topbella

Wednesday, October 10, 2012

நில்லாமல் சென்றாயோ..!



இறுக்கமான உள்ளம் கூட 
இயல்புக்கு திரும்பும் வண்ணம்
இயல்பாய் அசைந்து அசைந்து 
இலை உதிர்க்கும் மரங்கள்...

தன்னியல்பு மாறாது 
தனித்தன்மை குறையாது 
தன்னலம் கருதாது 
தயங்காது தரை தொடும் 
தன்னிகரில்லா இலைகள்...

பிரதி பலன் எதிர்பார்க்காது 
பின் விளைவுகளை எண்ணாது 
பிரகாசிக்கும் வண்ணத்துடன் 
புத்துணர்வோடு வலம் வந்தாய்...

உத்திரவாதம் ஏதுமின்றியே
உதிர்ந்து போகும் போதும்
உன்னழகில் எமை வென்று 
உல்லாசமாய் செல்கிறாய்...

எதையும் எதிர்பார்க்காது
எவர் உதவியும் நாடாது 
நீ நீயாய் இருந்து போவென்றே 
சொல்லாமல் சொல்லி
நில்லாமல் சென்றாயோ..!

~அன்புடன் ஆனந்தி

Wednesday, October 3, 2012

பஜ்ஜி...!


தேவையான பொருட்கள்:

கடலை மாவு - 1 1/2 கப்
அரிசி மாவு - 1 கரண்டி
பெருங்காயம் - சிறிது
மிளகாய்த்தூள் - தேவைக்கு ஏற்ப
உப்பு - தேவையான அளவு
பூண்டு - 1 பல்
பஜ்ஜி மிளகாய் - 5
வெங்காயத் தாள் - 5 (ஒரு கட்டு)
 
செய்முறை:

  • ஒரு பாத்திரத்தில் கடலை மாவு, அரிசி மாவு, பெருங்காயம், மிளகாய்த் தூள், இடித்த பூண்டு, உப்புடன் தேவையான தண்ணீர் சேர்த்து தோசை மாவு பதத்திற்கு கரைத்து கொள்ளவும்.
  • மிளகாய் மற்றும் வெங்காயத்தாளை நீள வாக்கில் நறுக்கி வைத்துக் கொள்ளவும். (மிளகாய் மிகவும் காரம் என்றால் உள்ளே உள்ள விதைகளை நீக்கி விடவும்)
  • ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி அது சூடானவுடன் மிளகாய் மற்றும் வெங்காயத்தாளை ஒவ்வொன்றாய் கரைத்து வைத்துள்ள மாவில் தோய்த்து, மெதுவாய் (எண்ணெய் தெறித்து விடாமல்) போட்டு, நன்கு வெந்து சத்தம் அடங்கியவுடன் எடுக்கவும்.
  • கத்தரிக்காய், குடை மிளகாய், உருளைக்கிழங்கு, வெங்காயம், அப்பளம், சௌ சௌ, காலிபிளவரிலும் கூட இதே மாவினை உபயோகித்து பஜ்ஜி செய்யலாம்.
 

~அன்புடன் ஆனந்தி

About Me

My photo
I am a jovial.. sensitive.. happy person who likes to be around good friends ;)