பிஞ்சுக் குழந்தையையும்
வஞ்சி அழகையும்
மிஞ்சும் வண்ணம்
வகையாய் வாரிக்கொண்ட
வட்ட வெண்ணிலவே...!
வெட்ட வெளி வானத்தில்
வெகுளியாய் உன் உலா..நட்சத்திரக் கூட்டத்தில்
நாயகியே நீ தானோ...!
உள்ளக் கிடங்கில்
முழு நிலவாய் நீ தோன்றி
முத்தமிட்ட குழந்தையைப் போல்
மொத்தமாய் தோன்றி விட்டு
சத்தமின்றி மறைவதும் ஏனோ?
நங்கை முகம் மலர்ந்தால்
அவள் முழு நிலவாய்...
அவள் கன்னம் சிவந்து
தலை கவிழ்ந்தாலோ
தணிக்கும் பௌர்ணமியாய்...!
நீ தேய்ந்து மறைந்த வேளையில்
உனைத் தேடத் துடிக்கும் மனது
வசீகரமாய் நீ வளரும் போது
வந்தே உனைச் சேரச் சொல்லும்...!
குற்றாலச் சாரல் போல்
குளிர் நிலவில் கொண்டவனுடன்
குதூகலமாய் பேசுகையில்
குறையாத அன்புடனே
பறை சாற்றும் காதல் அங்கே...!
...அன்புடன் ஆனந்தி