topbella

Friday, January 20, 2012

என்னுடன் நீ இருந்தும்...!


அழகன் உன் கை கோர்த்து
அருகருகே நடந்து வந்து
அடுக்கடுக்கான படிகளில்
அம்சமாய் அருகில் அமர்ந்து
அன்பன் உன் தோளில் சாய்ந்தேன்

கொளுத்தும் வெயிலில் கூட
கொண்டவன் உன் கூட இருந்தால்..
குளிர் நிலவின் குளுமை
என்னைக் கூடியே ஆளும்...

எனைப்பற்றி நீ எல்லாமறிய
அடுக்கடுக்காய் பேசிச் சென்றேன்..
அமைதியாய் கேட்டு வந்தே
அழுத்தமாய் என் கைகள் பற்றினாய்..

பற்றிய உன் கை பிடித்தே
பலப் பல கனவுகள் சொன்னேன்..
பதறாமல் நீயும் என் கவனம்
சிதறாது எல்லாம் சேகரித்தாய்..

எத்தனை நேரம்
என்னுடன் நீ இருந்தும்...
எதார்த்தமாய் என்னால்
விடை சொல்ல இயலவில்லை..
படரும் என் எண்ண ஓட்டத்தில்
தொடரும் இந்தப் போராட்டம்...!

~அன்புடன் ஆனந்தி


(படம்: கூகிள், நன்றி)

Saturday, January 14, 2012

மங்கலமாய் பொங்கல்...!

மஞ்சள் கிழங்கு கட்டி
மங்கலமாய் பொட்டும் வைத்து..
திங்கள் வெளிவரும் முன்..
திகட்டும் பொங்கல் வைத்தே...

தலை வாழை இலை விரித்து..
தனித்தனியாய் வகை பிரித்து..
பழங்களுடன் காய்கறிகள்
பாங்காய் அடுக்கி வைத்து...

அதிகாலை சூரியனும்..
அடி எழும்பி வருமுன்னே..
அவனுக்கு படையல் வைத்து
அதிலே சிறிதெடுத்து...

காக்கைக்கு வைத்து விட்டு
கட்டிக் கரும்பை கடித்து கொண்டு
அம்மாவின் கைச்சமையலை..
அணு அணுவாய் ரசித்தே உண்டு

தொலைகாட்சி பெட்டியில்
தொடர்ந்து வரும் நிகழ்ச்சி கண்டு
அக்கம் பக்கம் வீடு சென்று
அங்கே சிறிது பொங்கல் உண்டு..

ஆதவன் மறையும் வரை
ஆத்மார்த்தமான கொண்டாட்டம்
அதுவும் முடிந்து உறங்கி
அடுத்த நாளைக்கு எடு ஓட்டம்..!


அனைவருக்கும் இனிய பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள்...!

~அன்புடன் ஆனந்தி 

(படம்: கூகிள், நன்றி)

Friday, January 13, 2012

வருவாய் வருவாய் என்றே...!!



வருவாய் வருவாய் என்றே
வக்கணையாய் ஏற்பாடுகள்..
வந்தாய் நீயும் வந்த சுவடே
பார்ப்பதற்குத் தெரியாமல்..

வரும் வேளைகளில்..
சாலை எங்கும் சரமாரியாய்
உப்பை வாரி இறைத்தும்
உன் மழுமழுப்பில்
உற்சாகமாய் செல்ல இயலாமல்
ஊரையே கலங்கச் செய்வாய்...

வெளியே வந்து வண்டியேறி
வேகமாயும் செல்ல இயலாது
வேடிக்கை காட்டவென்றே
வெட்டும் வெயிலிலும்
கட்டுக் குலையாமல்
கல் போன்றே காத்திருப்பாய்..

வாராது போனாலோ..
அரசிற்கோ வைப்புத் தொகை
ஆயிரமாயிரம் கணக்கில்
ஆண்டு முழுமைக்கும் மிச்சம்...

உனை நம்பி வாடிக்கையாய்
தொழில் செய்யும் மக்கட்கோ
நித்தம் கடத்துவதே
நீண்ட சுமையாகும் சொச்சம்..

வெண் பனியே
வெள்ளிச் சரமே.... உனை
வீட்டுக்குள் இருந்து கொண்டே
வேடிக்கை பார்ப்பதில்
வேட்கை சிலருக்கு...

புதுப்பனி வீழும் போது
புத்துணர்ச்சியோடு பனிப்
பொம்மை செய்யும் நிமிடமே
பாக்கியமாய் பலருக்கு...

இன்பமும் துன்பமும்
இரண்டற கலந்ததே
இவ்வுலக வாழ்வென்பதற்கு
இதை விட வேறென்ன
இனிய சான்று வேண்டும்...!!

~அன்புடன் ஆனந்தி


(படம்: கூகிள், நன்றி)

Monday, January 9, 2012

உயிர்வலி என்னவென்று...!


கோபமா என்கிறாய்..
உயிர்வலி என்னவென்று
உணர்ந்து கொண்டிருக்கும்
எனக்குள் என்ன.. கோபம்
எட்டிப் பார்க்கப் போகிறது..?

ஜென்ம பந்தம் இது
சேர்ந்த சொந்தம் இது
சொற்போரில் என்னை
சோதிக்க எண்ணினாய்..

மௌன யுத்தத்தில் உன்
மனதிற்குள் மறைந்து
நிறைந்து கொண்டேன்
சொல்லிப் புரியாது இது
சொர்க்கத்தில் முடிவானது..

அருகில் உனைக் கண்டால்
அலையடிக்கும் அடிமனதில்..
ஆயிரமாயிரம் சிந்தனைகள்
அளவில்லாது பாய்ந்தோடும்..

இன்பம் துன்பம் இரண்டும்
இமையளவில் இசைத்தே
இயன்ற வரை இச்ஜென்மம்
ஈடேற இக்கணம் துதித்தேன்...

எனக்கென்று எதுவும்
உன்னிடத்து கேட்டதில்லை
என்னாசை எதுவும் சொல்லாது
எதையும் நான் கேட்காது
எண்ணியது எல்லாம்

எவர் தடுத்தும் நில்லாது
எக்குறையும் இன்றி
எப்போதும் தரும் இறைவா
என்னவனை என்னிடத்து
எச்ஜென்மம் சேர்ப்பாய்...!

~அன்புடன் ஆனந்தி




(படம்: கூகிள், நன்றி)

Tuesday, January 3, 2012

பாதாம் கேக்...!


தேவையான பொருட்கள்:

பாதாம் பருப்பு - 1 கப்
சர்க்கரை - 1 கப்
நெய் - 1/4 கப்
பால் - 1/2 கப்
ஏலக்காய் பொடி - 1/4 ஸ்பூன்

செய்முறை:

  1. பாதாம் பருப்பை குறைந்தது ஒரு நான்கு மணி நேரம் வெது வெதுப்பான தண்ணீரில் ஊறவைத்து, அதன் தோலை, நீக்கி விடவும்.
  2. பின்னர் அதனுடன் பால் சேர்த்து அரைத்துக் கொள்ளவும். (ரொம்ப மையாக அரைக்க வேண்டாம்)
  3. பின்னர் ஒரு அடி பிடிக்காத கனத்த பாத்திரத்தில் சர்க்கரையுடன் சிறிது தண்ணீர் விட்டு, அது நன்கு கரைந்ததும், அரைத்த விழுதை போட்டு மிதமான தீயில் கிளற வேண்டும்.
  4. குறைந்தது ஒரு 30 நிமிடமாவது ஆகும். விடாமல் கிளறி விட வேண்டும். இல்லை என்றால் அடி பிடித்து விடும்.
  5. முதலில் கிளறும் போது, வெளியில் தெறிக்கும்... நேரம் ஆக ஆக.. தெறிப்பது குறைந்து விடும்.
  6. இதனுடன் ஏலக்காய் பொடி சேர்த்து, நெய்யை கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து கிளறி வந்தால்... பாத்திரத்தில் ஒட்டாமல் வர ஆரம்பிக்கும். அப்படி வரும் போது.. ஒரு நெய் தடவிய தட்டில் கொட்டி... நன்கு ஆறிய பிறகு வில்லைகள் போடவும்.


~அன்புடன் ஆனந்தி 

About Me

My photo
I am a jovial.. sensitive.. happy person who likes to be around good friends ;)