இந்த மாத ஸ்பெஷல் வரலக்ஷ்மி தேவியின் விரத பூஜை..! எங்கள் வீட்டில் அந்த பழக்கம் இல்லை என்றாலும்.. எனது நண்பர்கள் வீட்டில் பூஜையில் கலந்து கொண்டேன். ஒவ்வொரு வீட்டிலும்... கலசத்தின் மேல், அம்மனின் முகத்தை வைத்து, அதில் அழகழகாய் அலங்காரம் செய்து... பின்னர் அந்த அம்மனை ஒரு பீடத்தில் வைத்து... தத்தம் வசதிக்குத் தகுந்தாற்போல் 3, 5 அல்லது 9 பிரசாதம் செய்து பூஜை செய்தனர்.
இந்நாளில் லலிதா சஹஸ்ரநாமம் பாராயணம் செய்வதும் வழக்கம். மாலை ஒரு 6:30 மணி அளவில், வீட்டில் இருந்து கிளம்பி.. ஏழு நண்பர்கள் வீட்டில் சென்று மஞ்சள், குங்குமம் வாங்கி வந்தேன். எல்லா இடத்திலும் அம்மனின், அழகிய தோற்றம் மனதிற்கு... நிறைவைத் தந்தது. எனக்கு தெரிந்த அம்மா ஒருவர், என்னிடம் 'வரலக்ஷ்மி நோம்பு' அன்னிக்கு ஒரு மூன்று அம்மனை தரிசித்தல் பாக்கியம்-ன்னு சொன்னாங்க. உண்மையில், அன்று ஏழு முறை அம்மனின் தரிசனம் கிடைத்ததை பெறும் பாக்கியமாய் நினைக்கிறேன்.
ஒருவரை ஒருவர் மிஞ்சும் அளவுக்கு.. அம்மனை அலங்கரித்து வச்சிருந்தாங்க. இதில் குறிப்பாக, எனது வீட்டின் அருகில் உள்ள தோழி நிருபமா... அலங்கரித்திருந்த விதம்.. இன்னமும் என் கண்ணிலேயே நிற்கிறது. ஒவ்வொரு வருசமும்.. ஒரு தீம் வச்சிருப்பாங்க.. அதாவது.. அம்மனின் வாகனம்...! இந்த வருடம்... 'வண்ண மயில்' அம்மனின் வாகனம்!
ஒரு கூடை வாங்கி.. அதனை மயிலின் உடலாய் வைத்து.. அழகான நீல வண்ணத்தில் துணியினை வைத்து.. சுற்றிலும் தைத்து.. மயிலின் நீண்ட கழுத்திற்கும்.. இளநீல வண்ணத்தில் துணியினை தைத்து... பின்னால் நீண்ட தோகைக்கு மயில் இறகுகளை வைத்து அலங்கரித்து... மயிலின் அலகிற்கு தங்க நிறத்தில் காகிதம் வடிவமைத்து... மயிலின் உடலெங்கும்... வண்ண வண்ண கற்கள் பதித்து.. அதன் மேல்... அம்சமாய் அலங்கரிக்கப்பட்ட தேவியை ஏற்றி வைத்திருந்தார்கள்.
(மயில் வாகனத்தில் வரலக்ஷ்மி தேவி...! )
அம்சமாய் என்று நான் சொன்னதில்.. ஆயிரம் விசயங்கள் உண்டு.. எதில் இருந்து ஆரம்பிப்பது? தலையில் அழகிய கிரீடம்.. நெற்றியில் வெள்ளையும், சிவப்புமாய் கற்கள் பதித்த நெற்றி சுட்டி.. மின்னும் மூக்குத்தி... ஒளிவிடும் காதணி... கழுத்தில் கற்கள் பதித்த அட்டிகை.. அதன் கீழே அடுக்கடுக்காய்... பொருந்தி நிற்கும்... முத்தும், கற்களும் பதித்த மாலைகள்... அம்மனின் ஜடையில் தங்க நிற மலர்களுடன் பொருத்தமாய் அலங்காரம். சிவப்பும், மயில் நீல வண்ணமும் கலந்த... பட்டு புடவையுடன்... கம்பீரமாய் வீற்று இருந்த அழகை சொல்ல ஓர் நாள் போதாது...!
அழகு மயிலின் மேல்
அம்மா உன் ஆசனம்
அருகில் உன்னை பார்த்ததில்
அடைந்தேன் நான் பாக்கியம்..!
தோழியின் பெற்றோர் இந்தியாவில் இருந்து இங்கே வந்திருக்கிறார்கள். சின்ன சின்ன விஷயம் கூட... அவர்கள் பார்த்து பார்த்து.. உதவி செய்த விதம்.. அவர்களுக்கு என் தோழி மீது உள்ள அளவில்லா அன்பினை காட்டுகிறது. அவங்க கணவர் மற்றும் தங்கை குடும்பத்தாரும், நெருங்கிய நண்பர்களும் இணைந்து உதவி செய்தாங்க. என்னால் முடிந்த சிறு உதவிகளையும் செய்ததில் எனக்கு திருப்தி!! மாலையில் விஷ்ணு சஹஸ்ரநாமம், லலிதா சஹஸ்ரநாமம், ஹனுமான் சாலிசா, சௌந்தர்ய லஹரி அனைத்தும் பாராயணம் செய்து.... என் தோழியின் அப்பா.. அம்பாளுக்கு நாம அர்ச்சனை செய்து.. பூஜை செய்தாங்க.. அதில் கலந்து கொண்டதில், ரொம்ப சந்தோசமா இருந்தது.
பூஜை முடிந்த பிறகு... உணவு இடைவேளையில் பிரசாதமாய் பல உணவு வகைகள்... அதன் பிறகு.... சாந்த பிரகாஷ் மற்றும் சித்ரா இருவரும் தங்களின் அருமையான குரல் வளத்தால் அனைவரையும் ஆக்கிரமித்தார்கள். அவர்கள் இருவரின் தேன் குரல், கடவுளின் பரிசு...! சுமார் ஒரு மணி நேரம் இன்னிசை மழையில் நனைந்தோம்! பூஜை முடிந்து செல்பவர்களுக்கு... தாம்பூலம் கொடுக்க.. மூன்று சிறுமிகளை... நீல வண்ணத்தில் அழகாய் உடை உடுத்தி.. ஜடை போட்டு... மலர் சூடி... நகைகள் அணிந்து.... அமர்த்தி இருந்தாங்க...!
ஒரு குழந்தை குங்குமம் கொடுக்க, அடுத்த குழந்தை மலர் கொடுக்க, அடுத்த குழந்தை தாம்பூலம் கொடுத்தாள்..! பார்ப்பதற்கே மனதிற்கு சந்தோசமாக இருந்தது! ஆலயம் சென்று வந்த ஆத்ம திருப்தி அத்தனை அம்மனின் தரிசனத்தில் உணர்ந்தேன்...!
எனது தோழி கலா தனது வீட்டில் அம்மனை வசீகரமாய்.. அலங்கரித்து வச்சிருந்தாங்க. பூக்களால் பீடத்தை அலங்கரித்து... அம்மனுக்கு பச்சை நிறத்தில் பட்டுடுத்தி.... பல்வேறு நகைகள் சூட்டி..... அழகிய மலர் மாலைகளால் அலங்கரித்து இருந்தாங்க.
(எளிமையான அலங்காரத்தில் எழிலாய் வரலக்ஷ்மி...! )
வெளி நாட்டில் இருந்தாலும் நம் நாட்டின் கலாச்சாரம் மாறாது.. அதை முழு மூச்சுடன் தொடர்ந்து வரும் அனைவருக்கும் மனதார்ந்த வாழ்த்துக்கள்...! வாழ்க இந்தியா... வளர்க நம் பண்பாடு..!!
...அன்புடன் ஆனந்தி