அன்பான வணக்கம்.
எனது முதல் கவிதை நூல் என்னுயிர் நீயன்றோ-விற்கு கவிஞர் கோவை சசிகுமார் அவர்களின் நூல் விமர்சனம்.
மிக்க நன்றி.
என்னுயிர் நீயன்றோ
#நூல்_விமர்சனம்
நூலாசிரியர்:
நெல்லை அன்புடன் ஆனந்தி
பதிப்பகம்: மணிவாசகர் பதிப்பகம்
மனிதனை தன் நெறி தவறாது ஒருவனுக்கு ஒருத்தி என்ற கட்டமைப்போடு விட்டுக்கொடுக்க முடியாத அன்போடு வாழவைப்பது காதல். கணவன் மனைவி என்ற நல்ல பந்தத்தை உருவாக்குவதும் காதல்தான். காதல் வயப்படாத மனிதன் இல்லையெனறுதான் சொல்ல முடியும். வாழ்க்கையின் பெரும்பகுதி நிம்மதியைத் தரக்கூடியது காதல் வாழ்ககைதான். மனிதன் தன் வாழ்க்கைமுறையில் எவ்வளவு மாற்றங்களைக் கொண்டுவந்தாலும் மாற்றமுடியாத ஒன்று காதல். அனைவரும் இதை கடந்துவந்துதான் ஆக வேண்டும். பெண் மீது ஆணுக்கும், ஆண் மீது பெண்ணிற்கும் அன்பின்பால் ஈர்ப்பு உருவாகி உனக்கென நானும் எனக்கென நீயும் என்ற புரிதலுடன் கூடிய வாழ்க்கையின் எல்லைவரை பயணிக்கவும், அன்பு, பாசம், நேசம், காத்திருப்புக்கள், ரசனை, உரையாடல், ஸ்பரிசங்கள் என ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுக்காமல் கடைசி வரை வாழும் வாழ்க்கைதான் காதலுக்குச் சான்று. இப்படியாக காதல் ரசனையில் "என்னுயிர் நீயன்றோ" என்ற கவிதை தொகுப்பை கவிஞர் அன்புடன் ஆனந்தி அவர்கள் நமக்கெல்லாம் வழங்கியிருக்கின்றார். தொகுப்பு முழவதும் காதல் ரசனையைச் செறிவூட்டியிருக்கின்றார். அலாதிப் பிரியங்களை சொற்களில் அள்ளிக் கொட்டுகின்றார். நூல் முழுக்க சலிப்பில்லாமல் ஒரு காதல் வாழ்க்கையை வாழும் அளவுக்கு எளிமையான கவிதை நடையில் மிகச்சிறப்பாக அமைத்திருக்கின்றார். தொகுப்பு முழுவதும் காதலின் சாம்ராஜ்யத்தில் பவனி வருவதுபோல் தோன்றுகிறது. மொட்டுக்களில் விரிந்த நூறு கவிதை மலர்களை தலைப்பிட்டு கவிதையாக்கி இருக்கின்றார் கவிஞர் அன்புடன் ஆனந்தி. வாசிப்போரின் உள்ளம் கொள்ளை கொள்ளும் அளவுக்கு காதல் ரசனைகள், நினைவுகள், பிரிவுகள், கற்பனைகள், ஸ்பரிசங்கள் என அனைத்தையும் மற்றும் சமூகம் சார்ந்தும் தனது எழுத்துக்களில் ரசிக்க வைத்திருக்கும் நூலாசிரியர் அன்புடன் ஆனந்தி அவர்களுக்கு வாழ்த்துகள்.
சிறப்பாக மலர்ந்திருக்கும் நூறு காதல் மஞ்சரிகளில் நறுமணமாய் ஐந்து கவிதைமலர்களின் வாசனையை எனது விமர்சனத்தில் மணக்கச் செய்கின்றேன்
****************************
காதல் தனது தொடக்கத்திலும் காதலிக்கும்போதும் உள்ளத்தை உருக வைத்து மெலிதான உதட்டோர புன்னகையை தனது காதல் இணைக்குத் தெரியும்படி சமிக்கை செய்யும் ரகசியம்தான் காதல்.
காதல் ரசனை ரகசியமாய் பேசவைத்து அதை தனிமையில் அந்த நினைவுகளை ரசிக்க வைத்து சிரிக்க வைக்கும். சில நேரங்களில் இது என்ன உணர்வு? என சிந்திக்க வைத்து தனக்குள் ஒரு தேவதையாய் மாற்றி சிறகடித்துப் பறக்க வைக்கும். மேலும் காதல் என்பது பல இரவுகளை விழிக்கச் செய்து பகலில் உறங்க வைக்கும். காதலென்ற உலகத்தில் பயணிக்கும்பொழுது வெளியுலகத்தின் நிகழ்வுகளை மறக்கச் செய்யும். மனதில் கற்பனைக் கோட்டை கட்டி தனக்கான காதல் மாளிகையில் அருவி, மரம், குருவி, மற்றும் பலவற்றுடன் பேச வைத்து மனதுக்குள் மத்தளம் அடிக்க வைக்கும். அன்பின் அணுசரனையைக் கற்றுக்கொடுக்கும். நிறைய பேச வைக்கும். தன இணையின் மனதிற்காக நிறைய சாதிப்பதற்கான வலிமையைக் காதல் கொடுக்கும். விதியைக் கூட வெல்லும் என்கிறார். இப்படியான உணர்வுகளைக் காதல்தான் கொடுக்கும் என்பதை பக்கம் 50ல் "இதன் பேர்தான் காதலா" என்ற தலைப்பில் காதல் இம்சைகளைப் பதிவு செய்கின்றார்
#கவிதை பக்கம் 50
தலைப்பு: #இதன்_பேர்தான்_காதலா
உள்ளத்தை உருகச் செய்யும்..
உதட்டில் புன்னகை வருவிக்கும்..
ரகசியம் பேசச் சொல்லும்..
ராத்திரியில் சிரிக்க வைக்கும்..
தனித்தமர்ந்தே சிந்தனை செய்யும்..
தாவி விண்ணில் பறக்கச் செய்யும்..
துடிப்புடன் இருக்கச் செய்யும்..
தூக்கத்தையும் கெடுத்துச் செல்லும்..
உலக நடப்புகளை உதறித் தள்ளும்..
உள்ளுக்குள் ஒய்யார நடை போடும்.
கனவுலகில் வாழ்க்கை நடத்தும்..
நிகழ்வுகளில் கனாக்காணும்..
மனத்திற்குள் மாளிகை கட்டும்..
மாளிகையில் தன் துணை நிறுத்தும்..
மரம், அருவி, குருவியுடன் பேசித் திரியும்..
மத்தளமே இல்லாமல் வகையாய் வாசிக்கும்..
அனுசரணையாய் நடந்து கொள்ளும்..
ஆத்திரப்பட ஆழ்ந்து யோசிக்கும்..
சாத்திரம் பேசிச் செல்லும்..
சாதிக்க வலிமை கொடுக்கும்..
விண்மீண்களை விலை பேசும்..
விட்டு நகர்ந்தால் தர்க்கம் செய்யும்
விவரணையாய் பேசச் சொல்லும்
விதியையும் வெல்லச் செய்யும்...!
***********************
காதல் வாழ்வியல் நியதிக்கு உட்பட்டது. காதலின் இன்பம் காதல் துணை தன்னுடன் இருப்பதும், துன்பம் என்பது பிரதலில் தன்னைவிட்டு தூரமாய் சென்று ஏங்க வைக்கின்றது என்கிறார் நூலாசிரியர். எதுவெல்லாம் என்பதில் கண்களில் கலப்பதும், அன்பின் வழி அடைக்கலமாய் காமம் கட்டாயச் சிறையாக்குவதும், மோகம் எதுவெனில் பேச்சிலும் மூச்சிலும் லயித்திருப்பதும், உனக்கு நான் எனக்கு நீயென்ற தேடல்களின் உயிர்ப்பும் ஆகியன காதலில் எதுவென்றேன் என்ற தலைப்பில் பக்கம் 59ல் அழகு செய்கின்றார் கவிஞர் அன்புடன் ஆனந்தி.
#கவிதை பக்கம் 59
தலைப்பு: #எதுவென்றேன்
இன்பம் எதுவென்றேன்
இனியவள் உன்னுடன்
இயைந்து இருப்பதென்றாய்..
துன்பம் எதுவென்றேன்
தூர இருந்தபடியே
ஆறாத் துயரத்தில்
ஆழ்த்துவதென்றாய்..
காதல் எதுவென்றேன்
கண்கள் நான்கும்
கலப்பதென்றாய்..
காமம் எதவென்றேன்
உன்னைக் கண்டவுடன் கைகளுக்குள்
கட்டாயம் சிறை
வைப்பதென்றாய்..
மோகம் எதுவென்றேன்
மூச்சிலும் பேச்சிலும்
முக்காலமும் உனையே
மோகித்திருப்பதென்றாய்..
தேடல் எதுவென்றேன்
தெரிந்தும் என்னுயிரைத்
தேடித் தேடித்
திரிவதென்றாய்...
******************************
வாழ்க்கையின் பெரும்பகுதி எதுவும் நிரந்தரமில்லாதது. நினைவுகள், வாழ்வியலின் பல தருணங்கள் என அனைத்தும் கடந்து செல்லக் கூடியவைகள்.
மலர்கள் உலர்ந்து போவோம் என்று தெரியாமல் இதழ்விரித்துச் சிரிக்கின்றன எனவும், இலைகள் உதிர்ந்து விடுவோம் என்று தெரியாமல் சலசலக்கின்றன எனவும், கண்களைக் கவரும் வண்ணக் கோலங்கள் கலைந்து போவோம் என்று உணர்வதில்லை
எனவும் மெழுகுவர்த்தி கரைந்துபோவோம் என்று கலங்காமல் ஔியை வீசுவதாகவும் விட்டில் பூச்சிகள் எரிந்துவிடுவோம் என்று தெரியாமல் நம்பிக்கையில் வாழ்வதாகவும் வாழ்வியலில் எதுவும் நிரந்தரமில்லாமல்தான் வாழ்கிறோம் என்பதை மிக அருமையாக பக்கம் 88ல் எது நிரந்தரம்? என்ற தலைப்பில் பதிவு செய்கின்றார்.
#கவிதை பக்கம் 88
தலைப்பு: #எது_நிரந்தரம்?
உலர்ந்த போவோம்
என்றறியாமல்
உதடு விரித்துச் சிரிக்கும்
உன்னத மலர்கள்..
உதிரப்போவதை
உணராமல்..
உற்சாகமாய்ச்
சலசலக்கும் இலைகள்..
கலைந்து போவோம்
என்று உணராக்
கண் கவரும்
வண்ணக் கோலங்கள்..
கரைந்து போவோம்
என்பதறியா
ஏராள விட்டில் பூச்சிகள்
எல்லாம் வாழும்
நம்பிக்கையில்...
எழுதிய கவிதை
அழிந்து போவதில்லை
எடுத்த பிறவி
எதுவுமற்றுப் போவதில்லை...
எதுவும் நிரந்தரம் இல்லை
எதாரத்தத்தை மனத்தில் ஏற்றி
எண்ணியதை ஈடேற்றி
ஏகாந்தமாய் வாழ்வோம்...!
******************************
பெற்றோர்கள், சகோதர சகோதரிகள் என பல உறவுகள் என இருந்தாலும் தனக்கென உயிர்ப்புள்ள ஓர் உறவை ஏற்படுத்தி அதனை தனதாக்கி அவன் எனக்கானவன்/அவள் எனக்கானவள் என்ற புதிய உறவை ஏற்படுத்துவது காதல்தான். அந்த உறவு வாழ்க்கையின் எல்லைவரை தனக்குள் வைத்திருக்கும் அன்பின் வசம் காதல் புதிய உறவை வலுப்படுத்துகின்றது. எக்காரணத்திற்காகவும் அந்த உறவை விட்டுக் கொடுக்காமலும், ஒருபோதும் பார்க்காமலும் இருக்க முடியவில்லை எனவும், அந்த உறவை நிராகரித்து நினைத்த மாத்திரம் காகிதமாய் கசக்கி வீச முடியாது எனவும், நினைத்தவுடன் கலைத்துவிட இந்த உறவானது கருவில்லை எனவும், இவ்வாறான உயிரில் கலந்த உறவை பக்கம் 117ல் உணர்ச்சி மிகுந்ததாய் உயிரப்பூட்டி இருக்கின்றார் கவிஞர் அன்புடன் ஆனந்தி.
#கவிதை பக்கம் 117
தலைப்பு: #உயிரில்_கலந்த_உறவு
உதிரத்தில் உனை ஊற்றி
உன் பெயரை எனில் ஏற்றி
உளளார்ந்த அன்பினாலே
ஊமையாய் வலம் வந்தேன்...
எத்தனைத் திங்கள் என்று
எனக்கேதும் புரியவில்லை
எதிர் பார்க்காமல் என்னால்
இருக்கவும் முடிவில்லை...
நினைத்த மாத்திரத்தில்
கலைத்துவிட இது கருவுமல்ல
கசக்கி எறிந்து விடவோ
இது காகிதமும் அல்ல....
நினைவோடும் உயிரோடும்
ஒன்றாகி விட்ட உரு...
ஏனோ உன் நிம்மதிக்காய்
என்னெதிரில் நீ இருந்தும்
எவரோ போல் நானிருந்தேன்...
என்னை அசைய விடாமல்
எதிர்த்து நிற்கும் காதலிடம்
நான் என்ன சொல்லி
இசையச் செய்வேன்
உணர்வில் கலந்த உறவை
உயிராய் மாறிவிட்ட திருவை
உனது நிம்மதிக்காய் ஒன்றும்
இல்லாதது போல் இன்று நான்..!
****************************
எண்ணங்களைப் பிரதிபலிப்பது முகம். முகத்தைப் பிரதிபலிப்பது கண்ணாடி. எப்படியெல்லாம் மனம்போல் முகம் மாறுகின்றதோ அதைக் கண்ணாடி அப்படியே உண்மையாகப் பிரதிபலித்துக் காட்டும். எண்ணங்களில் கோபத்தின் போது குரூரனாகவும், எலனலாவற்றிற்கும் சிரித்துக் கொண்டே இருந்தால் ஏமாளியாகவும், எவ்வித உணர்வுமில்லாமல் இருந்தால் எமட்டனாகவும், எரிச்சலைக் காட்டினால் எதிரி எனவும், எதிர்மறை உணர்ச்சிகளைக் காட்டினால் எள்ளலுக்கும் உள்ளாக நேரிடும் எனவும், மாறாக எழில், சிரிப்பு, ஒயிலான சிரிப்பு, சாந்தமான பார்வை இப்படிப் பலவாறாக முகத்தில் உண்டாக்கிக் கொண்டால் மிகுந்த அதிர்ஷ்டசாலியாக உருவாகலாம் என்பதை கவிஞர் பக்கம் 157ல் கவிதையாக்கித் தந்திருக்கின்றார்
#கவிதை பக்கம் 157
தலைப்பு: #முகம்
உன் எண்ணத்தைப் பிரதிபலிக்கும் கண்ணாடி...
உன் கோபத்தைக் காட்டினால் குரூரனாவாய்..
எலனலாவற்றுக்கும் சிரித்தாய் என்றால்
ஏமாளி ஆகிப் போவாய்
எந்தவித உணர்ச்சியும் காட்டாமல் இருந்தால்
எமட்டன் ஆவாய்..
எரிச்சலைக் காட்டினால்
எதிரி ஆகிப் போவாய்..
எதிர்மறை உணர்ச்சி காட்டினால்
எள்ளலுக்கு ஆளாகிப் போவாய்...சரி பிறகு
எப்படித்தான் என் முகத்தை வைத்திருப்பது?
எழிலாக ஒரு சிரிப்பு...
ஒயிலாக ஒரு நகைப்பு...
சாந்தமாய் ஒரு பார்வை...
சக்தி தருவதாய் ஒரு முறுவல் சங்கேதமாய் ஒரு சேதி..
சாஸ்வதமாய் ஒரு புன்னகை..
இத்தனையும் உன் முகத்தில்
இயல்பாய் வருமென்றால் உன்னைப்போல்
இவ்வுலகில் அதிர்ஷ்டசாலி யாருளரோ?
*************************
176 பக்கங்களில் நூறு கவிதைகளாக ரசனையோடும் வலியோடும் நிதர்சனமாய் மெல்லிய இழையோடும் மிருதுவான உணர்வுகளில் காதலையும் ஆங்காங்கே சமூக உணர்வையும் வெளிப்படுத்திய பாங்கு சிறப்புக்குரியதாகும். அமெரிக்காவில் பல இணையங்கள் மற்றும் தமிழ் நிகழ்வுகளில் கலந்துகொண்டு சிறப்பிக்கும் கவிஞர் அன்புடன் ஆனந்தி அவர்களுக்கு #என்னுயிர்_நீயன்றோ நூல் வழி எனது அன்பிற்கினிய பாராட்டுதலையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கின்றேன்
சிறந்த முறையில் அட்டைப்படம் மற்றும் அச்சேற்றிய மணிவாசகர் பதிப்பகத்தாருக்கும் வாழ்த்துகள்
கவிஞர் கோவை சசிகுமார்


0 comments:
Post a Comment