topbella

Friday, July 22, 2011

வெயிலுங்க....வெயிலு....!!!


பனி விழும் போது.... எப்படாப்பா இந்த சம்மர் வரும்-னு நினச்சதென்னவோ உண்மை தாங்க.. ஆனா அதுக்குன்னு இப்படியா?? ஸூஊஊஊ.. ஒரு வாரமா, வெயிலு போட்டு தாக்கிட்டு இருக்குது.. 100 டிகிரிக்கு மேல போயிட்டு இருக்குங்க.. புழுக்கம் தாங்க முடியல.  

வெளியில எங்கயும் போக முடியல.. ஹவுஸ் அர்ரெஸ்ட் பண்ண மாதிரி இருக்குது. இந்த வாரம் தொடக்கத்துல மூணு நாள், சமத்தா வீட்டுக்குள்ளயே இருந்தேன்... அதுக்கு மேல முடியல.. சரி என்ன பெரிய வெயிலுன்னு... கிளம்பி வெளிய போய்ட்டேன்.. சொல்லக் கூடாது... நொந்துட்டேன்.. இருந்தாலும் நாம தான் முன், வச்ச காலை பின் வைக்கிற பரம்பரை இல்லியே.. (அப்படின்னு  பில்ட் அப் குடுத்துக்க வேண்டியது தான்....).  

இந்த வெயில்லயும் துணிஞ்சு வெளியூர் வேற போனோம்.. உச்சி வெயில்ல.. ஊர் சுத்துறது ரெம்ப முக்கியம் பாருங்க.. நடக்கவே முடியல... ஏதோ... தோதோ-வுக்கு பிஸ்கட் காமிக்கற மாதிரி.. ஐஸ் கிரீம் வாங்கி குடுத்து நடக்க வச்சாங்க..!


ஆனா உண்மைல... வெளில அலைஞ்சு திரிஞ்சு வேலை செய்றவங்களை நினச்சாலே பாவமா இருக்கு... தண்ணி எவ்ளோ குடிச்சாலும் தாகம் தணிய மாட்டேங்குது... அப்படியே... ஏர் கண்டிஷனிங் ஓட விட்டாலும்... ஒரு பிரயோஜனமும் இல்ல...!  24 மணி நேரமும்.... ஜில்ல்லுனு எதாச்சும் குடிக்கணும் போல இருக்கு.  ச...போற போக்கப் பாத்தா பனி காலத்த மிஸ் பண்றேன்னு சொல்ல வச்சிரும் போல இருக்கு...அடிக்கற வெயிலு!

ஹ்ம்ம்.. நீ என்ன வேணா அடி... என் வேலை-ல நான் கரெக்ட்-ஆ இருப்பேனாக்கும்-ன்னு ரொட்டின் வேலைய பார்த்துட்டு இருக்கேன். அதாங்க, இந்த கடைக்கு போய் சுத்துறது, பிரண்ட்ஸ் வீட்ல போயி கும்மி அடிக்கிறது... இந்த மாதிரி முக்கியமான வேலைங்க தான்..! (இதெல்லாம் ஒரு வேலை....ன்னு திட்டுறது கேக்குது... கேக்குது...).

ராத்திரி ஒன்பது மணி வரைக்கும் இருட்டாம பளிச்-னு வெயில் அடிச்சிட்டு இருக்கு.. லஞ்ச் டைம்-ஆ, டின்னெர் டைம்-ஆன்னே தெரிய மாட்டேங்குது. சரி ஏதோ ஒரு டைம்-ன்னு குத்து மதிப்பாத்தேன் திரிய வேண்டியதா இருக்கு....! இங்க தான் ராத்திரி நேரம், நிலவையும் சூரியனையும் ஒண்ணா பாக்கலாம்.. பின்னே... அவுக கிளம்பி போறதுக்குள்ள..... இவுக வந்திர்ராக. என்னத்த சொல்ல...!!!

குளிர் காலத்துல போட்ட வெயிட் எல்லாம் வெயில் காலத்துல நடந்து சரி பண்ணிரலாமுன்னு பாத்தா............அடிக்கிற வெயிலுக்கு ஒரு நாளைக்கு ஒரு பக்கெட் ஐஸ் கிரீம் சாப்பிடணும் போல இருக்கு நிலைமை.... இந்த அழகுல எங்க வெயிட் குறையறது....! ஜூஸ் எல்லாம் ஜூஜூபி.... போங்க..  ஐஸ் கட்டிய அரைச்சு அப்படியே உள்ள தள்ள வேண்டியது தான் போல...!

எப்படி இந்த வெயில் சமாளிக்கன்னே தெரியல...! அம்புட்டு கடுப்பா இருக்கு...! இப்படி புலம்ப வச்சிருச்சே... நா என்ன செய்வேன்...! சரி, என் பிரச்சினை எனக்கு..., வந்தது வந்தீங்க.. இந்த ஜூஸ் ஆச்சும் குடிச்சிட்டு போங்க..!!



...அன்புடன் ஆனந்தி 




படம்: நன்றி கூகிள்

Thursday, July 14, 2011

காத்திருக்கிறேன்...!!!




உனக்காகக் காத்திருக்கும்
ஒவ்வொரு நொடியும்
அவஸ்தையாய் எனைத் தாக்க
இதோ வந்து விடுவாய் என்றே
நான் எதிர்பார்த்தே வழி நோக்க...!

காத்திருக்கும் காலம் மட்டும்
கண்களில் ஏக்கம் பூக்க...
உனைக் கண்டதும் தான்
ஓடி வந்து காதலால்
உனைப் பார்க்க....!

வந்த வேகத்தில் என்னிடம்....
வண்ணமயில் உன் எண்ணமெல்லாம்
எனக்குத் திண்ணமாய்த் தெரிந்தும்
கண்ணளவில் தான் நம்
காதல் சாத்தியம் என்றாய்....!

கதிரவனைக் கண்ட
தாமரையாய் மலர்ந்த
என் வதனம் ஓர் நொடியில்
வாடி வதங்கிய வண்ணமலராய்..!

என் கருத்தினில் பதிந்து விட்ட
என் கண்களில் கரைந்து விட்ட
உன் உருவம் நான் கண்
மூடும் வரை எனை நீங்கிடாதே!


...அன்புடன் ஆனந்தி 

About Me

My photo
I am a jovial.. sensitive.. happy person who likes to be around good friends ;)