topbella

Tuesday, October 13, 2015

மேகமே...!


இயற்கையின் அம்சமே.... 
உன்னழகில் இமைக்கவும் மறந்தேன்..
வானத்தில் நீ  வரைந்த ஓவியம் கண்டேன்..
வசீகரிக்கும் வண்ணங்களால்.. 
நீ வரைந்த புது காவியம் கண்டேன்..
வருவோர் போவோர் எல்லாம் 
எங்கோ எதற்கோ பறந்த வண்ணம் இருக்க...
எதிர்த்து நடந்தவாறே உன்னழகை.. 
உள்வாங்கி ரசித்திருந்தேன்...
அது ஏதும் அறியாமல் நீயும்..
எளிமையாய் மிதக்கக் கண்டேன்..!

எத்தனை அவதாரம் எடுத்தே.. 
எழில் பல செய்வாய் நீ..
எங்கும் பரந்து கிடக்கும் வானத்தில்...
ஏகாந்த லீலைகள் செய்கிறாயா?
இல்லை ஏதுமறியாச் சிறுவன் போல்..
எழுதிப் பழகுகிறாயா..?

அதிர்ந்து அடிக்கப்போகும் மழையை உணர்த்தவோ..
அடர் கருப்பில் பஞ்சுப் பொதியாய் 
ஆங்காங்கே நிற்கிறாய் நீ...?
கடும் வெயிலை கண்டிப்பவன் போல்..
கண்களுக்கே தெரியாமல் 
கரைந்தே சென்று விடுகிறாயே ..?
வெள்ளி நிலா உலா வரும் நேரத்தில் நீ...
வெட்கத்தில் ஒளிந்து கொள்வாயா...?
இல்லை வேடிக்கை பார்ப்பது போல்..
இங்குமங்கும் விமரிசையாய் செல்வாயா..?

நினைத்து நிதம் ரசிக்கவோ..
காலைக் கதிரவன் வரும் வேளை...
கண்களுக்கு விருந்தாய் காட்சி தருகிறாய்...
நெகிழ்ந்து நெஞ்சம் நிறைக்கவோ...
ஆதவன் அஸ்தமிக்கும் நேரம்...
அனைத்தையும் அள்ளித் தெளித்தது போல்..
அலங்கார தோரணமாய்...
அங்குமிங்கும் ஆர்ப்பரிக்கிறாய்...
அழகே உன் ஆட்சி ஆகாயத்தில் தொடரட்டும்.....



...அன்புடன் ஆனந்தி

Monday, January 12, 2015

நேர்த்திகடனா.. நன்றிக்கடனா...?!



சின்ன வயசுல இருந்தே நமக்குள்ள ஊற்றப்பட்ட.. ஊறிப்போன விசயங்கள்ல ஒண்ணு சாமிக்கு நேந்துக்குறது... கண்ணு வலி, கால் வலி, வயித்து வலி, காய்ச்சல், தலைவலின்னு இன்னதுன்னு இல்லாம.... உடம்புக்கு என்ன குறை வந்தாலும்... டாக்டர் கிட்ட போறமோ இல்லையோ.. டாண்ணு சாமிக்கு ஒரு ரூபாய் நேர்ந்து ஒரு மஞ்சள் துணில முடிஞ்சு சாமி முன்னாடி வச்சிருவாங்க.. இன்றும் இந்த வழக்கம் தொடர்கிறது...

பொதுவா நாம பலவீனமா இருக்குற சமயத்துல நமக்கு மேல ஏதோ ஒரு மேலான சக்தி இருந்து நம்மை காப்பதா நினைக்கிறது இயல்பு.. அந்த எண்ணம் நமக்குள் நேர்மறையான அதிர்வுகளை உண்டாக்கும்.. அதுவே உடம்பிற்கு வலுவினை தந்து விரைவில் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பவும் வைக்கலாம்..

இந்த நேர்த்திகடன் வழக்கம் ஏதும் இக்கட்டான சூழல் வரும்போதும் கூட செய்றது உண்டு.. நேர்த்திக்கடன்னா என்ன... எனக்கு இந்த கஷ்டம்.. சரி ஆயிருச்சுன்னா உன் கோவிலுக்கு வரேன்.. மாவிளக்கு எடுக்குறேன்.. மொட்டை போடுறேன்...இந்த மாதிரி பல வகைகள் இருக்கு.. அடிப்படையில சாமிகிட்ட போடுற டீலிங் தான்... எனக்கு இது செய் அது செய்.. அப்படி செஞ்சா நான் உனக்கு இதை செய்றேன்.. அதை செய்றேன்னு ஒப்பந்தம் பண்ணிக்கிறது தான்...

இதுல கொடுமை என்னென்னா... நிறைய நேரங்கள்ல எந்த கோவிலுக்கு எப்போ வரோம்னு சொன்னோம்... எந்தெந்த கோவிலுக்கெல்லாம் நேர்ந்தோம்.. என்னென்ன செய்றதா சொன்னோம்... இதெல்லாம் வருஷ கணக்குல செய்யாமலே விட்டுட்டா பல நேரங்கள்ல மறக்கவும் வாய்ப்பு உண்டு... அப்புறம் எதாச்சும் ஒன்று நம் கட்டுப்பாட்டில் இல்லாமல் தவறாய் நடக்கும் சமயம்..  ஒருவேளை கோவில் விஷயம்  செய்யாம விட்டதால சாமி குத்தமா இருக்கும்னு டென்ஷன் ஆக வேண்டியது...

எனக்கு என்ன சந்தேகம்னா எந்த சாமி நம்ம கிட்ட ஒப்பந்தம் பண்ண சொல்லுச்சு? முதல்ல... எனக்கு நீ இதை செய்தால் நான் உனக்கு அதை செய்வேன்னு.. வியாபார ரீதில செய்ற ஒப்பந்தம் மாதிரி இந்த அணுகுமுறையே தவறா இருக்கு... நமக்கான கடமைய ஒழுங்கா செஞ்சாலே பலன் தன்னால கிடைக்கும்... நமக்கு எப்போ எதை கொடுக்கணும்னு படைச்ச ஆண்டவனுக்கு தெரியாதா?? முதல்ல நேந்துக்கவும் வேண்டாம்... அப்புறம் அத செய்யலன்னு நொந்துக்கவும் வேண்டாம்... அதுக்கு பேசாம... நாம மனசுல நினச்ச ஒரு காரியம் நல்ல முறையில் கை கூடினால்... அதுக்கு நன்றிகடனா கோவிலுக்கு போயிட்டு வரலாம்..

இதுல இன்னொரு காமெடி வேற இருக்கு... அவனவனுக்கு தான் போட்ட ஒப்பந்தமே அதாவது தான் நேர்ந்துகிட்டதே நினைவுல இருக்கறது கஷ்டம்... இதுல நட்புகள் கொடுக்கும் அன்பு தொல்லைக்கு எல்லையே இல்லை... நம்ம பாட்டுக்கு சிவனேன்னு இருப்போம்.. நீங்க ஒண்ணும் கவலையே பட வேண்டாம்... (நான் எப்ப கவலை பட்டேன்....?! ) நான் உங்களுக்காக மாங்காடு மாரியம்மன் கிட்ட வேண்டிருக்கேன்.. வடபழனி முருகன் கிட்ட வேண்டி இருக்கேன்.. (சொல்லவே இல்ல.....?!) அடுத்த முறை இந்தியா போகும் போது மறக்காம போயிட்டு வந்திருங்கன்னு போற போக்குல அள்ளி விட்டுட்டு போவாங்க... (இதென்ன நேர்த்திகடனா? இல்ல நேயர் விருப்பமா? என்ன கொடும சார் இது...?)

இன்னும் சில பேர் ஒரு படி மேல போயி உங்களுக்காக நான் கோவில்ல வேண்டி இருக்கேன் நீங்க மறக்காம இந்த நாள்ல போயி பூஜை பண்ணிட்டு வந்திருங்க.. செய்யாம விடுறது நல்லது இல்லைன்னு வேற சொல்வாங்க... (நான் எப்ப சொன்னேன்.. எனக்கு நேர்ந்துக்கோங்கன்னு...? ஏன் இப்டி....??? ). அக்கறை இருக்கலாம்.. அதுக்காக எதிராளிக்கு முடியுமா முடியாதான்னு கூட யோசிக்காம அவங்களா ஒரு முடிவுக்கு வந்து நேர்ந்திட்டு.. அதை நம்ம மேல திணிக்கிறது கொஞ்சம் அபத்தமாத்தான் தோணுது. மொத்தத்துல சாமி கிட்ட ஒரு வருசத்துக்கு அப்புறம் நான் உன் சன்னிதானம் வரேன்னு இப்பவே வேண்டிக்கிட்டு சாமியையும் குழப்பி நாமும் குழம்புறதுக்கு ஒரு வருஷம் கழிச்சு முடிஞ்சா போயிட்டே வந்திரலாமே..!


...அன்புடன் ஆனந்தி




(படம்: கூகிள், நன்றி)


About Me

My photo
I am a jovial.. sensitive.. happy person who likes to be around good friends ;)