நெல்லை அன்புடன் ஆனந்தி/வாசல் திறக்கும்

அலறல் சத்தம் கேட்டு திடுக்கிட்டு விழித்தான் சங்கர். பக்கத்தில் உறங்கிக்கொண்டிருந்த தம்பியை எழுப்பிக்கொண்டு வெளியே வந்தான்.
தெருவெங்கும் மக்கள் அங்குமிங்கும் ஓடிக்கொண்டிருப்பதைப் பார்த்தான்.
வெளியில் ஓடிக்கொண்டிருந்த ஒருவர், “தம்பிகளா… என்ன நின்னுட்டு இருக்கீங்க? ஓடி வாங்க. சீக்கிரம் வாங்க. வெள்ளம் வந்துகிட்டிருக்காம்” என்று சொன்னதும், பயந்துபோய் தம்பியின் கையைப் பிடித்துக்கொண்டு வேகவேகமாக அவர்களுடன் ஓடினான்.
பக்கத்திலிருந்த கோவிலுக்குள் கூட்டத்தோடு கூட்டமாக, தம்பியின் கையை விடாமல் பிடித்துக்கொண்டு நின்றான் சங்கர். கோவில் கதவு சாத்தப்பட்டது.
உள்ளே இருந்தவர்கள் உயிர் பயத்துடன் கதவையே பார்த்துக்கொண்டிருந்தார்கள்.
கொஞ்சம் கொஞ்சமாகத் தண்ணீர் அந்தக் கதவு வழியாக உள்ளே வந்துகொண்டிருந்தது.
காலையில் வேலைக்குப் போன அம்மாவும் அப்பாவும் என்ன ஆனார்களோ என்று சங்கர் கவலைப்பட்டான்.
கதவின் இடுக்குகள் வழியாக வந்த நீர் கால் முட்டி வரை உயர்ந்தது.
அனைவரும் அங்கிருந்த கல் மண்டபத்தில் ஏறி நின்றுகொண்டார்கள்.
மறுநாள் காலை, கிட்டத்தட்ட அந்த ஊரே காணாமல் போயிருந்தது.
தங்களைப் போலவே இருக்கும் இரு சகோதரர்கள் தனியே இருப்பதைச் சங்கர் கவனித்தான்.
மெல்ல அவர்கள் பக்கத்தில் சென்று, “பயப்படாதீங்க. எல்லாம் சரியாயிடும்” என்று ஆறுதல் சொன்னான்.
தண்ணீரெல்லாம் வடிந்த பிறகு எல்லோரும் வெளியே வரும்பொழுது, புதிதாக உருவான நால்வர் படை, தோளில் கைபோட்டபடி ஒன்றாக வெளியே வந்தது.
அவர்களுக்கான வாசல் திறக்கும் என்ற நம்பிக்கையில்!



0 comments:
Post a Comment