யாருமில்லா வனத்தில்
கவலைகள் கடந்த கணத்தில்..
இயற்கையின் எழிலின் சிலிர்ப்பில்
இறைவா உன் நினைப்பில்
என் துணையோடு
ஒரு தொடர் பயணம்...
இயந்திர வாழ்வின்
இறுக்கம் தளர்த்திப் போட்டு
எல்லையில்லா பரபரப்பின்
கட்டுக்கள் உடைத்துப் போட்டு
மெட்டுப் போட்ட படியே
மெதுவாய் உன்னோடு நடப்பு....
காலைக் கதிரவனின்
கண்கொள்ளாக் காட்சியை
என் காதல் கணவனின்
கை கோர்த்து கண்ட படியே
கூவித் திரியும் குயில்களின்
குரலோசை கேட்டபடி
நான் மேவித் திரிந்தே
மெதுவாய் நடை பயில்வேன்..
பல நாள் கனவின் ஒலி
எனைச் சிலை போல்
செதுக்கக் கண்டேன்
பச்சை மரங்களின் அழகில்
இச்சை நான் கொண்டே
பதறாது ஒரு கணமும் சிதறாது
கோர்த்து வைத்தேன்...
ஒற்றையடிப் பாதையில்
உன்னோடான உயிர்ப்பில்
உறவே உனை உள்வாங்கி
உலகத்தை நான் வெல்வேன்..
காளை உன் கை கோர்த்தபடி
கவிதைகள் நாம் செய்வோம்
கடந்து போகும் பாதையெல்லாம்
மிதந்து போகும் காற்றை கொய்வோம்...
ஏட்டில் எழுதாத
ஏகாந்தம் பலவற்றை
எண்ணற்ற ஆசைகளை
எளிதாய் பேசியபடியே
ஏக்கங்கள் தீர தீர
எடுத்துக்காட்டாய் வாழ்வோம்...
கண்முன்னே விரிந்து கிடக்கும்
காலைப் பனியில்...
கண்மூடித் த்யானம் செய்வோம்
காதருகே கவிதைகள் பல சொல்லி
காவியம் நாம் படைப்போம்...
வேளை தப்பாது
விண்மீனை கைது செய்தே
விரல் சொடுக்கி
வேலை வாங்குவோம்
நாளை என்னவென்ற
கவலை சிறிதுமின்றி
நாட்டியம் நாம் பயில்வோம்...
காதலே உன்னுடன்
கவிதை செய்வேன்...
என் கவிதையே உன்னைக்
காதல் செய்வேன்....!
~அன்புடன் ஆனந்தி