விடியலுக்கான விடை தேடி விதி வழிப் பயணம்... எல்லாம் மாயையா... இறைவன் வைத்த வேள்வியா... எதற்காக பாசம் வைத்தாய்.. இழந்த பின் துடிப்பதற்கா... எதுவும் நிரந்தரம் இல்லை என்ற எண்ணம் அறிவால் உணர்ந்தாய்... வைத்த அன்பில் அதை மறந்தாய்... வாழ்க்கை சுழலில் வந்தார் நிற்பதில்லை... சென்றார் மீண்டு வருவதில்லை.. அவரவர் கடமை முடிந்ததும்... கடைத்தேறி காணாமல் மறைந்து விடுகிறோம். எதுவும் இங்கே உண்மை இல்லை... எவர் உறவும் இங்கு நிதர்சனம் இல்லை.. கரை காணும் நோக்கம் உண்டாகில், கண் மூடி கடவுளிடம் சரண் அடைந்து விடு.. என்றே சத்தியம் உரைக்கின்றது.. அதைச் சபல உள்ளம் மறுக்கின்றது.
உண்மை அறிந்தும் உழலும் உள்ளத்தை என்ன செய்வது.. எதிலும் நாட்டம் இல்லை.. எதன் மீதும் பற்று இல்லை.. எல்லாம் பார்த்தாகி விட்டது.. இருந்து செய்ய போவது என்றே இங்கே எதுவும் இல்லை.. கர்மாவின் விளைவால் காலத்தை கடத்திக் கொண்டிருக்கிறோம். ஞானம் வந்து விட்டதாய் சொல்பவன் எல்லாம் ஞானி அல்லவே.. தனக்கு எல்லாம் தெரிந்து விட்டதாயும், அதை பிறர் உணர பிரயத்தனம் செய்வதாயும் சொல்லித் திரிபவர்கள்.. மூடர்கள். உணர்ந்த சத்தியத்தை உள்ளத்தோடு நிறுத்திக்கொள்... உலகிற்கு உணர்த்துவது உன் வேலை அல்ல..
கணத்திற்குள் காலம் உன்னை கடந்து கரைந்து சென்று விடுகிறது.. நினைத்தாலும் அதனை நீ எட்டிப் பிடிக்க இயலப்போவதில்லை.. உலகம் தெரிந்து கொள்.. உண்மை அறிந்து கொள்.. உனக்குள் அமிழ்ந்து கொள்... உள்ளமை உணர்ந்து கொள்... உனக்குள் உன்னை தேடுவதை தவிர உன்னதமான செயல் வேறொன்றும் இல்லை. உண்மை உணர்ந்த நிமிடம் நாம் ஊமையாகி விடுகிறோம்.. பேச ஒன்றும் இல்லை.. பெரிதாய் சொல்ல எதுவும் இல்லை.. மௌனத்தின் உன்னதம் மனதிற்கு உரைக்கும் தருணம் உள்ளுக்குள் அமைதி சூழ.. மற்றவை எல்லாம் மறைந்து விடக்கூடும்.
எண்ணத்தின் தெளிவு ஏகாந்தம் தரக்கூடும்... திணிக்கப்படாத சிந்தனை தூய தீபமாய் ஒளிரக்கூடும். போகும் இடம் தெரிந்து விட்டால்... வாழும் இடம் வசந்தமாகிப் போகும்... மௌனத்தின் மகிமை அறிந்தவர்.. அதை உணர்ந்தவர்.. அன்றாட நிகழ்வுகளின் இரைச்சலைக் கூட ஏற்றுக் கொள்ள முடிவதில்லை.. ஆழ்ந்த அமைதியின் அருமை உணர்ந்து விட்டால்... மற்றதெல்லாம் இங்கே மதிப்பிழந்து போய் விடுகிறது...!
மௌனம் மகத்துவமானது... மௌனித்தல் அவ்வளவு எளிதில் சாத்தியமல்ல... பல சந்தர்ப்பங்களில் சத்தியம் உணர்ந்தும்.. லௌகீக வாழ்வின் சாகசங்கள் நம்மை சடுகுடு ஆடத்தான் செய்து விடுகிறது.. உட்கார்ந்து யோசிக்க ஒன்றும் இல்லை.. உள்ளத்தின் ஓசைக்கு செவி மடுத்தே.. உண்மையின் பாதையில் ஊமையாய் நகர்தல் உத்தமம்...!
வார்த்தைகள் மௌனிக்கும் போது வாழ்க்கைத் தத்துவம் உணர முடிகின்றது. மௌனத்தின் மொழி மனதின் ஒலி.
...அன்புடன் ஆனந்தி
(படம்: கூகிள் நன்றி)