topbella

Saturday, December 31, 2016

ஏகாந்தம் இதுவே...!!!




வாசல் திறந்து நின்றேன்
வானம் சிரிக்க கண்டேன்..
பூக்கள் மலர கண்டேன்
அதன் பூவிதழ் விரிய கண்டேன்..

வண்டு உலவ கண்டேன் 
அதன் ரீங்காரம் இசைக்க கண்டேன்..
தேன் உண்டு களிக்க கண்டேன்
உள்ளம் அது கண்டு கிறங்கி நின்றேன்..

பட்டாம் பூச்சியின் சிறகை கண்டேன்
அவை பாடி திரியும் அழகு கண்டேன்..
தேடி நெருங்கையிலே அவை 
ஓடி ஒளிய கண்டேன்..

தென்றல் வீச கண்டேன் 
தேன் தமிழ் கானம் ஒலிக்க கண்டேன் 
துள்ளி விழும் அருவி கண்டேன் 
அதை தாங்கி நிற்கும் மலையை கண்டேன்..

அல்லி மலரை கண்டேன் 
அதன் அங்கமெல்லாம் ஜொலிக்க கண்டேன் 
அருவி விழுகையிலே  மான்கள் 
அதை அள்ளி பருக கண்டேன்..

புற்களின் பசுமை கண்டேன் 
புத்திக்குள் குளுமை கண்டேன்..
எத்தனையோ இன்பம் கண்டேன் 
அத்தனைக்கும் ஆசை கொண்டேன்..

எண்ணத்தில் கண்டதெல்லாம் 
எதிரிலே நிற்க கண்டேன்...
எள்ளளவும் உறுத்தல் இல்லா..
ஏகாந்தம் இதுவே என்றேன்..!


~அன்புடன் ஆனந்தி



(படம்: நன்றி கூகிள்)

Thursday, October 6, 2016

என் இறுதியென்றால்...!


உன் கண்கள் குளமென்றால் 
அதில் கண்ணீர் துளியாவேன்..
உன் கைகள் சிறையென்றால் 
அதில் ஆயுள் கைதி ஆவேன்..

நீ மாலை வெயிலென்றால் 
அதன் மஞ்சள் நிறமாவேன்..
நீ சோலை குயிலென்றால் 
அதன் கூவும் குரலாவேன்..

நீ வண்ண மலரென்றால் 
அதன் வாசம் நானாவேன்..
நீ மின்னும் நிலவென்றால் 
அதன் குளுமை நானாவேன்..

நீ வான் முகில் என்றால் 
அதில் வானவில் ஆவேன்..
நீ தேன்சுவை என்றால்
அதன் தித்திப்பு நானாவேன்...

நீ எண்ணமென்றால் 
நான் எழுத்தாவேன்...
நீ வண்ணமென்றால் 
நான் மலராவேன்...

நீ விதையென்றால் 
அதன் விருட்சம் ஆவேன்..
நீ கதையென்றால் 
அதன் கரு ஆவேன்..

நீ கவிதையென்றால் 
அதன் மொழியாவேன்..
நீ காவியம் என்றால் 
அதன் நாயகி ஆவேன்..

நீ அருவியானால்
கொட்டும் நீராவேன்..
என் இறுதியென்றால் 
உன் மடி சேர்வேன்..!!!

...அன்புடன் ஆனந்தி 

(படம்: கூகிள், நன்றி)

Tuesday, August 30, 2016

வரத்திற்கு அர்த்தம்...!!!



விடிதலுக்கு விளக்கம் கேட்பின்
அவன் விழிகளைச் சொல்வேன்...
அந்தி முடிதலுக்கு அர்த்தம் கேட்பின் 
அவன் மடி சாய்தல் என்பேன்..

தாய்மையின் அடையாளம் கேட்பின் 
அவன் அன்பை சொல்வேன்.. 
வரத்திற்கு அர்த்தம் கேட்பின்
அவனோடான வாழ்வைச் சொல்வேன்..

கவிதைக்கு அர்த்தம் கேட்பின் 
அவன் வாய்மொழியை சொல்வேன்..
கற்பிற்கு விளக்கம் கேட்பின்
அவன் காதலைச் சொல்வேன்... 

இனிமைக்கு விளக்கம் கேட்பின்
அவன் இதயம் என்பேன்...
துணிவுக்கு விளக்கம் கேட்பின் 
அவன் தோள்கள் என்பேன்..

பணிவுக்கு விளக்கம் கேட்பின் 
அவன் பண்பை சொல்வேன்.. 
நேர்மைக்கு விளக்கம் கேட்பின் 
அவன் நேசம் என்பேன்..

இனியும் எண்ணற்ற விளக்கங்கள்..
ஆயிரமாயிரம் அர்த்தங்கள்...
வார்த்தைகளைக் கோர்த்தெடுத்து
வாக்கியம் விடாமல் அடுக்கி வைக்கிறேன்..!


...அன்புடன் ஆனந்தி




( படம்: கூகிள், நன்றி)

Sunday, June 5, 2016

இதன் பேர் தான் காதலா...?!



உள்ளத்தை உருகச் செய்யும்..
உதட்டில் புன்னகை வருவிக்கும்..
ரகசியம் பேசச் சொல்லும்..
ராத்திரியில் சிரிக்க வைக்கும்..

தனித்தமர்ந்தே சிந்தனை செய்யும்..
தாவி விண்ணில் பறக்கச் செய்யும்..
துடிப்புடன் இருக்கச் செய்யும்..
தூக்கத்தையும் கெடுத்துச் செல்லும்..

உலக நடப்புகளை உதறி தள்ளும்..
உள்ளுக்குள் ஒய்யார நடை போடும்..
கனவுலகில் வாழ்க்கை நடத்தும்..
நிகழ்வுகளில் கனாக் காணும்..

மனதிற்குள் மாளிகை கட்டும்..
மாளிகையில் தன் துணை நிறுத்தும்..
மரம், அருவி, குருவியுடன் பேசித் திரியும்..
மத்தளமே இல்லாமல் வகையாய் வாசிக்கும்..

அனுசரணையாய் நடந்து கொள்ளும்..
ஆத்திரப்பட ஆழ்ந்து யோசிக்கும்..
சாத்திரம் பேசி செல்லும்..
சாதிக்க வலிமை கொடுக்கும்..

விண்மீன்களை விலைக்கு பேசும்..
விட்டு நகர்ந்தால் தர்க்கம் செய்யும்..
விவரணையாய் பேசச் சொல்லும்..
விதியையும் வெல்லச் செய்யும்..!

...அன்புடன் ஆனந்தி








Friday, April 8, 2016

உள்ளமே கோவிலாய்...!


உணவே மருந்தாய்
உள்ளமே கோவிலாய்
அன்பே சிவமாய்
ஆண்டவனே ஆறுதலாய்
தனிமை தவமாய்..
தனித்துவம் வரமாய்..
உள்ளமைதி உணர்வாய்..
உள்ளுக்குள் அமிழ்ந்திரு..
உண்மையை உணர்ந்திரு..
அன்பில் திளைத்திரு..
அகிலம் நினைத்திரு..
இன்னல் மறந்திரு..
இன்பம் செழித்திரு..
ஏக்கம் தவிர்த்திடு..
எதிர்பார்ப்பை துறந்திடு..
எல்லாம் மறந்திரு..
ஏகாந்தம் நிறைந்திரு..
ஐயம் தொலைத்திடு..
அறிவை சார்ந்திரு..!!


...அன்புடன் ஆனந்தி


(படம்: கூகிள், நன்றி)


Wednesday, March 30, 2016

வெறும் சாட்சியாய்...!


என்னெதிரில் வெற்று பக்கம்... எதையும் தன்னில் ஏந்திக் கொள்ளாமல் எத்தனை அழகு இதன் வெறுமையில்.... ஏதோ எழுதுவதாய் எண்ணியே இயற்கை அழகை சிதைத்தும் ஆனது... மனதும் இவ்வாறே வெறுமையாய் இருக்க வரம் வாங்கி வந்திருக்க வேண்டும்... இருக்கும் இம்மி இடமும் வெறுமை இல்லாது விளையாட்டாய் வேடிக்கையாய் வெவ்வேறு விஷயங்கள்.. அவைகள் வேர் ஊன்றி விடாதிருக்க முளையிலேயே வெட்டி எரிந்து விட எண்ணம் இருந்தும் செயலில் இயலாது பரிதவிப்பு.. 

ஏன் இத்தனை குழப்பங்கள்? எதற்காய் இத்தனை ஜோடனைகள்? இயல்பில் இனிமையாய் வாழ என்னென்ன இடைஞ்சல்கள்... கண் முன்னே...!  

ஏக்கம், எதிர்பார்ப்பு ஒரு புறமிருக்க... 
எதிர்வரும் தடைகளின் தாக்கம் 
நம்மை உலுக்கியே நிறுத்த... 
என்னென்ன செய்தால் 
எமக்கிங்கு நிம்மதி கிடைக்கும் 
என்றே ஏங்கியபடி எமதுள்ளம்.. 

அடர்த்தியான இருளில் அத்தனையும் ஒன்றே.. இயல்பாய் இருக்க எண்ணினால் முதலில் இயல்பில் இருக்க வேண்டும்.. மனதிற்குள் ஆயிரம் விஷயங்கள் ஓடிக்கொண்டிருக்க எங்கிருந்து நிம்மதி நாடுவது. எதையும் எளிதாய் எடுத்துக்கொள்ள ஏகப்பட்ட பிரயத்தனம் செய்ய வேண்டி இருக்கிறது. சொல்வது எளிது.. செயல்படுத்துதல் கடினம்.. 

ஒரு விஷயம் நமக்கு எதிராய் நடக்கும் போது அதையே நினைத்து வருந்தி அமைதியை குலைத்துக் கொள்கிறோம். ஓரமாய் உக்கார்ந்து ஒரு மணி நேரம் வருந்தினால் உன் பிரச்சினை சரி ஆகி விடும் என்று யாராவது சொன்னால் ஒரு மணி என்ன? ஓராயிரம் மணி நேரம் உக்கார்ந்து வருந்தலாம்.. ஆனால் அப்படி அல்ல நடைமுறை. நடப்பது எதுவும் நம் கையில் இல்லாத போது அதற்காய் வருந்தி என்ன பலன்? 

உறவுகள் பல விதம்.. நம்மிடம் எதிர்பார்க்கும், எதிர்பார்த்தது நடக்காத போது ஏமாற்றத்தில் ஏளனம் செய்யும்..  எதையாவது செய்தால் இன்னும் நன்றாக செய்திருக்கலாம் என்று கருத்து வரும்.. அதையே எதுவும் செய்யாமல் இருந்தால், சுயநலவாதி என்ற பட்டம் பரிசாய் கொடுக்கும்.. எதற்கும் உணர்ச்சி வசப்படாமல் வெறும் சாட்சியாய் மட்டும் இருத்தல் பல பிரச்சினைகளை தவிர்க்கும்.

ஏக இறையால் கூட எல்லாருக்கும் 
ஏற்றவனாய் இருக்க இயலாது.. 
நாம் எல்லாம் சாமானியன் 
இவர்களிடமெல்லாம் சான்றிதழ் பெற்று
சரித்திரமா படைக்க போகிறோம்....?! 

சின்ன சின்ன விசயங்களில் புதைந்து கிடக்கும் பேரானந்தம் நம்மில் பலர் உணர்வது கூட இல்லை.. இருபத்து நாலு மணி நேரமும் காலில் சக்கரம் கட்டாத குறையாய் ஓடி அலைகின்றனர். ஒரு விஷயம் படித்தது நினைவுக்கு வருகிறது. இளம் வயதில் உடலில் தெம்பும் வேகமும் இருக்கும்.. பல விஷயங்கள் அனுபவிக்க பணம் தேவைப்படும். ஆனால் அப்போது பணமிருக்காது. முதுமையில் பணம் இருக்கும், எதையும் அனுபவிக்க உடலில் தெம்பும் வேகமும் இருக்காது. ஒன்றிருந்தால் மற்றொன்று இருப்பதில்லை. இதுவே இயற்கை..!


...அன்புடன் ஆனந்தி




( படம்: கூகிள், நன்றி )








Monday, March 28, 2016

மனிதர்கள் பலவிதம்..!


உள்ளதை விட்டு விட்டு
உரிமையை மறந்து விட்டு
எண்ணத்தின் போக்கில் 
வாழ்வோர் பலபேர்..

நல்லதே செய்த போதும்
நலம் மட்டுமே நாடிய போதும்
எள்ளளவும் இரக்கமின்றி 
தொல்லையாய் ஆவோர் சிலபேர்..

எல்லாம் அமைந்து இருந்தும் 
அதன் அருமை உணராமல்
எதையோ தேடியவண்ணம்
வாழ்க்கை கழிப்பார் சிலபேர்..

பரமனே நேரில் வந்தாலும் 
பக்குவமாய் பேசினாலும்
பதட்டமாகவே இருந்தபடி
பரிதவிப்பார் சிலபேர்..

எதுவும் நடக்கட்டும்
எனக்கென்ன வந்ததென்றே
எவர் பற்றியும் எண்ணாமல் 
அவர் வழி நடப்பார் சிலபேர்..

எல்லாமும் தன் உடமை என்றே
கல்லாவை நிரப்புதல் போன்று..
கரிசனமே இல்லாமல் 
களித்து வாழ்வார் சிலபேர்..

ஊழியம் செய்தபடி 
உரிமை இழந்த படி 
உறவுக்காய் ஏங்கியபடி 
உண்மையாய் இருப்பர் சிலபேர்..!


...அன்புடன் ஆனந்தி


( படம்: கூகிள், நன்றி )

Monday, March 21, 2016

உணவே மருந்து...!

இப்போ எல்லாம் நாலு பேர் சேர்ந்து பேச ஆரம்பிச்சாலே அதுல முக்கிய டாபிக் டயட், எக்சர்சைஸ் தான். என்ன இப்படி இளச்சிட்டீங்கன்னு ஒரு ஆள் கேக்கும்.. அதுக்கு உடனே இன்ஸ்டண்டா பதில் வரும்.. டயட்ல இருக்கேன்னு. அப்படி என்ன டயட் சொல்லுங்களேன்னு கேட்டா லிஸ்ட கேட்டே மயக்கம் வந்திரும் நமக்கு.. அவுக சொல்ற அளவெல்லாம் கேட்டு நெஞ்சு வலியே வந்திரும்.. இப்படி தான் ஒருத்தங்க என்கிட்டே ஒரு நாளைக்கு கால் கப் ரைஸ் தான் சாப்பிடணும்ன்னு சொன்னாங்க.. உடனே தெளிவா கேட்டேன்ல.. கால் கப்-ன்னு நீங்க சொன்னது சமைச்ச அரிசியா? சமைக்காத அரிசியான்னு? அடிக்க வந்துட்டாங்க போங்க.

எத்தனையோ வித விதமா உணவு கட்டுப்பாடு, உடல்பயிற்சின்னு எல்லாரும் ரூம் போட்டு யோசிக்காத குறை தான்.. சாப்பிடுற உணவே மருந்து. எதை.. எப்போ.. எவ்வளவு.. எப்படி சாப்பிடணும்னு பக்குவம் தெரிஞ்சு இருந்தா எந்த பிரச்சினையும் இல்ல. ஆத்துல போட்டாலும் அளந்து போடணும்னு சொல்லி கேட்டு இருக்கோம்.. வயித்துல போடுறதையும் அளந்து போட்டுட்டா பாதி அவதி இல்ல.

சில பேர் ஏழே நாளில் உடம்பு குறைக்கிறோம்னு பட்டினியா கிடந்து  ப்ரோடீன் ஷேக்ன்னு எதை எதையோ பொடிய வாங்கி கலக்கி குடிச்சிட்டு.. எப்பிடி இருந்த நான் இப்பிடி ஆய்ட்டேன் பாருன்னு ஒரேயடியா உடம்ப குறைச்சிட்டு வந்து நிக்குற அடுத்த சில மாசங்கள்ல.. குறைச்சத விட டபுளா வெயிட் போட்டு கஷ்ட படுறதையும் பாக்கிறோம். இயற்கையா உடம்புக்கு எந்த பாதிப்பும் இல்லாத மாதிரி உடம்ப குறைச்சால் ஒழிய அதை அப்படியே கட்டுக்குள்ள வைக்கிறது கஷ்டம் தான்.

பசிக்கும் போது சாப்பிட்டா போதும். அட்டவணை போட்டு அடிச்சு நிமித்த கூடாது.. பொதுவா இப்போ இருக்குற கால கட்டத்துல நாம உபயோகிக்கிற பொருட்கள்ல பெரும்பாலும் நச்சு தன்மை தான் கூடுதலா இருக்கு. வீட்ல தயாரிக்கிற எளிமையான சாப்பாடு ஆயிரம் வகை இருக்கு.. பயறு வகைகள், பச்சை காய்கறிகள், பழங்கள் ன்னு டெய்லி சாப்பாட்டுல சேர்த்துக்கிட்டா நல்லதாம்..

அதையும் எங்க ஒழுங்கா சாப்பிட விடுறாங்க.. பயறு வகைல கலரா பளிச்சுன்னு இருக்கணும்னு இஷ்டத்துக்கு கலர் அடிச்சி விக்கிறாங்க.. காய்கறி பழங்கள் மேல சீக்கிரம் அழுகி போய்ட கூடாதுன்னு மருந்து அடிச்சி வைக்கிறாங்க. மசாலா பொடில இருந்து மஞ்சள் பொடி வரை எல்லாத்துலயும் எதாச்சும் எக்ஸ்ட்ரா பிட்டிங் சேர்த்து வச்சிர்ராங்க.

காலம் கலி காலம் ஆயிருச்சு.. எல்லா பொருளும் நாம என்னவோ காசு கொடுத்து தான் வாங்குறோம்.. கூட அஞ்சு பத்து அதிகம் வாங்கிட்டாலும் பரவாயில்ல.. இப்படி கண்டதை சேர்க்காம இருந்தா நல்லா இருக்கும்.  அந்த காலத்துலேயே மாசத்துல குறைஞ்சது ரெண்டு நாளாச்சும் எதாச்சும் ஒரு காரணம் சொல்லி விரதம் இருப்பாங்க. உடலுக்கு அரைக்கிற வேலைல இருந்து ஓய்வு கொடுக்குற ஐடியாவா இருக்கும். அதையெல்லாம் இப்போ யாரு ஃபாலோ பண்றோம்...?!

நம்ம நாட்டுல பாரம்பரியமா தாத்தா பாட்டி காலத்துல சாப்பிட்டு வந்த கம்பு, கேழ்வரகு, திணை, குதிரைவாலி, சாமை, கருப்பட்டின்னு எத்தனையோ நல்ல விசயங்கள் இன்னைக்கும் கிடைக்க தான் செய்யுது. அதையெல்லாம் நம்ம சாப்பாட்டுல சேர்த்துக்கலாம்.

ஒரு நாளைக்கு ஒரு மணி நேரமாச்சும் எதாச்சும் உடற்பயிற்சி அவசியம்னு டாக்டர்ஸ் சொல்றாங்க. நியாயமாத்தான் சொல்றாங்க.. அந்த ஒரு மணி நேரம் எப்போ செய்யலாம்னு யோசிச்சி முடிக்கவே ஒன்பது மணி நேரம் வீணாப் போயிருது.. அதே போல சாப்பிடுற அளவு தான் ரொம்ப முக்கியமாம். மூணுவேளை அட்டவணை போட்டு சாப்பிடுறதுக்கு பதிலா அதையே பிரிச்சு கொஞ்சம் கொஞ்சமா ஆறு வேளை கூட சாப்பிடலாம்னு சொல்றாங்க. இப்படியா ஆளுக்கு ஒரு கருத்து எல்லாரும் சொல்லிட்டே தான் இருக்காங்க...

சமீபத்துல படிச்ச விஷயம்.. ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த இனியன் என்னும் முன்னாள் இராணுவ வீரர், 13 வருஷமா தேவைப்பட்டால் வெறும் தண்ணீர் மட்டும் குடிச்சுட்டு காற்றுணவுல உயிர் வாழுறாராம்.  இதை யோக வாழ்வுன்னு சொல்றார். மத்தவங்களுக்கும் கற்றுக் கொடுக்கிறாராம். அவர் குறிப்பிட்ட விசயங்கள்ல ஒண்ணு சித்தர் ஒருவரின் கூற்று என் எண்ணத்தை கவர்ந்தது.. "ஒருவேளை உண்பான் யோகி, இருவேளை உண்பான் ரோகி, மூவேளை உண்பான் போகி". இதுல நம்ம என்ன ரகம்னு நாமளே முடிவு பண்ண வேண்டியது தான்...!!!

...அன்புடன் ஆனந்தி 


Friday, February 12, 2016

நித்தியமான உணர்வு...!



கண் திறந்தே கனா காணும்...
மெய் மறந்தே கவிதை பேசும்...
உயிர் கொடுத்தே உயிர் கொல்லும்..
உள்ளத்தில் ஊஞ்சல் ஆடும்.. 

எண்ணத்தில் ஏகாந்தம் எழுதும்..
எதையும் ஏற்கச் செய்யும்.. 
விழி விரித்தே விந்தை செய்யும்..
விழிகளுக்குள் மொழி பயிலும்.. 

பார்வையில் பரவசம் அடையும்..
பார்க்காவிடில் பரிதவிக்கும்... 
ஒற்றைச் சொல்லில் உலகம் மறக்கும்..
கற்றைக் குழலில் காவியம் படைக்கும்..

தினசரிகளை திணறச் செய்யும்..
திகட்டும் அன்பில் திளைக்கச் செய்யும்..
மோனத்தில் உறைந்திருக்கும்...
மோகத்தில் நிறைந்திருக்கும்...

காலத்தை சிறை பிடிக்கும்.. 
கனவுகளை கலைத்துப் போடும்..
நினைவுகளை நிலைக்கச் செய்யும்..
நித்தியமான உணர்வு காதல்..!


... அன்புடன் ஆனந்தி 



(படம்: கூகிள், நன்றி )






Sunday, February 7, 2016

வரம்...!



சிந்தனைக்குள் சிறகடிக்கும் 
சின்னச்சின்ன சந்தோசங்கள்...
சில்லென்று வீசும் காற்று..
சிரிக்கும் மழலை...
சிந்தும் மழைத்துளி..
சிதறிக் கிடக்கும் சருகுகள்..
சலசலக்கும் நீரோடை.. 
சத்தமாய் ஒலிக்கும் திருவிழா ஒலிபெருக்கி...
அதிகாலை கேட்கும் பறவைகளின் ஒலி.. 
அங்கங்கே தலையசைக்கும் தென்னை மரம்..
மனதை மயக்கும் இசை.. 
மழை நேரத்து மண் வாசனை..
மலர்ந்து விரிந்து நிற்கும் பூக்கள்.. 
அடித்து பிடித்து கொண்டு கொட்டும் அருவி...
அம்மாவின் அக்கறை... 
அந்தி நேரச் சூரியன்..
மார்கழிக் குளிர்... 
மாங்காய் வடு.. 
வெடித்து நிற்கும் கொடுக்காய்ப்புளி..
விண்ணில் மிதக்கும் வெள்ளை நிலா..
வாசலில் போடும் வண்ணக்கோலம்.. 
வாங்கிச் சேர்த்த புத்தகங்கள்... 
காலில் குத்திய நெருஞ்சி முற்கள்..
கால் பொசுக்கும் மொட்டை மாடி வெயில்..
பனை ஓலைப் பதநீர்...
பரிசு வாங்கிய பேச்சுப்போட்டி... 
தென்னை மரக் காற்று.. 
அதன் தெவிட்டாத இளநீர்...
விரிந்தும் விரியாத பிச்சிப்பூ வாசம்..
விளையாட வரைந்த பாண்டி கட்டம்..
கலர்கலராய் அணிந்த கண்ணாடி வளையல்கள்..
காதோரம் அணிந்த ஒற்றை ரோஜா..

இப்படி எத்தனையோ சொல்லிக்கொண்டே போகலாம்.. இந்த அவசர உலகத்தில் இதற்கெல்லாம் இப்போது எங்கே நேரமிருக்கிறது... எப்போதும் எதையோ விரட்டிக்கொண்டே ஓடுவது போல ஒரு பதட்டமான நிலை.. நமக்கென்று நேரம் ஒதுக்குவதற்கே பல மாதம் திட்டமிட வேண்டியிருக்கிறது.. அப்படியே நேரம் ஒதுக்கி அமர்ந்தாலும் அப்போது தான் ஆயிரம் வேலை வரும். முன்பெல்லாம் தினமும் சில பல பக்கங்களை புரட்டினால் தான் அந்த நாளே நகரும்.. இப்போது புத்தகம் படிக்கவே சுய நினைவூட்ட வேண்டிய நிலை.. பிடித்த பாடலை அமைதியாய் அமர்ந்து ரசித்து கேட்கவும்.. பிடித்த உணவை செய்து ருசித்து உண்ணவும் கூட கொடுப்பினை வேண்டும். 

எதையோ தேடி எதற்கோ அலைந்து என்ன செய்கிறோம் என்றே உணர முடியாமல்.. ஒவ்வொரு நாளும் நம்மை விட்டு கரைந்து கொண்டிருக்கிறது. யாருக்காகவும் காலம் காத்திருப்பது இல்லை.. நம்மை சுற்றி இருக்கும் சின்ன சின்ன விசயங்களில் நிறைந்து கிடக்கும் ஆனந்தம் நம் கண்ணிற்கு தெரிவதில்லை.. அதையெல்லாம் ஒரு குழந்தையின் மனதோடு ரசித்து.. வாழ்க்கையை விரும்பியபடி வாழ்வதே ஒரு வரம்...!


...அன்புடன் ஆனந்தி


(படம்: நன்றி கூகிள் )

About Me

My photo
I am a jovial.. sensitive.. happy person who likes to be around good friends ;)