topbella
Showing posts with label கவிதை. Show all posts
Showing posts with label கவிதை. Show all posts

Thursday, May 22, 2025

இலை நழுவவிட்ட துளிகள்

மழை விட்ட நேரம்
மரக்கிளைகளில் 
அங்கங்கே 
மழைத்துளிகள் 
விளையாடின

நகர்ந்த காற்று 
சற்றே அவற்றை
நாட்டியம் ஆடச் செய்தது 

இலை நழுவவிட்ட துளிகள் 
தரையைத் தொட்டது 
தரை தொட்ட துளிகள் 
பூமியின் தாகம் தீர்த்தது 

நிலத்தடி மண்புழுக்கள் 
மெதுவாய் வெளிவந்து
மேகம் பார்த்தது 

இரைக்குக் காத்திருந்த 
பறவை ஒன்று 
இதை இதமாய்ப் பார்த்தது 

நொடிப்பொழுதில் 
தரையிறங்கி 
மண்புழுவைக் 
கொத்தத் தொடங்கியது 

விடுவித்துக் கொள்ள 
மண்புழுவும் 
விதவிதமாய் 
முயற்சி செய்தது 

பாவம் புழு என நினைத்தே
பாய்ந்து பறவையை 
விரட்டினேன் 

வேகமாய்ப் பறந்து 
வெகு அருகில் 
மரத்தில் அமர்ந்தது 

அமர்ந்த பறவை 
எங்கும் போகவில்லை 
அசையாது 
பார்த்துக் கொண்டிருந்தது 

சற்றே மணல் நோண்டி 
மண்புழுவை 
பத்திரமாய்ப் 
பதுக்கி வைத்தேன் 

திருப்தியுடன் 
திரும்பிய கணத்தில்
திடீரெனப் பாய்ந்து
தரையிறங்கியது 
அந்தப் பறவை 

எங்கு வைத்தேன் என்று 
எப்படி அறிந்தது?!
எனக்குத் தெரியவில்லை 

சரியான இடத்தில் 
கொத்தித் தோண்டி
மண்புழுவை வாயில் 
கவ்விக்கொண்டு 
வானை நோக்கிப்
பறந்தது 

இயற்கையின் 
இயக்கத்தை 
யார் தான் 
நிறுத்த முடியும்?

அவரவர் வாழ்வை 
அவர்களே தான் 
வாழ்ந்தாக வேண்டும் 

பெரிதாய் ஏக்கப் 
பெருமூச்சு விட்டபடி 
வீட்டிற்குள் சென்றேன்
நானும்!

நெல்லை அன்புடன் ஆனந்தி
மே 21, 2025

Monday, April 8, 2024

விசித்திரம் தான்

கனவுகளைக்
கலைத்து விட்டேன்
கண்களுக்குத்
தடை விதித்தேன்

கணநேரம்
ஆகவில்லை
மனமேனோ
மீளவில்லை

உணர்வுக்குள்
ஒடுங்கியது
உயிரை மெல்ல
அசைக்குது

விழிகளுக்கு
வேலியிட்டும்
இமை திறந்து
இம்சை செய்யும்

கண்திறந்த
மறு நொடி
கனவுகள்
மீள்பார்வை

விசித்திரம் தான்
விலகியும் விலக
மறுக்கின்ற
இதயம்!

~நெல்லை அன்புடன் ஆனந்தி

Sunday, April 7, 2024

மௌன புத்தன்


திரும்பத்திரும்பப் படித்தும்

திகட்டாத கவிதை
உன் பெயர் தான்!

நினைவுக்குள்
நித்தமும்
நீங்காமல்
சத்தமிடும்
மௌன புத்தன் நீ!

நெல்லை அன்புடன் ஆனந்தி

Tuesday, September 15, 2020

வெண்பா 19

வெண்பா 19

மயக்கும் குறளை மழலைக் குரலில்
வியந்து உவந்தனை விந்தை - பயத்தது
நன்மை வழங்கும் நயமும் சுரந்திட
இன்பம் நிறைந்தது காண்.
*~ஆனந்தி*
வெண்பா#19
ஆகஸ்ட்-3-2020

வெண்பா 17


மழைத்துளி தாங்கி மலர்ந்த கணத்தில்
தழைத்துச் செழிக்கும் தளிரும் - பிழைத்த
துளிகள் கிளைத்துத் துயின்றிட மேவிக்
களித்தது நாணும் தினம்.
~ஆனந்தி
வெண்பா#17

 

விடுதலை நாள் கவி அரங்கம்-பொதிகை தமிழ்ச் சங்கம்


 

செம்பருத்தி - வெண்பா 20


இதழை விரித்தே இனிய மகிழ்வை
இதமாய் அளித்தே இரவில்- பதமாய்
மலர்வாய் தருவாய் மனமே நிறைவாய்
அலர்வாய் கனிவாய் தினம்.
~அன்புடன் ஆனந்தி
வெண்பா#20


 

ஆத்தா நா சொல்லுறேன்..!


கூடி இருக்கும் சனங்களுக்கு
சேதி ஒன்னு சொல்லுறேன்..
கூலிக்கு வேலைக்குப் போயி
கொஞ்ச நஞ்ச காச மிச்சம் பண்ணி
குடிசை வீட்டில கஞ்சித் தண்ணி
குடிக்கிற நமக்கு
குடும்பம்தேன் எல்லாம்
குடிச்சிட்டு வர புருசங்கள
கூராப் பேசி நேராக்கப் பாருங்க
சரிப்பட்டு வரலேன்னா
சாதி சனத்துக்கு காத்துக் கிடக்காம
சாப்பாடு போடாம வெளிய தள்ளி
கதவ சாத்துங்க
வீதில கெடக்கட்டும் விட்ருங்க...
படிச்ச புள்ளைகளும் இங்க
பயந்துகிட்டு இல்லாம
பாரதியார் சொன்ன
புதுமைப் பொண்ணா
பத்திரமா உங்கள பாத்துக்கங்க..
உயிர்க்கொல்லி நோயி
ஊரவிட்டு இன்னும் போல தாயி
ஊட்டுக்குள்ள கிடந்தா
உன் கவுரவம் ஒன்னும் ஆயிடாது..
உதவிக்கு கூட ஆளு வர முடியாது
உசுரு முக்கியம் சொல்லிப்புட்டேன்
உசாரா இருந்துக்கங்க கண்ணுகளா
சூதானமா இருந்துக்கங்க
சுருக்கமா சொல்லிப்புட்டேன்..!!
~அன்புடன் ஆனந்தி


 

இல்லாத தாயை எண்ணி...!


இல்லாத தாயை எண்ணி
இதயம் நனைந்து
சொல்லாமல் சேதி சொல்லும்
சொக்கத் தங்கம்...
அம்மா....நீ
இருந்திருந்தால்
இவ்வாறே எனை
அணைத்திருப்பாயோ?!
இல்லை இருகண் மூடி
நினைத்திருப்பாயோ?!
உன் இதயச் சூட்டை
நான் அறியேன்..
என் இதய நெருப்பை
நீ அறிவாயோ?
காணாத உனையெண்ணி
கண்ணீர் வடித்த நாட்கள் பல..
கடவுளின் சாபம் என்றே சமாதானம்
செய்த நாட்கள் சில..
உலகமே வெறித்திடினும்
உன் துணையில் வென்றிருப்பேனே..
உறவுகள் கழித்திடினும்
உன் உறவில் மகிழ்ந்திருப்பேனே..
கனவுகள் கலைந்திடினும்
உன் கைகோர்த்தே நானிருப்பேனே
காலம் முடிந்திடினும்
உன் காலடியில் தவழ்ந்திருப்பேனே..!
~அன்புடன் ஆனந்தி



 

வளரி நடுவர் பொறுப்பு


இந்த அரிய வாய்ப்பினை எனக்கு வழங்கிய வளரி பன்னாட்டுக் கவிஞர் மன்றத்திற்கும், நிறுவனர் ஐயா அருணா சுந்தரராஜன் அவர்களுக்கும் என் சிரம் தாழ்ந்த நன்றிகள்.

பகிர்ந்தமைக்கும் நடுவர் பொறுப்பினைக் கையாண்ட அர்ப்பணிப்பு உணர்வுக்கும் நன்றியும் மகிழ்ச்சியும்!








 

படக்கவிதைப் போட்டி-சங்கத் தமிழ் இலக்கியப்பூங்கா


 

கடவுளின் மறு உருவம்


 

தமிழால் இணைவோம் - கவிதை வாசிப்பு

கவி பாடத் தந்த கனிவான வாய்ப்பிற்கு தமிழால் இணைவோம் குழுவிற்கும், சத்யா அவர்களுக்கும் என் சிரம் தாழ்ந்த நன்றிகள்




 

ஆசிரியர் தின வாழ்த்து 2020


அன்னைத் தமிழுக்கும்
அன்றாடம் வாழ்வியல்
பாடங்கள் கற்றுக்கொடுக்கும்
அனேக ஆசிரியர்களுக்கும்
இக்கட்டான இச்சூழலிலும்
இதயம் நனைக்கும் வண்ணம்
இன்சொற்களால் வழிகாட்டும்
ஆன்றோர்களுக்கும்
ஈர நெஞ்சுடன்
தமிழ் வாழப்பாடுபடும்
சான்றோர்களுக்கும்
ஆசிரியர் தின நல்வாழ்த்துகள்..!
~அன்புடன் ஆனந்தி



 

பெண்ணரசி..!

 


தங்க மகளை இடுப்பில் தாங்கி
தலைமேல் கடவுளை ஏந்தி
புன்னகை விலகாத பெண்ணரசி
பூரிப்பில் முழு பௌர்ணமி..!

~அன்புடன் ஆனந்தி

இசைவாய் எழிலே..!


வானை எட்டிடவே
வாஞ்சை கொண்டனை
வண்ணம் மிளிரிட
வகையாய் வாழ்ந்தனை
எண்ணக் கலவையில்
நிறைந்திட்ட சுகமே
ஏகாந்தமே எனக்கு
இசைவாய் எழிலே..
கானம் இசைத்திடு
காதல் பரப்பிடு
மோனம் கலைத்திடு
மோகம் தெளித்திடு..!

~அன்புடன் ஆனந்தி


 

வல்லினச் சிறகுகள் இதழில் எனது கவிதை - மாயை


 

வளரி புரட்டாசி இதழ் 2020


 

Saturday, May 16, 2020

நீங்கா அழகே..!

நீங்கா அழகே
நிழலின் எழிலே
கலையாத கனவே
கண் தேடும் கலையே
மறைந்தோடும் மழலையே
மனம் கவர் மகோன்னதமே
குளிர்வான் நிலவே
குழந்தையின் குதூகலமே
காரிருள் கலைக்கும்
காந்தர்வ ஒளியே
நித்திரை கலைக்கும்
முத்திரை நிலவே
பத்திரமாய் நெஞ்சுள்
பதுக்கி வைத்தேன்

*~அன்புடன் ஆனந்தி 🌻*

வெறும் வார்த்தையில்..!


வெறும் வார்த்தையால் உணர்வதும்
சற்றே மௌனத்தால் மலர்வதும் பேரமைதியில் ஆனந்தம் கொள்வதும்
சொல்லாத மொழியில் நெகிழ்வதும்
வெல்லாத யுத்தத்தில் மகிழ்வதும்..
அருகாமை தந்த அணைப்பில்
பெருகி வரும் பரிதவிப்பில்
உருகிடும் மனத்திளைப்பில்
பருகிடும் உள்ளக் களிப்பில்
மருகிடும் விழிக் கோர்ப்பில்
கடக்கும் நீயில்லா வெறுமையை..!

~அன்புடன் ஆனந்தி🌻

About Me

My photo
I am a jovial.. sensitive.. happy person who likes to be around good friends ;)