topbella

Wednesday, May 30, 2012

உள்நெஞ்சின் உரசல்...!

Pin di Anime

நிர்ச்சலனமான அமைதி
நிலைகுலைய வைக்கும்
நினைவுகளின் நீட்சி..
எண்ணத்தின் திண்ணத்தில்
ஏதோ ஒரு ஏக்கம்...

கட்டுக்கடங்கா காதலின்
கவலை தோய்ந்த தேடல்
கார்முகிலின் கருமையாய்
மனமுகிலில் மங்கிய இருட்டு..

உணர்ச்சிகளின் உச்சத்தில்
உதிரும் வெப்பத்தில்
உள்ளார்ந்த காதலைத் தான்
உன்னிடம் உளறுகிறேன்...

கோபம் கொந்தளிக்க...
மீறும் காதல் கரையுடைக்க
தாயின் மடி தேடி தவழும்
குழந்தையாய் என் மனது...

உன்னடி தேடும்...
அன்பை உணர்வாயா
உன் தயை தேடும் தளிரை
தாங்கிப் பிடிப்பாயா இல்லை
தவிக்க விட்டே செல்வாயா?

உள்ளுணர்வின் உண்மை நிலை
யாரும் உதவமுடியா ஊமை நிலை
உயிராய் இருப்பவனே
உள்நெஞ்சின் உரசல் அறியாயோ?


~அன்புடன் ஆனந்தி

படம்: கூகிள், நன்றி.

Friday, May 25, 2012

ஸுக்கினி பொரியல்...!



தேவையான பொருட்கள்:

ஸுக்கினி - 2
வெங்காயம் - 1 
கடுகு - 1/2 டீஸ்பூன் 
உளுத்தம்பருப்பு - 1/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது 

பெருங்காயம் - சிறிது
மஞ்சள் பொடி - சிறிது
மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்
தேங்காய் துருவல் - 2 மேஜைகரண்டி


செய்முறை:

ஸுக்கினியை சிறிய துண்டுகளாக நறுக்கவும். வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு, அதில் கடுகு, உளுத்தம் பருப்பு சேர்க்கவும். கடுகு வெடித்ததும் கறிவேப்பிலை, நறுக்கி வைத்த வெங்காயம் சேர்த்து வதக்கவும். 

வெங்காயம் சிறிது வதங்கியதும், நறுக்கி வைத்திருக்கும் ஸுக்கினியை சேர்த்து, சிறிது மஞ்சள் பொடி, உப்பு சேர்த்து வதக்கவும். மிதமான தீயில், மூடி வைத்து ஒரு 5 நிமிடம் வேக வைத்தால் நன்கு வெந்து விடும்.

பிறகு மூடியை திறந்து அதில் மிளகாய் தூள், பெருங்காயம் சேர்த்து நன்கு கிளறி விடவும். ஒரு இரண்டு நிமிடம் கழித்து அதில் துருவிய தேங்காய் சேர்த்து இறக்கவும்.



~அன்புடன் ஆனந்தி 

Wednesday, May 23, 2012

உயிர் சுமந்து...!

Royalty-Free photo: Hands holding red rose | PickPik

எதார்த்தங்களின் எழுச்சியில்
எண்ணற்ற வலிகள்...
முந்திக்கொண்டு நிற்கும்
முரண்பாடுகள்...

கண்ணுக்கு தெரியாத
கவலை ரேகைகள்...
எண்ணத்தில் சிக்கி நிற்கும்
எதிர்ப்பு உணர்ச்சிகள்...

உள்ளத்தில் ஒளிந்து கிடக்கும்
உன்னத உறவினை
உள்வைத்துச் சிறை பூட்டி
உணர்ந்து மட்டுமே
உயிர் சுமந்து அலைகிறேன்..

கண் சுமந்த காதல்
கருத்தில் நிறைந்த தேடல்
காரணம் சொல்ல
கண்ணீர் துளி போதும்..

ஏதும் நினைக்காமல்
எதையும் மறைக்காமல்
என்னுடனே நீ இருந்தும்..
யாதும் நன்மைக்கே என்று
யாம் வாழ்ந்து செல்வோம்...!


~அன்புடன் ஆனந்தி


\


(படம்: கூகிள், நன்றி)

About Me

My photo
I am a jovial.. sensitive.. happy person who likes to be around good friends ;)