topbella

Monday, October 20, 2014

நினைவுகள்...!


ஒவ்வொரு வயதிலும் புதுப்புது அனுபவங்களுடன் வாழ்க்கை சுவாரஸ்யமானது தான்... இளவயதில் தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகைகள் என்றாலே ஏக மகிழ்ச்சி... முதல் காரணம் பள்ளி விடுமுறை.. புது துணிமணிகள்.. பட்டாசு... இனிப்பு... என்று எண்ணிலடங்கா சந்தோசங்கள்... சிறு வயதில் நம்மை மகிழ்விக்கவும் நம் மனம் நிறைவு கொள்ளவும் அதிக பிரத்யேக முயற்சிகளோ அல்லது விஷயங்களோ தேவையாய் இருக்கவில்லை... ஆனால் இப்போது...?!

இதோ தீபாவளி வரவிருக்கிறது... பழைய ஞாபகங்கள் மெல்ல எட்டிப் பார்க்கிறது... தீபாவளிக்கு இரு வாரங்களுக்கு முன்பாகவே பண்டம் செய்யவென்று பாமாயில் எண்ணெய் வாங்குவதும், அரிசியை மிஷினில் கொடுத்து திரித்து வாங்குவதுமாய்... பரபரவென்று வேலை நடக்கும்... முறுக்கு, அதிரசம், நெய்விளங்காய் என்று வீடே களைகட்டும்.. முறுக்கின் மொருமொருப்பு அப்படியே இருக்க வேண்டும் என்று.. தகர டப்பாக்களில் அடைத்து வைப்பாங்க.. முறுக்கை சுட ஆரம்பிக்கும் போதே பக்கத்திலேயே உட்கார்ந்து இருப்போம்.. முறுக்கு முழுதாய் வேகும் முன்பே வெளியில் எடுத்து தருவாங்க....அதை வெள்ளை முறுக்குன்னு சொல்வாங்க.. இந்த வெள்ளை முறுக்குக்கு அடி பிடி சண்டை தான்.. அவ்வளவு ருசியாய் இருக்கும்.. 

பொதுவாய் சனி, ஞாயிறுகளில் பகலில் எல்லா வீட்டு வேலைகளையும் முடித்து விட்டு இரவு சாப்பாட்டுக்கு பிறகு தான் அம்மா பண்டம் செய்வாங்க.. இப்போது நினைத்து பார்த்தால் ஒருவேளை நாங்களும் வீட்டில் இருக்கும் போது செய்ய வேண்டும் என்றே அப்படி செய்திருக்க கூடும்.. நெய்விளங்காய் என்று நாங்கள் சொல்லும் பண்டம் பொரிகடலை மாவும், சீனியும், நெய்யும் சேர்த்து செய்யும் உருண்டை வகை.. எனக்கு மிகவும் பிடித்தது.. அம்மா ஒரு பெரிய ஈய பாத்திரத்தில் எல்லா பொருளையும் கொட்டி கலந்து தருவாங்க... அந்த வட்ட பாத்திரத்தை சுற்றி உக்கார்ந்து எல்லாரும் பேசிக்கொண்டே உருண்டை பிடிப்போம்.. உருண்டையை பிடித்து டப்பாவில் அடுக்குகிறோமோ இல்லையோ... பாதி உருண்டை வயித்துக்குள்ள தான் போகும்... இப்போது என்ன தான் அதே போல் பொருட்களை சேர்த்து பக்குவமாய் செய்தாலும் அம்மாவின் கைமணம் வருவதே இல்லை... 

எனக்கு மிகவும் பிடித்த மற்றொரு பண்டம்... அதிரசம்.... அம்மா சுடும் அதிரசம் வெளியில் கரகரவென்றும்.. உள்ளுக்குள் பஞ்சு போல் மெத்துமெத்தென்றும் இருக்கும்.. அளவே தெரியாமல் உள்ளே தள்ளிக் கொண்டிருப்பேன்.. என்ன தான் அம்மா செய்வதை பலமுறை கண்டும்... கேட்டும் இருந்தாலும் ஏனோ அதிரசம் மட்டும்... வருவேனா பார் என்று அடம் பிடிக்கத்தான் செய்கிறது.. என்ன தான் அதி சிரத்தையாய் கவனமாய் செய்தாலும் அம்மா அளவிற்கு இன்று வரை வந்ததில்லை.. அது என்னவோ தெரியலை... ஆட தெரியாதவளுக்கு தெரு கோணலாம்...ன்னு ஒரு பழமொழி சொல்வாங்க.. அந்த மாதிரி அதிரசம் நல்லாத்தான் வந்திருக்கும்.. இங்க உள்ள மாவு தான் சரியில்ல... வெல்லம் சரியில்லன்னு சொல்லிட்டு மனச தேத்திக்கிறேன்... 

இது தவிர தீபாவளிக்கு துணி எடுக்க போகும் படலம் இன்னும் ஏக குஷியான விஷயம்.. வார இறுதியில் காலை உணவு முடித்துவிட்டு கிளம்பி விடுவோம்.. கடை கடையாக ஏறி இறங்கி பிடித்த ஆடைகளை எடுப்பதில் தான் எவ்வளவு ஆனந்தம்.. அதிலும் நாம் எடுத்து தர சொல்லி பார்த்து கொண்டிருக்கும் துணியை தான் பக்கத்தில் இருக்கும் பெண்மணி உற்று பார்த்து கொண்டிருப்பார்கள்.. நாம் அதை கீழே வைப்பது போல தெரிந்தால் போதும்.. ஓ.. உங்களுக்கு வேண்டாமான்னு எடுக்க தயாரா இருப்பாங்க... உடனே நமக்கு ஆஹா.. அம்புட்டு அழகாவா எடுத்து வச்சிருக்கோம்.. விட பிடாதுன்னு கையில கெட்டியா பிடிச்சிக்குவோம்... மனித இயல்பு... இப்போது நினைத்தால் சிரிப்பு தான் வருகிறது.

அப்படி அலைந்து திரிந்து எல்லாருக்கும் பிடித்த துணிகளை ஒருவாறு வாங்கி முடிக்க மதிய உணவு வேளை வந்து விடும்.. அப்படியே ஒரு நல்ல உணவகம் போய் சாப்பிட்டு விட்டு... மிச்சம் மீதி வாங்க வேண்டிய பொருட்களையும் வாங்கி விட்டு... மாலை நேரம் பஸ் பிடித்து வீடு வந்து சேர்ந்து... வந்ததும் வராததுமாய் அவரவர் வாங்கி வந்ததை கடை பரப்பி... சிலாகித்து.. ரெடி மேட் துணியாக இருந்து விட்டால் மீண்டும் ஒரு முறை போட்டு கண்ணாடியில் அழகு பார்த்து.. வீட்டில் எல்லாரிடமும் காட்டி சந்தோஷப் படுவதும் உண்டு... 

தீபாவளி அன்றோ விடிந்தும் விடியாமலும் அம்மா எழுப்பி விட்டு தலைக்கு எண்ணெய் தேய்த்து குளிக்க சொல்வதும்.. குளித்து வருவதற்குள் வடை, சுசியம், பஜ்ஜி என்று எல்லாம் செய்து சாமி கும்பிட தயாராய் எடுத்து வைத்திருப்பதும்.. எப்போ சாமி கும்பிட்டு எப்போ சாப்பிட விடுவாங்கன்னு கவனம் எல்லாம் சுட்டு வச்சிருக்கும் பண்டம் மேலேயே இருக்க... ஒரு வழியாய் சாமி கும்பிட்டு.. வெடியெல்லாம் வெடிக்க எடுத்து தருவாங்க.. வெடியெல்லாம் வேடிக்கை பார்ப்பதோடு சரி.. சும்மா வேடிக்கை பார்க்கும் போதே போட்டிருக்கும் துணியில் எப்படியாச்சும் தீப்பொறி பட்டுவிடும்... அதெல்லாம் ட்ரேட் மார்க் மாதிரி... வருசா வருசம் இப்படி தான்... 

தீபாவளி முடிந்ததும் அடுத்து பள்ளி திறக்கும் தினத்தில் பள்ளி சீருடை அல்லாத துணிகள் அணிய அனுமதி உண்டு... இந்த நாளுக்காகவே காத்திருப்போம்... நண்பர்களிடம் ஒருவருக்கொருவர் புது ஆடை காண்பித்து மகிழ்வது ஒரு சுகம்... இப்படி எவ்வளவோ சின்ன சின்ன விஷயங்களில் திருப்தியும், ஆனந்தமும் அடைந்ததெல்லாம்.... இப்போது நினைத்தாலும் நெஞ்சம் நிறைய தான் செய்கிறது.. அப்படியே வாழ்நாள் எல்லாம் இருந்திருந்தால் எவ்வளவோ நன்றாய் இருந்திருக்கும்... 

இப்போதெல்லாம் அப்படி ஒரு மகிழ்ச்சியோ பரபரப்போ சுவாரஸ்யமோ ஏனோ இருப்பதில்லை.. பண்டிகையும் இன்னொரு தினமாகவே கடந்து செல்கிறது...

சிறு வயதில் சிலாகித்த 
சின்ன சின்ன சந்தோசங்கள்..
எளிமையில் கண்ட 
எண்ணற்ற மன நிறைவுகள்.. 
எல்லாம் இருந்தும் ஏனோ 
ஏங்க வைக்கும் இன்றைய தினங்கள்...

எது எப்படியோ... யார் தடுத்தும் நிற்காத இந்த கால சுழற்சிகளை மகிழ்வுடன் கடப்போம்....!

...அன்புடன் ஆனந்தி



படம்: கூகிள், நன்றி 

About Me

My photo
I am a jovial.. sensitive.. happy person who likes to be around good friends ;)