topbella

Monday, January 28, 2019

மூச்சுக் காற்றாய்..!!


விடிதலில் தொடங்கி
முடிதலில் அடங்கும்..
மூச்சுக் காற்றாய்
மோகன இசையாய்
முகமன் கூறி
முன் அமர்ந்து சிரிக்கும்..
விண் பார்த்து வியக்கும்
வேடிக்கை பேசி விளையாடும்
விழி வழி உயிர் மாற்றும்
வெகுளியாய் வெட்கப்படும்
மருண்டு ஓடும் மானாகும்
மிரட்டி விரட்டும் வேங்கையாகும்
அர்த்தமின்றி ஆர்ப்பரிக்கும்
ஆழமாய் அறிவுரை கூறும்
அன்பிற்கு அடங்கி போகும்
அதிகாரம் கண்டு வெகுண்டு எழும்
இதயம் தொலைத்தே ஏங்கி திரியும்
இரவு தொலைத்து உறக்கம் தேடும்..
காதலில் கவிதை பேசும்
கவிதையாய் காதல் வீசும்..!!

~அன்புடன் ஆனந்தி

Saturday, January 19, 2019

முழுதாய் என்னை..!!!



கும்பிடும் கோவிலில்
குங்குமம் வைத்தாயே
குறையேதும் இல்லாமல்
கூட வருவதாய் சொன்னாயே..

கைகோர்த்து கதை பேசி
காலமெல்லாம் வருவேனென்றாயே
கண்ணிமைக்கும் நேரத்தில்
கலைத்தும் சென்றாயே..

வார்த்தை அம்புகளால்
வாதம் செய்தாயே
தாக்கும் என்றறிந்தே
தயங்காமல் பேசினாயே..

மனம் அமைதி கொண்டதா
மௌனம் மாற்று கண்டதா
உள்ளம் உண்மை உணர்ந்ததா
உதிரம் உறைந்தே விட்டதா..

தெளிவு உன்னை கொண்டதா இல்லை 
தேடல் கை கோர்த்ததா
முடிவு செய்து கொண்டாயா இல்லை 
முழுதாய் என்னை கொன்றாயா..

முகவரியை தொலைத்தாயா இல்லை
முடிவு செய்தே தோற்றாயா
கவிதை வரைய சென்றாயா இல்லை
கதையை முடித்து வைத்தாயா..?!

~அன்புடன் ஆனந்தி
(படம்: கூகிள், நன்றி)

Thursday, July 19, 2018

கடைசி வரை...!!!


இதழ்களில் இடம் தேடு
இதயத்தின் தடம் நாடு
விழி வழி மொழி பேசு
மௌனத்தால் காதல் பேசு..
முத்தத்தால் யாகம் செய்
சத்தமின்றி யுத்தம் செய்..

குழந்தையின் மென்மையுடன்
கொஞ்சிப் பேசு..
விழித்தென்றல் மேல் உரச
மெல்ல வீசு..
உருகும் உளம் தாங்கி
உயிரால் உறையச் செய்..

கருவில் ஏந்தும் உயிராய்
கருத்தாய் காபந்து செய்..
மருகி நிற்கும் பொழுதில்
மன்றாடும் வேளையில்
மறுகணம் தயங்காது
மடியோடு சேர்த்துக் கொள்..

கண்களில் கவலை கண்டால்
கையணைத்தே தைரியம் பேசு
காரிருள் வேளையிலும்
கதிரவனின் தன்மை கொண்டு
காதலின் கரம் பிடித்தே
கடைசி வரை முன்னேறு..!!!

~அன்புடன் ஆனந்தி


படம்: நன்றி, கூகுள்


About Me

My photo
I am a jovial.. sensitive.. happy person who likes to be around good friends ;)