topbella

Saturday, September 14, 2013

எதுவென்றேன்...!


இன்பம் எதுவென்றேன்
இனியவள் உன்னுடன்
இயைந்து இருப்பதென்றாய்..

துன்பம் எதுவென்றேன்
நீ இவ்வாறு தூர இருந்தே
என்னை துயரத்தில்
ஆழ்த்துவதென்றாய்...

காதல் எதுவென்றேன்
உன் கண்களோடு என்
கண்கள் கலப்பதென்றாய்...

காமம் எதுவென்றேன்
உனைக் கண்டவுடன் என்
கைகளுக்குள் சிறை
வைப்பதென்றாய்...

மோகம் எதுவென்றேன்
மூச்சிலும் பேச்சிலும்
முக்காலமும் நீயே
நிறைந்திருப்பதென்றாய்..

தேடல் எதுவென்றேன்
தெரிந்தும் என்னுயிரை
உனக்குள் தேடித்
திரிவதென்றாய்...!!!

...அன்புடன் ஆனந்தி


(படம்: கூகிள், நன்றி)

Tuesday, August 20, 2013

சூல் கொண்ட மங்கை...!


ஆதவன் அயர்ச்சியில் 
அப்புறத்தில் சென்று விட... 
பிள்ளைச் சிரிப்பாய் 
பிறை நிலா உந்தன் 
வெள்ளைத் தோற்றம்...

எவரோ உன்னை... 
எட்டிப் பார்ப்பதாய் எண்ணியோ 
வேகமாய் அங்குமிங்கும் 
வெட்கத்தில் மறைந்து திரிகிறாய்...

சூல் கொண்ட மங்கை போல்
சூழ்ந்திருக்கும் மேகக்கூட்டம்
கருத்தடர்ந்த பஞ்சுப்பொதியாய் 
விம்மி வெடித்து விட
விமரிசையாய் காத்திருப்பு...

மேல தாளம் போல் 
இடி மின்னல் இசை அமைக்க 
இக்கணமே வருகிறேன் என்றே
இழை இழையாய் வரைந்தபடி 
இப்பூமி முத்தமிட்டாய்...

கொட்டும் மழையில் 
குதித்து நனைந்திட தூண்டும் 
மழை உன்னைக் கொண்டாடியே  
மனம் நிறைந்திட வேண்டும்..!

...அன்புடன் ஆனந்தி


(படம்: கூகிள், நன்றி)






Tuesday, August 13, 2013

விடியல்...!



ஆதவன் அமர்க்களமாய் சஞ்சரிக்க
அங்கங்கே பறவைகள் இசையமைக்க
அவ்விசைக்கு ஏற்றாற்போல்
அத்தனை மரங்களும் தலையசைக்க...

தலையசைத்த நேரத்தில்
தளிர்காற்று எனைத் தாக்க
கண்மூடியே ஒரு நிமிடம்
கண்ணுக்கெட்டா தூரம் நான்
கடந்தே போக...

பள்ளி செல்லும் பாலகர்கள்
அலுவல் பார்க்கச் செல்லும் ஆசாமிகள்
அனைத்தையும் ஆமோதிப்பது போல்
ஆலய மணியின் அழைப்போசை...

கண்ணுக்கு விருந்தாய் விரிந்திருக்கும்
வண்ண வண்ணப் பூக்கள்
அன்னை மடி அசைவாய்
தென்னை ஓலையின் தாலாட்டு...

நெருக்கி அடுக்கி வைத்தது போல்
பளபளக்கும் பப்பாளிகள்...
பதுங்கிய படியே
பார்த்துச் செல்லும் தெரு நாய்கள்...

உச்சஸ்தாயியில் உரக்க கூவியே
உப்பு விற்கும் வியாபாரி...
கலகலப்பாய் கடை திறந்தே
காத்திருக்கும் கடை முதலாளி...

தக்காளி மிளகாய் விலையேற்றம் பற்றி
தர்க்கம் செய்து செல்லும் பெண்மணிகள்...
பார்த்தபடியே நின்றுவிட பல விஷயங்கள்
படர்ந்ததுவே பகல் பொழுதும்...!

...அன்புடன் ஆனந்தி



(படம்: நன்றி கூகிள்)

About Me

My photo
I am a jovial.. sensitive.. happy person who likes to be around good friends ;)