topbella

Monday, May 23, 2011

உயிரில் கலந்த உறவு...!


உதிரத்தில் உனை ஊற்றி
உன் பெயரை எனில் ஏற்றி
உள்ளார்ந்த அன்பினாலே
ஊமையாய் வலம் வந்தேன்...

எத்தனை திங்கள் என்று
எனக்கேதும் புரியவில்லை
எதிர்பார்க்காமல் என்னால்
இருக்கவும் முடியவில்லை..

நினைத்த மாத்திரத்தில்
கலைத்து விட இது கருவுமல்ல
கசக்கி எறிந்து விடவோ
இது காகிதமும் அல்ல....

நினைவோடும் உயிரோடும்
ஒன்றாகி விட்ட உரு...!
ஏனோ உன் நிம்மதிக்காய்
என்னெதிரில் நீ இருந்தும்
எவரோ போல் நானிருந்தேன்...

என்னை அசைய விடாமல்
எதிர்த்து நிற்கும் காதலிடம்
நான் என்ன சொல்லி
இசையைச் செய்வேன்...

உணர்வில் கலந்த உறவை
உயிராய் மாறி விட்ட திருவை
உனது நிம்மதிக்காய் ஒன்றும்
இல்லாதது போல் இன்று நான்..!


...அன்புடன் ஆனந்தி

Monday, May 16, 2011

வசந்தமே உன் வருகையில்...!



வீட்டருகே வித்தியாசமாய்...
வித விதமாய் வண்ண மலர்கள்..
விளங்க வைக்குமே உன்
வசந்தத்தின் வருகையை...!

வாடி நிற்கும் தருணம் எல்லாம்
வாசலில் பூத்திருக்கும்
வாச மலர் அழகு தன்னில்..
வந்த இடம் தெரியாமல்
வாட்டமும் ஓடிப் போகும்...

கொஞ்சி மகிழத் தோன்றும்
கொத்து கொத்தான மலர்க்கூட்டம்
நெஞ்சை அள்ளுமே
நேர்த்தியான பூந்தோட்டம்..!

எழுந்தே நான் வருகையிலே..
என் எதிரில் மலர் கண்டால்..
எண்ணமெல்லாம் வண்ண மயமாய்
ஏகாந்த எழுச்சி தோன்றும்...

புது மலர் உன்னைக் கண்டால்..
புத்துணர்வும் பொங்கும் இங்கே..
பனி மலர் பார்த்தாலே...
பரவசமாய் பாடத் தோன்றுமே...

ஒரு நாளோ ஒரு வாரமோ
உன் ஆயுள் எதுவாயினும்
உன்னிடம் வருவோர் எல்லாம்
உற்சாகத்தில் மலரச் செய்வாய்...

வசந்தமே உன் வருகையில்
வஞ்சி என் உள்ளத்தில்
வற்றாத நீரோட்டம்....
எப்போதும் எனக்குள்ளே
உனக்கான சீராட்டம்....!!

...அன்புடன் ஆனந்தி 

Monday, May 9, 2011

எவ்வாறு மறந்தாய் இன்று?


இதயத்தில் சுமக்க
இசைந்த உன்னுள்ளம்...
இயல்பாய் இருப்பதில்
இறுக்கம் எதற்கோ?

இரு கரம் நீட்டியே
அணைக்கா விடினும்
இனிதாய் ஓர் வார்த்தை
இயம்பத் தயக்கம் ஏனோ?

உனதருகில் நகர்கின்ற
ஒவ்வோர் நொடியும்..
உனக்குள் அமிழ்ந்து விட
ஆசை கொண்டேன்..

கண்களில் தொடர்ந்த
காதல் பயணம்...
கல்லறை வரையிலும்
தொடரக் கூடும்..

கண்களால் கைது செய்து
கள்வனே உன்னை
காலமெல்லாம் என்னில்
சிறை வைத்தேன்...

நெஞ்சைத் தொட்டு
நிஜமாய் சொல் ஒன்று..
எவ்வாறு எனை நீ
மறந்தாய் இன்று?

...அன்புடன் ஆனந்தி 






About Me

My photo
I am a jovial.. sensitive.. happy person who likes to be around good friends ;)