வாழ்க்கை எவ்வளவு அழகானது... அதை அனுபவிக்கக் கூட நேரம் இல்லாது அரக்க பறக்க அலைந்து கொண்டிருக்கிறோம்.. எளிமையான விசயங்களில் கூட நாம் ஏகாந்தத்தை உணர முடியும். எதற்கு இந்த ஓட்டம்... அப்படி நிற்காது ஓடி சம்பாதித்து என்னென்ன சாதித்து விட முடியும்... ஓட்டம் ஒரு நாள் நின்ற பின்.. நின்று நிதானமாய் திரும்பி பார்த்தால்.. நிதர்சனம் நம்மை சுடும். நினைத்ததெல்லாம் அடைந்தோமா? அடைந்ததெல்லாம் ரசித்தோமா?
ஆர்ப்பாட்டம் இல்லாத காலை விடியலை எத்தனை பேர் கவலை மறந்து ரசித்து கண்டிருக்கிறோம்... இல்லை ஆதவன் அடங்கும் தருணம் அந்த அம்சத்தை எத்தனை பேர் ரசித்திருக்கிறோம்...? கண் விழிக்கும் போதே....அடடா நேரமாகி விட்டது.. என்று புலம்பியவாறே அடித்து பிடித்து ஆரம்பிக்கிறது காலை... இப்படி இயந்திரத்தனமான வாழ்வில் நாம் இழந்தது எத்தனை...எத்தனை.. எண்ணிலடங்கா....!
சின்ன சின்ன விஷயம் கூட உணர்ந்து, ரசித்து, உள்வாங்கி செய்ய நேரம் இல்லை. ஆவி பறக்கும் காலைக் காப்பியை அமர்ந்து ரசித்து பருகி ஆண்டுகள் ஆகி விட்டது.. செய்த உணவை சிறிது நேரம் அமர்ந்து உண்ண பொழுதில்லை.. சீக்கிரம் சீக்கிரம்... என்று ஓடி.. சிதறித் தான் போய் விட்டது.. சின்னச் சின்ன சந்தோசங்கள்...!
எழுத்து நடையில் செந்தமிழில் தான் எழுத வருகிறது... வாங்க பேச்சு நடைக்கு மாறி விடலாம்..
சரி இப்போ சொல்லுங்க.. காலை காப்பியை நீங்க ரசித்து அமர்ந்து குடித்து விட்டே.. அடுத்த வேலை பார்ப்பவரா... சபாஷ்.. நீங்கள் அதிர்ஷ்ட சாலி தான்.. அதுவே போட்ட காப்பியை பல தரம் மைக்ரோ ஓவனில் வச்சு சுட வச்சு.. மறந்து.. திரும்ப சுட வச்சு மறந்து... ஒரு வழியா காப்பி கதை முடிஞ்சு.. அடுத்து சாப்பாடு வந்தா... கோழி கொரிக்கிற மாதிரி.. வேக வேகமா என்ன உள்ள போகுதுன்னே தெரியாம எத்தனை பேர் சாப்பிடுறோம்...?? முதல்ல இந்த பழக்கத்தை மாத்தணும்... தனக்கென்று நேரம் ஒதுக்கி அந்த தனிமையை கூட ரசித்து வாழ தெரியணும்...
"அட என்னங்க லைஃப்.. விடிஞ்சதும் தெரியல.. அடஞ்சதும் தெரியல.. பொங்க வேண்டியது.. திங்க வேண்டியது.. தூங்க வேண்டியது..." இப்படி எத்தனை பேர் சொல்லி இருக்கோம்? ஏன்.....? நமக்குன்னு நாம யோசிக்கிறதே இல்ல... ஒவ்வொரு கட்ட வாழ்க்கைலையும் யாருக்காச்சும் பொறுப்பா கடமை தவறாம வேலை செஞ்சிட்டு இருப்போம்...
நான் ரசித்த ஒரு விஷயம் நினைவுக்கு வருது... ரெண்டு பிரண்ட்ஸ் பேசிக்கிறாங்க... ஒருத்தர் படுத்துகிட்டு கால் மேல கால் போட்டு ஆட்டிக்கிட்டே இருக்காரு.. அவர் கிட்ட. அடுத்தவர் கேக்குறாரு..
ஏண்டா.. உனக்கு எதைப் பத்தியும் கவலையே இல்லையா? ஏண்டா இப்டி இருக்க?
ஏன்.. எப்படி இருக்கேன்? எதுக்கு கவலைப்படணும்?
ஹ்ம்ம்.. எதிர்காலம் பத்தி யோசிக்க மாட்டியா?
யோசிச்சு...?
சம்பாதிச்சு சேர்த்து....
சேர்த்து வச்சு...?
வீடு வாங்கலாம்....
வாங்கி?
கார் வாங்கலாம்?
அப்புறம்...?
வெளிநாடெல்லாம் சுத்தி பாக்கலாம்...
அப்புறம்...?
(இப்போ கேள்வி கேட்டவர் கொஞ்சம் கடுப்பாகி.... )
ம்ம்ம்...அப்புறம் என்னவா... பேங்க்ல நிறைய பணம், ஆசப்பட்டதெல்லாம் வாங்கிட்டா.. நம்ம பாட்டுக்கு ஹாயா... கால் மேல கால் போட்டு ஆட்டிட்டு இருக்கலாமே...?
(படுத்திருந்த நண்பர்... ஹா ஹா... சிரிச்சிட்டு)
அட நாயே... அத தானடா இப்போ பண்ணிட்டு இருக்கேன்..ன்னு.
(நண்பர் ஏக கடுப்பாகி எஸ்கேப் ஆய்ட்டாரு...)
அதுக்காக சும்மா படுத்துட்டு கால் மேல கால் போட்டுட்டு இருக்க சொல்லல... செய்ய வேண்டியத செய்யாம இருக்கறதும் கூட தப்பு தான்.. வாழ்க்கைய வாழணும்..... மிஷின் மாதிரி இல்லாம.. உயிரோட்டத்தோட இயல்பா இருக்கணும்... அவ்ளோ தாங்க...!
(படம்: நன்றி கூகிள்)