ஜனவரி 24, 2026
திணை அமெரிக்கா நடத்திய தமிழர் திருநாள் தமிழ்மறை தந்த திருவள்ளுவர் நாள் சிறப்பு நிகழ்ச்சி.
பத்திரிக்கையாளர், எழுத்தாளர், நகைச்சுவைவாணர் திரு. மதுக்கூர் இராமலிங்கம் அவர்கள் தலைமையில், இணையவழிக் கருத்தரங்கம் நடைபெற்றது.
வேர்களைத் தேடி என்ற தலைப்பில் இணைய வழி கருத்தரங்கம் மிகச்சிறப்பாக நடைபெற்றது.
நிகழ்ச்சியை நெறியாள்கை செய்ததில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன்.
நிகழ்ச்சியின் தொடக்கத்தில் ஜனவரி 25 ஆம் தேதி தமிழ்நாட்டில் இந்தித் திணிப்பை எதிர்த்து தமிழ் மொழி உரிமைகளுக்காகப் போராடி உயிர்நீத்த தியாகிகளை நினைவு கூறும் வகையில் அவர்களுக்கு ஒரு நிமிடத்திற்கு மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.
அடுத்ததாக தமிழ்த்தாய் வாழ்த்தினை நியூசெர்சியில் வசிக்கும் சாய் ராகவி தனது மழலைக்குரலில் சிறப்பாகப் பாடினாள்.
அடுத்ததாக, நியூ ஜெர்சியில் வசிக்கும் ஆதவன் 2 குறள்களைக் கூறி குறள் வணக்கம் கூறியது அழகு.
ஆதவனைத் தொடர்ந்து, நம் தமிழர்களின் பாரம்பரியக் கலையான பறை இசையை திருப்பறைக்குழுவில் இருந்து திரு. இளங்கோ அவர்கள் வழங்கியது மன நிறைவு.
கருத்தரங்கம் இனிதே தொடங்கியது. திரு. மகேந்திரவர்மன் சம்பத்து, நியூஜெர்சியில் இருந்து 12 கீழடி தமிழரின் தாய்மடி என்ற தலைப்பில் வலிமையான தனது கருத்துகளை எளிமையாக வழங்கினார். சம கால ஆராய்ச்சியாளர்களான திரு. பாலகிருஷ்ணன் அவர்கள் மற்றும் திரு. அமர் நாத் அவர்களைப் பற்றியும் எடுத்துரைத்தது கூடுதல் சிறப்பு. நமக்கான அடையாளங்களை நாம் தொலைத்து விடக்கூடாது என்றார். முழுவதும் புரிந்து கொள்ளப்படாத இலக்கியம் கீழடி, முழுவதும் தோண்டப்படாத கீழடி நம் இலக்கியங்கள் என்ற செய்தியைப் பகிர்ந்தார்.
அவரைத் தொடர்ந்து கவிதா நடராஜன், கலிஃபோர்னியாவில் இருந்து தமிழின் தொன்மையும், தொடர்ச்சியும் என்ற தலைப்பில் சிறப்பான தனது கருத்துகளை அழுத்தமாக எடுத்துரைத்தார். தமிழின் ஒவ்வொரு “மை” களையும் தன்னகத்தே கொண்ட தாய்த்தமிழின் சிறப்பை விரிவாக எடுத்துரைத்து செந்தமிழின் பெரு”மை”யைப் பறை சாற்றினார். தனது இனிமையான குரலில் பாடியும் சிறப்பு சேர்த்தார்.
அடுத்த பேச்சாளராக திரு. சரவணகுமார், டெக்ஸாஸில் இருந்து தமிழர் பண்பாடு என்ற தலைப்பில் தனது கணீர் குரலில் பேசினார். சரவெடி வெடித்தது போல் அழகுத் தமிழில் அவர் தெளிவுற எடுத்து வைத்த கருத்துகள் சிறப்பு. தனது பதின்ம வயது மகனை அழைத்துக்கொண்டு பராசக்தி படம் பார்க்கச் செல்லும் போது, அவனுக்கு அனைத்தையும் சொல்லிக்கொடுத்து புரிய வைத்ததைக் கேட்டு மன நெகிழ்வு.
மதுக்கூரில் பிறந்த மரியாதைக்குரிய மாபெரும் தமிழ் ஆளுமை நிகழ்வின் நாயகர் மதுக்கூர் ராமலிங்கம் ஐயா அவர்கள் வேர்களைத்தேடி என்ற தலைப்பில் தனது ஆழமான உரையை வழங்கினார். மதுரத்தமிழில் மனம் நிறைத்த கருத்துகளை வழங்கினார். கீழடியின் காலடியில் இருந்து பேசுகிறேன் என்று மகிழ்வுடன் உரைத்தார். நமது பண்பாட்டைப் பக்குவமாக எடுத்துரைத்து, பூமிக்கடியில் ஆழ்ந்திருக்கும் வேர்கள் போன்ற எம் தாய்த்தமிழை யாராலும் அசைக்க முடியாது என்றுரைத்தார். தனது பெயரப் பிள்ளைகளுக்கு ஆதிரை, ஆதிரன் என்ற தமிழ்ப்பெயர்கள் சூட்டியதை மகிழ்வுடன் பகிர்ந்தார்.
அயல் நாட்டில் இருக்கும் நம் தமிழர்கள் தாயகம் வரும் பொழுதெல்லாம் தாய்மடியாம் கீழடியைப் பார்த்துவிட்டு, தமிழன் என்ற செருக்குடன் செல்ல வேண்டும் என்றார்.
20 ஆண்டு கால தென்னை மரங்களால் தான், 2000 ஆண்டு கால வரலாறு காப்பாற்றப்பட்டது போன்ற செய்திகளைப் பகிர்ந்தார்.
நிகழ்வில் கலந்து கொண்டு பலர் வாழ்த்தும் கருத்தும் வழங்கினார்கள்.
நிகழ்வின் நிறைவில் “ஒரு தங்க ரதத்தில் பொன் மஞ்சள் நிலவு” என்ற பாடலில் இருந்து சில வரிகளைப் பாடி அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தினார்.
நன்றியுரையுடன் நிகழ்ச்சி இனிதே நிறைவு செய்யப்பட்டது.


0 comments:
Post a Comment