topbella

Tuesday, November 30, 2010

வற்றாத உன் நினைவு...!!!


வளர் பிறை நிலவாய்
வஞ்சி என் நெஞ்சத்தில்
வற்றாத உன் நினைவுகள்..!

பால் நிலவைக் காண்கையில்
எல்லாம் நான் செய்த
பாக்யமாய் உன் உறவு..!

பகலும் என்னுடன் பகை கொள்ள
இரவும் என்னிடம் இம்சை செய்ய
உன் உறவிற்காய் உருகும் நான்..!

தொடரும் நாட்களில்
தொடவும் கூடாதென்றாய்..
தொலைவில் நிற்கையிலும்
தொல்லை செய்கிறாய்...!

அன்பின் வலி என்னை
உன்னருகில் இழுக்கையில்
அருகில் வந்தாலோ
அந்நியனாய் ஆகின்றாய்..!

நித்திரையில் கூட உன்
நினைவலைகள் தொடர..
சித்ரவதை செய்துவிட்டு
சிரித்துச் செல்கிறாயே..!

கண்ணாமூச்சி ஆட்டம் ஆட
கண்ணாளா உனக்குக்
காலம் கூட இருக்கிறதா என்ன?

கற்கண்டாய் இனிக்கும் உன்
சொற்கொண்டு என்னை
சூறையாடி சென்று விட்டு
இனி வேறென்ன என்பாயே..
என்னவென்று நான் சொல்ல..!

உறவென்று வந்தாய் என்
உள்ளத்தைத் தைத்தாய்...
உருகும் பனியாய்
உன் நினைவில் நான்..!!

நிமிடங்கள் ஒவ்வொன்றும்
இமைக்காமல் நீ உழைக்க
என் நினைவும் கூட
உனக்கு வருமோ என்று
நெகிழ்ந்தே நான் கேட்க...

நினைவில் நின்றவளை
நெஞ்சில் நிறைந்தவளை
நெருங்க இயலாமல்
இரும்பாய் நான் என்றாய்...!!

                              .....அன்புடன் ஆனந்தி

Thursday, November 18, 2010

அமெரிக்காவில் ஐயப்பன்...!

மலை ஏறும் காலம்


ஹாய் எல்லாரும் எப்படி இருக்கீங்க.. இப்போ இங்கே ஐயப்பன் சாமிக்கு, மாலை போட்டு மலை ஏறும் காலம்... நிறைய நண்பர்கள் மாலை போட்டு மலைக்கு போவாங்க.. இங்கே ஐயப்பன் கோவில் உள்ள ஊருக்கு செல்வது வழக்கம்.. இதில் ஒருவர் குருசாமியாய் இருக்க, உடன் செல்பவர்கள் அவரிடம் இருந்து, மாலை அணிந்து கொள்வாங்க..

          இதில் குட்டி குட்டி பசங்களும் சில நேரம் மாலை போட்டு, கன்னிச் சாமியாக செல்வதுண்டு.. அந்த குழந்தைங்க ஆவலா விரும்பி மாலை போட்டுக் கொள்வதும், அதற்கான சில விதிமுறைகளை, முழு மனதுடன் செய்வதும், உண்மையில் பார்க்கவே சந்தோசமா இருக்கும்..!

மாலை போட்டிருக்கும்  சமயத்தில், ஒவ்வொரு வார கடைசியிலும், ஒருத்தங்க வீட்டில் பூஜை இருக்கும்.. அங்கே ஐயப்பன் பாடல்கள் எல்லாரும் ஒன்றாகப் பாடி வழிபடுவது மனதிற்கு ரொம்ப மகிழ்ச்சியைக் கொடுக்கும்.. எப்பவும் கூட்டுப் பிரார்த்தனைக்கு மதிப்பு அதிகம் தானே..

          அப்படி பூஜைக்கு போகும் போது, ஒவ்வொருவர் வீட்டிலும் ஐயப்பனை அழகாக அலங்கரித்து, சுவையாய் பிரசாதம் எல்லாம் சமைத்து, ஒரே குடும்பமாய் எல்லோரும் சேர்ந்து பூஜை செய்றது உண்மையில் நல்ல விஷயம்..! அப்படிப்பட்ட நேரங்களில் கோவிலுக்கு சென்று வந்த மன நிறைவு, திருப்தி இருக்கும்..!!


 
இதில் மாலை போடுறவங்க தவிர, மத்த குடும்பமும் இணைந்து தான் பஜன்ஸ் எல்லாம் போவோம்.  முதலில் விநாயகரில் ஆரம்பித்து சிவன், அம்மன், ......பிறகு ஐயப்பன் பாடல்கள் பாடுவது வழக்கம்.. குருசாமி, அம்மன் பாடல்கள் பாடும் நேரம் வரும் போது, பெண்கள் பக்கம் திரும்பி "மாளிகை புறம்" பாடுங்கன்னு சொல்வாங்க..

                 எங்க குரூப் எப்போவும் கொஞ்சம் கலாட்டா பண்ற குரூப் தான்.. சரியான வாலுங்க தான்.. ரொம்ப பக்தியா எல்லாரும் உக்காந்திருக்கும் போது, என் பிரண்ட்.. என் காதுக்குள்ள "நிலவைக் கொண்டு வா...கட்டிலில் கட்டி வை...." னு சொல்ல... எனக்கு சிரிப்பு அடக்க முடியாம... முகம் எல்லாம் சிவந்து.. கீழ குனிஞ்சு ஒரே சிரிப்பு..... அப்புறம் எப்படியோ சமாளிச்சு பாடியாச்சு..
 
இதே போல தான் போன வருஷம், எல்லாரும் பக்தியா பாடிட்டு இருக்கும் போது இன்னோர் விஷயம் நடந்தது.. சில சுவாமி பாடல்களை சினிமா சாங் மெட்டில் பாடுவது மாதிரி, "செந்தாழம் பூவில் வந்தாடும் தென்றல் ......." பாடல் மெட்டில், "எந்நாளும் தேடும் பொன்னான ஐய்யன்....."ன்னு பாடிட்டு இருந்தோம்.. அந்த பிரண்ட்டும் பக்கத்தில் உக்காந்து நல்ல பாடிட்டு இருந்தோம்...

                 திடீர்னு சரணம், முடிஞ்சி பல்லவி ஆரம்பிக்கும் இடத்தில், நம்ம ஆளு உணர்ச்சி வசப்பட்டு "எந்நாளும் தேடும்....."னு பாடறதுக்கு பதில் "செந்தாழம் பூவில்......."னு அவங்க பாட... அவ்ளோ தான்.... அவங்க பக்கத்தில் இருந்த நாங்க அத்தனை பேரும், பயங்கர சிரிப்பு வந்து அடக்கவும் முடியாம, புடவை தலைப்பால வாய பொத்தி சிரிப்பை அடக்கரதுக்குள்ள........... ஒரு வழி ஆய்ட்டோம்..! இந்த மாதிரி, மறக்க முடியாத பல சந்தோசமான தருணங்கள் இருக்குங்க..!!

 
இந்த பூஜை நேரங்கள்ல வார வாரம் ஒரு வீட்டு பூஜைல போய் நல்ல பாடி, நல்லாவே சாப்பிட்டு ஒரு சுற்று எக்ஸ்ட்ரா ஆயிருவோம்.. ஆனா ஒண்ணு, இந்த மாதிரி பூஜை-கள்ல கலந்துக்கறது, பசங்களுக்கும் நம்ம கலாச்சாரம் தெரியறதுக்கு ஒரு நல்ல வாய்ப்பாக இருக்கும்.. குழந்தைகளையும் பாட வைக்கிறோம்..

                    அவங்களுக்கும் ஏதோ அச்சீவ் பண்ண திருப்தி..! எல்லா பாட்டும் முடிஞ்சு, படிப்பாட்டு பாடும் போது, குழந்தைகளும் சேர்ந்து ஒண்ணா பாடும் போது, நம்மையும் அறியாமல் ஒரு சிலிர்ப்பு ஏற்படத் தான் செய்கிறது..! எல்லாம் முடிஞ்சு, அய்யனுக்கு, "ஹரிவராசனம்...." பாடும் நேரமும்.... என் மனதை தொடும் தருணம்..!!
 
ஆனா ஒரே ஒரு கஷ்டம் என்னன்னா.... இப்பவே இங்க குளிர் காலம் ஆரம்பம் ஆயிருச்சு.. சில பிரண்ட்ஸ் வீடுகள் தூரமா இருக்கும் பட்சத்தில் குளிர்ல போயிட்டு திரும்ப வரதெல்லாம் கொஞ்சம் சிரமம்... அதுவும் குழந்தைகளை வச்சிட்டு ஏறி இறங்கி...வரதெல்லாம் கஷ்டமா இருக்கும்... ஆனா, அதையெல்லாம் தாண்டி கூட்டு பிரார்த்தனை, நண்பர்களை சந்திக்கறது.... இந்த சந்தோசம் எல்லாம் மேலோங்கி நிக்கறதுல மத்த எல்லாம் அடி பட்டு போய் விடும். விளையாட்டா, சொல்றதுண்டு.. ஐயப்பனே அமெரிக்கா வந்தா, காலில் ஷூ, ஷாக்ஸ் போட்டுட்டு தான் போகணும் போல..!
 
இப்போ தாங்க... நா இந்த பதிவு எழுதிட்டு இருக்கும் போது, ஒரு தோழி கூப்பிட்டு வர சனிக்கிழமை பூஜைக்கு வரச் சொல்லி இருக்காங்க.. அப்புறம் என்னங்க.. ஸ்டார்ட் மூஜிக்..... (ஓஹ்ஹ்ஹ்.. சாரி சாரி.. ஸ்டார்ட் பூஜை...) தான்...!! அப்புறமா சந்திக்கலாம்..!
 
...நன்றி..!

(இந்த படங்கள் எல்லாம் என் தோழி வீட்டு ஐயப்ப பூஜையில் எடுத்தது)


Wednesday, November 10, 2010

உன்னைக் காண்கையில்...!!


நினைவில் நின்றவன்
என் கண்ணெதிரே நிற்க
விழி இமைக்காமல் அவனை
விசித்திரமாய் நான் நோக்க...!!

அருகில் நிற்கும் அவனை
அணைக்கத் துடிக்கும் நெஞ்சம்
அவசரமாய் மனம் மாற்றி
அங்கிருந்தே அகன்றதென்ன..!!

காரணம் நீ சொன்னாலும்
அதை நான் கருத்தில் கொண்டாலும்
என் கண்ணனைக் காண்கையில்
கட்டவிழ்ந்த கன்றாய் என்
காதல் மனம் செல்வதென்ன...!!

உன் மேல் கோபம் வருவதில்லை
அது வந்தாலும் நிற்பதில்லை...!
நீ பார்க்கும் பார்வையிலும்
பேசும் வார்த்தையிலும்
நான் பனித்துளியாய் கரைவதென்ன..!!

ஓர் நிமிடம் உன்னருகில் வந்தாலும்
ஒரு முறை உன் ஸ்பரிசம்
என் மேல் பட்டாலும்
நட்டு வைத்த பூச்செடியாய் நான்
நாணித் தான் போனதென்ன..!!
 
......அன்புடன் ஆனந்தி
 

Friday, November 5, 2010

மிக்சர்...!!

உங்கள் அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள்...!!

இந்த நல்ல நாளில் என்னைத்  தொடரும்  நண்பர்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள் தெரிவித்துக் கொள்கிறேன்...!!

உங்கள் நட்பிற்கு, இந்த பூங்கொத்து...! நன்றிகள் பல...!!

மிக்சர்...!!

தேவையான பொருட்கள்:

கடலை மாவு - 6 கப்
அரிசி மாவு - 1  கப்
முந்திரி பருப்பு - 1 / 2 கப்
வேர்க்கடலை - 1 கப்
அவல் - 1 கப்
கறிவேப்பிலை - 1 கொத்து
பெருங்காயம் - 1 / 2 டீஸ்பூன்
மிளகாய்ப் பொடி - 1 குழி கரண்டி
கடலை பருப்பு - 1 / 2 கப் (4 மணி நேரம் ஊறவைக்கவும்)
ஓமம் பொடித்தது - 1 டீஸ்பூன்
வெண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு

காரா பூந்தி:

3 கப் கடலை மாவை தோசை மாவை விட, கொஞ்சம் இளக்கமாக கரைத்துக் கொள்ளவும்.  ஒரு வாணலியில் எண்ணையை சூடாக்கி, அந்த எண்ணெய் மேல், கண் கரண்டி அல்லது ஜல்லிக் கரண்டியை பிடித்துக் கொண்டு, ஒரு குழிகரண்டி கரைத்த மாவை கரண்டி மேல் ஊற்றி, இன்னொரு கரண்டியால் அதை தேய்த்து விடவும்.. கார பூந்தி, சத்தம் அடங்கி வெந்ததும் எண்ணெய் வடிய விட்டு, ஒரு பாத்திரத்தில் எடுத்து வைக்கவும்.. பாதி மாவினை ஊற்றி முடித்த பின், மீதி மாவில் விரும்பிய கலர் சேர்த்து பூந்தி செய்யலாம்.. மிக்சர் கலர் புல்லாக இருக்கும்..

ஓமப்பொடி:

3 கப் கடலை மாவு, 1 கப் அரிசி மாவு, வெண்ணெய், ஓமம்  இவற்றை தேவையான தண்ணீர் விட்டு பிசைந்து கொள்ளவும். மாவு ரொம்ப கெட்டியாகவோ, ரொம்ப தளர்வாகவோ இல்லாமல் ஓரளவு ஓம அச்சில் பிழியும் விதம் இருக்க வேண்டும். இடியாப்பம் பிழியும் குழலில் இந்த மாவை எடுத்து, சூடான எண்ணையில் பெரிய வட்டமாக பிழிந்து, இரு புறமும் திருப்பி, சத்தம் நின்றதும் எடுக்கவும்.

சூடான எண்ணையில் முந்திரி பருப்பு, அவல், கறிவேப்பிலை, வேர்க்கடலை இவற்றை பொறித்து எடுக்கவும்.

(சின்ன குறிப்பு: வேர்க்கடலை, அவல், முந்திரி, கறிவேப்பிலை இவற்றை பொரிக்கும் முன்பு, எண்ணையின் அளவை குறைத்துக்கொள்ளுங்கள்.. ஏனெனில், இவைகள் பொறித்த பின்பு மிச்சம் வரும் எண்ணையை உபயோகிக்க முடியாது.. கலங்கல் ஆகி விடும்)

ஊற வைத்த கடலை பருப்பை, நன்கு தண்ணீர் இல்லாமல் வடிகட்டி, ஒரு பேப்பர்-இல் தண்ணீர் வடிய விட்டு, பிறகு, அதையும் எண்ணையில் போட்டு, சத்தம் அடங்கும் வரை வேக வைத்து, எண்ணெய் வடிய விட்டு எடுத்து வைக்கவும்.

ஒரு பெரிய பாத்திரத்தில் செய்து வைத்துள்ள காராபூந்தி, ஓமப்பொடி, மற்றும் வறுத்து வைத்துள்ள பெருங்காயம், வேர்க்கடலை, கடலை பருப்பு, முந்திரி பருப்பு, கறிவேப்பிலை, அவல், மிளகாய்ப் பொடி, தேவையான உப்பு சேர்த்து நன்கு கலக்கவும்.


சுவையான மிக்சர் தயார்..!!!


About Me

My photo
I am a jovial.. sensitive.. happy person who likes to be around good friends ;)