topbella

Friday, January 11, 2013

உண்மையான உறவு...!


நட்பாகட்டும், உறவாகட்டும்.... உண்மையான பந்தம் எது? இந்த கேள்வி நம்ம எல்லார் மனசிலயும் அடிக்கடி வந்து போறது சகஜம்... பார்த்த இடங்களில் புதிதாய் ஒருவரை சந்திக்கும் போது, மரியாதை நிமித்தம்.. நலம் விசாரிப்பு... அப்படியே அவங்களுக்கும் நமக்கும் விருப்பங்கள் ஒத்து போகும் பட்சத்தில் மேற்கொண்டு பேச்சு... பிறகு ஒருவருக்கொருவர் தொலை பேசி எண் பரிமாற்றம்... சில பல முறைகள் தொடர்பு கொண்டு பேசுவது.. இப்படியா சில நேரங்கள்ல நட்பு ஆரம்பிக்கும். ஒருவரால் அடுத்தவருக்கு எந்த கஷ்டமோ, தொந்திரவோ இல்லாது இருந்தா... இது தொடரும். 

சில நேரங்கள்ல.. ரெடி மேட்-ஆக நட்புகள் அமையும். அதென்ன ரெடி மேட் நட்பு...? அதாவது, கல்யாணம் பண்ணி புதிதாய் வரும் போது, கணவருக்கு நண்பர்களாய் இருப்பவர்கள், அவர்களின் மனைவிகள் அவங்க எல்லாம் நமக்கும் நண்பர்கள் ஆவாங்க. இப்படி அறிமுகம் ஆகிற அத்தனை பேர் கிட்டயும் நம்ம நெருங்கி பழகுறது இல்ல.. சில பேர் கிட்ட ரொம்ப நெருக்கமா உணர்வோம், மீதி பேர் கிட்ட நல்ல நட்பா இருப்போம். சில பேர்கிட்ட விதியேன்னு பழகிட்டு இருப்போம்.. சில நேரங்களில் எதுக்கு தேவை இல்லாம இந்த டென்ஷன் எல்லாம்னு.. யோசிக்க வைக்கிற மாதிரி நிகழ்வுகள் இருக்கும்.

"அடுத்தவர் மனம் நோகாமல் நடப்பது", "குற்றம் பார்ப்பின் சுற்றம் இல்லை", "ஊரோடு ஒத்து வாழ்"... இதெல்லாம் சுலபமா சொல்லி வச்சிட்டு போய்ட்டாங்க... இங்க அதை எல்லாம் பின்பற்றி அவஸ்தை படுறது எத்தனை பேரு? எவ்வளவோ பார்த்து பார்த்து, இவங்க தப்பா நினைச்சிர கூடாது, அவங்க தப்பா நினைச்சிர கூடாதுன்னு பல விஷயங்கள் செஞ்சு.. நம்ம ஆப்பு வாங்குறது தான் மிச்சம்.. அப்படி வாங்கியும் பல நேரங்களில்.. ஒதுங்க முடியாமல் மாட்டிட்டு முழிக்க வேண்டியதா இருக்கும்.

இல்ல தெரியாம தான் கேக்குறேன்.. ஒருத்தங்க நல்ல பழகினா, அவங்ககிட்ட உரிமை எடுத்துக்குறது சரி தான்.. அதுக்காக அளவுக்கு மீறி தனக்கு சாதகமா உரிமை எடுத்துக்கறது தான் சகிக்க முடியறதில்லை.. பல சமயம், சரி போனா போகுது போன்னு.. சொல்றத கேட்டுட்டு,  கேட்டத செஞ்சிட்டு போயிட்டு இருக்க வேண்டியதா இருக்கு.. யோசிச்சுப் பார்த்தா இதெல்லாம் எதுக்கு...?? நல்ல நட்போ, உறவோ... மனசுக்கு நிம்மதி தரணும்... நினைவுகளை அசை போடும் சமயம் ஆனந்தம் தரக் கூடியதா இருக்கணும்... அத விட்டுட்டு... எப்பா சாமீ...... ஹ்ம்ம் ஹும்ம்... இந்த விளையாட்டுக்கு நா வரல... ஆள விடுங்கப்பான்னு சொல்ற மாதிரி இருக்கக்கூடாது.

நம்ம எல்லாருக்குமே நிறைய வாழ்க்கை அனுபவங்கள் இருக்கும்.. அமைதியா உக்கார்ந்து யோசிச்சு பார்க்கணும்... என்னென்ன பண்ணோம்... எது எதுக்காக பண்ணோம்... பண்ணது அவசியம்தானா... இது மாதிரி.. நம்மை நாமே சுயபரிசீலனை செய்து கொள்ளணும். நட்பும்,  உறவும்  இந்த வாழ்க்கைல தவிர்க்க முடியாத ஒரு விஷயம் தான்... அதே சமயம் எப்போ எது நமக்கு பிரச்சினைகளை கொண்டு வருதோ, மனநிம்மதியோட விளையாடுதோ.. அல்லது சுயசிந்தனையில் குறுக்கிடுறதோ அப்பவே அதை விடுத்து ஒதுங்கிறனும் .

எனக்கும் நண்பர்கள் இருக்காங்கன்னு சொல்றது பெருசு இல்ல.. அவங்க நம்மை நாமாக சுய கௌரவத்துடன் வாழ விடுறாங்களான்னு யோசிக்கணும்...  எப்பவும் திடமான மனதில் ஸ்திரமான எண்ணங்களுடன் சுயமரியாதையுடன் தனித்துவத்துடன் இருக்கணும்.

சரி ஓகே.. விட்டா பேசிட்டே இருப்பேன்.. உங்களுக்கு அப்படி நல்ல நட்போ, உறவோ ஏற்கனவே இருந்தா.. ரொம்ப சந்தோசம்... இல்லன்னா.. இனியாவது அமைய வாழ்த்துக்கள். அட அமையலேன்னா கூட ஒரு பிரச்சினையும் இல்ல... நமக்கு நாமே நண்பன்...!


~அன்புடன் ஆனந்தி



(படம்: நன்றி கூகிள்)

Thursday, January 10, 2013

என்னுயிரில் சித்திரமாய்...!


எத்தனை யுகங்களாய் 
உனக்காய் காத்திருந்தேன் 
எல்லையில்லா கனவுகளில் 
எதிர்பார்த்தே பூத்திருந்தேன்...

உணர்ந்த நிமிடத்தில் 
உறைந்த தருணத்தில் 
உருவமற்ற நிலையில் 
உள்ளுக்குள் சிலிர்த்திருந்தேன்...

மென்மையான பெண்மைக்குள் 
மெல்லிசையாய் நீ வந்தாய் 
மெருகூட்டும் கலைஞனைப் போல் 
மீட்டியே எனை வென்றாய்....

புதிருக்குள் அடங்காத
புயல் காற்று நீயன்றோ...
என் கண்களுக்குள் 
கவிதை சொல்லும் 
கண்மணியும் நீயன்றோ...

எழுதாத வரிகளெல்லாம் 
என்னுள்ளே பத்திரமாய் 
எழுதி வைத்தேன் உன்னுருவை 
என்னுயிரில் சித்திரமாய்...!


~அன்புடன் ஆனந்தி



(படம்: நன்றி கூகிள்)


Thursday, January 3, 2013

மோர் குழம்பு...!


தேவையான பொருட்கள்:
கெட்டியான தயிர் - 2 கப்
வெண்டைக்காய் - 20
பெருங்காயப் பொடி - சிறிதளவு
உப்பு - தேவைக்கேற்ப

அரைக்க:
தேங்காய் - 1/2 கப் துருவியது
பச்சை மிளகாய் - 10 (காரத்திற்கேற்ப)
சீரகம் - 1 ஸ்பூன்
மல்லித்தூள் - 1/2 ஸ்பூன்
இஞ்சி - சிறிய துண்டு

தாளிக்க:
கடுகு - 1/2 ஸ்பூன்
உளுந்தம் பருப்பு - 1/2 ஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 2
கறிவேப்பிலை - சிறிது

செய்முறை:
  • தயிரில் 2 கப் தண்ணீர் சேர்த்து கடைந்து, அதனுடன் உப்பு, மஞ்சள் தூள், பெருங்காயப் பொடி சேர்க்கவும்.
  • வெண்டைக்காயை கழுவி, தண்ணீர் போக துடைத்து, சிறு சிறு துண்டுகளாக்கி, வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு, நன்கு வறுத்து தனியே வைக்கவும்.
  • அதே வாணலியில் சிறிது எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் கடுகு, உளுத்தம் பருப்பு, காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை சேர்க்கவும்.
  • அதனுடன் (தேங்காய், பச்சை மிளகாய், சீரகம், மல்லித்தூள், இஞ்சி) அரைத்த விழுதை சேர்த்து சிறிது வதக்கவும்.
  • இத்துடன் கடைந்து வைத்த மோரை சேர்த்து, அடுப்பை குறைத்து வைத்து கொதிக்க விடவும்.  நுரை பொங்கி, கொதிக்க ஆரம்பிக்கும் முன்பு அடுப்பில் இருந்து இறக்கி, வறுத்து வைத்துள்ள வெண்டைக்காய் துண்டுகளை சேர்க்கவும்.
(வெண்டைக்காய்க்கு பதில், வறுத்த சுண்டைக்காய் வற்றல், வேகவைத்த தடியங்காய் (வெள்ளைப் பூசணி), பக்கோடா சேர்த்தும் செய்யலாம்)


~அன்புடன் ஆனந்தி


About Me

My photo
I am a jovial.. sensitive.. happy person who likes to be around good friends ;)