topbella

Wednesday, May 19, 2010

கணினி இல்லாமல் கலங்கி போனேன்...!!

என்னத்த சொல்றது.. ஒரு வாரமா கம்ப்யூட்டர் இல்லாம ஒரு வழி ஆயிட்டேன்.. ஹ்ம்ம்... இப்ப வந்ததே பெரும் பாடு தான்..!


சரி வந்தது தான் வந்தீங்க... இருந்து ஏன் சோக கதைய கேட்டுட்டு போங்க...  (என்ன? என்ன யோசனை?.. என்னவோ  இருந்து சாப்பிட்டுட்டு தான் போகணும்னு சொல்ற மாதிரி இருக்கோ?? ) 
மைன்ட் வாய்ஸ் கேட்ச் பண்ணுவோம்ல..  ஹிஹிஹி..

எப்பவும் போல தான் பாட்டு கேட்டு கிட்டு.. நா பாட்டுக்கு ப்ளாக் படிச்சமா கமெண்ட் போட்டமான்னு இருந்தேன்..  ஏதோ ஒரு பாட்டு தேடுறதுக்காக நம்ம கூகிள் ல போயி அந்த பாட்டு பேரை போட்டு தேடினேன்... நம்ம கூகிள் ஆச்சே.. சும்மா பக்கம் பக்கமா அந்த பாட்டு பத்தி காமிச்சது.. சரி, நமக்கு இந்த லிங்க் சரியா வரும்னு.. நம்பி.. (அவ்வவ்வ்வ்வ்வ்) கிளிக் பண்ணேன்..


அவ்ளோ தாங்க நடந்ததது... எங்க இருந்து தான் வருமோ தெரியல... சும்மா குபு குபுனு ஒரே ஒரே எரர் மெசேஜ்.... குட்டி குட்டியா விண்டோ ஓபன் ஆகி.. அப்படி அப்படியே ஹாங் ஆகி நிக்குது.. சரி எதுக்கு வம்புன்னு சிஸ்டம் ஆப் பண்ணிட்டேன்..


அப்புறமா மெதுவா எட்டி பார்த்தேன்.. , திரும்பவும் அதே எரர் மெசேஜ்.. மத்த எதையும் ஓபன் பண்ணாவே விடலை.. எல்லாம் ஓவர்..


சரி நமக்கு தெரிஞ்ச நாலு விஷயம் வச்சு, முயற்சி பண்ணலாம்னா... ஹ்ம்ம் ஹ்ம்ம்.. அதுக்கெல்லாம் வழியே இல்லாம... லேப்டாப் ஏதேதோ எரர் மெசேஜ் சொல்லிட்டே இருந்தது.. முக்கியமா அது வொர்க் பண்ணாம போன விஷயம், யாஹூ மேசென்ஜெர், இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரெர், MSN மேச்சென்ஜெர்..


இது எதுமே வொர்க் பண்ணலன்னா.. அப்புறம் ஆன்லைன் எதுக்குன்னு நீங்க சொல்றது கேட்குது....


இத்தன கூத்துல  என் தம்பி கிட்ட வேற, போன் பண்ணி.. மணிக்கணக்கா பேசி.... ( சரி பண்றேனாம்.. ) ஒன்னும் கதைக்கு ஆவல.. அப்புறம் கடைசியா, என் தம்பி.. சொன்னங்க பேசாம சிஸ்டம் பார்மட் (போமட்) பண்ணிட வேண்டியது தான்னு.. ஏதோ, புண்ணியத்துக்கு ஒரு நண்பர் உதவியோட என் லேப்டாப், சரி பண்ணியாச்சு..  வரும் செவ்வாய் முதல் மீண்டும் ப்ளாக் உலகிற்கு என்ட்ரி குடுக்க வேண்டியது தான்..


ஒரு வாரம் கூட முழுசா ஆகலை, லேப்டாப் பிரச்னை வந்து, அதுக்குள்ள நா செம டென்ஷன் ஆய்ட்டேன்.. கம்ப்யூட்டர் இல்லாம காப்பி தண்ணி கூட இறங்காது போலிருக்கே..??


அதுலயும், மனசனுக்கு எவ்ளோ முக்கியமான வேலைங்க இருக்கு கம்ப்யூட்டர்ல...
ப்ளாக் படிக்கணும்
கமெண்ட் போடணும்
போஸ்டிங் போடணும்
வந்த கமெண்டுக்கு பதில் போடணும்
ஆர்குட் போகணும்...
பேஸ்புக் போகணும்.....
இப்படி எவ்வளவோ இருக்காக்கும்..!! இதெல்லாம் யாரு புரிஞ்சிக்கறாங்க..


ஒரு படத்துல வடிவேலு சொல்ற மாதிரி, ஒன்னுமே செய்யாம சும்மா இருக்கறது, எவ்ளோ கஷ்டம்னு சும்மா இருக்கறவனுக்குத் தான் தெரியுமாம்.. அதானே....!!


ச ச ச.. எம்புட்டு முக்கியமான வேலைங்க எல்லாமே...கம்ப்யூட்டர் இல்லாம என்னத்த  பண்ண முடியும்...?? என்ன நா சொல்றது சரி தானே??


மண்டை காய்தல் என்றால் என்னன்னு..இப்போ இப்போ யாராவது என்ன கேளுங்க.. கரெக்ட்-ஆ சொல்வேன்.. :D


இதனால.. சகல நண்பர், நண்பிகளுக்கு சொல்ல விரும்புவது என்னவென்றால், வைரஸோ, ஆட்-அவேரோ, ஸ்பை-வேரோ... எல்லாம் உள்ள வராம இருக்க தகுந்த பாதுகாப்புடன் வலை உலகத்தில் உலா வருக...!!


எல்லாருக்கும் ரொம்ப நன்றிங்கோ..!!


Friday, May 14, 2010

தொடர் பதிவு.......எனக்குப் பிடித்த 10 படங்கள்...!!

( ஆஹா.. என்னையும் மதிச்சு தொடர் பதிவு எழுத கூப்பிட்டிருக்காங்க.. என்ன சொல்லன்னே தெரியல.. அழைப்பிற்கு.. ரொம்ப ரொம்ப நன்றி..)

பதிவுலகில் முதல் முறையாக....
எனக்கு பிடித்த 10 படங்களை பற்றி பகிர்ந்து கொள்ளும் இந்த தொடர்பதிவுக்கு என்னை அழைத்த சைவகொத்துபரோட்டா அவர்களுக்கு எனது நன்றி... நன்றி :)

விதிகள்:

1. தமிழ்ப் படங்கள் மட்டுமே
(ஹி ஹி.. எப்படியும் நம்ம மத்த மொழி படங்கள்ல வீக்கு..)

2. குறைந்த பட்சம் எடுத்த வரைக்கும் திருட்டி டிவிடியாவது வந்திருக்க வேண்டும்.
(சரி... ரைட்டு....)

3. அடல்ட்ஸ் ஒன்லி படங்கள் அனுமதி இல்லை (நியூ உட்பட)
(சரி... ஓகே.. நீங்க சொன்ன சரி தான்..)

சரி வாங்க.. ஒன்று, இரண்டுன்னு வரிசை படுத்திரலாம்..!!


1 . தில்லானா மோகனாம்பாள்..


நடிகர் திலகம் சிவாஜி கணேசன் ஒரு நாதஸ்வர வித்வான், நாட்டியப் பேரொளி பத்மினி பரத நாட்டியக் கலைஞர்.. இவர்களின் சந்திப்பு, மோதலில் தொடங்கி பின்பு போட்டியில்  தொடர்ந்து.. அதன் முடிவில் இருவரும் இணைவது... இருக்கே.. அட அட.. சூப்பர் படம் போங்க.. மனோரமா, T.S.பாலையா இவங்க ரெண்டு பேர் பண்ற காமெடி.. கலக்கல்ஸ். 
இதில்  வரும், "நலம்தானா...??" பாடலும், "மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன??" பாடலும்.... கேட்டுகிட்டே இருக்க தோணும்..!!


2 எஜமான்

நம்ம சூப்பர் ஸ்டார் படம்.. வானவராயனாக வரும் ரஜினியின் நடிப்பு தூள்.. கொஞ்சி பேசி, ரஜினியின் அத்தை மகளாக வரும் மீனாவும் நடிப்பில் அசத்தல்.. மீனா கர்ப்பமாக இருக்கும் போது, ஒரு பட்டாம்பூச்சியை காட்டி அது வேணும்னு சொல்ல, ரஜினி அதை பிடித்து தர ஊர் முழுக்க சுத்தி வருவது... செம காமெடி கலந்த காதலை சொல்லும்.. இப்படத்தில் வரும்.. "ஆலப்போல் வேலப்போல்..", மற்றும் "நிலவே முகம் காட்டு.." பாடல்கள்...சூப்பரா இருக்கும்..

3 முதல் மரியாதை..


சிவாஜி கணேசன், ராதா, வடிவுக்கரசி.. இவங்க இணைந்து நடித்த இந்த படம்... அன்பில்லாத மனைவி அமைந்தால்... ஒரு ஆணின் உலகம் எப்படி இருக்கும் என்பதை உணர்த்தும் விதமாய் இப்படம்.... ஊர் ஜனங்க தெய்வமா மரியாதையாக பார்க்கும் சிவாஜி, வீட்டில் மனைவியின் இயல்பினால்... தலை கவிழ்ந்து நடந்து செல்வதும்.. அந்த ஊருக்கு பரிசல் ஓட்டும் பெண்ணாக வரும் ராதாவின் அன்பில், நெகிழ்வதும்... பார்க்க பார்க்க அருமை.. இதில் வரும்.. "வெட்டி வேரு வாசம் வெடல புள்ள நேசம்", மற்றும் "அடி நீதானா.. அந்தக் குயில்.." பாடல்கள் சூப்பர்..

4 காதல் கோட்டை..


எனக்கு ரொம்ப பிடிச்ச படம்.. சூர்யா-வாக வரும் அஜித், கமலி-யாக வரும் தேவயானி ரெண்டு பேரும் பார்க்காமலே ஒருவரை ஒருவர் காதலிக்கிறாங்க.. ஒரு பரீட்சைக்கு போகும் தேவயானி ட்ரெயினில் பர்சை தொலைக்க, நம்ம அஜித் அந்த பர்ஸில் உள்ள அட்ரஸுக்கு அதை மெயில் பண்ண.. தேவயானி அதற்கு நன்றி சொல்லி கடிதம் எழுத... மீண்டும் அஜித் கடிதம் எழுத.. இப்படியா அவங்க காதல் டெவலப் ஆகுங்க.. கடைசியில வீட்டில் கல்யாணம்  பண்ண சொல்லி நெருக்கடி வர தேவயானி அஜித்தை தேடி வருகிறார்.. வந்த இடத்தில் அஜித் கண்முன்னே இருந்தும் யாரென்று தெரியாமல் அவர்கள் சண்டை போடுவதும்... கடைசியில் தான் அனுப்பிய பரிசான ஸ்வட்டரை வைத்து அடையாளம் காண்பதும்... அடடா...சூப்பருங்க.... "நலம் நலமறிய ஆவல்...", "வெள்ளரிக்கா பிஞ்சு வெள்ளரிக்கா.."  பாடல்கள்  அருமை..

5 மௌன ராகம்..


கிளாசிக் ஹிட்.... ரேவதியும், கார்த்திக்கும் காதலிக்கிறாங்க..... துடிப்பான கார்த்திக் போலீஸ் ஷூட்டிங்-ல இறந்து போயிறார்.. வீட்டினர் கட்டாயத்தினால் ரேவதி, மோகன் கல்யாணம் நடக்குது.. பிடிப்பில்லாமலே இருக்கும் ரேவதியை, மோகன் தனது ஆர்ப்பாட்டம் இல்லாத அன்பினால்,  ரேவதியை தன்னை விரும்ப வைக்க முயற்சி செய்ய... ரேவதியும் பிடிவாதமாக இருக்க.. ஒரு முறை மனைவியை வெளியில் அழைத்து செல்லும் போது... உனக்கு என்ன வேண்டும் கேள் என்று சொல்ல... ரேவதியோ .. எனக்கு விவாகரத்து வேண்டும் எனச் சொல்ல..... அத்துடன் மோகன் ஒரு வார்த்தை பேசாமல்.. விவாகரத்து பத்திரம் கையெழுத்திட்டு கொடுத்து விடுகிறார்... அதன் பிறகு என்ன நடக்கிறது என்பது தான் கிளைமாக்ஸ் .. இப்படத்தில் "மன்றம் வந்த தென்றலுக்கு....", "பனி விழும்....", "நிலாவே வா..." பாடல்கள் அருமை..

6. பம்மல் கே. சம்மந்தம்.. கமலும், சிம்ரனும் நடிச்ச.. இந்த படம்.. காமடி கலாட்டா தான்.. கல்யாணமே செய்து கொள்ளப் போவதில்லை என்று இருக்கும் கமல், சிம்ரனை சந்தித்த பிறகு, எப்படி மாறுகிறார் என்பதே கதை.. டாக்டராக வரும் சிம்ரன், நடிப்பில் கமலுக்கு இணையாக நடிச்சிருக்காங்க.. முழுக்க முழுக்க ரசிச்சு பாக்கலாம்...

7.  காதலுக்கு மரியாதை..


 இந்த படம் விஜயோட நல்லா படங்கள்ல ஒண்ணு.. ரொம்ப ரம்யமான காதல் கதை.. பாசமான அண்ணன்களுக்கும், காதலனுக்கும் இடையில் ஷாலினி படும் அவஸ்தை பார்க்க பார்க்க அழகு.. ஆர்ப்பாட்டம் இல்லாத அம்சமான கதை.. இதுல வர "என்னைத் தாலாட்ட வருவாளோ..??", "ஒரு பட்டாம் பூச்சி.." பாடல்கள் சூப்பர்..


8 மொழி

இந்த படம் எனக்கு ரொம்ப பிடிச்ச படம். வாய் பேசாத, காது கேளாத ஜோதிகாவை, பிரிதிவிராஜ் காதலிக்கும் அழகான கதை.. காதலை சொன்னதும் ஏற்றுக் கொள்ளாத ஜோ-வை எப்படி சம்மதிக்க வைக்கிறார் என்பது கதை.. "கண்ணால் பேசும் பெண்ணே ....",  "பேசா மடந்தையே....", பாடல்கள் ரொம்ப அருமை.. :)

9  மூன்றாம் பிறை

 
ஹ்ம்ம்.. ரொம்ப பிடிச்ச படம்.. சுய நினைவு இல்லாம, குழந்தை போல் இருக்கும் ஸ்ரீதேவி, ஒரு சந்தர்ப்பத்தில் கமலிடம் வந்து சேர்கிறார்.. வழி தவறி வந்து விடும், மனநிலை சரியில்லாத ஸ்ரீதேவியை கமல் குழந்தை மாதிரி பார்த்துகொள்வது அருமை... ஸ்ரீதேவியிடம், அளவுக்கு அதிகமாக அன்பு வைக்கிறார்  கமல், ஒரு கட்டத்தில் ஸ்ரீதேவிக்கு மனநிலை சரியானதும்... ரொம்ப சந்தோசப்பட.. அதே நேரம்.. ஸ்ரீதேவி, தான் பைத்தியமாக இருந்ததையே மறந்தது மட்டும் இல்லாம.. கமலையும் சேர்த்து மறந்து போறாங்க.. ஒரே ஒரே சோகம்ஸ்.. ஆனா கமல், ஸ்ரீதேவி நடிப்பு... கண்டிப்பா பார்க்க வேண்டிய படம்.. இதில் வரும் " கண்ணே கலைமானே...." , "பூங்காற்று...." பாடல்கள்  சூப்பரோ சூப்பர்..

10 தெனாலி..செம காமெடி... இந்த படத்துல கமல் நடிப்பு அட்டகாசம்.  எதற்கு எடுத்தாலும் பயம், பயம்-னு  சொல்லிட்டு, டாக்டராக வரும் ஜெயராமனிடம் கமல் வந்து சேர்கிறார்..  அவர் குணமாகிறாரா ?   இல்ல டாக்டரை  லூசாக்குறாரா ...? என்பது தான் கதை.. ஒரு வேல் ஒண்ண வச்சிக்கிட்டு  கமல் பண்ற கூத்து செம ஜோக்...  இதில் வரும் "இஞ்சேருங்கோ....", "சுவாசமே... சுவாசமே..." பாடல்கள் தூள்.. :)

சப்பாஹ்.. ஒரு வழியா சொல்லி  முடிச்சிட்டேன்.. இவ்வளவு நேரமும் பொறுமையா இந்த பதிவை படிச்ச உங்களுக்கு ரொம்ப நன்றி.. 
எனக்கு பிடித்த படங்கள் உங்களுக்கும் பிடிச்சிருந்தா.... நினைத்ததை  கொஞ்சம் சொல்லிட்டு போங்க  ப்ளீஸ்... !!


Friday, May 7, 2010

அன்னைக்காக....!!

 அனைத்து அன்னையர்க்கும் மனமார்ந்த அன்னையர் தின நல்வாழ்த்துக்கள்...!!என் அன்னைக்காக....!!
அம்மா என்றாலே
அங்கமெல்லாம் அன்பின் சிலிர்ப்பு..!
அணைக்கும் தூரத்தில் நீயென்
அருகே இல்லாவிடினும்
ஆத்மார்த்தமாய் உன்னை
அணைக்கிறேன் என் நினைவினாலே...!
களிமண்ணாய் இருந்த என்னை
கற்சிலையாய் மாற்றி வைத்தாய்..!
கள்ளமில்லா உனதன்பால்
காலமெல்லாம் காத்து நிற்பாய்..!
அடிக்கடி நான் எண்ணுவதுண்டு
ஆண் பிள்ளையாய் பிறந்திருக்கலாம் என்று...!
பெண்ணாய் பிறந்தததால் அன்றோ
உன்னைப் பிரிய நேர்ந்தது இன்று...!
நான் அழுதாலோ நீ துடிப்பாயே
என் உடம்பிற்கு ஒன்றென்றால்
ஒரேயடியாய் தவிப்பாயே...!
உன் தவிப்பையெல்லாம் நானின்று
தாயானதால் உணர்கிறேன்...!

உன் சேயாய் பிறந்ததை எண்ணி
உள்ளமெல்லாம் பூரிக்கிறேன்...!
எத்தனை ஜென்மம் வரினும்
என் தாயாய் நீயே வர
என்றென்றும் இறைவனை வேண்டுகிறேன்..!

.......அன்புடன் ஆனந்தி

Tuesday, May 4, 2010

எனக்காய்ப் பிறந்தவனே.......!!
எனக்காய்ப்  பிறந்தவனே..
ஏன் இத்தனை ஊடல் என்னிடம்...!!

நான் வடித்த வரிகளிலே...
நீ இருக்கும் இடம் அறிவாயே..
நீ இருக்கும் என் மனதினை
நானுனக்குச் சொல்லவும் வேண்டுமோ?

சொல்லத்தான் வந்தேன் நான்.. எனை நீ
அள்ளித்தான் சூடிக்கொண்டாய்..
சொல்லியும் உனக்குப் புரியவில்லையா..இல்லை
நான் சொன்னது தான் புரியவில்லையா?

உன்னிரண்டு கை தழுவக்
காத்திருக்கும்.. என்னிலையை..
உன்னிடம் சொல்கின்றேன்..
உதவிக்கு வருவாயா?

வண்டாடும் சோலையிலே
மலர்ச் செண்டாக நானிருக்க
கொண்டாட வந்தவனே... எனைத்
திண்டாடும் படி ஏன் செய்தாய்?

.....அன்புடன் ஆனந்தி

About Me

My photo
I am a jovial.. sensitive.. happy person who likes to be around good friends ;)