topbella

Wednesday, November 26, 2014

கரை தேடும் அலைகள்...!


கண்ணிமைக்கும் நேரத்தில் காலம் கடந்து விடுகிறது... எதிர்பாராத நிகழ்வுகள் எம்மை எட்டித் தள்ளி விட்டே.. நிமிஷமும் நிற்காது... நிதானமாய் கடந்தும் சென்று விடுகின்றது... என்ன நடந்தது என்று எண்ணி இமைப்பதற்குள்.. ஏதேதோ நடந்து எம் வாழ்வு எம்மை நோக்கியே.. என்ன என்று கேட்கிறது.

உறைந்து விட்ட கண்ணீர்.. உயிர் வலியை உணர்த்தும் தருணம்.  நிலையாமை தத்துவம்.. நிதர்சனத்தில் உணர்ந்தாலும்.. நிச்சயத்தில் உணரும் போது.. நிலைகுலைந்து விடத்தான் நேர்ந்து விடுகிறது.  கரை தேடும் அலைகள் போல்.. காலம் முழுவதும் எதையோ தேடிய வண்ணம் எம் வாழ்வு.. இருக்கும் இடத்திலும் நமக்கென்று சாச்வதமாய் ஸ்தலம் இல்லை.. உருவான இடத்திலும்.. உட்கார்ந்து ஆசுவாசப்படுத்த உரிமையும் இல்லை.

எந்த இடத்தில் எம் நிலை?? தொலைந்து போன உறவுகள்.. மறந்து போன கனவுகள்.. மரித்தே போன உணர்வுகள்... எல்லாம் இருந்தும் எதுவும் இல்லாத நிலையில் இன்று.. இருக்கிறது ஆனால் இல்லை... எது நிலையானது... எது எமக்கென்று இருப்பது... எது சத்தியம்...?? எல்லாம் அறிந்தும் அறியாதது போல் மாயை கண் மறைக்க... மறுபடியும் முதலில் இருந்து மூச்சு இறைக்க ஓட தயாராகி விட்டானது.

எண்ணற்ற சிந்தனைகள்.. எதிரில் தாண்டவமாட.. எதிலும் நிலைக்காது... நிலையான சத்தியம் தேடி.. நிற்காது தொடரும் எம் பயணம்... கருவறைக்குள் கடுகளவும் பயமின்றி கச்சிதமாய் வாழ்ந்த நேரம்.. கடவுள் நமக்களித்த ஆசுவாசப் படுத்திக்கொள்ளும் நேரம்.. ஓட்டத்திற்கு முன்பு உட்கார்ந்து ஓய்வெடுத்துக்கொள்.. வெளியே வந்து விட்டால்.. விடாது கறுப்பு.. என்பது போல... வெறித்தனமாய் ஓட வேண்டி இருக்கும் என்றோ...?!

மௌனிக்கும் தருணம் இது..... மனதிற்கு அமைதி வேண்டும்.. உடலின் சோர்வு.. உள்ளத்தின் அயர்ச்சி.. உயிர் வரை சென்று உழல செய்யாதிருக்க... மௌனித்து விடு மனமே.. அமைதி கொள்.. அடக்கமாய் இரு.. சவமாய் இரு... சர்வமும் சிவமே என்றிரு... சத்தியம் அதுவென்றிரு..!

எதுவும் நிரந்தரம் இல்லை... எல்லாமுமாய் உன்னை வரித்துக் கொண்டு... ஏமாந்து போகாதே... ஏதும் நீ இல்லை... நீ என்ற ஒன்றே இல்லை... உண்மைகள் உணர்ந்திருந்தால் உள்ளத்தில் அமைதி கொள்... நிகழும் எல்லாமே நியாயமில்லை... மாதவம் செய்தால் கூட மாண்டார் மீள்வதில்லை... கடமைகளில் கட்டுண்டு.. கரை காண தவிக்கிறாய்...! காலமே அதற்கு மருந்து... இறைவன் கணக்கு என்றும் தப்பியதில்லை... எல்லாம் அவன் விருப்பப்படி இனிதே நடக்கிறது.. 

வேடிக்கை பார்த்து கொண்டிரு.. விதண்டாவாதம் விட்டு விடு.. உணர்வின் தாக்கத்தில்.. உள்ளத்தின் ஏக்கத்தில் உண்மை உணர்ந்து விடு.. வலிகள் உணரப் பட வேண்டும்.. வாழ்க்கை அறியப் பட வேண்டும். எல்லைகள் உடைக்கப் பட வேண்டும்.. எங்கும் ஏகாந்தம் நிறைக்கப்பட வேண்டும். இறையின் வழி சென்று குறை களைய முயற்சி செய்.. எந்த அடையாளமும் இல்லா இவ்வுடல் விடுத்து.. இறைவனடி சேரும் நேரத்திற்காய் ஏக்கத்தோடு காத்திரு..!

...அன்புடன் ஆனந்திபடம்: கூகிள், நன்றி 

Monday, October 20, 2014

நினைவுகள்...!


ஒவ்வொரு வயதிலும் புதுப்புது அனுபவங்களுடன் வாழ்க்கை சுவாரஸ்யமானது தான்... இளவயதில் தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகைகள் என்றாலே ஏக மகிழ்ச்சி... முதல் காரணம் பள்ளி விடுமுறை.. புது துணிமணிகள்.. பட்டாசு... இனிப்பு... என்று எண்ணிலடங்கா சந்தோசங்கள்... சிறு வயதில் நம்மை மகிழ்விக்கவும் நம் மனம் நிறைவு கொள்ளவும் அதிக பிரத்யேக முயற்சிகளோ அல்லது விஷயங்களோ தேவையாய் இருக்கவில்லை... ஆனால் இப்போது...?!

இதோ தீபாவளி வரவிருக்கிறது... பழைய ஞாபகங்கள் மெல்ல எட்டிப் பார்க்கிறது... தீபாவளிக்கு இரு வாரங்களுக்கு முன்பாகவே பண்டம் செய்யவென்று பாமாயில் எண்ணெய் வாங்குவதும், அரிசியை மிஷினில் கொடுத்து திரித்து வாங்குவதுமாய்... பரபரவென்று வேலை நடக்கும்... முறுக்கு, அதிரசம், நெய்விளங்காய் என்று வீடே களைகட்டும்.. முறுக்கின் மொருமொருப்பு அப்படியே இருக்க வேண்டும் என்று.. தகர டப்பாக்களில் அடைத்து வைப்பாங்க.. முறுக்கை சுட ஆரம்பிக்கும் போதே பக்கத்திலேயே உட்கார்ந்து இருப்போம்.. முறுக்கு முழுதாய் வேகும் முன்பே வெளியில் எடுத்து தருவாங்க....அதை வெள்ளை முறுக்குன்னு சொல்வாங்க.. இந்த வெள்ளை முறுக்குக்கு அடி பிடி சண்டை தான்.. அவ்வளவு ருசியாய் இருக்கும்.. 

பொதுவாய் சனி, ஞாயிறுகளில் பகலில் எல்லா வீட்டு வேலைகளையும் முடித்து விட்டு இரவு சாப்பாட்டுக்கு பிறகு தான் அம்மா பண்டம் செய்வாங்க.. இப்போது நினைத்து பார்த்தால் ஒருவேளை நாங்களும் வீட்டில் இருக்கும் போது செய்ய வேண்டும் என்றே அப்படி செய்திருக்க கூடும்.. நெய்விளங்காய் என்று நாங்கள் சொல்லும் பண்டம் பொரிகடலை மாவும், சீனியும், நெய்யும் சேர்த்து செய்யும் உருண்டை வகை.. எனக்கு மிகவும் பிடித்தது.. அம்மா ஒரு பெரிய ஈய பாத்திரத்தில் எல்லா பொருளையும் கொட்டி கலந்து தருவாங்க... அந்த வட்ட பாத்திரத்தை சுற்றி உக்கார்ந்து எல்லாரும் பேசிக்கொண்டே உருண்டை பிடிப்போம்.. உருண்டையை பிடித்து டப்பாவில் அடுக்குகிறோமோ இல்லையோ... பாதி உருண்டை வயித்துக்குள்ள தான் போகும்... இப்போது என்ன தான் அதே போல் பொருட்களை சேர்த்து பக்குவமாய் செய்தாலும் அம்மாவின் கைமணம் வருவதே இல்லை... 

எனக்கு மிகவும் பிடித்த மற்றொரு பண்டம்... அதிரசம்.... அம்மா சுடும் அதிரசம் வெளியில் கரகரவென்றும்.. உள்ளுக்குள் பஞ்சு போல் மெத்துமெத்தென்றும் இருக்கும்.. அளவே தெரியாமல் உள்ளே தள்ளிக் கொண்டிருப்பேன்.. என்ன தான் அம்மா செய்வதை பலமுறை கண்டும்... கேட்டும் இருந்தாலும் ஏனோ அதிரசம் மட்டும்... வருவேனா பார் என்று அடம் பிடிக்கத்தான் செய்கிறது.. என்ன தான் அதி சிரத்தையாய் கவனமாய் செய்தாலும் அம்மா அளவிற்கு இன்று வரை வந்ததில்லை.. அது என்னவோ தெரியலை... ஆட தெரியாதவளுக்கு தெரு கோணலாம்...ன்னு ஒரு பழமொழி சொல்வாங்க.. அந்த மாதிரி அதிரசம் நல்லாத்தான் வந்திருக்கும்.. இங்க உள்ள மாவு தான் சரியில்ல... வெல்லம் சரியில்லன்னு சொல்லிட்டு மனச தேத்திக்கிறேன்... 

இது தவிர தீபாவளிக்கு துணி எடுக்க போகும் படலம் இன்னும் ஏக குஷியான விஷயம்.. வார இறுதியில் காலை உணவு முடித்துவிட்டு கிளம்பி விடுவோம்.. கடை கடையாக ஏறி இறங்கி பிடித்த ஆடைகளை எடுப்பதில் தான் எவ்வளவு ஆனந்தம்.. அதிலும் நாம் எடுத்து தர சொல்லி பார்த்து கொண்டிருக்கும் துணியை தான் பக்கத்தில் இருக்கும் பெண்மணி உற்று பார்த்து கொண்டிருப்பார்கள்.. நாம் அதை கீழே வைப்பது போல தெரிந்தால் போதும்.. ஓ.. உங்களுக்கு வேண்டாமான்னு எடுக்க தயாரா இருப்பாங்க... உடனே நமக்கு ஆஹா.. அம்புட்டு அழகாவா எடுத்து வச்சிருக்கோம்.. விட பிடாதுன்னு கையில கெட்டியா பிடிச்சிக்குவோம்... மனித இயல்பு... இப்போது நினைத்தால் சிரிப்பு தான் வருகிறது.

அப்படி அலைந்து திரிந்து எல்லாருக்கும் பிடித்த துணிகளை ஒருவாறு வாங்கி முடிக்க மதிய உணவு வேளை வந்து விடும்.. அப்படியே ஒரு நல்ல உணவகம் போய் சாப்பிட்டு விட்டு... மிச்சம் மீதி வாங்க வேண்டிய பொருட்களையும் வாங்கி விட்டு... மாலை நேரம் பஸ் பிடித்து வீடு வந்து சேர்ந்து... வந்ததும் வராததுமாய் அவரவர் வாங்கி வந்ததை கடை பரப்பி... சிலாகித்து.. ரெடி மேட் துணியாக இருந்து விட்டால் மீண்டும் ஒரு முறை போட்டு கண்ணாடியில் அழகு பார்த்து.. வீட்டில் எல்லாரிடமும் காட்டி சந்தோஷப் படுவதும் உண்டு... 

தீபாவளி அன்றோ விடிந்தும் விடியாமலும் அம்மா எழுப்பி விட்டு தலைக்கு எண்ணெய் தேய்த்து குளிக்க சொல்வதும்.. குளித்து வருவதற்குள் வடை, சுசியம், பஜ்ஜி என்று எல்லாம் செய்து சாமி கும்பிட தயாராய் எடுத்து வைத்திருப்பதும்.. எப்போ சாமி கும்பிட்டு எப்போ சாப்பிட விடுவாங்கன்னு கவனம் எல்லாம் சுட்டு வச்சிருக்கும் பண்டம் மேலேயே இருக்க... ஒரு வழியாய் சாமி கும்பிட்டு.. வெடியெல்லாம் வெடிக்க எடுத்து தருவாங்க.. வெடியெல்லாம் வேடிக்கை பார்ப்பதோடு சரி.. சும்மா வேடிக்கை பார்க்கும் போதே போட்டிருக்கும் துணியில் எப்படியாச்சும் தீப்பொறி பட்டுவிடும்... அதெல்லாம் ட்ரேட் மார்க் மாதிரி... வருசா வருசம் இப்படி தான்... 

தீபாவளி முடிந்ததும் அடுத்து பள்ளி திறக்கும் தினத்தில் பள்ளி சீருடை அல்லாத துணிகள் அணிய அனுமதி உண்டு... இந்த நாளுக்காகவே காத்திருப்போம்... நண்பர்களிடம் ஒருவருக்கொருவர் புது ஆடை காண்பித்து மகிழ்வது ஒரு சுகம்... இப்படி எவ்வளவோ சின்ன சின்ன விஷயங்களில் திருப்தியும், ஆனந்தமும் அடைந்ததெல்லாம்.... இப்போது நினைத்தாலும் நெஞ்சம் நிறைய தான் செய்கிறது.. அப்படியே வாழ்நாள் எல்லாம் இருந்திருந்தால் எவ்வளவோ நன்றாய் இருந்திருக்கும்... 

இப்போதெல்லாம் அப்படி ஒரு மகிழ்ச்சியோ பரபரப்போ சுவாரஸ்யமோ ஏனோ இருப்பதில்லை.. பண்டிகையும் இன்னொரு தினமாகவே கடந்து செல்கிறது...

சிறு வயதில் சிலாகித்த 
சின்ன சின்ன சந்தோசங்கள்..
எளிமையில் கண்ட 
எண்ணற்ற மன நிறைவுகள்.. 
எல்லாம் இருந்தும் ஏனோ 
ஏங்க வைக்கும் இன்றைய தினங்கள்...

எது எப்படியோ... யார் தடுத்தும் நிற்காத இந்த கால சுழற்சிகளை மகிழ்வுடன் கடப்போம்....!

...அன்புடன் ஆனந்திபடம்: கூகிள், நன்றி 

Tuesday, September 9, 2014

வாழ்க்கை அழகானதே...!


அன்றாட அவசரங்கள் கடந்து அந்தியில் ஆதவன் மறைந்து அனைவரும் உறங்க சென்றிருக்கும் நேரம்.. இருக்கும் அமைதி அலாதியானது... அடர்ந்திருக்கும் அந்த இருளும் அழகே.. ஆங்காங்கே கண்சிமிட்டும் நட்சத்திரமும் அழகே.. அதது தனது வேலையை அம்சமாய் செய்வதை அப்படியே பார்த்திருந்து விட்டு.. அடிமனதில் புதைத்து வைத்துக் கொண்டாகி விட்டது.. படர்ந்திருக்கும் இருளில் வானத்தை பார்த்திருப்பது கூட, பிடித்த இசையை மீண்டும் மீண்டும் கேட்பதற்கு இணையே.. எந்த ஒரு சலனமும் இன்றி இருக்கும் இருளே எல்லாவற்றிக்கும் ஆதாரம்.. எதுவுமற்று இருப்பது போல் இருப்பதில் தான் எல்லாவற்றின் சூட்சுமமும் அடங்கி இருக்கிறது.. 

வாழ்க்கை அழகானதே... வாழும் மனிதர்கள் அதை அறியாது அதன் அழகைக் குலைத்து விட்டு.. ஆயிரம் குறைகள் சொல்லி கொண்டு அமைதியற்று திரிவதில் அர்த்தம் ஏதுமில்லை... எதையும் அதன் போக்கில் விட்டு ஆழ்ந்து யோசித்து செயல்படுவது என்பது அநேக பேருக்கு சிம்ம சொப்பனம் தான்.. எதுவாய் இருப்பினும் உடனே அவசர கதியில் யோசித்து அதற்கு ஒரு முடிவெடுத்து.. அந்த முடிவும் தவறாகிப் போக பின் அதையே எண்ணித் தவித்திருக்கும் வாய்ப்புகள் அதிகம்.. மனம் கலங்கிய நிலையில் எதையும் யோசிக்கும் திறன் இருப்பதில்லை.. அந்நிலையில் எதையும் முடிவு செய்யாதிருப்பதே உத்தமம்.

இயந்திர மயமான இவ்வாழ்வில் இயற்கையின் உன்னதமான படைப்புகள் நம் கண்ணிலும் கருத்திலும் படுவதில்லை.. எப்பொழுதும் எதையோ தொலைத்து விட்டு தேடுவது போன்ற பரபரப்பு.. இக்கணமே இவ்வாழ்வு முடிந்து விடுவது போல் ஒரு படபடப்பு... எதற்காக இதை செய்கிறோம்.. ஏன் இதை செய்ய வேண்டும்... செய்வதால் என்ன பயன்... செய்யாவிடில் என்ன நஷ்டம்... இதெல்லாம் பொறுமையாய் ஆலோசித்து முடிவுகள் எடுக்கப்படுவதில்லை... எல்லாமே எக்ஸ்பிரஸ் வேகம் தான்.. அடிப்படையில் அமைதி தொலைத்துவிட்டு ஆங்காங்கே தேடிக் கொண்டிருக்கிறோம்.

வாழ்க்கைச் சுமைகளுக்கு மத்தியில்... அதன் சுவாரஸ்யங்கள் அடி பட்டுப் போய் விடுகிறது. எதற்காய் இதை சுமக்கிறோம் என்று கூட உணரும் முன் எல்லாமும் முடிந்து விட வாய்ப்புண்டு.. இப்பொழுதெல்லாம் செய்வதையே தினமும் திரும்ப திரும்ப செய்வது ஒரு வித அலுப்பை தந்து விடுகிறது.. எதை எதையோ செய்ய எண்ணுவதுண்டு.. ஆனால் எண்ணியது எல்லாம் ஈடேற்றும் முன் வாழ்க்கை எங்கோ நம்மை இழுத்துச் சென்று விடுகிறது.. திரும்பிப் பார்த்தால் சொல்லிக் கொள்வது போல் ஒன்றுமே இருப்பதில்லை.

வாழ்வது ஒரு முறை... அதை ரசனையோடு.. வாழ்வது மட்டும் முக்கியம் அல்ல.. ஏதோ வந்தோம்.. இருந்தோம்.. சென்றோம்.. என்று இல்லாமல் ஏதேனும் சாதித்து செல்ல வேண்டும்.. நமக்கு நாமே நேரம் ஒதுக்கி நம்மோடு நாம் பேச.. நிறைய விஷயங்கள் புரிந்து கொள்ள முடியும்.. ஆட்டத்தை தொடங்கி விட்டாகி விட்டது.. ஆடும் முறை, ஆடும் நேரம்.. ஆடிய பிறகு வரும் எதிரொலி எல்லாமே ஏகஇறை ஏற்கனவே எழுதி விட்டது தான்.. அது அறியாது அங்குமிங்குமாய் அலை பாய்வதால் எதுவும் நடக்க போவதில்லை. 

அவசரம் நமக்குள் ஆவேசத்தை உசுப்ப.. அமைதி இன்றி ஆர்ப்பாட்டம் செய்து, அவ்விடத்தில் நிம்மதி தொலைந்து விடுகிறது. தொலைத்த இடத்திலேயே மீண்டும் நிம்மதி கிடைக்க வாய்ப்புண்டு.. நமக்கு தோன்றிய இடத்தில் அல்ல.. சின்ன சின்ன விஷயங்களுக்கு கூட பெரும் முக்கியத்துவம் கொடுத்து பல நேரங்களில் நமக்கு அதை பாரமாக்கிக் கொள்கிறோம்.. எதையும் எளிதாய் எடுத்துக் கொள்ளும் யுக்தி எல்லோருக்கும் எட்டி விடுவதில்லை. 

ஒரு விஷயம் நிகழ்ந்தால் நம்மால் அதை மாற்ற இயலுமானால் அதை பற்றி தீவிரமாய் யோசித்து ஏதேனும் வழி தேட முயற்சிப்பது தவறில்லை.. நம் கையில் இல்லாத.. அல்லது நம் கை மீறிப் போன விசயங்களை எண்ணி எண்ணி வருந்தியோ.. வேதனை பட்டோ எதுவும் நடக்க போவதில்லை. கவலைப் படுவதால் காரியம் நடந்து விட போவதில்லை.. பிறகு ஏன் தேவையில்லாத வீண் மனக்குழப்பம்.. நடந்ததை மறந்து விட்டு அடுத்த அடி எடுத்து முன்னேறிப் போக வேண்டியது தானே.. அது சரி, சொல்வது அனைவருக்கும் சுலபம்.. அதைச் செய்வது தானே கடினம்... அப்படி செய்ய இயலுமாயின் நாம் சென்று கொண்டிருக்கும் பாதை.. நாம் செல்ல வேண்டிய இடத்திற்கு நம்மை அழைத்துச் செல்வதில் ஐயம் இல்லை..!


...அன்புடன் ஆனந்தி(படம்: கூகிள்)

Tuesday, April 1, 2014

வருமா.. வராதா...??


வெறித்த வானத்தில் வெள்ளை மேகங்கள் அங்கங்கே விளையாடிய வண்ணம் கண்டேன்.... ஹலோ.. அதெல்லாம் இருக்கட்டும்மா.. முதல்ல வசந்தகாலம் வருமா.. வராதா... அத முதல்ல சொல்லு.. ஆஹா.. ஒரு கவிதை சொல்ல விட மாட்டீங்களே... என்ன தான் பிரச்சினை உங்களுக்குன்னு கேட்டா... ஒரு குயர் நோட் புக் முழுக்க எழுதுற அளவு புகார்.. என்ன கொடுமைங்க இது.. பனிக்காலம் வந்துச்சு.. இருந்துச்சு... இருக்குது.. இன்னும் இருக்கும் போல இருக்கே... எப்போ தான் தரைய பாக்குறது நாமன்னு கேக்குற அளவுல ஆகிபோச்சு நிலைமை..!

பனி விழும் மலர் வனம்..ன்னு பாட வேணும்னா நல்லா இருக்குங்க.. பனியிலேயே வசிக்கிறவங்களுக்கு தான் அதன் கஷ்டம் புரியும்.. போன வருஷம்.. எங்கே பனி.. எங்கே பனின்னு கேட்டது போக.. எப்படா பனிக்காலம் முடியும்ன்னு கேக்குற அளவு ஆகி போச்சு இந்த வருஷம்.. போன வருஷம் வாங்கி போட்ட உப்பெல்லாம் அப்படியே கிடக்கு.. பனி சுத்தம் செய்ற பணியாளர் ஒருத்தருக்கும் வேலைக்கு வழி இல்லை.. அரசாங்கத்துக்கு இதனால பல நஷ்டம்னு ஒரே புலம்பல்.. இந்த வருஷம்.. அப்படியா விஷயம்.. வா மகனேன்னு... அடிச்சு தள்ளிருச்சு பனி..!

மார்ச் 20ஆம் தேதியோட பனிக்காலம் முடிஞ்சு.. வசந்த காலம் தொடங்கும் நேரம்.. ஆனா பனி போன பாடில்லை... இந்த வாரம் தான் ஏதோ கொஞ்சமாச்சும் வெயில் கண்ணில படுற மாதிரி சூரிய பகவான் கருணை காட்டுறார்... அடிச்ச பனில... குவிஞ்ச பனியை எல்லாம் அங்கங்கே குமிச்சி போட்டு வச்சி இருக்குறத பார்த்தா.. தரையை கண்ணுல பார்ப்போமான்னு கவலையே வந்திருச்சு.. 

ஆனாலும் சும்மா சொல்லக் கூடாது... எவ்ளோ அடிச்சாலும் தாங்குறாங்கடான்னு பனியே பாவம் பார்த்து போயிருச்சு போல.. ஒரு வழியா இந்த ரெண்டு நாளா தான் வெளிய தரையே கண்ணுக்கு தெரிய ஆரம்பிச்சிருக்கு.. அதுக்குள்ள இங்குட்டும் அங்குட்டும் ஆளுங்க ஒரே வாக்கிங், ஜாகிங், பைக்கிங்..ன்னு பின்றாங்க போங்க.. பின்ன எவ்ளோ நாள் தான் நாமும் வலிக்காத மாதிரியே நடிக்கிறது சொல்லுங்க.. 

பனிக்காலம் முழுக்க ரெண்டு அடுக்கு டிரஸ் போட்டு அதுக்கு மேல ஒரு கவசம் மாதிரி விண்டர் கோட் போட்டு.. கைக்கு, காலுக்கு, காதுக்குன்னு எல்லாம் கவர் பண்ணி ஏதோ நின்ஜாஸ் மாதிரி தான் வெளில போகணும்.. அப்படியும் குளிர் அட்டாக் பண்ணி அப்பப்போ உடம்புக்கு எதாச்சும் வந்திரும்.. அதிலும் ஸ்கூல் போயிட்டு வரும் குழந்தைகள்ல ஒரு பிள்ளைக்கு எதாச்சும் உடம்புக்கு வந்தா... இன்னொன்னு ஃப்ரீ... தன்னால வந்திரும்.. அந்த கொடுமையெல்லாம் அனுபவிச்சவங்களுக்கு நல்லா புரியும்.. அதிலும் வேலைக்கு செல்லும் பெற்றோர்கள் நிலை ரொம்பவே கஷ்டம்..!

ஒரு இடத்துக்கு கிளம்ப கார் எடுத்துட்டு போயிட்டு திரும்ப முழுசா வீடு வந்து சேரும் வரை மனசுல ஒரு பயம் இருந்துட்டே இருக்கும்.. பனில வண்டி ஓட்டிட்டு போறதும்.. சர்கஸ் கம்பில நடக்குற மாதிரி தான்.. ஆனாலும், இங்கே எல்லாம் அடிப்படை வசதிகளுக்கு கூட காரில் போகாமல் வேலை ஆகாது.. அதுவும் பனி காலங்களில் நடந்து போறது பத்தியெல்லாம் யோசிக்கவே முடியாது.. பார்க்க தரை போல இருக்கும்.. ஆனா அதில் பனி கண்ணுக்கு தெரியாமல் உறைந்து கிடக்கும்.. கால் வைத்தால் வழுக்கி விழ வேண்டியது தான்..!

இது எல்லாத்தையும் விட ஒரு ஆச்சர்யப்பட வைக்கும் விஷயம் என்னன்னு கேட்டா.. இவ்ளோ பனி மூடி இருந்தும்.. பனி உருகின சில நாளுக்குள்ள சின்ன சின்ன அரும்பு மாதிரி பூச்செடிகள் எல்லாம் தரைக்குள்ள இருந்து மெல்ல எட்டிப்பாக்குது... பார்க்கவே அழகா இருக்கு.. இயற்கையின் அழகே அழகு.. யாரையும் எதிர்பார்த்து தன் வேலையை செய்றதில்லை.. கால மாற்றத்திற்கு தக்க தன் வேலையை தானே சரியாய் செய்து கொண்டிருக்கிறது..

(படம்: கூகிள், நன்றி)

வருமா... வராதான்னு... ஏங்க வச்ச வசந்த காலம் ஒரு வழியா வந்திருச்சு.. இனி பூக்கப் போகும் ஒவ்வொரு வண்ண வண்ண மலர்களையும்.. பச்சைப்புல் தரையையும் பார்த்து ரசிக்கலாம்..!


...அன்புடன் ஆனந்திSunday, March 30, 2014

சின்னச்சின்ன சந்தோசங்கள்...!


சிந்தனைக்குள் சிறகடிக்கும் 
சின்னச்சின்ன சந்தோசங்கள்...
சில்லென்று வீசும் காற்று..
சிரிக்கும் மழலை...
சிந்தும் மழைத்துளி..
சிதறிக் கிடக்கும் சருகுகள்..
சலசலக்கும் நீரோடை.. 
அதிகாலை கேட்கும் பறவைகளின் ஒலி.. 
மனதை மயக்கும் இசை.. 
மலர்ந்து விரிந்து நிற்கும் பூக்கள்.. 
அடித்து பிடித்து கொண்டு கொட்டும் அருவி...
அம்மாவின் அக்கறை... 
மார்கழிக் குளிர்... 
மாங்காய் வடு.. 
வெடித்து நிற்கும் கொடுக்காய்ப்புளி..
வாசலில் போடும் வண்ணக்கோலம்.. 
வாங்கிச் சேர்த்த புத்தகங்கள்... 
காலில் குத்திய நெருஞ்சி முற்கள்..
கால் பொசுக்கும் மொட்டை மாடி வெயில்..
பனை ஓலைப் பதநீர்...
பரிசு வாங்கிய பேச்சுப்போட்டி... 
தென்னை மரக் காற்று.. 
அதன் தெவிட்டாத இளநீர்...
விரிந்தும் விரியாத பிச்சிப்பூ வாசம்..
விளையாட வரைந்த பாண்டி கட்டம்..
கலர்கலராய் அணிந்த கண்ணாடி வளையல்கள்..
காதோரம் அணிந்த ஒற்றை ரோஜா..

இப்படி எத்தனையோ சொல்லிக்கொண்டே போகலாம்.. சமயத்தில் எண்ணுவதுண்டு.. நம் பிள்ளைகள் இப்படியெல்லாம் அனுபவிக்கக் கூட வாய்ப்பே இல்லாமல் எங்கோ இடம் பெயர்ந்து வாழ்ந்து கொண்டிருககிறோமே என்று.. பிழைப்பிற்காய் வந்த இடம் நம் சொந்த இடம் ஆகிவிடாது.. இப்போதே இரண்டு மூன்று வருடத்திற்கு ஒரு முறை நான்கு வாரங்கள் இந்தியா சென்று வரும் போது.. சொந்த பந்தத்திற்கு அவசர கதியில் ஒரு அட்டெண்டன்ஸ் போடுவதோடு சரி.. அதுவும்.. ஆர்மி அவசரம் தான்... காலையில் அவசர அவசரமாய் எழுந்து குளித்து அரக்க பறக்க கிளம்பி.. காரில் ஏறி.. ஒவ்வொரு சொந்த பந்தம் இருக்கும் ஊருக்கும் போய்விட்டு வருவது என்பது.. ஏனோ மனதிற்கு எந்த ஒரு ஒட்டுதலையும் தருவதில்லை.. 

பிறந்த நாட்டில் உள்ள பல இடங்களை இன்னமும் பார்த்ததில்லை.. அவையெல்லாம் கனவாவே போயிரக்கூடாதுன்னு மட்டும் எண்ணமும் ஏக்கமும் இருக்கு.. ஊருக்கு போனால் எங்கே நேரம் இருக்கிறது அங்கே இங்கே அலையவே சரியா போயிருதுன்னு சொல்லிட்டு இருக்கும் போது.. ஒரு தோழி சொன்னாங்க.. அட நீங்க வேற இப்போல்லாம் யாருக்கு நேரம் இருக்கு எல்லா ஊருக்கும் போயிட்டு வந்துட்டு இருந்தா... அப்புறம் நாம எங்க வெளிய போறது.. இப்போதெல்லாம் காலம் மாறி விட்டது.. நாங்கல்லாம் ஒரு இடத்தை பொதுவா தேர்ந்தெடுத்து சொந்த பந்தத்தை அங்கே வர சொல்லிருவோம்.. அங்கேயே எல்லாரையும் சந்திச்சிட்டு அவங்கவங்க வழிய பார்த்துட்டு வந்திருவோம்.. யாரும் யார் வீட்டுக்கும் வரல போகலைன்னு எந்த கம்ப்ளைன்ட்டும்.. இருக்காதுன்னு சொன்னாங்க.. அடடா.. இந்த டீலிங் எனக்கு பிடிச்சிருக்குன்னு சொல்றத தவிர வேற என்ன நான் சொல்ல...! 

நம் பிள்ளைகள் நிலை நம்மை விட கடினம்.. விடுமுறைக்கு போய் சில நாட்களில் அங்குள்ள தட்ப வெட்பம் ஒத்து போகாமல் உடலுக்கு ஏதேனும் வந்து விடும்.. அதெல்லாம் ஒரு வழியாய் சரியாகி வரும் போது. அங்கிங்கு அலைந்து திரிந்து அதில் துவண்டு விடுவார்கள்.. அதையெல்லாம் தாண்டி வந்தால்.. இவர்கள் பேசும் மொழியும் அங்குள்ள நம் உறவுகள் பேசும் மொழியும் பெரும்பாலும் ஒருவருக்கொருவர் பரஸ்பரம் புரிந்து கொள்ள முடியாமல்.. ஒரு இடைவேளியோடே உறவு தொடர்கிறது.. குழந்தைகள் அதையும் சமாளித்து மொழி புரிந்து ஏற்றாற்போல் பேச பழகி அங்குள்ள குழந்தைகளோடு குழந்தையாய் விளையாட ஆரம்பிக்கும் போது.. நாம் திரும்பும் நாள் வந்து விடுகிறது.. அப்புறம் என்ன.. என்ன கொடும சார் இதுன்னு கிளம்பி வர வேண்டியது தான்.. அடுத்த விடுமுறையில் திரும்பவும் முதல்ல இருந்து தொடங்க வேண்டியது தான்.. வேடிக்கையாய் இதை சொன்னாலும்.. இதன் உள்ளிருக்கும் வலி வாங்கி வந்த வரம்.. போலும்..!!!...அன்புடன் ஆனந்தி(படம்: கூகிள், நன்றி)


Sunday, February 23, 2014

சால்னா...!


தேவையான பொருட்கள்:

வெங்காயம் - 2
தக்காளி - 2
பச்சை மிளகாய் - 3
இஞ்சி,பூண்டு விழுது - 1/2 ஸ்பூன்
மல்லி, புதினா இலை - சிறிது

மிளகாய்த்தூள் - 1 ஸ்பூன்
மல்லித்தூள் - 2 ஸ்பூன்
சீரகத்தூள் - 1/2 ஸ்பூன்
சோம்புத்தூள் - 1/2 ஸ்பூன்
மஞ்சள்தூள் - 1/4 ஸ்பூன்

(பொடி செய்து கொள்ளவும்)
கிராம்பு - 3
பட்டை - 1 துண்டு
ஏலக்காய் - 1

(அரைத்துக் கொள்ளவும்)
முந்திரி பருப்பு - 15
தேங்காய் - 1/2 கப்

செய்முறை:

  • ஒரு வாணலியில் சிறிது எண்ணெய் ஊற்றி அதில் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
  • வெங்காயம் சிறிது வதங்கியதும் இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.
  • பொடித்து வைத்துள்ள கிராம்பு, ஏலக்காய், பட்டை தூளை சேர்த்து வதக்கி, பிறகு பொடியாய் நறுக்கிய தக்காளியை சிறிது உப்பு சேர்த்து வதக்கவும்.
  • சிறிது நேரம் மூடி வைத்து வேக விடவும். தக்காளி எண்ணெய்  தெளிய வெந்து விடும்.
  • இதில் மிளகாய்த்தூள், மல்லித்தூள், சீரகத்தூள், சோம்புத்தூள், மஞ்சள் தூள், தேவையான உப்பு சேர்த்து வதக்கி, அரைத்து வைத்திருக்கும் தேங்காய்,முந்திரிப்பருப்பு மசாலாவை சேர்த்து 2 லிட்டர் வரை தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும். (கொதித்த பின் தேவையான அளவு கெட்டியாகி விடும்)
  • கொதிக்கும் பொழுதே மல்லி, புதினா இலையை சேர்க்கவும்.
  • 10 நிமிடங்களில் மசாலா பச்சை வாசனை போக, எண்ணெய் தெளிந்து மேலே வர சால்னா தயார் ஆகிவிடும்.

(சப்பாத்தி, பரோட்டாவுடன் சாப்பிடலாம்... இதில் விருப்பத்திற்கேற்ப சிக்கன் துண்டுகளை வதக்கி சேர்த்தும், முட்டையை அவித்து சேர்த்தும் கூட செய்யலாம் )...அன்புடன் ஆனந்தி 
Wednesday, January 22, 2014

நிதர்சனம் நீ...!!!கலையாத கனவுக்குள் 
கவிதையாய் நீ வந்தாய் 
வரைந்து வைத்த ஓவியம் போல் 
வகையாய் என்னுள் இடம் கொண்டாய்..

போராட்டம் பல வரினும் 
ஏதேனும் இடர் வரினும் 
புரிதலின் பூரிப்பில் 
புதுப்பூவாய் பூக்கச் செய்வாய்..

உன் புன்னகை அழைப்பில் 
என்னையே மறக்கச் செய்வாய்..
உனக்குள் அமிழ்ந்தே 
உன்னுயிரில் கரையச் செய்வாய்..

இமைகளுக்குள் புகுந்தே
இரவுகள் தொலைக்கச் செய்வாய்..
இதமான உன் அன்பில்
இவ்வுலகம் மறக்கச் செய்வாய்.. 

உன்னை வரையறுக்க 
உவமைகள் தேவையில்லை
உண்மைக் காதலுக்கு 
உவமானம் தேவையில்லை...

எந்நிலையிலும் எனை நீங்கா 
நின்னுயிர் ஒன்றே நிதர்சனம்...
நின்னடி சேர்வதொன்றே 
என்னுயிரின் நிர்ணயம்....!!!

...அன்புடன் ஆனந்தி 

(படம்: கூகிள், நன்றி)

Sunday, January 19, 2014

இச்சை தரும் இம்சை...!
அன்றாட வாழ்க்கைக்கான அடிப்படை வசதிகள் ஒரு மனிதனின் தேவையாக இருப்பது இயற்கை.. குடியிருக்க ஒரு இடம், பசித்த வேளைக்கு உணவு, உடம்பு மறைக்க உடை... இவைகளே அடிப்படை தேவைகளாக கருதப்படுகிறது..  இதற்குத்தான் அனைவரும் இந்த பாடு படுகிறார்களா..?  இது தவிர்த்து நமக்கு தேவைப்படுவன அனைத்தும் நம் மனதின் இச்சைகள். இச்சைகளுக்கு எல்லைகளே இல்லை.. 

யோசித்துப் பார்த்தால்... அடிப்படை தேவை மட்டுமே ஒருவரின் எல்லையாக இருக்கும் பட்சத்தில்.. அது சார்ந்து உழைத்து நகரும் போது... எந்த வித இன்னல்களும் வர வாய்ப்பில்லையே என்று தோன்றுகிறது... இச்சை என்று எதை வரையறுப்பது...? தேவைக்கு மீறி நாம் அடைய விரும்பும் அனைத்துமே.. இச்சைகள்.

இச்சைகள் தொடங்கும் இடத்தில் இம்சைகளும் உடன் வந்து விடுகிறது. இருக்கும் வீட்டில் ஆரம்பித்து.. உடுத்தும் உடை வரைக்கும்... அடுத்தவர் என்ன நினைப்பார்கள் என்று எண்ணியே வாழ்வை அழித்துக் கொண்டிருக்கிறோம்... இப்பொழுதெல்லாம் அவரவர் தாம் வசிக்கும் வீட்டை விசாலமாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறார்களே தவிர.. அவர் தம் மனம் விசாலமாக இருப்பதும் இல்லை.. உண்மையான மகிழ்ச்சியோடு இருப்பதும் இல்லை..

அம்மா, அப்பா, குழந்தைகள் சில.. என்று உள்ள ஒரு குடும்பத்திற்கு எவ்வளவு பெரிய வீடு தேவைப்பட போகிறது..? ஆனால் இப்போது காலக்கொடுமை... வீடுகள் பெரிதாகிக்கொண்டே போகிறது.. வீட்டில் உள்ள மனிதர்கள் எண்ணிக்கையும்... அவர்களுக்கான தொடர்புகளும் குறைந்து கொண்டே வருகிறது.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பும் சிவம்.. தொடரில் சமீபத்தில்.. இந்த தேவைக்கும் இச்சைக்கும் உள்ள வேறுபாட்டை சிவன் கூறுவது போல் வரும்.. அதில் ஒரு சிறிய கதை சொல்வார்.. ஒரு வணிகன் தனது மனைவி மற்றும் இரு குழந்தைகளுடன் ஒரு சிறிய வீட்டில் வசித்து வந்தான்.. அவன் தொழிலும் சிறப்பாக அமைந்து.. அவனது தேவைகளுக்குப் போதுமான பொருளும் ஈட்டினான்.. அவன் மனைவி மக்கள் மகிழச்சியாக இருந்தனர்.. ஆனால் வணிகருக்கோ.. மனநிறைவு ஏற்படவில்லை..  

மேலும் பொருள் ஈட்ட வேண்டும்.. நிறைய நில புலன்கள் வாங்க வேண்டும்... பெரிய செல்வந்தனாக வேண்டும் என்று எண்ணம் மேலோங்க... இறைவன் விஷ்ணுவை வேண்டி தவம் செய்ய துவங்கினான்.. பல ஆண்டுகள் அன்னம் ஆகாரம் இன்றி அவன் செய்த கடுமையான தவத்திற்கு பலனாய் இறைவன் விஷ்ணு அவன் முன் தோன்றி.. தவத்தால் உள்ளம் குளிர்ந்தேன்.. வேண்டும் வரம் என்ன என்று கேட்க.. வணிகனும்.. "நான் கண்ணால் காணும் இடம் எல்லாம் எனக்கே சொந்தமாக வேண்டும் என்றான்..". இறைவனும் யோசித்து விட்டு.. "சரி.. உன் கண்ணில் நீ காணும் இடமெல்லாம்  உனக்கே சொந்தமாகும்.. உன் கண்ணில் படாதவை உனக்கு சொந்தமல்ல".. என்று சொல்லிவிட்டு மறைந்தார். 

வணிகனுக்கு தலை கால் புரியவில்லை.. நானே இந்த உலகத்தில் பெரும் செல்வந்தன் என்று கூறிய படியே.. தன் எதிரில் கண்ட இடங்கள் எல்லாவற்றையும்.. இது எனது.. என் இடம்.. எனக்கே சொந்தம்.. என்று கூறியவாறே.. சென்றான்.. வெகுதூரம் வந்தும்.. அவன் ஆசை அடங்கவில்லை.. மேலும் நிறைய இடங்களை கண்ணால் கண்டுவிட வேண்டும் என்ற பேராசையில்... ஓடிக்கொண்டே இருந்தான்... விளைவு.. அவன் மன வேகத்திற்கு.. உடல் ஒத்துழைக்க வில்லை.. அன்ன ஆகாரம் இன்றி.. உயிர் நீத்தான்...!

மனம்... ஒரு குரங்கு என்று சொல்லக்கேட்டிருக்கிறோம்... மனதை கட்டுக்குள் வைக்காது அதன் போக்கில் அலைய விட்டால்... அல்லல்களே எஞ்சும். நிறைவான மனதில் நிம்மதி குடியிருக்க தொடங்கும்.. நிறைவடையாத மனமோ... எது நிறைவென்றே அறியாது எதனெதன் பின்னோ அலையும்..!

மனதின் இச்சைகள் அடக்கி.. ஆள... பக்குவப்பட்டு விட்டால்... இன்னல்கள் தவிர்த்து இன்பமாய் வாழ வாசல் திறக்கும்..!


...அன்புடன் ஆனந்தி 


(படம்: கூகிள், நன்றி)

About Me

My photo
I am a jovial.. sensitive.. happy person who likes to be around good friends ;)