skip to main |
skip to sidebar
நிலவில் உறங்கிடும் நேசம்
நெஞ்சில் உறைந்திடும் பாசம்
கனவில் தோன்றிடும் உருவம்
கண்முன்னே மறைந்திட மருகும்..
கரைந்திட்ட கனவுகளில்
நிறைந்திட்ட நினைவுகளில்
உயிர்த்திட்ட உணர்வுகள்
உயிர் தொட்ட வருடல்கள்..
மலரின் மௌனம் காத்து
வண்டின் ஆர்வம் பூத்து
துடிக்கும் உள்ளம் கிள்ளும்
தூரல் பெய்தே வெல்லும்..
மருண்ட விழிப் பார்வையில்
இருண்ட மேகப் போர்வையில்
அகண்ட பிரபஞ்சம் கொஞ்சம்
அன்பு செய் என்றே கெஞ்சும்..
விடியாத இரவின் நீட்சியும்
முடியாத பகலின் ஆட்சியும்
தயங்காது உன்னிடம் தஞ்சம்
தயை செய் என்றே கெஞ்சும்..!!!
~அன்புடன் ஆனந்தி
(படம்: கூகிள், நன்றி)
வாசல் தொட்டு போகும்
வான்மழையும் நீ..
வண்ணமயில் கண்டாடும்
வானவில்லும் நீ..
மென்விரல்கள் தீண்டி எழும்
மெல்லிசை நீ..
மீட்டெடுத்து நான் கண்ட
முத்துச்சரம் நீ..
நேசத்தில் எனை மூழ்கடிக்கும்
ஈசனும் நீ..
கோபத்தில் கொந்தளிக்கும்
நீசனும் நீ..
வானமழை தொட்ட
மண் வாசம் நீ..
கானமழை தீண்டிய
பூந்தென்றல் நீ..
கட்டுக்குள் அடங்காத
காட்டாற்று வெள்ளம் நீ..
கண் மூடி நான் வரைந்த
காவியம் நீ..
பூங்காற்று புனைந்த
புதுக்கவிதை நீ..
பொறுத்திருந்து நான் கண்ட
பொக்கிசமும் நீ..!!!
~அன்புடன் ஆனந்தி
(படம்: கூகிள், நன்றி)
வெண் மேகம் மீதேறி
விண்மீன்கள் தேட வேண்டும்
நல்முத்து கைசேர
முக்குளித்து மீள வேண்டும்
கற்பனைகள் கை கூட
கவிதையாய் வாழ வேண்டும்
ஒப்பனைகள் இல்லாத
உண்மையை காண வேண்டும்
தப்பேதும் செய்தாலும்
சரிசெய்ய திராணி வேண்டும்
தடையில்லா இன்பம் காண
முடிவில்லா உழைப்பு வேண்டும்
இதமாய் மனம் இருக்க
இன்னிசை நாட வேண்டும்
இயல்பாய் நாம் இருக்க
இறைபக்தி தேடல் வேண்டும்..!
~அன்புடன் ஆனந்தி