topbella

Sunday, March 30, 2014

சின்னச்சின்ன சந்தோசங்கள்...!


சிந்தனைக்குள் சிறகடிக்கும் 
சின்னச்சின்ன சந்தோசங்கள்...
சில்லென்று வீசும் காற்று..
சிரிக்கும் மழலை...
சிந்தும் மழைத்துளி..
சிதறிக் கிடக்கும் சருகுகள்..
சலசலக்கும் நீரோடை.. 
அதிகாலை கேட்கும் பறவைகளின் ஒலி.. 
மனதை மயக்கும் இசை.. 
மலர்ந்து விரிந்து நிற்கும் பூக்கள்.. 
அடித்து பிடித்து கொண்டு கொட்டும் அருவி...
அம்மாவின் அக்கறை... 
மார்கழிக் குளிர்... 
மாங்காய் வடு.. 
வெடித்து நிற்கும் கொடுக்காய்ப்புளி..
வாசலில் போடும் வண்ணக்கோலம்.. 
வாங்கிச் சேர்த்த புத்தகங்கள்... 
காலில் குத்திய நெருஞ்சி முற்கள்..
கால் பொசுக்கும் மொட்டை மாடி வெயில்..
பனை ஓலைப் பதநீர்...
பரிசு வாங்கிய பேச்சுப்போட்டி... 
தென்னை மரக் காற்று.. 
அதன் தெவிட்டாத இளநீர்...
விரிந்தும் விரியாத பிச்சிப்பூ வாசம்..
விளையாட வரைந்த பாண்டி கட்டம்..
கலர்கலராய் அணிந்த கண்ணாடி வளையல்கள்..
காதோரம் அணிந்த ஒற்றை ரோஜா..

இப்படி எத்தனையோ சொல்லிக்கொண்டே போகலாம்.. சமயத்தில் எண்ணுவதுண்டு.. நம் பிள்ளைகள் இப்படியெல்லாம் அனுபவிக்கக் கூட வாய்ப்பே இல்லாமல் எங்கோ இடம் பெயர்ந்து வாழ்ந்து கொண்டிருககிறோமே என்று.. பிழைப்பிற்காய் வந்த இடம் நம் சொந்த இடம் ஆகிவிடாது.. இப்போதே இரண்டு மூன்று வருடத்திற்கு ஒரு முறை நான்கு வாரங்கள் இந்தியா சென்று வரும் போது.. சொந்த பந்தத்திற்கு அவசர கதியில் ஒரு அட்டெண்டன்ஸ் போடுவதோடு சரி.. அதுவும்.. ஆர்மி அவசரம் தான்... காலையில் அவசர அவசரமாய் எழுந்து குளித்து அரக்க பறக்க கிளம்பி.. காரில் ஏறி.. ஒவ்வொரு சொந்த பந்தம் இருக்கும் ஊருக்கும் போய்விட்டு வருவது என்பது.. ஏனோ மனதிற்கு எந்த ஒரு ஒட்டுதலையும் தருவதில்லை.. 

பிறந்த நாட்டில் உள்ள பல இடங்களை இன்னமும் பார்த்ததில்லை.. அவையெல்லாம் கனவாவே போயிரக்கூடாதுன்னு மட்டும் எண்ணமும் ஏக்கமும் இருக்கு.. ஊருக்கு போனால் எங்கே நேரம் இருக்கிறது அங்கே இங்கே அலையவே சரியா போயிருதுன்னு சொல்லிட்டு இருக்கும் போது.. ஒரு தோழி சொன்னாங்க.. அட நீங்க வேற இப்போல்லாம் யாருக்கு நேரம் இருக்கு எல்லா ஊருக்கும் போயிட்டு வந்துட்டு இருந்தா... அப்புறம் நாம எங்க வெளிய போறது.. இப்போதெல்லாம் காலம் மாறி விட்டது.. நாங்கல்லாம் ஒரு இடத்தை பொதுவா தேர்ந்தெடுத்து சொந்த பந்தத்தை அங்கே வர சொல்லிருவோம்.. அங்கேயே எல்லாரையும் சந்திச்சிட்டு அவங்கவங்க வழிய பார்த்துட்டு வந்திருவோம்.. யாரும் யார் வீட்டுக்கும் வரல போகலைன்னு எந்த கம்ப்ளைன்ட்டும்.. இருக்காதுன்னு சொன்னாங்க.. அடடா.. இந்த டீலிங் எனக்கு பிடிச்சிருக்குன்னு சொல்றத தவிர வேற என்ன நான் சொல்ல...! 

நம் பிள்ளைகள் நிலை நம்மை விட கடினம்.. விடுமுறைக்கு போய் சில நாட்களில் அங்குள்ள தட்ப வெட்பம் ஒத்து போகாமல் உடலுக்கு ஏதேனும் வந்து விடும்.. அதெல்லாம் ஒரு வழியாய் சரியாகி வரும் போது. அங்கிங்கு அலைந்து திரிந்து அதில் துவண்டு விடுவார்கள்.. அதையெல்லாம் தாண்டி வந்தால்.. இவர்கள் பேசும் மொழியும் அங்குள்ள நம் உறவுகள் பேசும் மொழியும் பெரும்பாலும் ஒருவருக்கொருவர் பரஸ்பரம் புரிந்து கொள்ள முடியாமல்.. ஒரு இடைவேளியோடே உறவு தொடர்கிறது.. குழந்தைகள் அதையும் சமாளித்து மொழி புரிந்து ஏற்றாற்போல் பேச பழகி அங்குள்ள குழந்தைகளோடு குழந்தையாய் விளையாட ஆரம்பிக்கும் போது.. நாம் திரும்பும் நாள் வந்து விடுகிறது.. அப்புறம் என்ன.. என்ன கொடும சார் இதுன்னு கிளம்பி வர வேண்டியது தான்.. அடுத்த விடுமுறையில் திரும்பவும் முதல்ல இருந்து தொடங்க வேண்டியது தான்.. வேடிக்கையாய் இதை சொன்னாலும்.. இதன் உள்ளிருக்கும் வலி வாங்கி வந்த வரம்.. போலும்..!!!



...அன்புடன் ஆனந்தி



(படம்: கூகிள், நன்றி)


About Me

My photo
I am a jovial.. sensitive.. happy person who likes to be around good friends ;)