topbella

Wednesday, March 20, 2013

வாழ்வே தவம்...!


வாழ்க்கை எவ்வளவு அழகானது... அதை அனுபவிக்கக் கூட நேரம் இல்லாது அரக்க பறக்க அலைந்து கொண்டிருக்கிறோம்.. எளிமையான விசயங்களில் கூட நாம் ஏகாந்தத்தை உணர முடியும்.  எதற்கு இந்த ஓட்டம்... அப்படி நிற்காது ஓடி சம்பாதித்து என்னென்ன சாதித்து விட முடியும்... ஓட்டம் ஒரு நாள் நின்ற பின்.. நின்று நிதானமாய் திரும்பி பார்த்தால்.. நிதர்சனம் நம்மை சுடும்.  நினைத்ததெல்லாம் அடைந்தோமா? அடைந்ததெல்லாம் ரசித்தோமா? 

ஆர்ப்பாட்டம் இல்லாத காலை விடியலை எத்தனை பேர் கவலை மறந்து ரசித்து கண்டிருக்கிறோம்... இல்லை ஆதவன் அடங்கும் தருணம் அந்த அம்சத்தை எத்தனை பேர் ரசித்திருக்கிறோம்...? கண் விழிக்கும் போதே....அடடா நேரமாகி விட்டது.. என்று புலம்பியவாறே அடித்து பிடித்து ஆரம்பிக்கிறது காலை... இப்படி இயந்திரத்தனமான வாழ்வில் நாம் இழந்தது எத்தனை...எத்தனை.. எண்ணிலடங்கா....!

சின்ன சின்ன விஷயம் கூட உணர்ந்து, ரசித்து, உள்வாங்கி செய்ய நேரம் இல்லை. ஆவி பறக்கும் காலைக் காப்பியை அமர்ந்து ரசித்து பருகி ஆண்டுகள் ஆகி விட்டது.. செய்த உணவை சிறிது நேரம் அமர்ந்து உண்ண பொழுதில்லை.. சீக்கிரம் சீக்கிரம்... என்று ஓடி.. சிதறித் தான் போய் விட்டது.. சின்னச் சின்ன சந்தோசங்கள்...!

எழுத்து நடையில் செந்தமிழில் தான் எழுத வருகிறது... வாங்க பேச்சு நடைக்கு மாறி விடலாம்.. 

சரி இப்போ சொல்லுங்க.. காலை காப்பியை நீங்க ரசித்து அமர்ந்து குடித்து விட்டே.. அடுத்த வேலை பார்ப்பவரா... சபாஷ்.. நீங்கள் அதிர்ஷ்ட சாலி தான்.. அதுவே போட்ட காப்பியை பல தரம் மைக்ரோ ஓவனில் வச்சு சுட வச்சு.. மறந்து.. திரும்ப சுட வச்சு மறந்து... ஒரு வழியா காப்பி கதை முடிஞ்சு.. அடுத்து சாப்பாடு வந்தா... கோழி கொரிக்கிற மாதிரி.. வேக வேகமா என்ன உள்ள போகுதுன்னே தெரியாம எத்தனை பேர் சாப்பிடுறோம்...?? முதல்ல இந்த பழக்கத்தை மாத்தணும்... தனக்கென்று நேரம் ஒதுக்கி அந்த தனிமையை கூட ரசித்து வாழ தெரியணும்... 

"அட என்னங்க லைஃப்.. விடிஞ்சதும் தெரியல.. அடஞ்சதும் தெரியல.. பொங்க வேண்டியது.. திங்க வேண்டியது.. தூங்க வேண்டியது..." இப்படி எத்தனை பேர் சொல்லி இருக்கோம்? ஏன்.....? நமக்குன்னு நாம யோசிக்கிறதே இல்ல... ஒவ்வொரு கட்ட வாழ்க்கைலையும் யாருக்காச்சும் பொறுப்பா கடமை தவறாம வேலை செஞ்சிட்டு இருப்போம்... 

நான் ரசித்த ஒரு விஷயம் நினைவுக்கு வருது... ரெண்டு பிரண்ட்ஸ் பேசிக்கிறாங்க... ஒருத்தர் படுத்துகிட்டு கால் மேல கால் போட்டு ஆட்டிக்கிட்டே இருக்காரு.. அவர் கிட்ட. அடுத்தவர் கேக்குறாரு.. 
ஏண்டா.. உனக்கு எதைப் பத்தியும் கவலையே இல்லையா? ஏண்டா இப்டி இருக்க? 
ஏன்.. எப்படி இருக்கேன்? எதுக்கு கவலைப்படணும்?
ஹ்ம்ம்.. எதிர்காலம் பத்தி யோசிக்க மாட்டியா?
யோசிச்சு...?
சம்பாதிச்சு சேர்த்து....
சேர்த்து வச்சு...?
வீடு வாங்கலாம்....
வாங்கி?
கார் வாங்கலாம்?
அப்புறம்...?
வெளிநாடெல்லாம் சுத்தி பாக்கலாம்...
அப்புறம்...?
(இப்போ கேள்வி கேட்டவர் கொஞ்சம் கடுப்பாகி.... )
ம்ம்ம்...அப்புறம் என்னவா... பேங்க்ல நிறைய பணம், ஆசப்பட்டதெல்லாம் வாங்கிட்டா.. நம்ம பாட்டுக்கு ஹாயா... கால் மேல கால் போட்டு ஆட்டிட்டு இருக்கலாமே...?
(படுத்திருந்த நண்பர்... ஹா ஹா... சிரிச்சிட்டு)
அட நாயே... அத தானடா இப்போ பண்ணிட்டு இருக்கேன்..ன்னு.
(நண்பர் ஏக கடுப்பாகி எஸ்கேப் ஆய்ட்டாரு...)

அதுக்காக சும்மா படுத்துட்டு கால் மேல கால் போட்டுட்டு இருக்க சொல்லல... செய்ய வேண்டியத செய்யாம இருக்கறதும் கூட தப்பு தான்.. வாழ்க்கைய வாழணும்..... மிஷின் மாதிரி இல்லாம.. உயிரோட்டத்தோட இயல்பா இருக்கணும்... அவ்ளோ தாங்க...!

~அன்புடன் ஆனந்தி


(படம்: நன்றி கூகிள்)

Thursday, February 28, 2013

உயிர்ப்பூ நான்...!



உனதருகில் இல்லாத 
நொடிகள் எல்லாம் 
முட்களாய் நெஞ்சத்தில் 
தைத்த விதம்
விவரிக்க எண்ணாமலே 
உன்னிடத்தில் 
விழியகல விவரித்தேன்..

பொறுத்திருந்து கேட்டே நீயும் 
பொறுமையாய் சொல்லிச் சென்றாய்..
நித்தம் நினைவுகளில் 
நிறைந்திருக்கும் நம் காதல் 
நீ சொல்லித் தானா 
நெஞ்சம் நிறைக்கப் போகிறது...

சொல்லாமல் பூட்டி 
வைத்த பூரணத்துவம் 
என்னைக் கேளாமல் 
நெஞ்சில் படரும் விதம் 
வார்த்தைக்குள் அடைத்து வைக்க 
வியாபாரம் அல்லவே என்றாய்...

புரிந்தும் புரியாதது போல் 
உள்ளம் தெரிந்தும்
தெரியாது போல்...
உள்ளடக்கிய உணர்வோடு 
உன்னுடன் இசைந்து நின்றேன்...

ஆதி முதல் அந்தம் வரை 
உன்னில் பாதியாய் 
பதிந்திருந்தேன்.....
உணர்ந்து உருகும் உள்ளம் 
உயிர்ப்பில் லயித்த எண்ணம்
உள்ளார்ந்த அமைதியில் 
ஒன்றும் இயம்பாதிருந்தேன்...

தெளிவின் உச்சத்தில் நீ 
தெரிந்தும் குழப்பத்தில் நான் 
அறிவினை உணர்வு வெல்ல 
அறிந்தும் அறியாச் 
சிறுமிபோல் ஆதாரமாய் 
உன்னை தொற்றி நின்றேன்...

தகிக்கும் கோபம் உன்னுள் 
அதை தணிக்கும் 
தாபம் என்னுள்...
நிறைந்து நிற்கும் 
நிதர்சனம் நீ....
உன்னுள் உறைந்து கிடக்கும் 
உயிர்ப்பூ நான்...!!

~அன்புடன் ஆனந்தி


(குறிப்பு: இந்த கவிதை Feb 2013, தென்றல் இதழில் வெளிவந்துள்ளது, நன்றி )

Friday, January 11, 2013

உண்மையான உறவு...!


நட்பாகட்டும், உறவாகட்டும்.... உண்மையான பந்தம் எது? இந்த கேள்வி நம்ம எல்லார் மனசிலயும் அடிக்கடி வந்து போறது சகஜம்... பார்த்த இடங்களில் புதிதாய் ஒருவரை சந்திக்கும் போது, மரியாதை நிமித்தம்.. நலம் விசாரிப்பு... அப்படியே அவங்களுக்கும் நமக்கும் விருப்பங்கள் ஒத்து போகும் பட்சத்தில் மேற்கொண்டு பேச்சு... பிறகு ஒருவருக்கொருவர் தொலை பேசி எண் பரிமாற்றம்... சில பல முறைகள் தொடர்பு கொண்டு பேசுவது.. இப்படியா சில நேரங்கள்ல நட்பு ஆரம்பிக்கும். ஒருவரால் அடுத்தவருக்கு எந்த கஷ்டமோ, தொந்திரவோ இல்லாது இருந்தா... இது தொடரும். 

சில நேரங்கள்ல.. ரெடி மேட்-ஆக நட்புகள் அமையும். அதென்ன ரெடி மேட் நட்பு...? அதாவது, கல்யாணம் பண்ணி புதிதாய் வரும் போது, கணவருக்கு நண்பர்களாய் இருப்பவர்கள், அவர்களின் மனைவிகள் அவங்க எல்லாம் நமக்கும் நண்பர்கள் ஆவாங்க. இப்படி அறிமுகம் ஆகிற அத்தனை பேர் கிட்டயும் நம்ம நெருங்கி பழகுறது இல்ல.. சில பேர் கிட்ட ரொம்ப நெருக்கமா உணர்வோம், மீதி பேர் கிட்ட நல்ல நட்பா இருப்போம். சில பேர்கிட்ட விதியேன்னு பழகிட்டு இருப்போம்.. சில நேரங்களில் எதுக்கு தேவை இல்லாம இந்த டென்ஷன் எல்லாம்னு.. யோசிக்க வைக்கிற மாதிரி நிகழ்வுகள் இருக்கும்.

"அடுத்தவர் மனம் நோகாமல் நடப்பது", "குற்றம் பார்ப்பின் சுற்றம் இல்லை", "ஊரோடு ஒத்து வாழ்"... இதெல்லாம் சுலபமா சொல்லி வச்சிட்டு போய்ட்டாங்க... இங்க அதை எல்லாம் பின்பற்றி அவஸ்தை படுறது எத்தனை பேரு? எவ்வளவோ பார்த்து பார்த்து, இவங்க தப்பா நினைச்சிர கூடாது, அவங்க தப்பா நினைச்சிர கூடாதுன்னு பல விஷயங்கள் செஞ்சு.. நம்ம ஆப்பு வாங்குறது தான் மிச்சம்.. அப்படி வாங்கியும் பல நேரங்களில்.. ஒதுங்க முடியாமல் மாட்டிட்டு முழிக்க வேண்டியதா இருக்கும்.

இல்ல தெரியாம தான் கேக்குறேன்.. ஒருத்தங்க நல்ல பழகினா, அவங்ககிட்ட உரிமை எடுத்துக்குறது சரி தான்.. அதுக்காக அளவுக்கு மீறி தனக்கு சாதகமா உரிமை எடுத்துக்கறது தான் சகிக்க முடியறதில்லை.. பல சமயம், சரி போனா போகுது போன்னு.. சொல்றத கேட்டுட்டு,  கேட்டத செஞ்சிட்டு போயிட்டு இருக்க வேண்டியதா இருக்கு.. யோசிச்சுப் பார்த்தா இதெல்லாம் எதுக்கு...?? நல்ல நட்போ, உறவோ... மனசுக்கு நிம்மதி தரணும்... நினைவுகளை அசை போடும் சமயம் ஆனந்தம் தரக் கூடியதா இருக்கணும்... அத விட்டுட்டு... எப்பா சாமீ...... ஹ்ம்ம் ஹும்ம்... இந்த விளையாட்டுக்கு நா வரல... ஆள விடுங்கப்பான்னு சொல்ற மாதிரி இருக்கக்கூடாது.

நம்ம எல்லாருக்குமே நிறைய வாழ்க்கை அனுபவங்கள் இருக்கும்.. அமைதியா உக்கார்ந்து யோசிச்சு பார்க்கணும்... என்னென்ன பண்ணோம்... எது எதுக்காக பண்ணோம்... பண்ணது அவசியம்தானா... இது மாதிரி.. நம்மை நாமே சுயபரிசீலனை செய்து கொள்ளணும். நட்பும்,  உறவும்  இந்த வாழ்க்கைல தவிர்க்க முடியாத ஒரு விஷயம் தான்... அதே சமயம் எப்போ எது நமக்கு பிரச்சினைகளை கொண்டு வருதோ, மனநிம்மதியோட விளையாடுதோ.. அல்லது சுயசிந்தனையில் குறுக்கிடுறதோ அப்பவே அதை விடுத்து ஒதுங்கிறனும் .

எனக்கும் நண்பர்கள் இருக்காங்கன்னு சொல்றது பெருசு இல்ல.. அவங்க நம்மை நாமாக சுய கௌரவத்துடன் வாழ விடுறாங்களான்னு யோசிக்கணும்...  எப்பவும் திடமான மனதில் ஸ்திரமான எண்ணங்களுடன் சுயமரியாதையுடன் தனித்துவத்துடன் இருக்கணும்.

சரி ஓகே.. விட்டா பேசிட்டே இருப்பேன்.. உங்களுக்கு அப்படி நல்ல நட்போ, உறவோ ஏற்கனவே இருந்தா.. ரொம்ப சந்தோசம்... இல்லன்னா.. இனியாவது அமைய வாழ்த்துக்கள். அட அமையலேன்னா கூட ஒரு பிரச்சினையும் இல்ல... நமக்கு நாமே நண்பன்...!


~அன்புடன் ஆனந்தி



(படம்: நன்றி கூகிள்)

About Me

My photo
I am a jovial.. sensitive.. happy person who likes to be around good friends ;)