட்ஸ் சில பேர் போன் பண்ணி விஷ் பண்ணிட்டு... ஹ்ம்ம் அப்புறம்... இந்த வருசத்துக்கு என்ன Resolution ..ன்னு கேப்பாங்க (அப்டின்னா........??? ). நம்மளும்... பெருமையா... அதாவதுங்கன்னு... தொடங்கி... வருஷம் வருஷம் சொல்ற அதே குறிக்கோள் தான் சொல்வோம். (வாக்கு மாறக் கூடாதில்லையா..? எப்படி எல்லாம் சமாளிக்க வேண்டியதா இருக்கு...)

எத்தனை பேர்... நினைச்சதை நினச்ச மாதிரி நிறைவேத்தி இருப்போம்.... ஒரு முடிவு எடுக்கறது எவ்ளோ சுலபமா இருக்கு.... ஆனா அதை நிறைவேத்துறதுல இல்ல இருக்கு மேட்டர்...! ஒரு உதாரணம் சொல்றேன்... கடந்த மூணு வருசமா நானும்.... எப்படியாச்சும்... ஒரு பத்து கிலோ எடை குறைத்தே ஆகணும்ன்னு பிளான் பண்றேன்... நாம ஒண்ணு நினச்சா... நம்ம கிரகம் ஒண்ணு நினைக்குது...!

சரி.....ஒரு வழியா... பிளான் ஸ்டார்ட் பண்ணிரலாம்னு... எங்க இருந்து ஆரம்பிக்கிறதுன்னு யோசிச்சா....... எல்லாரும் ஒட்டுமொத்த அட்வைஸ்.. டயட்...! ஹ்ம்ம் ஹும்ம்ம்.. ஐ ஆம் சாரி....அப்படி பட்டினி கிடந்து... உடம்பு குறையனும்னு எனக்கு அவசியம் இல்ல... நெக்ஸ்ட் ஐடியா... ப்ளீஸ்...!

எக்சர்சைஸ் பண்ணினா அப்படியே கொஞ்சம் கொஞ்சமா சுலபமா குறைக்கலாம்.. அப்டியா....? சொல்லவே இல்ல....இப்ப பாரு நானா....... எப்படி குறையறேன்னு கிளம்பி பக்கத்துல உள்ள ஜிம்-ல போயி கெஸ்ட் பாஸ் (Guest pass ) வாங்கி... சேர்ந்தேன்..! ஏக போக வரவேற்பு தான்... கரெக்டான இடத்துக்கு வந்திருக்கீங்க... எடை குறைக்குறது அழகுக்கு மட்டும் இல்ல... நல்ல ஆரோக்கியமான உடலுக்கும் தாங்கன்னு அருமையா.. சொன்னாங்க.. (பயபுள்ளைங்க பேச்செல்லாம் நல்லாத்தேன் இருக்கு....) சரி ரைட்டு... நா இப்போ என்ன செய்யனும்ன்னு சொல்லுங்கன்னு கேட்டேன்.

உடனே அழகா.. ஒரு அட்டையில் என் பேர் எழுதி, வரிசையா நம்பர் போட்டு.. இந்த ஆர்டர்ல எக்சர்சைஸ் ஸ்டார்ட் பண்ணனும்னு ஒரு தரம் காமிச்சி கொடுத்தாங்க.  சரி இதெல்லாம் ஜுஜிபின்னு அவங்க மாதிரியே... செஞ்சிட்டே வந்தேன்.. 20 நிமிசத்துல முடிஞ்சு போச்சு... அட இம்புட்டு தானா... அடடா... இவ்ளோ நாள் இது தெரியாம எவ்ளோ டைம் வேஸ்ட் பண்ணிட்டோம்ன்னு பீலிங்க்ஸ் வேற....!

அப்புறம் என்னன்னு பவ்யமா போயி கேட்டேன்.... கார்டியோ எக்சர்சைஸ் கொஞ்சம் செஞ்சு முடிச்சிரலாம்ன்னு சொல்லவே... நேர போயி ட்ரெட்மில்ல ஏறி.. ஒரு 10 நிமிஷம் நடந்துட்டு.... ஜாலி-ஆ கிளம்பி வீட்டுக்கு வந்துட்டேன்.  அப்படியே தொடர்ந்து ஒரு மூணு நாள் போனேன்... நாலாவது நாள்... வீட்டுக்கு வந்து தூங்கி எழுந்ததும்... தோள்பட்டை செமையா..வலி. என்ன மேட்டர்-னா... நல்ல வேகமா எக்சர்சைஸ் செஞ்சு சீக்கிரம் குறையறதா நினச்சு... ஓவர்-ஆ பண்ணி.... வலி வந்திருச்சு..!

அப்படியும் விடாம... முன் வச்ச கால பின் வைக்க கூடாதுன்னு போனேன்.. அந்த ஜிம்-ல நாமளா எக்சர்சைஸ் பண்றது தவிர... தனிப்பட்ட ட்ரைநர்ஸ் வந்து.. யோகா, பிலாடே....இது மாதிரி வேற கிளாஸ் எடுப்பாங்க... எந்த கிளாஸ்-ல வேணா நம்ம ஜாயின் பண்ணிக்கலாம்.. அப்படி ஒரு கிளாஸ்-ல சேர்ந்து சுறுசுறுப்பா நானும் எக்சர்சைஸ் பண்ணேன்..! ஹ்ம்ம் ஹும்ம்.. பின்விளைவுகள் செம.....! (ஒரு வேளை தொடர்ந்து போயிருந்தா.. பழகி இருக்குமோ என்னவோ?)

அப்புறம் என்னவா??? இதெல்லாம் எதுக்குடா வம்புன்னு வெற்றிகரமா திரும்பி வந்தாச்சு... இப்போ அடிக்கடி அந்த ஜிம்-ல இருந்து.. பாசமா போன் பண்ணி... நாங்க இப்போ வேற ஒரு திட்டம் கொண்டு வந்திருக்கோம்... கண்டிப்பா வந்து ட்ரை பண்ணுங்கன்னு சொல்வாங்க..! இப்படி எல்லாம் கூப்டா.. போயிருவமாக்கும்..! அவள் ஒரு தொடர்கதை மாதிரி... இதுவும் ஒரு தொடர் கதை...!

சரி பேசிட்டே இருந்து.. உங்கள கேட்க மறந்துட்டேன்... உங்களுக்கு இந்த வருஷம் என்ன குறிக்கோள் (Resolution )? (சுதாரிப்பா... என் ப்ளாக் பக்கமே வரக் கூடாதுன்னு இருக்கேன்ன்னு மட்டும் சொல்லிராதீங்க.. மீ பாவம்..!)

ஜோக்ஸ் அபார்ட்... உடல் ஆரோக்கியத்திற்கு.. சரியான நேரத்தில்.. சரியான விகிதத்தில் உணவு, தினமும் ஒரு 30 நிமிடமாவது உடற்பயிற்சி,  அமைதியான உறக்கம்.... இதெல்லாம் இருந்தாலே போதுங்க...!  (சரி.. சரி.. கோவப் படக் கூடாது)  உடல் ஆரோக்கியத்தோட.. மனமகிழ்ச்சியோட புது வருஷம் பிறக்க வாழ்த்துக்கள்...!

வாசித்த (வருந்திய...) அன்பு உள்ளங்களுக்கு நன்றி..!!!

~அன்புடன் ஆனந்தி

(படம்: கூகிள், நன்றி)

Thursday, December 8, 2011

தமிழ் இனி மெல்ல வாழும்...!


ஒளிரும் ஜோதியாம்...
ஓயாத தமிழை...
கலை என்ற பெயரில்..
கடித்துக் குதறி...

காது கொடுத்துக்
கேட்க முடியாமல்
கைகட்டி நின்றே
வேடிக்கை பார்க்கிறோம்..

முத்தமிழை வளர்க்க
முத்தாய் பல வார்த்தைகள்
முன்னும் பின்னும் இருக்க
எப்படித் தோன்றியது
எதுவும் புரியாமல் எழுத..

தமிழ் இனி மெல்லச்சாகும்
எனும் கூற்றை உயிர்ப்பித்து
தரணியில் தமிழை
தப்பி ஓடச் செய்து விடாதே
தமிழா.. தவப் புதல்வா...

எம் மக்கள் மறந்த
தமிழை நினைக்கச் செய்ய
எமக்கு யார் துணையும்
தேவை இல்லை..

எழுத்துக்கள் கூட்டி
எரிமலை வெடிக்கச் செய்வோம்
எதுகை மோனையில்
ஏகாந்தம் படைத்திடுவோம்..

~அன்புடன் ஆனந்தி

Tuesday, December 6, 2011

தொலை தூரத்தில் நான்...!


தொடும் தூரம் நீ இருந்தும்
தொலை தூரத்தில் நான்..
தொடர்ந்தேனே உன்னை..
உன்னில் தொலைத்தாயே என்னை..

சுடும் காதல் என்னுள் தீ மூட்ட
சுக வீணை உன்னிமை தான் மீட்ட..
நான் படுந்துயர் நீ கண்டாய்
உனக்குள் பொய் வேலி கொண்டாய்..

கடுங்கோபம் கொண்டாலும்
கள்வா உன் கண் காதல் பேசும்
விடும் எண்ணம் எனக்கில்லை
விடை சொல்ல உனக்கு மனமில்லை..

சொல்லிசெல்ல அருகே வந்தேன்
சோதிப்பவர் போல் உன் பார்வை..
சொல்ல வந்ததும் மறந்து..
நெஞ்சம் கிள்ளியதை போல்
உணர்ந்து மெல்ல நகர்ந்தேன்..!


~அன்புடன் ஆனந்தி 




(படம்: கூகிள், நன்றி)

About Me

My photo
I am a jovial.. sensitive.. happy person who likes to be around good friends ;)