//அமெரிக்காவில் இருக்கும் தமிழர்களின் தமிழார்வம் எப்படி இருக்கிறது இது பற்றி நீங்கள் ஒரு கட்டுரை எழுதலாமே....///
(தமிழ் மாலையில், குழந்தைகளின் பங்களிப்பு)
நல்ல கருத்துக்களை அனைவரிடத்தும் அன்புடனும், தெளிவுடனும் எடுத்து செல்லும், கழுகிற்கு இந்த பதிவை எழுத முடிந்ததில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன்.. தேவா அவங்க , அமெரிக்காவில் இருக்கும் தமிழர்களின் தமிழார்வம் எப்படி இருக்கிறதுன்னு ஒரு கட்டுரை கேட்டிருந்தாங்க.. முதலில், ஒரு விஷயம் சொல்ல ஆசைபடுகிறேன்.. நாடு விட்டு நாடு வந்தாலும், அல்லது எந்த நாட்டிற்கு சென்றாலும் தமிழ் ஆர்வம் சிறிதும் குறையாமல், பார்த்துக்கொள்வதில் நம் தமிழர்கள், வல்லவர்கள்..
நாங்கள் வசிக்கும் இடத்தில், தமிழ் சங்கம் இருக்கிறது.. அங்கே வருடத்தில், குறைந்தது ஐந்து அல்லது ஆறு முறையாவது, நிகழ்ச்சிகள் நடைபெறும்.. தித்திக்கும் தைப்பொங்கல், தீபாவளி, கிறிஸ்தமஸ், தமிழ்ப் புத்தாண்டு........ இவைகள் தவிர தமிழ் மாலை என்று ஒரு நிகழ்ச்சி நடைபெறும்.. தைப்பொங்கல் நிகழ்ச்சியில்... ஒரு குறிப்பிட்ட தலைப்பை எடுத்துக்கொண்டு, அனைவரும் அந்த தலைப்பினை ஒட்டினார் போல், பாடல், ஆடல் தேர்வு எல்லாம் இருக்க வேண்டும் என்பது விதிமுறை..... இந்த முறை.. நாட்டுப்புறப் பாடல் என்றதொரு தலைப்பு கொடுக்கப்பட்டது.. சின்னவங்க முதல் பெரியவங்க வரை, வண்ண வண்ண இந்திய உடைகளில் தோன்றி... அருமையான நடனங்கள் ஆடினாங்க... இன்னொரு விஷயம் பிடித்தது, பெரும்பாலும் முழுக்க, முழுக்க தமிழில் தான் பேசுவாங்க...
தமிழ் மாலை நிகழ்ச்சியில், குழந்தைகளுக்கு திருக்குறள் போட்டி, பேச்சுப் போட்டி, தமிழில் கேள்வி-பதில், பழமொழிக்கு அர்த்தம் சொல்லல்... இந்த மாதிரி நிறைய விஷயங்கள் நடக்கும்... சின்ன சின்ன, குழந்தைகளில் இருந்து, பெரிய குழந்தைகள் வரை ஆர்வமாய் திருக்குறள் சொல்லும் அழகே தனி தான்... அதிலும் பெரிய குழந்தைகள் அர்த்தத்துடன் திருக்குறள் சொல்வதை கேட்கவே ஆனந்தமாக இருக்கும்... இதில் வெற்றி பெற்ற குழந்தை மட்டுமல்லாது, பங்கேற்ற அனைவருக்குமே பரிசு வழங்கி உற்சாகப்படுத்துவார்கள்..
இங்கே தமிழ் சங்கத்தில் முதல் முறையாக, தமிழ் வகுப்புகள் நடைபெறுகிறது... வாரம் ஒரு முறை தமிழ் வகுப்புகள் நடத்தப்படுகிறது. நிறைய பேர்,முன்வந்து தமிழ் பாடம் எடுக்கிறாங்க.. நம் தாய்மொழி விட்டுப் போய் விடாமல் இருக்கவும், நம் வாழ்க்கைப் பாடத்துடன் இணைந்து தாய் மொழியை கற்றுக் கொள்ளவும் இத்தகைய முயற்சிகள் பெரிதும் கை கொடுக்கின்றது..
தாயின் அன்புள்ளம் தரணியெங்கும்...
தனித்துவமாய் விளங்கும் சிறப்பு...!
நம் தாய்மொழியின் சிறப்போ நாம்
தரணியில் எங்கே சென்றாலும்
தயங்காமல் நம்முடன் வரும் பிறப்பு..!
வார இறுதியில் இங்கே ஸ்லோகம் வகுப்புகள், தேவாலயத்தில் தமிழில் பிரார்த்தனை... இவைகளும் உண்டு.. அங்கே.. தமிழ் வகுப்புகளும் நடத்தப் படுகிறது. அப்படி வகுப்புகளில் ஒரு பாடத்திட்டம் வரையறுக்கப் பட்டு, அதன் படி பாடங்கள் நடக்கும். அவ்வப்போது தேர்வுகளும் நடைபெறும். குறைந்த நாட்களிலேயே குழந்தைகள் சிறிய சிறிய தமிழ் வார்த்தைகளை எழுத்துக் கூட்டி சேர்த்து முயற்சி செய்வதைப் பார்க்கும் போது, மனதிற்கு ரொம்ப பெருமையாகவும், சந்தோசமாகவும் இருக்கும்..
என்ன தான் வெளிநாட்டில் தற்சமயம் வாழ்ந்து வந்தாலும், நம் தாய் நாட்டிற்கு திரும்பி செல்லும் போது, அங்கே நம் குழந்தைகள் தாய்மொழி தெரியாமல் தயங்கி நிற்த்தல் கூடாது என்றே இவ்வளவு முயற்சிகளும்...!! வீட்டில் குழந்தைகளிடம் தமிழில் தான் பேசுகிறோம்.. அவர்களும் புரிந்து கொள்கிறார்கள்......இருப்பினும் அவர்களுக்கு பதில் சொல்வதற்கு அவ்வளவு சரளமாக தமிழில் பேச வரவில்லை.. ஆனாலும்.. தங்கள் பக்கம் செய்ய வேண்டிய பங்கையும் குழந்தைகள் ஆர்வமாக செய்து கொண்டு தான் இருக்காங்க.. இப்போதெல்லாம்... தொலைக்காட்சியில் வரும் தமிழ் வார்த்தைகளை எழுத்துக் கூட்டி வாசித்து விடுகிறார்கள். அவர்களுக்கென்று வகுக்கப்பட்ட பாதையில், அவர்கள் சென்று நல்ல முன்னேற்றம் காண்பித்து வருவதாய் தான் எனக்குத் தோன்றுகிறது..!
இங்கே தமிழ் பத்திரிகைகள் வெளி வருகிறது, அதில் பலரும் ஆர்வமாய் கவிதை, கதை, கட்டுரை, நகைச்சுவை, சமையல் குறிப்பு, தொழில், அரசியல், உடல் நல குறிப்புகள், சினிமா இப்படி வெவ்வேறு தலைப்பில் ஆர்வத்துடன் பங்கு கொண்டு, தங்களுடைய படைப்புகளை தொடர்ந்து தமிழில் அனுப்பிக்கொண்டும், மற்றவர் எழுத்துக்களை தொடர்ந்து ஆதரித்துக் கொண்டும் இருக்காங்க..!
திக்கெட்டும் தமிழ் ஒலிக்கட்டும்... வாழ்க தமிழ்.... வாழ்க தமிழார்வ மக்கள்..!!
எனக்கு தெரிந்த சில கருத்துக்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள உதவிய கழுகிற்கு மனமார்ந்த நன்றிகள்..!!



0 comments:
Post a Comment