topbella

Saturday, April 11, 2026

Durandhar 2 : The Revenge


இனிய வணக்கம். அனைவரும் நலமா? வலைத்தளத்தில் எழுதி வருடங்கள் ஆகிவிட்டது. மீண்டும் எழுதுவதில் மகிழ்ச்சி.

என்னதான் சொல்லுங்க? படம்னா தியேட்டர்ல போய் தான் பாக்கணும். அதுவும் துரந்தர் மாதிரி படம் எல்லாம் தியேட்டரில் மட்டும் தான் பார்க்கணும்.

செம படம்.. அடி தூள் தான். துரந்தர் 1 வெளிவந்த போது  தியேட்டரில் போய் பார்க்கிறதுக்கான சந்தர்ப்பம் அமையல.

அதனால வீட்டிலேயே பார்த்தாச்சு. பொதுவா படம் ரொம்ப நல்லா இருந்தாதான் முழு படமும் உக்காந்து பார்ப்பேன்.

படம் சுமாரா இருந்துச்சுன்னா தவணை முறைல தான் பார்க்கறது.. ஆனா, துரந்தர் படம் மூணு மணி நேரம் போனதே தெரியாமல் முழு படத்தையும் பார்த்து முடிச்சேன்.

அப்படி ஒரு விறுவிறுப்பான படம். எனக்கு மட்டும் இல்லாம என் மகள்களுக்கும் ரொம்ப பிடிச்சுப் பார்த்த படம்.

தனது தாய் நாட்டிற்காக உளவாளியாக, இன்னொரு இடத்தில் போய், எதிரி நாட்டில் போய் மாட்டிகிட்டு உளவாளி படுற அவஸ்தையைக் காட்டும் படம்.  அதை எல்லாம் பார்க்கும் பொழுது மனசை என்னவோ பண்ணுது. அப்படி ஒரு பதைபதைப்பை ஏற்படுத்தியது.

அதில் இரண்டாவது பாகம் வருதுன்னு தெரிந்த உடனே எப்ப வரும் என்று காத்திருந்தோம். இந்த முறை தியேட்டரில் போய் பார்த்து விடணும்னு நினைச்சிட்டு இருந்தேன். போன தடவை மாதிரியே உடனே பார்க்க போக முடியல. அதற்கான சந்தர்ப்பம் அமையல.

இங்கல்லாம் பொதுவா நம்ம திரைப்படங்கள் தியேட்டர்களுக்கு வந்தால் ஒரு வாரம் 10 நாட்கள் ஓடிட்டு இருக்கும். அந்த 2 வாரத்திற்குள் போக முடியலேன்னா அப்புறமா Netflix அல்லது Amazon Prime ல வரும் வரை காத்துக் கிடக்க வேண்டியது தான்.

இன்று ஒரு தோழியிடம் பேசும் போது, துரந்தர் 2 பார்த்தியான்னு அவங்க கேட்க, இல்லன்னு சொன்னதும்.. அட கட்டாயமா தியேட்டர்ல போய் பார்த்திருக்கணும்னு உசுப்பேத்தி விட்டுட்டாங்க.

சரி எதுக்கும் எதாச்சும் தியேட்டர்ல இன்னும் ஓடுதான்னு பார்க்காலாம்னு பார்த்தா... நம்ம வீட்டுல இருந்து ஒரு பத்து பதினஞ்சு நிமிஷம் தொலைவிலேயே இருக்கும் MJR தியேட்டர்ல போட்டிருந்தாங்க.

எனக்கு ஆச்சரியமா இருந்தது.  படம் வந்து இவ்வளவு நாளாகியும், இன்னும் இங்கே ஓடிட்டு இருக்கிறது பெரிய விஷயம்தான். அதுவும் நமக்கு இன்னைக்கு சனிக்கிழமை வேறயா.. வசதியாப் போச்சு.. கிளம்ப வேண்டியதுதான்னு கிளம்பியாச்சு.

தியேட்டரில் நுழைந்து டிக்கெட் வாங்கும் இடத்திற்கு சென்று டிக்கெட் வாங்கிவிட்டு, மெம்பர்ஷிப் எதுவும் உள்ளதான்னு கேட்டேன். ஏன்னா, பசங்க சின்னதா இருக்கும் போது தியேட்டர் மெம்பர்ஷிப் வச்சிருந்தேன்.

அது எதுக்குன்னா குறிப்பிட்ட நாட்களில் மெம்பர்ஷிப் கார்டு உள்ளவர்களுக்கு டிக்கெட் விலையில் 50% தள்ளுபடி அல்லது எந்த படம் வேண்டுமானாலும் 5 டாலர் மட்டுமே அல்லது இலவசமா ஒரு பக்கெட் பாப்கார்ன் இப்படி ஏதாச்சும் இருக்கும்.

இதிலும் என்ன சுவாரஸ்யம்னா அந்த மெம்பெர்ஷிப் கார்டுக்கு எந்த கட்டணமும் கிடையாது. அதனால் தான் கேட்டேன். அந்தப் பெண்மணி ஏதோ வேலையில் மும்முரமாக இருந்ததால் அதெல்லாம் இல்லையே என்று சொன்னார்.

என் கணவரும் பரவால்ல வா.. அப்புறம் ஆன்லைன்ல தேடிப்பார்க்கலாம். இப்ப படம் தொடங்குவதற்கான நேரம் ஆகிருச்சுன்னு அவசரப்படுத்தவே நானும் படம் பார்க்கும் ஆவலில் வந்துட்டேன்.

படம் ஆரம்பிச்ச நொடியிலிருந்து, அப்பப்பா அப்படியே நம்மை கட்டிப்போட்டு விட்டதுன்னு சொல்லலாம். நாலு மணி நேரம் போனதே தெரியல.. எங்கயும் எந்த தொய்வும் இல்லாத காட்சி அமைப்புகள். பொதுவாக படங்களில் தொய்வு ஏற்பட்டால் நமக்கு தூக்கம் வந்துரும், இல்லேன்னா மனம் அங்கே லயிக்காது. ஆனா,  படம் ஆரம்பித்ததிலிருந்து முடிஞ்சவரைக்கும் அப்படி ஒரு விறுவிறுன்னு போச்சு.

ஒவ்வொரு காட்சியையும் ரொம்ப சிரத்தையுடன் எடுத்து இருந்தாங்க. ஒரு உளவாளியாக போகிறவர்களுடைய வலி,  முதல்ல அவங்க எப்படி ஒரு உளவாளியாக போறாங்க? அதன் பின்னால் இருக்கிற ஒரு பின்னணி எல்லாம் பார்க்கும் பொழுது நமக்குள் ஒரு நெகிழ்ச்சியும் வலியும் வந்து விடும்.

எவ்வளவோ பேர் இப்படி தன்னோட வாழ்க்கையையும் உயிரையும் தன் தாய் நாட்டிற்காக துச்சமாக மதித்து அவங்க பணிகளைச் செய்றாங்கன்னு யோசிக்க வைக்குது.

இராணுவ வீரர்களும், உளவாளிகளும் தங்களுடைய பணிகளை செவ்வனே செய்வதனால்தான் இன்னிக்கு நம்ம எல்லாரும் பாதுகாப்பா, பயமின்றி நிம்மதியா இருக்குறோம்.

இந்த மன நிலையோட படத்தைப் பார்க்கும் போது ஏதோ ஒரு மனநிறைவு கொடுத்ததுன்னே சொல்லலாம். எந்த ஒரு தேவையில்லாத காட்சிகளும் கிடையாது. ஒவ்வொரு காட்சியுமே சும்மா திட்டமிட்டுத் தீட்டி இருக்கிறார்கள்.

அவ்வளவு நல்லா இருந்தது. படத்தின் கதாநாயகன் ரன்வீர் சிங் தன்னுடைய அபாரமான நடிப்பில் நம் மனதைத் தொடுகிறார். மாதவன், சஞ்சய் தத், சாரா உள்ளிட்ட அனைத்து நடிகர்களும் தத்தம் கதாபாத்திரத்தை கச்சிதமாய் கையாண்டிருக்கிறார்கள் என்றே சொல்லலாம்.

இந்த படத்த பத்தின விமர்சனத்துக்கு  ஒரு தனி பதிவே போடலாம் போல இருக்கு. அவ்வளவு பேசலாம் இந்த படத்தை பற்றி. முடிந்தால் எழுத முயற்சி செய்கிறேன்.

இன்னிக்கு சனிக்கிழமை என்பதால் டிக்கெட் விலை அதிகமாய்த் தான் இருக்கும் என நினைத்தேன். ஆன்லைனிலேயே புக் பண்ணிவிட்டு போகலாம் தான். ஆனால் அதற்கு concession fee என்று 3 டாலருக்கு மேல் எடுப்பார்கள். அதனால் நேரிலேயே சென்று விட்டோம்.

இன்று  டிக்கெட் 7 டாலர் தான். எனக்கு ஆச்சரியமாப் போச்சு. ஆஹா.. பொதுவா நம்ம தமிழ்த் திரைப்படங்கள் அதிலும் இந்த மாதிரியான பிக் பட்ஜெட் படம் எல்லாம் வந்தால் டிக்கெட் குறைந்தது ஒரு 15 டாலர் இருந்து 20 டாலர் இருக்கும்.

அதுவும் ரஜினி போன்ற பிரபல நடிகர்களின் படம் எல்லாம் சில நேரங்களில் 25 டாலர் கூட ஆகும்.

நான் அப்படித்தான் ஏதாவது இருக்கும்னு நெனச்சேன். ஒருவேளை படம் வந்து  இரண்டு வாரங்களுக்கு மேல் ஆனதால் கூட இருக்கலாம்.

படம் பார்த்து வெளியே வரும் போது மீண்டும் எனக்கு மெம்பர்ஷிப் விசயம் நினைவு வந்தது. எல்லா தியேட்டர்களிலும் மெம்பர்ஷிப் வச்சிருந்தால் ஏதாவது சலுகைகள் கட்டாயம் இருக்கும் என்று அறிவேன்.

சரி.. திரும்பவும் கேட்டு பார்ப்போம்னு கேட்டேன். இப்பவும் அதே பெண்மணி தான் கவுண்டரில் இருந்தாங்க. அவர்களிடம் போய்,  "எனக்கு ஒரு சந்தேகம். மற்ற தியேட்டர்களில் குறிப்பிட்ட நாட்களில் ஏதாவது சிறப்பு சலுகைகள் பெற மெம்பர்ஷிப் கார்டு தராங்களே அது போல் இங்கு இல்லையா?" எனத் தெளிவாகக் கேட்டேன்.

"ஆமாமா.. செவ்வாய்க்கிழமை தோறும் நாங்க ஃபிரீ பாப்கான் கொடுக்கிறோம், அது மட்டுமில்லாம செவ்வாய் தோறும் எல்லாப் படமும் 5 டாலர்கள் மட்டுமே, அது தவிர ஒவ்வொரு முறை நம்ப டிக்கெட் வாங்கும் பொழுதும் அதற்கான ரிவார்டு பாய்ண்ட்டுகள் சேர்ந்து கொண்டே இருக்கும். 50 பாய்ண்ட்டுகள் சேர்ந்தால் 5 டாலர் குறைப்பார்கள் என்று இன்னும் சில சலுகைகளையும் சேர்த்துச் சொன்னார்."

அவர்கள் கேட்ட தகவல்களைக் கொடுத்துவிட்டு கையோடு மெம்பர்ஷிப் கார்டையும் வாங்கிவந்து விட்டேன்.

என் கணவரும் "பரவால்லயே.. அப்ப இல்லன்னு சொன்னாங்க. இப்ப மட்டும் எப்படின்னு கேட்டாரு.".

வாயுள்ள பிள்ளை பிழைக்கும்னு சும்மாவா பெரியவங்க சொல்றாங்க.. அப்போ படம் பார்க்கும் அவசரத்தில் போய்ட்டேன். அதான் திரும்ப கேட்டுப் பார்க்கலாமேன்னு கேட்டேன், கிடைச்சிருச்சுன்னு சொன்னேன். அவரும் அதுவும் சரிதான்னு சொன்னார். நமக்கு வேணும்னா நம்ம தான் கேட்கணும்.

ஒரு வழியா படத்தை தியேட்டரில் பார்த்த மகிழ்ச்சியுடன் திரும்பி வந்தாச்சு. கண்டிப்பா நீங்களும் பாருங்க.

ஏம்மா.. ஒரு படத்தைப் பார்த்துட்டு வந்ததுக்காம்மா இந்தப்பேச்சுன்னு திட்டப்பிடாது. மீண்டும் சந்திப்போம்.

நெல்லை அன்புடன் ஆனந்தி
ஏப்ரல் 11, 2026

6 comments:

Sekar venkatachalem said...

பரவாயில்லை....அனுபவித்ததை அப்படியே சொல்லியிருக்கிறீர்கள். இதுதான் (இது போன்ற) படங்களுக்கு உண்மையான நேர்மையான விமர்சனம். Duranthar 1 இரு பகுதியை பார்த்தேன். உங்கள் தூண்டுதலால் துறந்தார் 2 வை ஒரே மூச்சில பார்க்க வேண்டியிருக்கும் போல...

கன்னிக்கோவில் இராஜா said...

சிறப்பு

Vijaya Vellaichamy said...

சூப்பர்! 👌வரும் சனிக்கிழமை வரை இதே திரையரங்கில் ஓடினால் பார்த்துவிடுவதுன்னு முடிவே பண்ணிட்டேன்! ☺️🤣

Nellai Anbudan Ananthi (நெல்லை அன்புடன் ஆனந்தி) said...

ஆமாம் சார். அவசியம் ஒரே மூச்சில் பார்க்க வேண்டிய படம் தான். கருத்துக்கு நன்றி.

Nellai Anbudan Ananthi (நெல்லை அன்புடன் ஆனந்தி) said...

மிக்க மகிழ்ச்சி. நன்றி.

Nellai Anbudan Ananthi (நெல்லை அன்புடன் ஆனந்தி) said...

கட்டாயம் பாருங்க விஜி. :-)

About Me

My photo
I am a jovial.. sensitive.. happy person who likes to be around good friends ;)