எல்லை மீறிய ஆனந்தம் அளிக்கக் கூடிய பிரம்மாண்டம் ஒன்றே... அது என் ஈசன் திருவடி.. அவனடி நாட ஆன்ம பலம் வேண்டும்.. இப்படித் தான் வழிபட வேண்டும் என்ற நியதிகள் தேவை இல்லை... நியமனங்கள் தேவை இல்லை... கட்டுக்கள் தேவை இல்லை.. கண் மூடி மெய் அடக்கி சரணாகதியாய் அவனிடம் வந்தால் சர்வமும் சாத்தியப்படும்....
மாய உலகமிது... உணர்வுகள் உதைக்கப்பட்டு... கனவுகள் கலைக்கப்பட்டு... கை நிறைய பணம் சேர்க்க மட்டுமே காத தூரம் ஓடும் ஜென்மங்கள்...! எதில் இருக்கிறது இன்பம்... பணம் பொருள் வீடு வாசல் வித விதமாய் சொத்துக்கள்... எல்லாம் சேர்த்து... அடுத்து என்ன செய்ய போகிறோம்... என்றதொரு பெரும் கேள்வி....? வாழ்க்கையை ரசிக்க வேண்டும்... அதன் வலிகளை அறிய வேண்டும்... வலிகளை உணர்ந்து.. ஊடுருவி... அது விடுத்து வெளி வர வேண்டும்.
ஒன்றிரண்டு விடயங்களில் உலகமே அடங்கி விடாது... உண்மையும் தெரிந்து விடாது.. கடந்து வந்த பாதைகளும்.. இனி நாம் கடக்கப் போகும் மீதியும்.. கடவுளுக்கே வெளிச்சம். அல்லது நம் கர்மாவின் உச்சம்.... சலசலப்பற்ற அமைதியான சூழலில்... சங்கீதம் கேட்பது போன்று வாழ்க்கை அமைய வேண்டும்.
சாக்கு போக்குகள் சொல்லிக் கொண்டு சாக்கடையில் உழல்வதால் சத்தியம் இதுவென்று அறிய சாத்தியம் குறைவே... அறிந்தது உணர்ந்து... உணர்ந்தது தெளிந்து.. தெளிந்ததை தாமதிக்காது தேடி செல்வதே உத்தமம். தனக்குள் அமிழ்ந்து தயக்கங்கள் தொலைத்து... அமைதி தேடி அமரவேண்டும். அதற்கு உதவும் த்யானம், கடை பிடிப்பது என்னவோ அவ்வளவு கடினம் அல்ல.. என்றாலும், அதற்கான நேரம் ஒதுக்குவது என்பதே எல்லோருக்கும் இயலாத காரியமாய் இருக்கிறது...
உள்ளிழுக்கும் சுவாசம் உள்ளத்து அழுக்குகளை எல்லாம் துடைத்து வெளிக்கொணர்ந்தால் போல... சித்த சுத்தி கிடைக்கச் செய்வது... த்யான நிலையின் மையம்... த்யானம் செய்வது ஒரு வகையான பலம். நம் உள்ளம் மற்றும் உடலின் சக்தியனைத்தும் ஒருங்கிணைக்க நமக்கு கை கொடுக்கும் கேடயமே த்யானம்.
அமைதியாக ஒரு இடத்தில் அமர்ந்து.. ஆழ்ந்து மூச்சை உள்ளிழுத்து.. உள்வாங்கியதை முடிந்த வரையில் உள்ளுக்குள் நிறுத்தி... பிறகு சீராக வெளிவிடும் போது ஒரு புத்துணர்ச்சி வரத்தான் செய்கிறது.
அமைதியாக ஒரு இடத்தில் அமர்ந்து.. ஆழ்ந்து மூச்சை உள்ளிழுத்து.. உள்வாங்கியதை முடிந்த வரையில் உள்ளுக்குள் நிறுத்தி... பிறகு சீராக வெளிவிடும் போது ஒரு புத்துணர்ச்சி வரத்தான் செய்கிறது.
~அன்புடன் ஆனந்தி