topbella

Sunday, October 4, 2026

பொங்கட்டுமே புதுமைப் பொங்கல்...!

தை மாதத்தில் நாம் அனைவரும் மகிழ்ந்து கொண்டாடும் பெருநாள்.... பொங்கல் திருநாள்...!  நம் வீட்டில் குடும்பத்தாருடன் இனிதே கொண்டாடியாச்சு...! அப்புறம் மிச்ச சொச்சம்... வேற எங்க கொண்டாடுவோம்?? நம்ம தமிழ் சங்கத்துல தான்..!  புதிதாய் பொறுப்பேற்றிருக்கும் சங்க உறுப்பினர்கள்... விமரிசையாய் ஏற்பாடுகள் செய்து... வெற்றி கரமாய் விழா நடந்தது..!

நுழை வாயிலிலேயே அசத்த ஆரம்பித்து விட்டார்கள்... மண்பானை, முறம், மாக்கோலம்... கரும்பென்று... வகை வகையாய் வைத்து.. வெல்ல பாயாசம் மண்பானையில் வைத்து வழங்கினார்கள்.  புதிதாய் ரிலீஸ் ஆன ரஜினி படத்துக்கு டிக்கெட் வாங்க க்யூவில நின்ன மாதிரி இருந்துச்சு.. அவ்ளோ கூட்டம். வரிசையில் நிற்கும் போது... அவ்வப்போது வந்து... கொஞ்சம் இப்படி பாருங்க... சிரிங்கன்னு... சொல்லி.. புகைப் படங்கள் எடுத்துட்டு இருந்தாங்க. டிக்கெட் வாங்குமிடத்தில்.. நிகழ்ச்சி நிரலுடன்.. அழகான மலர் சரம் ஒன்று கொடுத்தாங்க.

அதை வாங்கி கிட்டு.... அப்படியே அந்த பக்கம்... வந்தா... குடும்பம் குடும்பமாக... நிற்க வைத்து.. "ஸ்மைல் ப்ளீஸ்...."ன்னு பிக்சர் எடுத்துட்டு இருந்தாங்க.. ஒரு வகையில்.. இந்த விசயத்திற்கு பாராட்டு சொல்லியே ஆக வேண்டும்.. பெரும்பாலும் இப்போதெல்லாம்... ஃபேமிலி பிக்சர் எத்தனை பேர் அடிக்கடி எடுக்கிறோம்.. சொல்லுங்க?  இந்த மாதிரி ஒரு விழா நேரத்தில்.. இப்படி படம் எடுப்பது.. அருமையான நினைவுச்சின்னம்.  அதையும்.. விழா முடிவிலேயே ப்ராசஸ் பண்ணி கொடுத்துட்டாங்க.

புதுமைப் பொங்கல்
வைக்க வந்த பதுமைகளும்...
அவர்தம் பட்டுக் குழந்தைகளும்
அலங்கார ஜோதி விளக்காய்
அங்கங்கே நின்று கொண்டு...
ஆலயம் நுழைந்தாற்போல்
அனுபவம் தந்து சென்றனர்..!

ட்ராய் தமிழ் பள்ளியின் மாணவர்கள்.. அழகாய் தமிழ் தாய் வாழ்த்து பாடி நிகழ்ச்சி துவங்கியது.  சங்க தலைவர் அவர்கள்.. வரவேற்புரை வழங்கி.. விழாவை ஆரம்பித்து வைத்தார்.   தமிழ் நாட்டுல நடனத்துக்கா பஞ்சம்...?? கும்மி பாட்டுடன்.. குட்டி குழந்தைகள்... கலக்கிட்டு போனாங்க..! அடுத்தடுத்து... சரமாரியா நடனங்கள்..... மூச்சு விட கூட இடம் விடாம... பின்னி பெடல் எடுத்துட்டாங்க...!

சில்வண்டு போன்ற
ஸ்ருங்கார நடனமும்
வில்லினின்று புறப்பட்ட
அம்பு போன்ற...
வேகமான நடனங்களும்
வேடிக்கை பார்க்க
வந்தோரை வீழ்த்தியே
கைவசம் கொண்டனர்...!

இப்படி பெற்றோர்களின் கை வரிசையில் பயிற்சி பெற்ற குழந்தைகளின் நடனம் கண்டு ஒரு புறம் வியந்து நின்றால்.. அடுத்து... "தாள மேளா..." என்ற தலைப்பில்... ஒன்பது வகை இந்திய நடனங்களை நம் கண்ணுக்கு விருந்தாக்கினர்... ராதிகா ஆச்சார்யா அவர்களின்.....நடன பள்ளி, நுபூர் அகாடெமியின் குழந்தைகள்..! எதையென்று சொல்ல..? கரகம், மோகினி ஆட்டம், ராஜஸ்தானி, பீகூ, மணிபுரி, நாகா பேம்பூ நடனம், பரத நாட்டியம், லாவணி, பொய்க்கால் குதிரை...ன்னு குழந்தைகளின் உற்சாகமான பங்கேற்பு பார்ப்போரையும் தொற்றிக் கொண்டது...!


வித விதமான உடைகளில்..
வெவ்வேறு பகுதிகளின் 
வித்தியாச  நடனங்களை
விரல் சொடுக்கும் நேரத்தில்
விவரித்தே ஆடிய 
விண்மீன்களின் விந்தை 
விவரிக்க வார்த்தை இல்லை..!

அதைத் தொடர்ந்து வந்த தை நீராடல், எற்றுங்கம்மா தீபம்.... நடனங்களும் பார்ப்பதற்கு தொய்வில்லாமல் வெகு சிறப்பாய் அமைந்தது.  அடுத்து வந்த..... லலிதா ரவி அவர்களின் ......"தமிழ் திரையுலகம் அன்றும் இன்றும்..." நிகழ்ச்சி பெரும் வரவேற்பை பெற்றது. சின்ன குழந்தைகள் முதல், பெற்றோர்களும் பங்கேற்று.... பார்வையாளர்களையும் உடன் கரகோஷம் எழுப்பச் செய்து.. அரங்கம் அதிர வைத்துச் சென்றனர்.


அந்தக் கால அழகிகளும்
இந்தக் கால யுவதிகளும்
இணைந்தே ஆடினாற்போல்
இன்றைய தலைமுறையின்
எழிலாட்டம் எல்லோரையும்
எழுந்தே ஆட வைத்தது..!


அந்த கால சரோஜா தேவி போல் உடையணிந்து... "அன்று வந்ததும் இதே நிலா...."  பாடலுக்கு... ஆடிய மகளிர் அணியினர்... எழிலோடு ஆடிச்சென்றனர்.   ஒரு வழியாய் நடனமெல்லாம் முடிந்து... இரவு உணவு வேளையும் வந்தது.  இனிப்பாய் சர்க்கரைப் பொங்கலுடன்... உணவு பரிமாறப் பட்டது.  அனைவரும், தத்தம் நண்பர்கள், குடும்பத்தார் புடை சூழ அமர்ந்து உண்டு.... அடுத்ததாய் நடக்கவிருந்த சின்னி ஜெயந்த் அவர்களின்....."சிரி சிரி... சிரி.. சிரிக்கலாம் வாங்க.." நிகழ்ச்சியை கண்டு கழிக்க சென்றோம்..!


விழா நடந்த இடமான க்ரோவ்ஸ் உயர் நிலை பள்ளியைப் பற்றி சொல்லியே ஆக வேண்டும்.. ஆயிரம் பேருக்கு மேலே குழுமி இருந்த அனைவரும் அம்சமாய் அமர்ந்து பார்க்கும் வகையில் இருக்கை வசதிகளுடன் அரங்கம் அமைந்து இருந்தது ஒரு பிளஸ் பாயிண்ட்..!

மணி மகுடம் வைத்தார் போல்.. இந்த பனி காலத்தில் பக்காவான வானிலை...! அதிக குளிரோ.. பனியோ இல்லாமல்... அனைவரும் வந்து போக வசதியாய் இயற்கையும் நம்மோடு கை கோர்த்து விழாவை சிறப்பித்தது போல தோன்றியது...!


சின்னி ஜெயந்த்துடன், நமது சங்க உறுப்பினர் பலரும் இணைந்து நடத்திய நகைச் சுவை நிகழ்ச்சியும்... இனிதே கண்டு களித்து மன நிறைவுடன் இல்லம் திரும்பினோம்....! தொடரட்டும் இது போல்... பல வெற்றிகரமான நிகழ்வுகள்...!!
தமிழ் வாழ... தமிழ் வழி வாழ்வோம்....!

~அன்புடன் ஆனந்தி


0 comments:

About Me

My photo
I am a jovial.. sensitive.. happy person who likes to be around good friends ;)