topbella

Wednesday, January 22, 2014

நிதர்சனம் நீ...!!!

Travel Photographer Captures Gorgeous Flowing Gowns Against ...
கலையாத கனவுக்குள் 
கவிதையாய் நீ வந்தாய் 
வரைந்து வைத்த ஓவியம் போல் 
வகையாய் என்னுள் இடம் கொண்டாய்..

போராட்டம் பல வரினும் 
ஏதேனும் இடர் வரினும் 
புரிதலின் பூரிப்பில் 
புதுப்பூவாய் பூக்கச் செய்வாய்..

உன் புன்னகை அழைப்பில் 
என்னையே மறக்கச் செய்வாய்..
உனக்குள் அமிழ்ந்தே 
உன்னுயிரில் கரையச் செய்வாய்..

இமைகளுக்குள் புகுந்தே
இரவுகள் தொலைக்கச் செய்வாய்..
இதமான உன் அன்பில்
இவ்வுலகம் மறக்கச் செய்வாய்.. 

உன்னை வரையறுக்க 
உவமைகள் தேவையில்லை
உண்மைக் காதலுக்கு 
உவமானம் தேவையில்லை...

எந்நிலையிலும் எனை நீங்கா 
நின்னுயிர் ஒன்றே நிதர்சனம்...
நின்னடி சேர்வதொன்றே 
என்னுயிரின் நிர்ணயம்....!!!

...அன்புடன் ஆனந்தி 

(படம்: கூகிள், நன்றி)

Sunday, January 19, 2014

இச்சை தரும் இம்சை...!




அன்றாட வாழ்க்கைக்கான அடிப்படை வசதிகள் ஒரு மனிதனின் தேவையாக இருப்பது இயற்கை.. குடியிருக்க ஒரு இடம், பசித்த வேளைக்கு உணவு, உடம்பு மறைக்க உடை... இவைகளே அடிப்படை தேவைகளாக கருதப்படுகிறது..  இதற்குத்தான் அனைவரும் இந்த பாடு படுகிறார்களா..?  இது தவிர்த்து நமக்கு தேவைப்படுவன அனைத்தும் நம் மனதின் இச்சைகள். இச்சைகளுக்கு எல்லைகளே இல்லை.. 

யோசித்துப் பார்த்தால்... அடிப்படை தேவை மட்டுமே ஒருவரின் எல்லையாக இருக்கும் பட்சத்தில்.. அது சார்ந்து உழைத்து நகரும் போது... எந்த வித இன்னல்களும் வர வாய்ப்பில்லையே என்று தோன்றுகிறது... இச்சை என்று எதை வரையறுப்பது...? தேவைக்கு மீறி நாம் அடைய விரும்பும் அனைத்துமே.. இச்சைகள்.

இச்சைகள் தொடங்கும் இடத்தில் இம்சைகளும் உடன் வந்து விடுகிறது. இருக்கும் வீட்டில் ஆரம்பித்து.. உடுத்தும் உடை வரைக்கும்... அடுத்தவர் என்ன நினைப்பார்கள் என்று எண்ணியே வாழ்வை அழித்துக் கொண்டிருக்கிறோம்... இப்பொழுதெல்லாம் அவரவர் தாம் வசிக்கும் வீட்டை விசாலமாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறார்களே தவிர.. அவர் தம் மனம் விசாலமாக இருப்பதும் இல்லை.. உண்மையான மகிழ்ச்சியோடு இருப்பதும் இல்லை..

அம்மா, அப்பா, குழந்தைகள் சில.. என்று உள்ள ஒரு குடும்பத்திற்கு எவ்வளவு பெரிய வீடு தேவைப்பட போகிறது..? ஆனால் இப்போது காலக்கொடுமை... வீடுகள் பெரிதாகிக்கொண்டே போகிறது.. வீட்டில் உள்ள மனிதர்கள் எண்ணிக்கையும்... அவர்களுக்கான தொடர்புகளும் குறைந்து கொண்டே வருகிறது.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பும் சிவம்.. தொடரில் சமீபத்தில்.. இந்த தேவைக்கும் இச்சைக்கும் உள்ள வேறுபாட்டை சிவன் கூறுவது போல் வரும்.. அதில் ஒரு சிறிய கதை சொல்வார்.. ஒரு வணிகன் தனது மனைவி மற்றும் இரு குழந்தைகளுடன் ஒரு சிறிய வீட்டில் வசித்து வந்தான்.. அவன் தொழிலும் சிறப்பாக அமைந்து.. அவனது தேவைகளுக்குப் போதுமான பொருளும் ஈட்டினான்.. அவன் மனைவி மக்கள் மகிழச்சியாக இருந்தனர்.. ஆனால் வணிகருக்கோ.. மனநிறைவு ஏற்படவில்லை..  

மேலும் பொருள் ஈட்ட வேண்டும்.. நிறைய நில புலன்கள் வாங்க வேண்டும்... பெரிய செல்வந்தனாக வேண்டும் என்று எண்ணம் மேலோங்க... இறைவன் விஷ்ணுவை வேண்டி தவம் செய்ய துவங்கினான்.. பல ஆண்டுகள் அன்னம் ஆகாரம் இன்றி அவன் செய்த கடுமையான தவத்திற்கு பலனாய் இறைவன் விஷ்ணு அவன் முன் தோன்றி.. தவத்தால் உள்ளம் குளிர்ந்தேன்.. வேண்டும் வரம் என்ன என்று கேட்க.. வணிகனும்.. "நான் கண்ணால் காணும் இடம் எல்லாம் எனக்கே சொந்தமாக வேண்டும் என்றான்..". இறைவனும் யோசித்து விட்டு.. "சரி.. உன் கண்ணில் நீ காணும் இடமெல்லாம்  உனக்கே சொந்தமாகும்.. உன் கண்ணில் படாதவை உனக்கு சொந்தமல்ல".. என்று சொல்லிவிட்டு மறைந்தார். 

வணிகனுக்கு தலை கால் புரியவில்லை.. நானே இந்த உலகத்தில் பெரும் செல்வந்தன் என்று கூறிய படியே.. தன் எதிரில் கண்ட இடங்கள் எல்லாவற்றையும்.. இது எனது.. என் இடம்.. எனக்கே சொந்தம்.. என்று கூறியவாறே.. சென்றான்.. வெகுதூரம் வந்தும்.. அவன் ஆசை அடங்கவில்லை.. மேலும் நிறைய இடங்களை கண்ணால் கண்டுவிட வேண்டும் என்ற பேராசையில்... ஓடிக்கொண்டே இருந்தான்... விளைவு.. அவன் மன வேகத்திற்கு.. உடல் ஒத்துழைக்க வில்லை.. அன்ன ஆகாரம் இன்றி.. உயிர் நீத்தான்...!

மனம்... ஒரு குரங்கு என்று சொல்லக்கேட்டிருக்கிறோம்... மனதை கட்டுக்குள் வைக்காது அதன் போக்கில் அலைய விட்டால்... அல்லல்களே எஞ்சும். நிறைவான மனதில் நிம்மதி குடியிருக்க தொடங்கும்.. நிறைவடையாத மனமோ... எது நிறைவென்றே அறியாது எதனெதன் பின்னோ அலையும்..!

மனதின் இச்சைகள் அடக்கி.. ஆள... பக்குவப்பட்டு விட்டால்... இன்னல்கள் தவிர்த்து இன்பமாய் வாழ வாசல் திறக்கும்..!


...அன்புடன் ஆனந்தி 


(படம்: கூகிள், நன்றி)

Tuesday, December 24, 2013

நட்பு...(நடப்பு)...!!!


ஆயிரம் நண்பர்கள் இருக்காங்கன்னு சொல்லிக்கிறதுல.. பெருமை வேணா பட்டுக்கலாம்... ஆனா அதுல எத்தனை பேர் உங்களுக்கு ஒரு பிரச்சினைன்னா வந்து நிப்பாங்கன்னு யோசிக்கணும்... வயசு இருக்கும் போது.. வாலிபம் முறுக்கும் போது.. திமிரா அலைய தோணலாம்... அதுவே நாள் போகப்போக அதே நட்பு வட்டாரம் நம்மள சுத்தி இன்னமும் இருக்குதான்னு திரும்பிப்பார்த்தா.. அப்படி வெகு நாட்களா கூடவே இருக்கறவங்கள விரல் விட்டு எண்ணிறலாம்... 

ஏதோ சீசனுக்கு வர பறவைகள் மாதிரி.. ஒவ்வொரு கால கட்டத்துலயும் ஒவ்வொரு விதமான மக்களை நாம சந்திக்கிறோம்.. எண்ணங்கள் ஒத்துப் போயிருச்சுன்னா... உடனே அடிச்சு விழுந்து பழகி.. உயிர் நண்பர்கள்ன்னு ஊருக்குள்ள சொல்லிட்டு திரியுறோம்.. எனக்கு எப்பவும் ஒரு சந்தேகம் உண்டு.. உயிர் நண்பன்னா என்ன?? அதுக்கு முதல்ல விளக்கம் கண்டு பிடிச்சிட்டு தான்.. உயிர் நண்பன் யாருன்னு முடிவு பண்ண முடியும்.

டெய்லி பத்து போன் கால், அடிக்கடி சந்திச்சு பேசிக்கிறது, ஒண்ணா எங்கயாச்சும் சேர்ந்து சுத்துறது... இப்படியெல்லாம் இருந்தாத்தான் அவங்க நமக்கு ப்ரண்டுன்னு ஒரு கண்டிஷன் இருந்தா... அப்படி ஒரு நட்பு தேவை தானான்னு யோசிக்க வைக்குது..

பெரும்பாலும் அடுத்தவங்கள இம்ப்ரெஸ் பண்ணியே... நம்ம வாழ்க்கை வீணா போயிட்டு இருக்குது.. ஒரு காலத்துல சனி, ஞாயிறுன்னா... ஐ ஜாலி விடுமுறைன்னு சந்தோசப் பட்டிருக்கோம்.. இப்போ எல்லாம்... சனி, ஞாயிறு வந்தாலே... ஐயோ.. வீக்கெண்ட்-ஆ ன்னு அலறுறோம்... விடிஞ்சா அடைஞ்சா ஆயிரத்தெட்டு கமிட்மென்ட்... அதிலும் வீக்கெண்ட் ஏன் வருது.. எப்போ வருதுன்னே தெரிய மாட்டேங்குது..

ஒவ்வொரு விடுமுறை நாளும் வரதுக்கு முன்னாடி... இந்த வாரம் எப்படி ரிலாக்ஸ் பண்ண போறேன் பாருன்னு.. பிளான் எல்லாம் பக்காவாத்தான் போடுவோம்... ஆனா நடக்க தான் மாட்டேங்குது... அதான் சொல்லுவாங்களே... ஓபன்னிங் எல்லாம்.. நல்லாத்தேன் இருக்கும்.. பினிஷிங் தான் சரியா இருக்காதுன்னு... அப்படி தான் ஆகி போவுது...!

விடுமுறை நாள்ல... மெல்ல எழுந்து.. விடிகாலை இயற்கையை ரசிச்சு... சூடா ஒரு கப் காப்பி குடிச்சிட்டு... நிதானமா குளிச்சு... காலை உணவு சாப்பிட்டுட்டு.. அப்படியே டிவி-ல எதாச்சும் ஒரு நிகழ்ச்சிய பார்த்துட்டு.... கொஞ்ச நேரம் பிடிச்ச எதாச்சும் ஒரு புத்தகத்தை படிச்சிட்டு... மதிய உணவையும் மகிழ்ச்சியா முடிச்சிட்டு... கொஞ்ச நேரம்... அப்படியே கண் அயர்ந்து படுத்துட்டு... சாயந்தரமா அப்படியே வெளில ஒரு நடை போயிட்டு வந்தா.... எப்படி ரிலாக்ஸ்-ஆ இருக்கும்... ஹ்ம்ம்.. அதுக்கெல்லாம் கூட இப்பெல்லாம் கொடுத்து வச்சிருக்கணும் போல....!

அடிப்படை புரிதல் இல்லாத எந்த ஒரு ஆர்ப்பாட்டமான விசயமும் நம் அமைதிக்கு நாமே அமைத்துக் கொள்ளும் முட்டுக்கட்டை தான்.. எதார்த்தம் இல்லாத எதுவுமே ரொம்ப நாளைக்கு எஞ்சி இருக்குறதில்ல... எப்போது நம் நேரத்தை செலவழிப்பது நம் கையில் இல்லையோ அப்போதே நம் மனம் நிம்மதி தொலைத்து அலைபாயத் தொடங்கிவிடுகிறது.

நட்பே வேண்டாம்னு நான் இங்கே வாதம் பண்ணல... எதுவுமே இங்கே நிரந்தரம் இல்ல.. அப்படி இருக்க எல்லாமே அளவோட இருத்தல் நல்லதுன்னு நினைக்கிறேன்...அவ்ளோ தான். எப்போ ஒருத்தங்க கிட்ட.. அடடா  கமிட் ஆயிட்டமே.. வேற என்ன பண்றது.. .போயிட்டு வந்திருவோம்ன்னு தோணிருச்சோ அப்பவே நம்ம சந்தோசம்... அமைதி அங்க இல்லாம போயிருது. 

முதல்ல.. நமக்கு நாம நட்பாகி நம்மள பத்தி புரிஞ்சு தெரிஞ்சுக்குவோம்... அப்புறம் மத்தது பத்தி யோசிக்கலாம்...!!!


...அன்புடன் ஆனந்தி 


(படம்: கூகிள், நன்றி)











About Me

My photo
I am a jovial.. sensitive.. happy person who likes to be around good friends ;)