topbella

Monday, January 28, 2019

கடைசி காலத்தில்..!!


வாசலில் காத்து நின்றே
வரும் வழி பார்த்திருப்பாள்
உண்ண சமைத்து வைத்தே
அருகிருந்தே உபசரிப்பாள்..
உடுக்க துவைத்து தந்து
உறங்க விரித்து தந்து
எண்ணம் கலைந்தாலும்
என்ன ஏதென்றே பதறி போவாள்..
கணக்கெதுவும் கேளாமல்
கைகளில் பணம் தருவாள்
மனக்கசப்பில் பேசினாலும்
மகவு தானே என்றிருப்பாள்..
கண்களுக்குள் அடை காத்து
கருத்தாய் பராமரித்து
காலமெல்லாம் துணை நின்றவளுக்கு
கடைசி காலத்தில்..
கஞ்சி ஊற்றுவதை
பெரும் சேவையாய்
பேசித்திரியும்
பிள்ளைகள் உலகமிது..!

~அன்புடன் ஆனந்தி

(படம்: கூகிள், நன்றி)

மௌனம் பேசும்..!


கண் விரித்தே நோக்கும் கவிதை
புன்சிரிப்பில் பூக்க வைக்கும் புனிதம்
கண நேரத்தில் கலங்க வைத்து
கை சொடுக்கும் நேரத்தில்
சிரிக்கச் செய்யும் சில்மிஷம்
எதுவும் இல்லையென்றால்
ஏன் என்று கேட்கும்
ஏதேனும் சொல்ல வந்தால்
எதற்கு என்று கேட்கும்
முன் அமர்ந்து முகம் நோக்கும்
முகம் சோர்ந்தால் மனம் வாடும்
கனவில் கவிதை சொல்லும்
நினைவில் மௌனம் பேசும்
வெட்டவெளியில் சிரிக்க வைக்கும்
பொட்டல் காட்டை ரசிக்க வைக்கும்..!

 ~அன்புடன் ஆனந்தி

மூச்சுக் காற்றாய்..!!


விடிதலில் தொடங்கி
முடிதலில் அடங்கும்..
மூச்சுக் காற்றாய்
மோகன இசையாய்
முகமன் கூறி
முன் அமர்ந்து சிரிக்கும்..
விண் பார்த்து வியக்கும்
வேடிக்கை பேசி விளையாடும்
விழி வழி உயிர் மாற்றும்
வெகுளியாய் வெட்கப்படும்
மருண்டு ஓடும் மானாகும்
மிரட்டி விரட்டும் வேங்கையாகும்
அர்த்தமின்றி ஆர்ப்பரிக்கும்
ஆழமாய் அறிவுரை கூறும்
அன்பிற்கு அடங்கி போகும்
அதிகாரம் கண்டு வெகுண்டு எழும்
இதயம் தொலைத்தே ஏங்கி திரியும்
இரவு தொலைத்து உறக்கம் தேடும்..
காதலில் கவிதை பேசும்
கவிதையாய் காதல் வீசும்..!!

~அன்புடன் ஆனந்தி

Saturday, January 19, 2019

முழுதாய் என்னை..!!!



கும்பிடும் கோவிலில்
குங்குமம் வைத்தாயே
குறையேதும் இல்லாமல்
கூட வருவதாய் சொன்னாயே..

கைகோர்த்து கதை பேசி
காலமெல்லாம் வருவேனென்றாயே
கண்ணிமைக்கும் நேரத்தில்
கலைத்தும் சென்றாயே..

வார்த்தை அம்புகளால்
வாதம் செய்தாயே
தாக்கும் என்றறிந்தே
தயங்காமல் பேசினாயே..

மனம் அமைதி கொண்டதா
மௌனம் மாற்று கண்டதா
உள்ளம் உண்மை உணர்ந்ததா
உதிரம் உறைந்தே விட்டதா..

தெளிவு உன்னை கொண்டதா இல்லை 
தேடல் கை கோர்த்ததா
முடிவு செய்து கொண்டாயா இல்லை 
முழுதாய் என்னை கொன்றாயா..

முகவரியை தொலைத்தாயா இல்லை
முடிவு செய்தே தோற்றாயா
கவிதை வரைய சென்றாயா இல்லை
கதையை முடித்து வைத்தாயா..?!

~அன்புடன் ஆனந்தி
(படம்: கூகிள், நன்றி)

About Me

My photo
I am a jovial.. sensitive.. happy person who likes to be around good friends ;)