topbella

Tuesday, August 20, 2013

சூல் கொண்ட மங்கை...!


ஆதவன் அயர்ச்சியில் 
அப்புறத்தில் சென்று விட... 
பிள்ளைச் சிரிப்பாய் 
பிறை நிலா உந்தன் 
வெள்ளைத் தோற்றம்...

எவரோ உன்னை... 
எட்டிப் பார்ப்பதாய் எண்ணியோ 
வேகமாய் அங்குமிங்கும் 
வெட்கத்தில் மறைந்து திரிகிறாய்...

சூல் கொண்ட மங்கை போல்
சூழ்ந்திருக்கும் மேகக்கூட்டம்
கருத்தடர்ந்த பஞ்சுப்பொதியாய் 
விம்மி வெடித்து விட
விமரிசையாய் காத்திருப்பு...

மேல தாளம் போல் 
இடி மின்னல் இசை அமைக்க 
இக்கணமே வருகிறேன் என்றே
இழை இழையாய் வரைந்தபடி 
இப்பூமி முத்தமிட்டாய்...

கொட்டும் மழையில் 
குதித்து நனைந்திட தூண்டும் 
மழை உன்னைக் கொண்டாடியே  
மனம் நிறைந்திட வேண்டும்..!

...அன்புடன் ஆனந்தி


(படம்: கூகிள், நன்றி)






Tuesday, August 13, 2013

விடியல்...!



ஆதவன் அமர்க்களமாய் சஞ்சரிக்க
அங்கங்கே பறவைகள் இசையமைக்க
அவ்விசைக்கு ஏற்றாற்போல்
அத்தனை மரங்களும் தலையசைக்க...

தலையசைத்த நேரத்தில்
தளிர்காற்று எனைத் தாக்க
கண்மூடியே ஒரு நிமிடம்
கண்ணுக்கெட்டா தூரம் நான்
கடந்தே போக...

பள்ளி செல்லும் பாலகர்கள்
அலுவல் பார்க்கச் செல்லும் ஆசாமிகள்
அனைத்தையும் ஆமோதிப்பது போல்
ஆலய மணியின் அழைப்போசை...

கண்ணுக்கு விருந்தாய் விரிந்திருக்கும்
வண்ண வண்ணப் பூக்கள்
அன்னை மடி அசைவாய்
தென்னை ஓலையின் தாலாட்டு...

நெருக்கி அடுக்கி வைத்தது போல்
பளபளக்கும் பப்பாளிகள்...
பதுங்கிய படியே
பார்த்துச் செல்லும் தெரு நாய்கள்...

உச்சஸ்தாயியில் உரக்க கூவியே
உப்பு விற்கும் வியாபாரி...
கலகலப்பாய் கடை திறந்தே
காத்திருக்கும் கடை முதலாளி...

தக்காளி மிளகாய் விலையேற்றம் பற்றி
தர்க்கம் செய்து செல்லும் பெண்மணிகள்...
பார்த்தபடியே நின்றுவிட பல விஷயங்கள்
படர்ந்ததுவே பகல் பொழுதும்...!

...அன்புடன் ஆனந்தி



(படம்: நன்றி கூகிள்)

Tuesday, July 16, 2013

மௌனத்தின் மொழி...!


விடியலுக்கான விடை தேடி விதி வழிப் பயணம்... எல்லாம் மாயையா... இறைவன் வைத்த வேள்வியா... எதற்காக பாசம் வைத்தாய்.. இழந்த பின் துடிப்பதற்கா... எதுவும் நிரந்தரம் இல்லை என்ற எண்ணம் அறிவால் உணர்ந்தாய்... வைத்த அன்பில் அதை மறந்தாய்... வாழ்க்கை சுழலில் வந்தார் நிற்பதில்லை... சென்றார் மீண்டு வருவதில்லை..  அவரவர் கடமை முடிந்ததும்... கடைத்தேறி காணாமல் மறைந்து விடுகிறோம்.  எதுவும் இங்கே உண்மை இல்லை... எவர் உறவும் இங்கு நிதர்சனம் இல்லை.. கரை காணும் நோக்கம் உண்டாகில், கண் மூடி கடவுளிடம் சரண் அடைந்து விடு.. என்றே சத்தியம் உரைக்கின்றது.. அதைச் சபல உள்ளம் மறுக்கின்றது.

உண்மை அறிந்தும் உழலும் உள்ளத்தை என்ன செய்வது.. எதிலும் நாட்டம் இல்லை.. எதன் மீதும் பற்று இல்லை.. எல்லாம் பார்த்தாகி விட்டது.. இருந்து செய்ய போவது என்றே இங்கே எதுவும் இல்லை.. கர்மாவின் விளைவால் காலத்தை கடத்திக் கொண்டிருக்கிறோம். ஞானம் வந்து விட்டதாய் சொல்பவன் எல்லாம் ஞானி அல்லவே.. தனக்கு எல்லாம் தெரிந்து விட்டதாயும், அதை பிறர் உணர பிரயத்தனம் செய்வதாயும் சொல்லித் திரிபவர்கள்.. மூடர்கள்.  உணர்ந்த சத்தியத்தை உள்ளத்தோடு நிறுத்திக்கொள்... உலகிற்கு உணர்த்துவது உன் வேலை அல்ல.. 

கணத்திற்குள் காலம் உன்னை கடந்து கரைந்து சென்று விடுகிறது.. நினைத்தாலும் அதனை நீ எட்டிப் பிடிக்க இயலப்போவதில்லை.. உலகம் தெரிந்து கொள்.. உண்மை அறிந்து கொள்.. உனக்குள் அமிழ்ந்து கொள்... உள்ளமை உணர்ந்து கொள்... உனக்குள் உன்னை தேடுவதை தவிர உன்னதமான செயல் வேறொன்றும் இல்லை. உண்மை உணர்ந்த நிமிடம் நாம் ஊமையாகி விடுகிறோம்.. பேச ஒன்றும் இல்லை.. பெரிதாய் சொல்ல எதுவும் இல்லை.. மௌனத்தின் உன்னதம் மனதிற்கு உரைக்கும் தருணம் உள்ளுக்குள் அமைதி சூழ.. மற்றவை எல்லாம் மறைந்து விடக்கூடும்.

எண்ணத்தின் தெளிவு ஏகாந்தம் தரக்கூடும்... திணிக்கப்படாத சிந்தனை தூய தீபமாய் ஒளிரக்கூடும். போகும் இடம் தெரிந்து விட்டால்... வாழும் இடம் வசந்தமாகிப் போகும்... மௌனத்தின் மகிமை அறிந்தவர்.. அதை உணர்ந்தவர்.. அன்றாட நிகழ்வுகளின் இரைச்சலைக் கூட ஏற்றுக் கொள்ள முடிவதில்லை.. ஆழ்ந்த அமைதியின் அருமை உணர்ந்து விட்டால்... மற்றதெல்லாம் இங்கே மதிப்பிழந்து போய் விடுகிறது...!

மௌனம் மகத்துவமானது... மௌனித்தல் அவ்வளவு எளிதில் சாத்தியமல்ல... பல சந்தர்ப்பங்களில் சத்தியம் உணர்ந்தும்.. லௌகீக வாழ்வின் சாகசங்கள் நம்மை சடுகுடு ஆடத்தான் செய்து விடுகிறது.. உட்கார்ந்து யோசிக்க ஒன்றும் இல்லை.. உள்ளத்தின் ஓசைக்கு செவி மடுத்தே.. உண்மையின் பாதையில் ஊமையாய் நகர்தல் உத்தமம்...!

வார்த்தைகள் மௌனிக்கும் போது வாழ்க்கைத் தத்துவம் உணர முடிகின்றது. மௌனத்தின் மொழி மனதின் ஒலி.

...அன்புடன் ஆனந்தி


(படம்: கூகிள் நன்றி)

About Me

My photo
I am a jovial.. sensitive.. happy person who likes to be around good friends ;)