topbella

Wednesday, October 18, 2017

சர்வமும் நீ...!


நினைத்தும் பார்க்கவில்லை
உன் நெஞ்சில் நான்
நீங்காமல் நிறைவேன் என்று
கடந்து வந்த பாதையை
காத்திருந்த வேளையை
கைகோர்த்து நடந்த நொடிகளை
காலம் கரை சேர்த்த கதையை
எண்ணி மகிழ்கிறேன்
உனை எண்ணி கரைகிறேன்
நெருஞ்சி முள்ளாய்
நிறைத்த பாரம்
நீ நெருங்கிய நொடி
உடனே தீரும்..
பார்வையில் படரும் பாசம்
பால் நிலவாய் நெஞ்சில் வீசும்..
மின்வெட்டு பார்வையில்
மென்பட்டாய் இளகும் நெஞ்சம்
உன் கண் காணா நேரம்
கவிதை நூறு பேசும்..
மிச்சம் வைத்த வார்த்தைகளை
அச்சம் இன்றி தந்தவனே
சத்தம் இன்றி சொல்கிறேன்
என் சர்வமும் நீ என்று..!!!

~அன்புடன் ஆனந்தி


நன்றி: கூகிள் (படம்)

Friday, January 13, 2017

அது அந்தக் காலம்...!


அதிகாலை 5 மணிக்கெல்லாம் 
அம்மாவின் அழைப்பு
காதில் விழுந்தும் விழாதது போல் 
கம்பளிக்குள் ஒளிந்து கொள்வோம்..
எழுந்து குளித்து ஏதாவது உதவி செய் என்பாள் அம்மா..
எப்போதும் போல் ஆதரவாய் வந்தே
இன்னும் சற்று உறங்கட்டுமே என்பார் அப்பா..
ஒரு வழியாய் எழுந்து குளித்து வாசல் வந்தால்
அழகாய் தெளித்து கோலமிட்டு 
முற்றத்தில் விளக்கேற்றி வைத்து 
வாழை இலை முழுக்க 
வகை வகையாய் காய்கறிகளும் 
சீப்பு சீப்பாய் வாழை பழங்களும்
அம்சமாய் அடுக்கி வைத்து 
அருகிலேயே கரும்பும் வைத்து 
மஞ்சள் கிழங்கு கட்டி
விபூதி பட்டையிட்டு 
நடுவில் குங்குமம் வைத்து
தண்ணீர் தளும்ப ஊற்றி
இரு பானைகள் அடுப்பில் ஏற்றி வைத்து
கண்களில் புகை அடிக்க
அம்மா கவனமாய் பொங்கல் செய்து கொண்டிருக்க
தம்பியையும் துணைக்கழைத்து
காய்ந்த தென்னை ஓலைகளை 
பதமாய் பிய்த்துக் கொடுத்து 
பொங்கல் பொங்குவதற்காய் 
பொறுமையாய் காத்திருப்போம் 
பொங்கல் நுரையாய் பொங்கி வர
அப்பா தேங்காய் ஒன்றை உடைத்தே 
பானைக்குள் ஊற்றியபடி 
பொங்கலோ பொங்கல் என்பார் 
அம்மா குலை விட்டபடியே 
அதனை கிளறி விடுவாள் 
பூரிப்பில் பார்த்திருப்போம்
புன்னைகையால் பூத்திருப்போம் 
பொங்கலை இறக்கி பூஜை முடித்து விட்டு
இலையில் வெண்பொங்கலும் சர்க்கரை பொங்கலும் 
உடைத்த தேங்காயில் இருந்து ஒரு துண்டும்
உரித்த வாழை பழம் ஒன்றும் வைத்தே 
காக்கைக்கு முதலில் வைத்தே 
பின்பு நம் கைகளில் அம்மா தருவாள்
இதெல்லாம் முடியும் முன்பே 
இனிதே இமை திறந்தே 
எட்டி பார்ப்பான் ஆதவனும்...!!!

#அது அந்தக் காலம்#


~அன்புடன் ஆனந்தி


(படம்: கூகிள், நன்றி)

Saturday, December 31, 2016

ஏகாந்தம் இதுவே...!!!




வாசல் திறந்து நின்றேன்
வானம் சிரிக்க கண்டேன்..
பூக்கள் மலர கண்டேன்
அதன் பூவிதழ் விரிய கண்டேன்..

வண்டு உலவ கண்டேன் 
அதன் ரீங்காரம் இசைக்க கண்டேன்..
தேன் உண்டு களிக்க கண்டேன்
உள்ளம் அது கண்டு கிறங்கி நின்றேன்..

பட்டாம் பூச்சியின் சிறகை கண்டேன்
அவை பாடி திரியும் அழகு கண்டேன்..
தேடி நெருங்கையிலே அவை 
ஓடி ஒளிய கண்டேன்..

தென்றல் வீச கண்டேன் 
தேன் தமிழ் கானம் ஒலிக்க கண்டேன் 
துள்ளி விழும் அருவி கண்டேன் 
அதை தாங்கி நிற்கும் மலையை கண்டேன்..

அல்லி மலரை கண்டேன் 
அதன் அங்கமெல்லாம் ஜொலிக்க கண்டேன் 
அருவி விழுகையிலே  மான்கள் 
அதை அள்ளி பருக கண்டேன்..

புற்களின் பசுமை கண்டேன் 
புத்திக்குள் குளுமை கண்டேன்..
எத்தனையோ இன்பம் கண்டேன் 
அத்தனைக்கும் ஆசை கொண்டேன்..

எண்ணத்தில் கண்டதெல்லாம் 
எதிரிலே நிற்க கண்டேன்...
எள்ளளவும் உறுத்தல் இல்லா..
ஏகாந்தம் இதுவே என்றேன்..!


~அன்புடன் ஆனந்தி



(படம்: நன்றி கூகிள்)

About Me

My photo
I am a jovial.. sensitive.. happy person who likes to be around good friends ;)