காலை மணி 11 இருக்கும். காலிங் பெல் அடித்தது. மாதவி கையில் இருந்த பாத்திரத்தை அப்படியே வைத்து விட்டு சோப்பை கழுவி விட்டு, இந்த நேரத்துல யாருன்னு யோசித்தபடியே வந்து பார்த்தாள். திரை சீலையை லேசாக விலக்கி வெளியில் பார்த்தாள். வாசலில் பக்கத்துக்கு தெரு பங்கஜம் மாமி நின்றிருந்தாள், ஸ்ட்ரோலரில் அவரது ரெட்டை பேத்திகள்.
என்னவாய் இருக்கும் என்றவாறே கதவை திறந்தாள். வாங்க மாமி, என்ன இவ்ளோ தூரம்? அது ஒண்ணுமில்லடிம்மா. இந்த பக்கமா குழந்தைகள கூட்டிண்டு வாக்கிங் வந்தேன். உன் நினப்பு வந்தது. ஒரு எட்டு உன்னையும் பார்த்தாப்ல ஆச்சேன்னு வந்துட்டேன் என்றாள்.ஓ சரி சரி ரொம்ப சந்தோசம். உள்ள வாங்க. பேத்திகளையும் கீழே இறக்கி விட்டு வீட்டிற்குள் வந்தனர்.
என்ன சாப்பிடுறீங்க மாமி? கூல் ட்ரிங்க் இல்ல காபி டீ என்ன வேணும்னு சொல்லுங்க என்றாள் மாதவி. நான் வேண்டாம்னு சொன்னாலும் நீ கேக்கவா போற? சரிடிம்மா நன்னா ஸ்டராங்கா ஒரு டிகாஷன் காபி போடேன். அப்படியே இதுங்களுக்கும் ஒரு கிளாஸ் பால் ஆத்திடு என்றாள்.
டிக்காஷனுக்கு ஒரு பாத்திரத்தில் வெந்நீரை வைத்து விட்டு, இன்னொரு பாத்திரத்தில் பாலை சுட வைத்தாள். அப்புறம் நீ என்ன பண்ணிண்டு இருந்த சமையல் எல்லாம் ஆச்சா? இல்ல இனிமே தானா? என்றவாறே பேச்சை தொடங்கினாள் மாமி. இல்ல மாமி பாத்திரம் கழுவிட்டு இருந்தேன், இனிதான் சமைக்கணும் என்றாள்.
ஏன்டிம்மா உங்க ஆத்துல பூண்டு இருக்கா? ஓ இருக்கே மாமி உங்களுக்கு வேணுமா எடுத்துட்டு போங்களேன் என்றாள் மாதவி. ரெண்டு எடுத்து தரியா எங்காத்துல மாப்பிள்ளைக்கு பூண்டு வாசனையே பிடிக்கறது இல்லன்னு என் பொண்ணு வாங்கறதே இல்ல. பூண்டு குழம்பு சாப்டே ரொம்ப நாளாயிடுத்து என்றாள். இதோ தரனே மாமி, என்றவாறே ரெண்டுக்கு மூன்றாய் வெள்ளை பூண்டுகளை கையில் எடுத்து அதை ஒரு பிளாஸ்டிக் பையில் போட்டாள். அதை பார்த்த மாமி, ஏன்டிம்மா ஒன்னு செய்யேன். அதை அப்படியே உரிச்சு தரியா இங்கயே நிமிசத்துல பண்ணி காமிக்கிறேனே என்றாள்.
சரி மாமி இருங்க உங்களுக்கு காபி போட்டு தந்துட்டு செய்றேன்னு சொல்லிட்டு, டிகாஷன் சேர்த்து ஜீனி எவ்வளவு சேர்க்கலாம் என்ற விபரம் கேட்டு சேர்த்து நுரை பொங்க ஆற்றி கையில் கொடுத்தாள். அப்படியே பிள்ளைகளுக்கும் பாலும், ஒரு கிண்ணத்தில் பிஸ்கட்டுகளையும் வைத்து கொடுத்தாள். இரண்டும் பாலை குடித்தவாறே விளையாடிக் கொண்டு இருந்தன. மாமியும் காபி ரொம்ப நன்னா இருக்குடி, நீ குடிக்கலையா என்றாள். இப்போ வேண்டாம் என்றபடியே பூண்டை உரிக்க ஆரம்பித்தாள் மாதவி.
ஒரு எலுமிச்சம்பழம் அளவு புளியை கொஞ்சம் வெந்நீர்ல ஊற போட்டுடு. அப்படியே கொஞ்சம் இதை செய், அதை செய் என்று தடபுடலாய் வேலை வாங்கியவாறே எப்படி செய்யணும்னு நன்னா பார்த்து கத்துக்கோ. பூண்டை நன்னா நெய்யில வதக்கணும் என்றவாறே செய்ய ஆரம்பித்தாள். ஒரு வழியாய் அரை மணி நேரத்தில் பூண்டு குழம்பு நெய் மேலே தளும்பி வந்து கொதித்து முடிந்தது. ஒரு ஸ்பூனில் குழம்பை எடுத்து மாதவியிடம் கொடுத்து எப்படி இருக்குன்னு சொல்லு என்றாள் மாமி. மாதவியும் வாயில் ஊற்றியபடி ரொம்ப நல்லா இருக்கு மாமி என்றாள்.
சரிடிம்மா ஒரு பாத்திரம் தாயேன். இதை எடுத்துண்டு போக என்று கேட்டாள். மாதவி எடுத்து தந்த பாத்திரத்தில் துளியும் குழம்பு மிச்சமில்லாமல் ஊற்றி கொண்டாள். மாதிவியும் அப்பாவியாய், பாவம் மாமி ஒரு வேளை அவங்க வீட்டு நினைப்புல எல்லாத்தையும் பாத்திரத்துல வழிச்சு வச்சிட்டாங்க போலன்னு யோசிக்கும் முன்பே, நன்னா பாத்துட்டியோன்னோ இதே மாதிரி நீ செஞ்சிக்கலாம் என்றவாறே பாத்திரத்தை மூடி கையில் எடுத்து கொண்டாள்.
சரிடிம்மா வந்து நாழி ஆயிடுத்து அப்படியே கிளம்பறேன். இதுங்கள போயி குளிக்க வைக்கணும் ஆத்துல நிறைய வேலை இருக்கு என்றவாறே வாசலை நோக்கி விரைந்தாள் பங்கஜம் மாமி. பேச்சின்றி அமைதியாய் அவளை பின் தொடர்ந்தாள் மாதவி.
...அன்புடன் ஆனந்தி


0 comments:
Post a Comment